வியாழன், மே 19, 2011

வாராதோ அந்த நாட்கள்


ஆற்று மணல்வெளியில்
  அழகாய் வீடுகட்டி
  ஆடித் திரிந்த நாட்கள்.
மாற்றான் தோட்டத்திலே
  மாங்காய் பறித்துவிட்டு
  மாட்டித் தவித்த நாட்கள்.

மரத்தில் கயிறு கட்டி
  அமர்ந்து ஊஞ்சலாடி
  மகிழ்ந்து இருந்த நாட்கள்.
அறுந்து கீழ்விழுந்து
   அடிகள் தாங்கிக் கொண்டும் 
  ஆடி மகிழ்ந்த நாட்கள்

திண்ணை மீதமர்ந்து
  சின்னஞ்சிறு கதைகள்
  சொல்லி மகிழ்ந்த நாட்கள்
கண்ணை கருந்துணியால்
  கட்டி மற்றவரை
  கண்டு பிடித்த நாட்கள்.

பைக்குள் பம்பரத்தை 
  பதுக்கி வைத்துக் கொண்டு 
  பள்ளி சென்ற நாட்கள்.
சைக்கிள் டயர் கிடைத்தால் 
  "பைக்"கே கிடைத்ததென 
    உருட்டி மகிழ்ந்த நாட்கள்.

சிகரெட் அட்டைகளை 
  கரன்சி நோட்டுகளாய்
  சேர்த்து மகிழ்ந்த நாட்கள்
தகர டின் முழுக்க 
  பளிங்கு கோலிக்குண்டு
  போட்டு வைத்த நாட்கள்   

  
மன்னன் மந்திரியாய்
  பள்ளி மேடையிலே  
  மாறி நடித்த நாட்கள்
வண்ணப் பட்டம் செய்து
  வாலும் காலும் வைத்து
  வானைத் தொட்ட நாட்கள்.

அடுத்த தெருப்பசங்க 
   அணியை கபடியினில் 
    அடித்துத் துவைத்த நாட்கள்.
கிடைத்த வெற்றியினில் 
   கிறுக்குப் பிடித்துத் தலை 
    கனத்துத் திரிந்த   நாட்கள்.

கொட்டும் மழை நடுவே
  குளிரில் நடுங்கிக் கொண்டு
  குதித்து மகிழ்ந்த நாட்கள்.
திட்டும் செம அடியும்
  சேர்த்து வாங்கிக் கொண்டு
  துடைத்துப் போட்ட நாட்கள்.

வீட்டுக் கவலையின்றி
  வேலை ஏதுமின்றி -விளை
   யாடித் திரிந்த நாட்கள்
ஆட்டம் போட்டுவிட்டு
  அன்னை மடிதனிலே
  அயர்ந்து படுத்த நாட்கள்.

சின்னஞ் சிறு வயதில்
  எந்தத் துயருமின்றி
  சிரித்துப் பறந்த நாட்கள்.
என்ன இனிமை அவை
  என்ன இனிமை அவை
   எங்கே அந்த நாட்கள்.

                              -சிவகுமாரன்

59 கருத்துகள்:

  1. ராதேஷ் சொன்னது
    சிறுவயதில் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் சிறு சிறு மகிழ்ச்சிகளையும் வெகு அழகாக பட்டியலிட்டிருக்கிறீர்கள். மனம் குழந்தைப் பருவத்துக்கே சென்று துள்ளிக் குதிக்கிறது. அழகான சந்தத்துடன் கூடிய பாடல் . வெகு அருமை.
    By Rathesh on வாராதோ அந்த நாட்கள் on 5/19/11

    பதிலளிநீக்கு
  2. சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது

    ஆகா.. அற்புதம்.. பாடித் திரிந்த பறவைகளே.. பசுமை நிறைந்த நினைவுகளே.. நாம் பிரிந்து செல்கின்றோம்.. நாம் பிரிந்து செல்கின்றோம்.. என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.. ஆம் நாம் இன்று பிரிந்திருப்பது இத்தகைய அற்புதமான இளமைக் காலத்தையல்லவா ? எப்படியோ எங்களது இளமையை நினைவு படுத்திய இனிமையான கவிதை.. வாழ்த்துக்கள் சிவகுமாரன்..


    தோழரே .. இன்னொன்றை சொல்ல மறந்தேன்.. ஆம் மிக மிகப் பொருத்தமான படங்கள்.. இந்த படங்கள் தான் நமது இளமையை நினைத்து இன்னும் ஏங்க வைக்கின்றன.. வாழ்த்துக்கள்.
    By சிவ.சி.மா. ஜானகிராமன் on வாராதோ அந்த நாட்கள் on 5/19/11

    பதிலளிநீக்கு
  3. ரமணி சொன்னது

    கடந்து போன இனிய நாட்களை நினைவு கூர்ந்தவிதம் அருமை அதைவிட என்ன இனிமை அவை என்ன இனிமை அவை எங்கே அந்த நாட்கள் என்ற முடிவு வரிகள் மிக மிக அருமை மனங்கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
    By Ramani on வாராதோ அந்த நாட்கள் at 1:06 PM

    பதிலளிநீக்கு
  4. சமுத்ரா சொன்னது

    உண்மை தான்...Irreversible ! :(
    By சமுத்ரா on வாராதோ அந்த நாட்கள்

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் சொன்னது

    துள்ளித் திரிந்ததொரு காலம்.

    பதிலளிநீக்கு
  6. சிறகுள்ள சிட்டு குருவிகளாய்
    சிறகடித்து பறந்த
    சிங்கார காலங்களை
    வண்ணமாய்
    வரிசை படுத்திய அழகு
    அட்டகாசம்
    வாழ்த்துக்கள்
    திரு.சிவகுமாரன்

    பதிலளிநீக்கு
  7. அறியா பருவத்தின் விளையாட்டான அழகின் அழகை- அதிலிருந்து வெளியே வந்த பிறகே அறிய முடிகிறது... வெளிவந்த பிறகு- அந்த அழகில் மீண்டும் திருப்பி விடப்பட்டாலும்- அந்த அழகை தாங்கிக் கொள்ள இயலுமோ- என்பது சந்தேகம் தான்...

    But the essence of those days has been captured beautifully! Kudos!

    பதிலளிநீக்கு
  8. ஏங்க வைக்கரீங்கா சிவா ... அந்த நாட்கள் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைகளுக்கும் கிடைக்குமா ???

    பதிலளிநீக்கு
  9. பத்து நிமிடங்கள் பழைய நாட்களை அசை போட வைத்தீர்களே? கவிதையா, கால எந்திரமா? அருமை!

    பதிலளிநீக்கு
  10. எங்கள் இள வயது நினைவுகளை, ஞாபகங்களை அழகிய சந்தக் கவி மூலம், மீண்டும் மனக் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  11. கிட்டத்தட்ட எல்லோருமே வாலில்லாக் குரங்குகளாகவே இருந்திருக்கிறோம்.அப்படியே சின்னவயசு நினைவலைகள் என்னதுபோல !

    பதிலளிநீக்கு
  12. //சைக்கிள் டயர் கிடைத்தால்
    "பைக்"கே கிடைத்ததென
    உருட்டி மகிழ்ந்த நாட்கள்.

    சிகரெட் அட்டைகளை
    கரன்சி நோட்டுகளாய்
    சேர்த்து மகிழ்ந்த நாட்கள்//

    அருமை. வெகு அருமை.
    மிக நல்ல பதிவு.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. இத்தனையும் உண்டு.
    இன்னமும் உண்டு.
    இன்னா அதுன்னு கேக்கறீகளா ?

    இந்த வயசுலே சொல்ல முடியுமா ?

    சொல்லிப்புடுவேன். ஆனா இந்தக்கிழவி
    இன்னும் இரண்டு நாளைக்கு என்னோட பேசமாட்டா !!
    மனசுக்குள்ளே அசை போட்டுக்கறேன்.

    இந்த பாடலை ஒரு கிராமத்து ஃபோக் மெட்டிலே
    இன்னிக்கு பாடியிருக்கேன். கேளுங்க. !!

    சுப்பு தாத்தா.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. "அந்த நாளும் வந்திடாதோ!”
    அருமை சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  15. திரும்பக் கிடைக்காத பொக்கிஷங்களில் முதலிடம் கடந்த காலத்துக்குத்தான் சிவா. அதுவும் கவலைகளற்றுத் திரிந்த குழந்தைப் பருவத்துக்குத்தான்.

    ஆண் உணர்வில் பாடப்பட்ட அபாரமான கவிதை இது.

    இதே காலகட்டத்தின் பெண் பிள்ளைகளின் குரலாயும் ஒரு கவிதை கேட்க ஆசையாய் இருக்கிறது சிவா.

    இயலுமா?

    பதிலளிநீக்கு
  16. "மன்னன் மந்திரியாய்
    பள்ளி மேடையிலே
    மாறி நடித்த நாட்கள்..."
    இப்படி எத்தனை நினைவுகள்.
    மீட்டுத் தந்த கவிதை அபாரம்.

    பதிலளிநீக்கு
  17. //சிகரெட் அட்டைகளை
    கரன்சி நோட்டுகளாய்
    சேர்த்து மகிழ்ந்த நாட்கள்//
    நாங்கள் தீப்பெட்டிப்படங்களைக்கூட அப்படித்தான் பொக்கிஷமாகக்காத்துக்கிடந்தோம். புளிய முத்துக்களைப் பை நிறைய போட்டுக்கொண்டு ஒரு கல்லை வைத்து செதுக்கியிருக்கிறோம் விளையாட்டை. பருத்தியைத்திருடி கடையில் போட்டு அவிச்ச கிழங்கு வாங்கியிருக்கிறோம். அதெல்லாம் ஒரு கார் காலம். நினைவலைகளை பொங்கியெழச்செய்த வரிகள் தங்களுடையது. வாழ்த்துகளுடன்,
    திலிப் நாராயணன்.

    பதிலளிநீக்கு
  18. என் பிரிய சிவா! உன் கவிதை வரிகளின் இடையே கொஞ்சம் கொஞ்சமாய் என் இதயத்தைப் பிய்த்து செருகித்தான் படிக்க முடிந்தது.

    அந்த நாளும் வந்திடாதோ?
    எல் கே கேட்டாரே.... நம் குழந்தைகளுக்கும் கிடைக்குமா என்று? இனம்புரியாத குற்றஉணர்வு அல்லவோ கிளர்ந்து வருகிறது?

    பதிலளிநீக்கு
  19. கோடை விடுமுறை நினைவுகளை கிளர்ந்து எழ செய்தது... அழகான வார்த்தை கோர்வை... நன்றி

    பதிலளிநீக்கு
  20. அழகிய கவிதை சிவா.. பிள்ளைப் பிராயத்தின் நினைவுகளைத் தூண்டில் போட்டு இழுக்கிறது உங்கள் கவிதை. அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்க வைத்து விட்டது உங்கள் கவிதை…..

    பதிலளிநீக்கு
  21. துரை அவர்கள் சொன்னது போல் உங்கள் கால இயந்திரமாக பிள்ளைப் பருவத்தை அசை போட வைத்தது. என் அம்மா அவர்கள் பள்ளிப் பருவக் கதைகளிக் கூறும்போது ஆகா எத்தனை மகிழ்ந்திருக்கிறார்கள் என்று ஏங்கியது மனம். இப்போது நான் என் பள்ளி நாட்களைப் பற்றி என் மகளிடம் கூறும்போது நானே 'அட, இந்த காலத்தை compare செய்யும்போது நாம் எத்தனை சந்தோஷங்களை அனுபவித்திருக்கிறோம்' என்று வியக்கிறேன். காலம் மாற மாற இளமை சந்தோஷங்கள் குறைகிறதோ!

    பதிலளிநீக்கு
  22. "ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி..
    தோட்டமிட்டு செடிவளர்த்து ஜோராகக் குடியிருப்போம்.." என்கிற கவிரசரின் பாடலின் போது பார்த்த படக்காட்சியும் நினைவினில் நீந்தியது.. அற்புதமான உங்களின் கவிதைவரிகளுக்கு நீங்கள் இட்டிருக்கும் படங்களும் அழகோ,அழகு!

    புறநானூற்று காலத்தில் கூட இப்படியான ஒரு நிகழ்ச்சி தான். தொடித்தலை விழுத்தண்டினாரின்
    "இனி நினைந்து இரக்கம் ஆகின்று.."என்று தொடங்கும் புறநானூற்று பாடல். (புறம்-243)
    எனது பதிவில், இலக்கிய இன்பம் பகுதியில், 'ஆற்றின் அடிமணல் எடுத்து' என்னும் தலைப்பில் அந்தப் பெரியவரின் அறியா பருவத்து நினைவுகள் அழியாக் கோலங்களாய் பதிவாகியிருக்கிறது.

    உங்களுக்குப் பிடிக்கும். படித்துப் பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  23. வாராதோ அந்த நாட்கள் என புலம்பித்தவிக்கும் இன்னும் இருவரையும்
    உங்கள் பழைய நினைவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க இயலுமோ !!

    அவர்களது அந்த நாட்கள் என்னவென ,

    இங்கு வந்து பாருங்கள்.
    http://vazhuveri.blogspot.com
    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லாமே 21, 2011 11:37 PM

    புதைந்து போன பழைய நினைவுகளை மீண்டும் எம் கண் முன்னே கொண்டு வருகிறது கவிதை. மிக நன்றாக உள்ளது வரிகள்..

    பதிலளிநீக்கு
  25. நன்றி ராதேஷ், சிவ.ஜானகிராமன், ரமணி சார், சமுத்ரா, ஸ்ரீராம். ARR , & மாதங்கி.

    மனமார்ந்த நனறிகள்

    பதிலளிநீக்கு
  26. நன்றி எல்.கே.

    நீங்கள் சொல்வது சரி
    இந்தக் கவிதையை என் மகன் படித்துவிட்டு , "நீங்க இவ்வளோ enjoy பண்ணிவிட்டு என்னை மட்டும் படி படி என்று படுத்துகிறீர்களே " என்கிறான்.
    என்ன பதில் சொல்வது. ??

    பதிலளிநீக்கு
  27. நன்றி அப்பாஜி. கால இயந்திரம் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நான் அதிகம் பார்த்துப் பழகாத என் அப்பா, பார்க்கவே இல்லாத என் மற்றும் அப்பாவின் தாத்தா, பார்க்காத ஆனால் பழகிய பாரதி இவர்களை எல்லாம் பார்த்து விட்டு வந்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி நிரூபன், ஹேமா, வைகோ, சித்ரா & சென்னைப் பித்தன்

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  29. சுப்புத் தாத்தா,

    எனக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. என் கவிதைகளை நீங்கள் ரசிப்பதோடு மட்டுமின்றி அதற்கு மெட்டமைத்து பாடுவது என் பேறு
    உங்கள் இளமைக்காலகுறும்புகளை நானே கற்பனை செய்து பார்த்து ரசித்தேன். ( கற்பனை எல்லை தாண்டுவதற்குள் நீங்களே சொல்லி விடலாம் .)

    பதிலளிநீக்கு
  30. ஆமாம் சுந்தர்ஜி. என் நினைவுப் பெட்டகங்களில் அந்தப் பொக்கிசங்களை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
    புதிய கவிக்கு கரு கொடுத்ததற்கு நன்றி. ஆனால் என் அனுபவத்தில் ஆண் அளவுக்கு பெண்ணுக்கு இந்த அளவு இளமைப் பருவம் இனிமையாய் இல்லை என்பது சற்று கசப்பான உண்மை. அதைப் பற்றியும் எழுத ஆசை.

    பதிலளிநீக்கு
  31. நன்றி திலீப்[ நாராயணன்,
    நீங்கள் சொல்லும் எல்லா விளையாட்டுக்களையும் நானும் விளையாண்டிருக்கிறேன்.புளியங்கொட்டை செதுக்குவது. முந்திரிக்கொட்டைகளை வட்டத்துக்குள் போட்டு அடித்து விளையாடுவது எல்லாம் சீசன் விளையாட்டுக்கள். தீப்பெட்டி அட்டைகளும் சேர்த்திருக்கிறோம். இரட்டைக் கிளி தீப்பெட்டி அட்டைகள் தான் பரவலாக கிடைக்கும். எப்போதாவது வெட்டும் புலி, நிலா தீப்பெட்டிகள் கிடைத்தால் அன்று அவன் தான் ஹீரோ.
    ஹ்ம் நினைவுகள் சுகமானவை .

    பதிலளிநீக்கு
  32. நன்றி மோகன் அண்ணா.
    நீங்கள் சொல்வது போல நாமாவது அனுபவித்துவிட்டு இப்போது ஏங்குகிறோம். நம் குழந்தைகள் அனுபவிக்கவே இல்லையே. இயந்திரமாய் அல்லவா ஆக்கி வைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  33. ஆமாம் கீதா மேடம் நீங்கள் சொல்வது சரி. காலம் மாற மாற இளமை சந்தோசங்கள் குறைகின்றன. இந்த உலகம் போட்டி நிறைந்ததாகி விட்டது. நம் குழந்தைளை போட்டிக்குத் தயார் செய்கிறோம்.- விளையாட்டில் கூட.

    பதிலளிநீக்கு
  34. நன்றி ஜீவி சார். கவியரசுவின் வரிகளை நினைவுபடுத்தி, புறநானுற்று கவிதையை பகிர்ந்து இலக்கிய இன்பம் பருகச் செய்தீர்கள்.
    தங்கள் பதிவில் உங்கள் இளமைக் கால நினைவுகள் ரசிக்க வைத்தன,
    நன்றி

    பதிலளிநீக்கு
  35. நன்றி.
    Dr .முருகானந்தம்
    அப்பாவி தங்கமணி
    வெங்கட் நாகராஜ்
    &
    கந்தசாமி

    மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  36. நினைவு நதியில்
    நனைய வைத்துவீட்டீர்கள்

    அருமை

    பதிலளிநீக்கு
  37. ப்ராட் பேண்ட் பிரச்சனையால் முன்பே வர முடியவில்லை. நானும்தான் என் இளமைக்கால நினைவுகளை அரக்கோண நாட்கள் என்று பதிவாக்கியிருந்தேன். கவிதை நடையில் சிவகுமாரனின் அழகு தமிழில் நினைவு கூர்ந்திருப்பது போல் வருமா.?பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  38. என்ன இனிமை அவை
    என்ன இனிமை அவை
    எங்கே அந்த நாட்கள்.
    எளிமையான பொருள்களே அன்று இனிமைக்குப் போதுமானவையாக இருந்த இனிய நாட்கள். அருமை.பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  39. நாமும் போட்டிகள் போட்டோம்; நம் குழந்தைகள் போட்டியிடும் போது பெரிதாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  40. அருமை திலீப்.. தீப்பெட்டி அட்டைகளை சேர்த்து பொக்கிஷம் போல் காத்த நாட்கள்!

    பதிலளிநீக்கு
  41. உங்களுக்கு மகன் இருக்கிறானா? அவனும் கவிதை எழுதுகிறானா?

    பதிலளிநீக்கு
  42. பழைய நாட்களை அசை போட வைத்தீர்கள். அருமை சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  43. //சிகரெட் அட்டைகளை
    கரன்சி நோட்டுகளாய்
    சேர்த்து மகிழ்ந்த நாட்கள்
    தகர டின் முழுக்க
    பளிங்கு கோலிக்குண்டு
    போட்டு வைத்த நாட்கள்//
    நல்ல பசுமையான நினைவுகள் நாங்களும் இந்த விளையாட்டெல்லாம் விளையாடி மகிழ்ந்ததை நினைவு படுத்துகிறது உளம் கனிந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  44. நன்றி GMB அய்யா. எனக்கும் அதே பிராட்பேண்ட் பிரச்சினை தான். வலைப்பக்கம் அடிக்கடி வரமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  45. நன்றி திகழ்
    நன்றி அப்பாஜி
    நன்றி ராஜேஸ்வரி மேடம்
    நன்றி சாய்
    நன்றி மாலதி

    பதிலளிநீக்கு
  46. சமுத்ரா சொன்னது
    \\உங்களுக்கு மகன் இருக்கிறானா? அவனும் கவிதை எழுதுகிறானா?///

    12 வயதில் மகன் இருக்கிறான். என் கவிதைகளை எல்லாம் படிக்கிறான். விமர்சிக்கிறான். ஆங்கிலத்திலும் அவ்வப்போது தமிழிலும் சிறு சிறு கவிதைகள் எழுதி அவன் அம்மாவிடம் காட்டுகிறான். என்னிடம் காட்டுவதில்லை.

    பதிலளிநீக்கு
  47. அன்பு சிவா !கொஞ்ச நாtட்களாக உள் மனஓட்டங்களை கவிதை
    களாக்கி எழுதி கவருகிறிர்கள்.நெஞ்சிலே M.G.R படம் போட்ட பனியனை போட்டுக்கொண்டு கஞ்சா பீடியை வலித்து துப்பும் அந்த
    அப்பாவியை பற்றியும் எழுதும் ஐயா !வாழ்துக்களுடன் ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  48. நன்றி அய்யா. நீங்கள் கேட்ட கவிதை ஓரிரு நாட்களில் .

    பதிலளிநீக்கு
  49. வீட்டுக் கவலையின்றி
    வேலை ஏதுமின்றி -விளை
    யாடித் திரிந்த நாட்கள்
    ஆட்டம் போட்டுவிட்டு
    அன்னை மடிதனிலே
    அயர்ந்து படுத்த நாட்கள்

    அருமையான கவிதை! எல்லோருக்குமே மனதில் இந்த ஏக்கம் இருக்கிறது! வெளிப்படுத்தத்தான் எல்லோருக்கும் முடிவதில்லை! நீங்கள் மிக அழகாக பிள்ளைப்பிராயத்து இனிய நினைவுகளை அப்படியே திரும்பக் கொன்டு வந்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  50. சிவகுமரன்...

    தொடர் பணிகள். ஆகவே தாமதம். தணிக. இந்தக் கவிதை எனக்காக எழுதப்பட்டதைப் போலவே உணர்கிறேன். இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றையும் திகட்ட திகட்ட அனுபவித்திருக்கிறேன். இதில் நீச்சல் மட்டும் விடுபட்டிருக்கிறது. மூக்கில் நீரேறி...கண்கள் சிவந்து..நாம் டைவ் அடிக்கும்போது நம்மீதே இன்னொருவன் விழுந்து...மேலே வருவதற்குள் படும்பாடு..சுகம்தான். அற்புதம். அனுபவம் பொக்கிஷம். எல்லோர் மனதிற்குள்ளும் இது இருக்கிறது சுடராய். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  51. சிவகுமரன்...

    தொடர் பணிகள். ஆகவே தாமதம். தணிக. இந்தக் கவிதை எனக்காக எழுதப்பட்டதைப் போலவே உணர்கிறேன். இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றையும் திகட்ட திகட்ட அனுபவித்திருக்கிறேன். இதில் நீச்சல் மட்டும் விடுபட்டிருக்கிறது. மூக்கில் நீரேறி...கண்கள் சிவந்து..நாம் டைவ் அடிக்கும்போது நம்மீதே இன்னொருவன் விழுந்து...மேலே வருவதற்குள் படும்பாடு..சுகம்தான். அற்புதம். அனுபவம் பொக்கிஷம். எல்லோர் மனதிற்குள்ளும் இது இருக்கிறது சுடராய். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  52. அந்த நாட்களின் நினைவுகளில் நனைவது தனிப்பெரும் சுகம் ...

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ...

    பதிலளிநீக்கு
  53. பால்யத்தின் நினவுகளை பளிச்சென்று நினைவு வரவைக்கும் கவிதை..மணல் வீடு,வால் பட்டம், ஒலை காத்தாடி டயர், கோலி, கில்லி ,பம்பரம் ஆற்று நீச்சல், கிணற்றுநீச்சல் இப்படி நமக்கு கிடைத்த சந்தோச கருவிகள் எத்தனை எத்தனை...

    பதிலளிநீக்கு
  54. நன்றி மனோ சாமிநாதன் மேடம், ஹரணி சார், தினேஸ்குமார் & ரசிகமணி .
    நன்றி

    பதிலளிநீக்கு
  55. இனித்த அந்த தொலைந்த நாட்கள் ஏக்கம் தருபவை.எண்ணி பார்த்து மீதி நாட்கள் செல்லட்டும்!

    பதிலளிநீக்கு
  56. சிறுவயது ஞாபகங்களை மெல்ல தட்டிவிட்டு சென்ற வரிகள் மிக மிக அருமை சிவகுமாரன்.....

    அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  57. சிறு வயது நினைவுகள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தை தரும் கவிதை நன்று

    பதிலளிநீக்கு