ஏன்டாப்பா எம்மவனே
இப்படி நீ செஞ்சுப்புட்ட
வேண்டாத வேலையெல்லாம்
வெட்டியாக பண்ணிப்புட்ட
படிக்க வேணாமின்னு
படிச்சு படிச்சு சொன்னேனே
அடிச்சு சொன்னேன்- நீ
அப்படியும் கேக்கலியே
பெயிலாகித் தொலைச்சிருந்தா
பேசாமா இருந்திருப்பேன்.
பாஸாகித் தொலச்சிட்டீயே
பாவி இப்ப என்ன செய்வேன் ?
கூழுக்கே வழியில்லை
கும்பி இங்கே காயுதடா
காலேஜில் சேத்துவிட
காசுக்கு எங்க போவேன் ?
மூத்தவ வயசு இப்ப
முப்பத்தொண்ணு ஆகுதடா
அடுத்தவ ஆளாகி
அஞ்சு வருஷம் ஆச்சுதடா
மாப்பிள்ளை வாங்கத்தான்
மாடாய் ஒழைக்கிறேண்டா
நல்லவரன் தேடித்தேடி
நாயா அலையிறேண்டா
ஒங்க ஆத்தா ஒடம்புக்கு
ஒருநூறு கோளாறு
ஒருவாயி மருந்துக்கே
நாளெல்லாம் தகராறு
எப்படி நான் சமாளிப்பேன்
எதைச் சொல்லி நானழுவேன் ?
இப்ப உன்னை படிக்கவைக்க
எங்க போயி முட்டிக்குவேன் ?
வடிக்க அரிசியில்லை
வாயிக்குத் தண்ணியில்லை
படிக்க வைக்க எனக்கு
வழியேதும் தெரியவில்லை
படிச்சுக் கிழிச்சு நீ
பாழாப் போக வேணாம்
வடிச்ச காஞ்சி தூக்கி
வாடா நீ வயலுக்கு.
(இந்தக் கவிதை 1991 ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய பொன்விழா ஆண்டு கவிதைப் போட்டியில் மரபுக் கவிதைப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது )
-சிவகுமாரன்
(இந்தக் கவிதை 1991 ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய பொன்விழா ஆண்டு கவிதைப் போட்டியில் மரபுக் கவிதைப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது )
பதிலளிநீக்கு......சந்தோஷமான செய்தி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! தொடர்ந்து மரபு கவிதைகள் நிறைய எழுதுங்க...
வாழ்த்துக்கள்! கவிதை அருமை!
பதிலளிநீக்குஒரு மனிதனின் வறுமை ஆசைகளை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் சேர்த்து உடைத்தெறிந்து விடுகிறது. இதுபோன்ற ஏழ்மை நிலையில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ?
நன்றிங்க சித்ரா மேடம்
பதிலளிநீக்குநன்றிங்க அகிலா மேடம்
பதிலளிநீக்கு////கூழுக்கே வழியில்லை
பதிலளிநீக்குகும்பி இங்கே காயுதடா
காலேஜில் சேத்துவிட
காசுக்கு எங்க போவேன் ////
மனதை நெருடும் அழுத்தமான வரிகள் சகோதரம்....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
மனதை பிசையும் மரபுக்கவிதை
பதிலளிநீக்குகல்கியில் வெளியாகி பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் பிறந்ததிலேயிருந்தே கவிதை எழுதுவீர்களா.?இதேகவிதையை இதே அர்த்தத்தில் இப்பொழுது எழுதுவீர்களா.?
பதிலளிநீக்குகல்கியில் பரிசு பெற்ற இந்தக் கவிதை மிகவும் நன்றாகவே வந்துள்ளது. என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசோகம் கூடிய கவிதையாக இருந்தாலும் , மறுக்கமுடியாத நிதர்சனம்..
பதிலளிநீக்குமனதைக்கறைக்கும் வரிகள்.. பகிர்ந்தமைக்கு நன்றி..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசோகமான நிஜத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை!
பதிலளிநீக்குஎளிய வார்த்தைகளில் எப்படி எந்தக் கருத்தையும் பற்றி உங்களால் சிறப்பாகக் கவிதை எழுத முடிகிறது. ஒவ்வொரு முறை உங்கள் பதிவைப் படிக்கும்போதும் தோன்றும் பிரமிப்பு இது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎதை எழுதினாலும், ஏழ்மையின் ஏலாமைகளை எடுத்துச் சொல்வதாய் அது பற்றி ஒரு கணமாயினும் நினைத்து யதார்த்த உலகின் நினைவுகளில் நனைவதாய் இருப்பது உங்கள் எழுத்துக்களின் சிறப்பு.
பதிலளிநீக்குநிஜமான நிஜங்ககள் பலநேரங்களில் சுடுவதுண்டு.
பரிசுபெற்ற கவிதை!
பதிலளிநீக்குவலைதளம் வழியாக நல்ல கவியை சந்திக்க முடிந்தது!
தந்தையின் புலம்பல் தாய்மையின் உணர்வோடு இருந்தது!
//மாப்பிள்ளை வாங்கத்தான்
பதிலளிநீக்குமாடாய் ஒழைக்கிறேண்டா
நல்லவரன் தேடித்தேடி
நாயா அலையிறேண்டா //
இந்த வரிகள் பலர் மனதையும் தொடட்டும்.வாழ்த்துக்கள்.
Very nice one.. Congrats !
பதிலளிநீக்குVery nice one.. Congrats !
பதிலளிநீக்குஎளிமையான நடை. (பிரபாகரன் பாடிக் கேக்கணுமே?)
பதிலளிநீக்குஇந்தியா வரும் பொழுது ஒரு ட்ரிப் அடிக்கணும் சிவகுமாரன், உங்ளைச் சந்திக்க. எதிரில் ஒரு கவிதை எழுதி ஆடோகிராப் போட்டுக் கொடுக்கணும்.
இருபது வயதிலேயே நல்ல சிந்தனை முதிர்ச்சி சிவா.
பதிலளிநீக்குஉங்கள் சிந்தனை மாறவில்லை.மொழியும் வடிவமும் மெருகேறியிருக்கிறது.
தூள்.
nice
பதிலளிநீக்கு//மாப்பிள்ளை வாங்கத்தான்
பதிலளிநீக்குமாடாய் ஒழைக்கிறேண்டா
நல்லவரன் தேடித்தேடி
நாயா அலையிறேண்டா //
இந்த வரிகள் வெகு சுரீர் சிவா...ஓ..கல்கியில் பரிசு பெற்ற கதையா...ம்ம்...கவிஞர் சிவக்குமாரன் அவர்களே..பாராட்ட வார்த்தைகள் இல்லை....
எந்த பொருளிலும் எளிமையாகவும் அழகாகவும் கவிதை வடிக்கிறீர்கள்...
பதிலளிநீக்குஇப்போது பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா சிவா...
மனம் பிழிந்த கவிதையாக உள்ளது.
பதிலளிநீக்குஇழையோடும் நகையோடு எதிலும் சமூக உணர்வோடு அடிப்படை இறையுணர்வோடு ஆழ்ந்த அறிவோடு... பெருமிதமாயிருக்கிறது சிவா உங்களை நினைத்து!
பதிலளிநீக்குஆழ்ந்த கருத்துக்கள் ததும்பும் மரபுக் கவிதை! பரிசு பெற்றதற்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகவிதை மிகவும் அருமை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியவில்லை சிவகுமாரன். அந்த தந்தையின் புலம்பல் உங்கள் கவிதை வழி மனதில் இறங்கி கண்ணீரை வரவழைத்து விட்டது. கவிதைகேற்ற அற்புதமான ஓவியம். மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி மதி.சுதா
பதிலளிநீக்குநன்றி சகோதரி ராஜி.
GMB சொன்னது \\நீங்கள் பிறந்ததிலேயிருந்தே கவிதை எழுதுவீர்களா.?இதேகவிதையை இதே அர்த்தத்தில் இப்பொழுது எழுதுவீர்களா.?//
பதிலளிநீக்குஇது கொஞ்சம் ஓவர் அய்யா. சிறு வயதில் ஒரு தனி நோட்டில் நினைத்ததை எல்லாம் கிறுக்கிக் கொண்டு இருப்பேன். பழைய சினிமா பாடல்களை வேறு வார்த்தைகள் போட்டு எழுதிப் பார்ப்பேன்.
இப்போது எழுதினால் இன்னும் நன்றாய் எழுதியிருப்பேன் அய்யா.
நன்றி அய்யா
நன்றி வைகோ , ராஜவம்சம் , ரசிகமணி, வசந்தா நடேசன் , பிரணவம் ரவிகுமார், சென்னைப்பித்தன்,
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி
கீதா சந்தானம் சொன்னது.
பதிலளிநீக்கு\\எளிய வார்த்தைகளில் எப்படி எந்தக் கருத்தையும் பற்றி உங்களால் சிறப்பாகக் கவிதை எழுத முடிகிறது. ஒவ்வொரு முறை உங்கள் பதிவைப் படிக்கும்போதும் தோன்றும் பிரமிப்பு இது. வாழ்த்துக்கள்//.
எல்லாம் இறையருள் மேடம்.
எனது இன்னொரு வலைப்பதிவு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கி விடும்
தங்களின் ஆதரவு வேண்டும் மேடம்.
என் எழுத்துக்களை நீங்கள் சிலாகித்து படிப்பது எனக்கு பெருமை ஜீவி சார்.
பதிலளிநீக்குநன்றி தென்றல்
பதிலளிநீக்குநன்றி திருமதி ஸ்ரீதர்
நன்றி கனாக்காதலன்
நன்றி நாகா
அப்பாத்துரை சொன்னது
பதிலளிநீக்கு|\இந்தியா வரும் பொழுது ஒரு ட்ரிப் அடிக்கணும் சிவகுமாரன், உங்ளைச் சந்திக்க. எதிரில் ஒரு கவிதை எழுதி ஆடோகிராப் போட்டுக் கொடுக்கணும்.?//
துரை எப்பொழுது மதுரை வருகிறீர்கள் ?
(துரை -உபயம் கீதா சந்தானம் மேடம் )
வெண்பா வேந்தரிடம் நான்தான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும்
சுந்தர்ஜி சொன்னது
பதிலளிநீக்கு\\இருபது வயதிலேயே நல்ல சிந்தனை முதிர்ச்சி சிவா.
உங்கள் சிந்தனை மாறவில்லை.மொழியும் வடிவமும் மெருகேறியிருக்கிறது.
தூள்.///
சரியாக் கணிக்கிறீர்கள் சுந்தர்ஜி,
20 வயதில் இந்தக் கவிதை போட்டிக்கு அனுப்பப்பட்டது.
உண்மையில் +2 முடித்து கல்லூரி சேர்ந்த போது ( 17 வயதில்) எழுதியது இது. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த போது என்னுடன் படித்த நண்பன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். மனம் பதைத்தது. அவனிடம் பேசிய பின் பிறந்த கவிதை இது. அவன் நல்ல ஓவியன். அவனை ஓவியம் சார்ந்த வேலை செய்தால் என்ன என்று கேட்டேன். பிறகு அவன் சுவர் விளம்பரங்கள் எழுதினான். விளம்பர தட்டிகள் எழுதினான். அறிவொளி இயக்கத்தில் சேரச் சொன்னேன். இப்பொழுது ஃப்லக்ஸ் போர்டு எழுதுகிறான். திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு மேடை அலங்காரம் செய்கிறான். சென்ற வருடம் என் சகோதரன் திருமணத்திற்கு மேடை அலங்காரம் செய்ய வந்திருந்தான் . மனம் நெகிழ்வாய் இருந்தது. ( உண்மையில் படிச்சுக் கிழிச்சு பாழாய்ப் போனது நான்தானோ )
ஆனந்தி சொன்னது
பதிலளிநீக்கு\\ ஓ..கல்கியில் பரிசு பெற்ற கதையா...ம்ம்...கவிஞர் சிவக்குமாரன் அவர்களே..பாராட்ட வார்த்தைகள் இல்லை.... ///
நன்றி சகோதரி
ஸ்ரீராம் சொன்னது
பதிலளிநீக்கு\\எந்த பொருளிலும் எளிமையாகவும் அழகாகவும் கவிதை வடிக்கிறீர்கள்...
இப்போது பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா சிவா...//
நன்றி ஸ்ரீராம்.
இந்தக் கவிதை கூட என் சகோதரன் இளமுருகன் தான் முயற்சி எடுத்து கல்கி போட்டிக்கு அனுப்பினான் .
மரபுக்கவிதைக்கென்று போட்டியில் ஒரு பிரிவு இருந்ததால் இது பரிசு பெற்றது.
பெரும்பாலும் மரபுக்கவிதைகளை பத்திரிகைகள் பிரசுரிப்பதில்லை . அதனால் நான் அனுப்பவதில்லை.
எப்பொழுதாவது அனுப்பவதுண்டு. பிரசுரம் ஆவதில்லை.
நன்றி விமலன்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி இராஜ இராஜேஸ்வரி
நிலாமகள் சொன்னது
பதிலளிநீக்கு\\இழையோடும் நகையோடு எதிலும் சமூக உணர்வோடு அடிப்படை இறையுணர்வோடு ஆழ்ந்த அறிவோடு... பெருமிதமாயிருக்கிறது சிவா உங்களை நினைத்து!//
சந்தோசமாய் இருக்கிறது உங்களை நினைத்து எனக்கு சகோதரி
நன்றி
மீனாக்ஷி சொன்னது.
பதிலளிநீக்கு\\கவிதை மிகவும் அருமை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியவில்லை சிவகுமாரன். அந்த தந்தையின் புலம்பல் உங்கள் கவிதை வழி மனதில் இறங்கி கண்ணீரை வரவழைத்து விட்டது. கவிதைகேற்ற அற்புதமான ஓவியம். மனமார்ந்த வாழ்த்துக்கள்!//
நன்றி மேடம். அடிக்கடி வருகை தாருங்கள்.
இந்த ஓவியம் கல்கியில் என் கவிதையுடன் வெளிவந்தது.
வரைந்தவருக்கு நன்றி.
மாப்பிள்ளை வாங்கத்தான்
பதிலளிநீக்குமாடாய் ஒழைக்கிறேண்டா
நல்லவரன் தேடித்தேடி
நாயா அலையிறேண்டா//
மனசைத் தொட்ட வரிகள்.
வணக்கம் தோழா, கிராமிய மண்வாசனையுடன், நாட்டார் இலக்கிய சந்த நடை கலந்து ஒரு மரபுக் கவிதை. கலியுகத்தில் ஒரு வறுமைத் தாயின் கலியைப் பாவாய் உரைத்துள்ளீர்கள். அருமை அருமை.
உங்களுடன் சேர்ந்து ஒரு கவியரங்கம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆவல்.
நன்றி நண்பா,
பதிலளிநீக்குஅடடா என்ன ஒரு அருமையான வாய்ப்பு.
வெகு நாளாயிற்று . கவியரங்கத்தில் பாடி..
ஏற்பாடு செய்யுங்களேன்.
உரிமையிலும் பெருமையிலும் சொன்ன வார்த்தைகள் சிவா. வயதும் அனுபவமும் ஏறஏற எழுத்தில் மெருகு கூடும். எண்ணக்களும் மாறலாம்.அதனால்தான் அப்படிக்கேட்டேன். நீ வாழ்க. .
பதிலளிநீக்குசிவகுமரன் அவர்களே! பிரசுரிக்கவில்லை என்றால் நட்ட!ம் அவர்களுக்கு..நாங்கள் இருக்கிறோம் அனுபவிக்க, படிக்க. பதிவிடுங்கள் தோழரே---காஸ்யபன்
பதிலளிநீக்குகவியரங்கத்துக்கு என்னையும் கூப்பிடுங்க.. கைதட்ட ஆளு வேணுமில்லே?
பதிலளிநீக்குநன்றி சார்.
பதிலளிநீக்குநன்றி காஷ்யபன் அய்யா
துரை அவர்களே
பதிலளிநீக்குநான் ஆரம்பத்தில் த.க.இ,பெ - இல் இருக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் முடிந்த பின்னரோ அல்லது கூட்டம் கூட்டுவதற்காக முன்னதாகவோ கவியரங்கம் நடக்கும். மேடையில் ஒருத்தர் தான் இருப்போம். மற்ற கவிஞர்கள், பேச்சாளர்கள் எல்லோரும் கீழே அமர்ந்திருப்போம் கைதட்ட. என் சித்தப்பா " நாங்கள் பயணம் போவது வெகுதூரம் " என்று பாட ஆரம்பித்தால் கூட்டம் கூடிவிடும் . வாருங்கள் மாறி மாறி கைதட்டிக் கொள்வோம்.
சிவா ஸாரி! கடைசியா வந்ததற்கு..
பதிலளிநீக்குஎனக்கும் ஓர் ஆட்டோகிராப் கிடைக்குமா என் செல்வமே?
கோயில் சுற்றை விடக் கவியரங்கச் சுற்று நல்லாயிருக்கும் போலிருக்குதே? கவியரங்கமா இருந்துச்சுனு வைங்க, மோகன்ஜி சுந்தர்ஜி ஆர்ஆர்ஆர் ஆர்வீஎஸ் இன்னும் யாருக்கு விருப்பமோ.. எல்லாரையும் அவங்களையெல்லாம் வந்து பாடச் சொல்லுங்க, நானும் பாடுறேன் (இதென்ன, சினிமா வசனம் போல இருக்குதே?)
பதிலளிநீக்குத.க.இ.பெ என்ன கட்சி?
பதிலளிநீக்குகவியரங்கம் போட்டு கூட்டினா கூட்டம் வருமா? ஒரு வேளை அதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டுல தேங்குதோ? (உங்க கவிதைல குறை இல்லிங்க)
பதிலளிநீக்குகம்யூனிஸ்ட் கட்சில இந்திரகுமாரி மாதிரி யாரும் அப்ப இல்லையா? இந்திரகுமாரி புடவையை வேட்டி போல் மடித்துக் கட்டி சவால் விடுவதைப் பார்ப்பதற்காகவே கூட்டம் கூட்டமாகப் போவோம். இப்ப இகு ஏதாவது எம்பி ஆகயிருப்பாங்களோ என்னவோ?
என்ன மோகன் அண்ணா நீங்களும் அப்பாத்துரை பக்கம் சாஞ்சுட்டீங்களா ?
பதிலளிநீக்குமதுரைக்காரரா நீங்க, அதான் தமிழ் துள்ளி விளையாடுது. மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களில்தான் தமிழ் இன்னும் மக்களிடையே வாழ்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் திருநெல்வேலி மக்கள் சொலவடை கலந்து பேசுவது கேட்பதற்கு நன்றாயிருக்கும். பல தமிழ் பழமொழிகள் இன்னமும் புழக்கத்தில் இருப்பது நெல்லை மக்களிடம்தான் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதுரை அவர்களே
பதிலளிநீக்குதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - ஒரு இலக்கிய அமைப்பு. அமரர் ஜீவா அவர்கள் ஆரம்பித்தது. இ.கம்யூனிஸ்ட் சார்புடையது. ( கட்சி சாராமல் அதில் என்னால் வெகு காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தேர்தல் கூட்டணி மாறும் போதெல்லாம் நான் என் பழைய கவிதைகளை கிழித்துப் போட வேண்டியதாயிற்று.) இப்போது நான் சுதந்திரமானவன்- காற்றைப் போல.
இல்லை மேடம் . மதுரை நான் பிழைக்க வந்த ஊரு. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. பூர்வீகம் தஞ்சைத் தரணியில் உள்ள குலமங்கலம் என்னும் சிற்றூர். என்னுடைய இன்னொரு வலைத்தலமான் www.arutkavi.blogspot.com
பதிலளிநீக்குவந்தீர்களா ?
சிவா நான் டூ லேட். மரபுக்கவிதையை ரசித்து பலர் பாராட்டிய பின்னர் நான் சொல்ல வேறு ஒன்றும் இல்லை. அப்பாஜி மற்றும் மோகன் அண்ணாவுடன் சேர்ந்து கொண்டு கோரசாக கைதட்டி மகிழ்கிறேன். அற்புதம்.. ;-)))))
பதிலளிநீக்குபட்டிதொட்டிகளில் பாமரர்கள் படும் பாட்டினை நல்ல மரபு பாட்டாய், அருமையாய் இருபதாண்டுகளுக்கு(!!) முன்பே கல்கிக்கு எழுதியிருக்கிறீர்கள். இன்னும் எத்தனை யுகம்(??) ஆனாலும் இந்த அரசியல் எத்தர்கள் ஆண்டால், ஏழ்மையும், வறுமையும் கண்ணீரும். கம்பலையும் இந்த நாட்டைவிட்டுப் போகாது.
பதிலளிநீக்குஅவர்கள் போனால் போகும் இந்த நிலை.
சுட்டி கொடுத்ததற்கு நன்றி. அருமையாக இருக்கிறது உங்கள் புதிய வலைப்பூ. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநெல்லையில் பிறந்து நெல்லையில் தவழ்ந்து,நெல்லையிலேயே கடலில்சங்கமிக்கும் நதி பொருணை. அந்நிய மொழி, பண்பாடு எதுவுமே கலக்காதமாவட்டம் நெல்லை.அங்கு தமிழ் கோஞ்சும்.நவீன தமிழ் இலக்கியத்தின் தொட்டில் நெல்லை மாவட்டம்.நதிக்கரை நாகரீகத்தின் முன்மாதிரி நெல்லை மாவட்டம்.காஸ்யபன் பிறந்து,வளைர்ந்து படித்து ஆளாகியதும் அந்த மாவட்டம் தான்---காஸ்யபன்.
பதிலளிநீக்குநன்றி RVS .
பதிலளிநீக்குராகமணியே இப்படி ஒதுக்கிக்கிட்டா எப்படி. உங்க விமர்சனங்களை வையுங்க சபையில .
நன்றி.வாசன்.
பதிலளிநீக்குநம் எழுத்துக்கள் இந்த அவலத்தைப் போக்க எந்த விதத்தில் உதவப் போகின்றன என எண்ணும் போது, ஏன் தான் எழுதுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நன்றி கீதா மேடம்
பதிலளிநீக்குநன்றி காஷ்யபன் அய்யா
மீண்டும் உங்கள் இடுகையில் நான் வாசிக்கும் ஒரு நல்ல கவிதை . வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் சிவகுமரன்
பதிலளிநீக்குகவிதை அருமை - கருத்தும் அருமை. என்ன செய்வான் தகப்பன்......
கல்கியில் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள். ( 1991 ??? )
தற்போது மதுரையா - தொடர்பு கொள்ளலாமே ! cheenakay@gmail.com
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்வியலின் ஆழம்,வலி மிக்க கவிதை..அருமை
பதிலளிநீக்குஅன்புள்ள சிவகுமாரன்,
பதிலளிநீக்குபழைய 'கல்கி' பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற உங்களின் இந்தக் கவிதை கண்ணில்பட்டது. அச்சில் படித்த சந்தோஷம் எனக்கும் தொற்றிக் கொண்டது.
13-10-91 அன்று திருவாளர்கள் நல்லபெருமாள், அசோகமித்திரன், கி.ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு பரிசுகளுக்குரிய கவிதைகளைத்தேர்ந்தெடுத்திருக்கிறது.
புதுக் கவிதைக்கான முதற்பரிசை 'ஞான வெளியில்' கவிதைக்காக தத்துவப்பித்தனும், இரண்டாம் பரிசை 'நவீன நாடுகடத்தல்' கவிதைக்காக பிருந்தாசாரதியும் பெற்றிருக்கிறார்கள்.
மரபுக் கவிதைக்கான முதற்பரிசு தனது 'ஈரம்' கவிதைக்காக முத்து எத்திராசனுக்கும், இரண்டாவது பரிசு 'படிச்சுக் கிழிக்க வேண்டாம்' என்னும் உங்கள் கவிதைக்கும் கிடைத்திருக்கிற து. 26, நாவலர் தெரு, ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்)
அன்றைய முகவரியாய் திகழ்ந்திருக் கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் எழுதி அச்சிலேறிய கவிதை எனது புத்தக பைண்டிங் ஒன்றில் இப்பொழுது படிக்கக் கிடைத்து, இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது
உண்மைதான்.
அன்புடன்,
ஜிவி
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்.ஜீவி சார்.. ஒரு கவிஞனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்? என்னிடம் கூட நைந்து போன ஒரே ஒரு பிரதி தான் உள்ளது. இத்தனை வருடம் கழித்து தங்கள் பார்வையில் பட்டு, உடனே என்னிடம் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு