ஞாயிறு, டிசம்பர் 26, 2010

காதல் வெண்பாக்கள் 14


        மண்ணிலா ?

தரையில் இறங்கிவந்த
  தங்கநிலாக் கீற்றே
கரைகாணா இன்பக்
  கடலே - விரைந்தோடி
வாராயோ வான்மதியே
  வந்தென்றென்     வாழ்வோடு
சேராயோ என்னுயிரே
     சொல்.



                                        
     
        வெம்-மைவிழி 

பூதொட்டுப் போகும்
    பொதிகைபூந் தென்றலென 
நீதொட்டுப் போக 
    நினைத்திருந்தேன் - தீதொட்ட 
கைவிரலில் பட்டதொரு 
    காயமென உன்பார்வை 
மைவிழியே பட்டதுஎன் 
            மேல்.    

                                                                                        

24 கருத்துகள்:

  1. தங்களது கவிதைகள் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    "நண்பா... வெண்பா என்றால் ஆசிரியர்விருத்தத்தில் வருமா?"
    -தோழன் மபா

    pls visit: www.kavithaiveethi.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
    வெண்பாவும் ஆசிரியப்பாவும் வெவ்வேறு யாப்பிலக்கணம் கொண்டவை. விபரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும் நண்பரே.
    http://venbaaeluthalaamvaanga.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. கவிதைக்கு தலைப்பா அல்லது தலைப்புக்கு கவிதையா?

    கவிதைக்கு சித்திரமா அல்லது சித்திரத்துக்கு கவிதையா?

    மூண்றும் நன்றாக பொருந்தியுள்ளன. அழகு.

    பதிலளிநீக்கு
  4. காதல் என்ற உணர்வு,புனிதமானது எனபதை ஏற்காதவன் நான் அதற்கு ஒரு புனிதம், தெய்வீகம் என்பதெல்லாம்.தேவையில்லை என்று கருதுகிறேன். மேலும் சங்கப்புலவர்களும்,வள்ளுவணும் கம்பனும் சொல்லிவிட்டார்கள்., காளிதாசனும் மில்டனும்,ஷேக்ஸ்பியரும் எழுதிவிட்டார்கள்.உங்கள் தமிழும், புலமையும் சமூகம் சார்ந்த வாழ்வியலை சித்தரிப்பதில் இருக்கவேண்டும்.மீனாட்சி கோவிலில் ரிக்ஷாஓட்டூபவனுக்கு திருமணம் நடக்கும்.புது வேட்டி மஞ்ச சட்டை.,அவன்மனைவி புதுபுடவை ரிக்ஷாவில் அவர்களை ஏற்றிக்கொண்டு அவன் நண்பன் ஓட்ட பவனி வருவானே அதைபாடுங்களென்முன்பின் தெரியாத அவர்களப் பற்றி நீங்கள் பாடவேண்டும் என்று விரும்புகிறேன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள் படம் கவிக்கு உயிராய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. கவிதைகள் அருமை.எல்லா பதிவுகளையும் வாசிக்க தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  8. காதல் வந்தால் கவி வரும் ..கவி வந்தால் காதல் கூடும் ..
    மண்ணிலா பொன்னிலா கவிதை .. பட்ட காதலிலேயே படும் மைவிழி கவிதை இரண்டும் அருமை சிவா...

    பதிலளிநீக்கு
  9. குளிர் விழி கேட்டதுண்டு. வெம்மை விழி புதுமை.. நல்லா இருக்கு சிவா..

    பதிலளிநீக்கு
  10. கிறுக்கு பிடிக்க வைக்குது உங்க காதல் வெண்பாக்கள்

    பதிலளிநீக்கு
  11. காதலியின் கோபப் பார்வையிலும் கிக் உண்டே?

    பதிலளிநீக்கு
  12. கண்ணகியின் கோபத்தைப் பற்றி எழுதிய கை காதலியின் கோபத்தைப் பற்றி எழுதலாமா என்று கேட்கிறாரா காஸ்யபன்? சிந்திக்க வைக்கும் கேள்வி. ரிக்ஷாவில் ஊர்வலம் போவதும் காதல்சின்னம் தானே?

    பதிலளிநீக்கு
  13. வாருங்கள் அப்பாதுரை அவர்களே!கம்மாக்கரை புறம் போக்கு நிலத்தில் குடிசையில் வாழ்பவனுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு.சோகம்,மகிழ்ச்சி உண்டு.சினிமா,பாட்டு,திருமணம் அத்துணயும் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கொவிலில், எளிய மக்களின் திருமணத்தை பார்க்கவே கூட்டத்தோடு கூட்டமாகவே இருப்பேன்.ரிக்ஷாவில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இருவரும் திருமணம் முடிந்து போவார்கள்.மணமகளின் தாயார் புதியதாக வாங்கிய ஒரு ஜமக்காளம் இரண்டு தலைகாணியை துக்கிக்கோண்டு போவார்கள். நண்பர்களின் கேலிப்பெச்சு,உறவுப்பெண்களின் சளசளப்பு அந்த எளிமையும் குதூகலமும் எங்கள் கவிஞரால் வர்ணிக்கப் படவெண்டும்.என்பதுதான் என் ஆசை---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  14. கஷ்யப்பன் அவர்களே, உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். நானும் இது போன்ற ஒரு திருமணத்தை பார்த்து வியந்து ரசித்திருக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன் குன்றத்தூர் முருகர் கோவிலுக்கு நானும் என் தோழியும் சென்றிருந்த போது, முருகன் சன்னதியிலேயே எங்களுக்கு மிக அருகிலேயே, எதோ நாங்கள்தான் அவர்களுடைய சொந்தங்கள் போல் பக்கத்தில் இருந்தோம், மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டினார். கண் இமைக்கும் நேரத்தில் திருமணம் முடிந்து விட்டது. ஒரு பத்து பேர்தான் உடன் வந்திருந்தார்கள். அவர்களின் கிண்டலும், கேலியும், சிரிப்பும்தான் மந்திரமும், மங்கள வாத்தியமுமாக இருந்தது. எவ்வளவு எளிமையாக அழகாக இருந்தது அந்த திருமணம். நானும் என் தோழியும் திரும்பி வீடு வரும் வரை மாய்ந்து மாய்ந்து அதை பற்றி பேசி தள்ளி விட்டோம். அதை தொடர்ந்து என் சித்தப்பா மகளின் திருமணம். பெற்றவர்கள் சம்மதத்துடன் பெங்களூரில் ஒரு கோவிலில் இதை போலவே சன்னதி எதிரில், மந்திரம், வாத்தியம் எதுவும் இன்றி, மாலை மாற்றி, திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் எந்த வித சீதனமும் இல்லாமல், கோவில் இருந்து அவளை நேரே அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். இது போன்ற எளிமையான திருமணத்தின் அழகை கவிதையில் படிக்க இன்னும் அழகாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் காதல் வெண்பாக்கள் எல்லாமே அழகாக இருக்கிறது.

    உங்கள் சிலம்பின் புலம்பல் அருமை. பலமுறை படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நன்றி. தமிழன் வீதி, தமிழ்த்தோட்டம் , இளமுருகன், அருண்.பத்மநாபன், ஆதிரா, ராதேஷ், அப்பாத்துரை & மீனாட்சி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் காஷ்யபன் அய்யா. என்னை என்ன மேட்டுக்குடி கவிஞன் என நினைத்து விட்டீர்களா? என் கவிதைகள் பட்டை தீட்டப் பட்டதே தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்திலும், என் சித்தப்பா சுந்தரபாரதியின் பொதுவுடைமைப் பட்டறையிலும் தான். நிறைய நிறைய எழுதி இருக்கிறேன் அய்யா. தெரிந்தோ தெரியாமலோ மீனாட்சி கோயிலில் என்று சொல்லிவிட்டீர்கள். என் அன்னை மீனாட்சி அடி எடுத்துக் கொடுத்து விட்டாள்.வருகிறேன் அய்யா, ரிக்க்ஷா தோழர் மாரிமுத்துவின் திருமணத்திற்கு சென்றுவிட்டு.

    பதிலளிநீக்கு
  18. எனக்குக் கவிதைகள் ரசிக்க மட்டுமே தெரியும்! வெண்பா ஆசிரியப்பா எல்லாம் மனதில்/மூளையில் ஏறவில்லை! எனவே ஒரு ரசிகனாக கவிதையையும் படத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. வெம்மை விழி அருமை.. சிவகுமாரன்..

    பதிலளிநீக்கு
  20. //தீதொட்ட
    கைவிரலில் பட்டதொரு
    காயமென உன்பார்வை
    மைவிழியே பட்டதுஎன்
    மேல்.//
    அருமை!

    பதிலளிநீக்கு
  21. வெம்மை ....மண் நிலாவும் அருமை. நிறைந்த தமிழ் புலமை உங்கள் எண்ணத்தில் விளையாடுகிறது மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. மொத்தம் 4 கவிதை (உங்க தலைப்பையும் சேர்த்து). ரசித்தேன் சிவா! மீனாட்சி கோவில் கல்யாண கவிதைக்கு காத்திருக்கிறேன்.

    அன்புடன்,
    தக்குடு

    பதிலளிநீக்கு