வியாழன், ஆகஸ்ட் 30, 2012

கவிலைகள்



வேலை நிமித்தம்
வீடு மாற்றுகிறேன் 
எப்படிச் சொல்லி அனுப்பவது ,
அமாவாசைக்கு வரும்
அப்பா காக்கைக்கு ?

வியந்த மகளின்
விரல் பட்டதும்
பயந்து சுருங்கிய
தொட்டாற்சுருங்கி
எப்போது விரிக்கும்
இலைகளை மீண்டும் ?

கண்ணாடிப் பெட்டிக்குள்
கடனேயென்று நீந்தும்
கலர் மீன்களின்
கனவிலேனும் வருமா
கடலும் ஆறும்?

கண்டம் தாண்டும் பறவை
களைப்பாற வசதியாய் 
எப்போது வளரும்
ஆழக் கடலில் 
ஆலமரங்கள்?

மனிதரைக் கண்டால்
விரைந்து மறைந்து 
உடலைச் சுருக்கி 
ஒளிந்து பயந்து
பயத்தால் கொன்று 
பயத்தால் செத்து 
படமாடும் பாம்பு 
நடமாடுவது எப்போது 
ஏனைய உயிர் போல் 
இயல்பாய் நட்பாய்?


காயம் கொத்தும் 
காகம் விரட்டாது 
கண்ணீர் வடிக்கும் 
காளையின்  வாழ்வில்,
கால்கள் சுருங்கி 
கைகளாய்  மாறும் 
பரிணாம வளர்ச்சிக்கு 
எத்தனை யுகங்கள் 
இன்னும் ஆகும் ?

கோயில் வாசலில்
பிச்சையெடுக்கும்
நாமம் போட்ட
யானைக்கு
எப்போது கிட்டும்
கனவிலிருக்கும்
காடு ?

"கவலைப்படுதற்கு 
காரணம் ஆயிரம் இருக்க 
வெட்டிப் பயலுக்கு 
வேதனையைப் பாரேன்"


விமர்சனம் செய்யும் 
விவரமற்றோர்க்கு
எப்படிப் புரியும் 
புல்லாகிப் பூடாய் 
புழுவாய் மரமாகி 
பல்விருகமாகி  
பறவையாய் பாம்பாய் 
எல்லாப் பிறப்பும்
பிறந்திளைக்கும்
என் கவலை ?




-சிவகுமாரன் 

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

மனக் குரல்


ஊக்கம் இல்லா உழைப்பு -  மனதில்
தூக்கிச் சுமக்கும் துயர்..

கரும்பாய் இருந்தால் கசக்குவார் - கடிக்கும்
எறும்பாய் இருப்பாய் இனி.

பணிந்ததும் பயந்து தணிந்ததும் போதும்
துணிந்தால் வாராது  துயர்.

தகுதி மறந்து தன்மானம் இழந்து
சொகுசாய் வாழ்வதா சுகம்?

திரும்பத் தருமோ தீர்ந்த இளமையை
விரும்பிச் செய்யா வேலை?

கொஞ்சமே கிடைத்தாலும் கூனிக் குறுகாமல்
நெஞ்சம் நிமிர்த்தி நில்.

வாடிக் கிடந்தால் வாய்ப்புகள் வாரா.
தேடி அலைந்து திரி

பெற்ற அவமானம், பேச்சுக்கள் எல்லாம்
வெற்றியால் அடித்து விலக்கு .

விதிப்பயன் என்று வீணாய் உழைக்காதே 
மதிப்பில்லா இடத்தில் மாடாய் .

கலகம் செய்யாமல் கழன்றுகொள் எளிதாய்.
உலகம் பெரிதென்று உணர்.