புதன், ஜூன் 29, 2011

உறக்கம்




இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ?
நன்றாக உறங்கியபின் "நான்"  இருப்பேனா ?
தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும் 
ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்? 

உறங்கியபின் வருகின்ற உலகம் எதுவோ ?
இறங்கிவரும் விண்ணுலகம் என்ப ததுவோ ?  
கிறங்க வைக்கும் மது கொடுக்கும் மயக்கமதுவும்
நிறங்களற்ற உறக்கமதின் நிலைமையும் ஒன்றோ ?


விழித்திருக்கும் போதிருக்கும் வேதனை எல்லாம்
ஒழிந்திடுமோ ஒளிந்திடுமோ உறக்கம் வந்ததும் ?
கழிப்பதுவும் வகுப்பதுமாய் காலம் இருக்க
செழிப்புடனே நித்திரையில் சிரித்திருப்பதேன் ?


இச்சை எல்லாம் உறக்கத்தில் தீர்ந்து விடுவதேன் ?
மிச்சமெனில் மறுநாளில் சேர்ந்து வருவதேன் ?
அச்சமூட்டும் கனவு வந்தால் அதிர்ந்து எழுவதேன் ?
நிச்சயமாய் இன்பமெனில் நீண்டு விடுவதேன் ?


சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே தான்.
சக மனித தொந்தரவு , சஞ்சலம் எல்லாம்
புக முடியா தனியுலகம் கனவுலகம் தான்.


நாட்டை ஆளும் மன்னனாக நாமிருக்கலாம்
கோட்டை கட்டி படை நடத்தி கொடியை நாட்டலாம்
வீட்டை விட்டு சுதந்திரமாய் வெளியில் சுற்றலாம்
காட்டினுள்ளே தவமியற்றி கடவுள் தேடலாம் .


எழச்சொல்லி கவிஎழுதி என்ன கண்டேன் நான் ?
அழச்செய்யும் அவலங்கள் நாட்டில் இருக்க ?
விழச்சொல்ல வில்லை நான். எல்லாம் காலச்
சுழற்சியிலே மாறிவிடும் , அதனால் நன்றாய்


உறங்கிடுவீர் உறங்கிடுவீர் உலகத்தீரே
இறங்கிடுவீர் இன்பமெனும் சுரங்கத்துள்ளே
அரங்கனவன் உறக்கத்தை அறிதுயில் என்பார்.
வரங்கொடுக்கும் அவனைமுதல் விழிக்கச் சொல்வோம் .











( அப்பாத்துரையின் நசிகேத வெண்பாவில் . அஜாதசத்ரு-பாலயோகியின் உறக்கம் பற்றிய உரையாடலைப் படித்த போது தோன்றிய கவிதை இது . அப்பாஜி எழுதியது தத்துவம் . நான் எழுதுவது வெத்துவம்)  
                                                                                                                                                           -சிவகுமாரன் 

என்  கவிதைகளின் ரசிகர் , என் பெரும்பேறு , சுப்புத் தாத்தாவின் குரலில் , கேட்டு மகிழுங்கள். 




40 கருத்துகள்:

  1. உறக்கம் ...இனிமையானது தான் எப்போது? விழிப்பு என்பதை உணரும் தருணத்தில்!

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாய்.
    விழிப்பு வராது என்றால் யாராவது உறங்கச் செல்வோமா?
    நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  3. //சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
    பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே தான்.
    சக மனித தொந்தரவு , சஞ்சலம் எல்லாம்
    புக முடியா தனியுலகம் கனவுலகம் தான்.//

    உறக்கம் பற்றிய இந்தக்கவிதை விழிப்பைத் தந்த்து; அதனால் படிக்க முடிந்தது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தத்துவத்தை உள்வாங்கி கவித்துவமாய் வெளியிட்ட இது வெத்துவமா..யார் சொன்னது..சீரும் சிறப்பான நேருமாய் வந்த வெண்பாத்துவம்...

    பதிலளிநீக்கு
  5. உறக்கம் இனிமையானது அதிலும் அதிகாலையில்
    விழிப்பு வந்து பின் வரும் உறக்கம் ஆஹா
    அருமையான கவிதை என்னை உறங்கவிடாது செய்கிறது

    பதிலளிநீக்கு
  6. அன்பு சிவா! உறக்கம் பற்றி நீ எழுத, அதே சமயம் நான் நற்றிணையில் கனவு பற்றி பதிவிட்டிருக்கிறேன்..

    எளிமையான கவிதையில் கடினமான கேள்விகள்...

    உலகெலாமோர் பெறுங்கன வ ஃதுளே
    உண்டு றங்கியி டர்செய்து செத்திடும்
    கலகமானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
    கனவிலும் கனவாகும் இதனிடை...

    பாரதியை நினைவுகூர வைத்து விட்டாய்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாஜூன் 30, 2011 12:39 AM

    ///நாட்டை ஆளும் மன்னனாக நாமிருக்கலாம்
    கோட்டை கட்டி படை நடத்தி கொடியை நாட்டலாம்
    வீட்டை விட்டு சுதந்திரமாய் வெளியில் சுற்றலாம்
    காட்டினுள்ளே தவமியற்றி கடவுள் தேடலாம் .////

    உறக்கம் அதால் வரும் கனவு .. வாழ்வில் அடைய முடியாததை எல்லாம் கனவிலே அடைந்துவிடுவோம் ... கவிதை நல்லாய் இருக்கு பாஸ் ...

    பதிலளிநீக்கு
  8. சிவகுமரனவர்களே ! அரங்கன் விழித்தால் அவலங்கள் போய்விடுமா? ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  9. துயிலுக்கு ஓர் கவிதை !!
    அத்துயிலின் ஒயிலைப் பாடும்
    அற்புதக் கவிதை.
    இதோ !! கானடா ராகத்தில் பாடுகிறேன்.
    வாருங்கள். கேளுங்கள்.
    சுப்பு ரத்தினம்.

    www.youtube/pichuperan

    பதிலளிநீக்கு
  10. http://youtu.be/PqDJ-ujqUag
    listen to the song here
    subbu thatha

    பதிலளிநீக்கு
  11. சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
    பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே தான்.

    தனியுலகம் கனவுலகம் தான்.


    உறக்க கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  12. உறக்கமெனும் உன்னத நிலை! சரியா கவியே? ;-)))

    பதிலளிநீக்கு
  13. உறக்கம் பற்றிய ஒரு அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும்
    ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்? //

    அதான் எனக்கும் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  14. //எழச்சொல்லி கவிஎழுதி என்ன கண்டேன் நான் ?
    அழச்செய்யும் அவலங்கள் நாட்டில் இருக்க ?
    விழச்சொல்ல வில்லை நான். எல்லாம் காலச்
    சுழற்சியிலே மாறிவிடும் , அதனால் நன்றாய்


    உறங்கிடுவீர் உறங்கிடுவீர் உலகத்தீரே//


    வாவ்!என்னமா சொல்லிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  15. வெத்துவமானு நான் கேட்க நினைத்தேன் - பத்மநாபன் முந்திக்கிட்டார். அருமையான கவிதை. காஸ்யபன் அவர்களின் கேள்வியும் அருமை. அவலங்களை மறப்பதற்குத்தான் அறிதுயில். ஒருவேளை சிவகுமாரன் பாட்டைக் கேட்டு இன்னும் தூங்குறாரோ அரங்கன்? ("ஆளை விடுங்கப்பா!")

    எத்தனையோ வருடங்களுக்கு முன் கண்ணதாசன் ஒரு கவிதை எழுதினார் - உறங்கும் பிள்ளையை எழுப்பவேண்டாம் என்று. கவிதை நினைவில்லை. அதே வலி உங்கள் கவிதையைப் படிக்கும் பொழுதும் வந்தது சிவகுமாரன்.

    அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
    பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே தான்.
    சக மனித தொந்தரவு , சஞ்சலம் எல்லாம்
    புக முடியா தனியுலகம் கனவுலகம் தான்...nalla vatikal
    vetha-
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  17. /////சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
    பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே//////

    அருமையாக உவமித்துள்ளீர்கள் நன்றி நன்றி..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

    பதிலளிநீக்கு
  18. வெத்துவம் அல்ல நண்பரே. உங்கள் கவிதை நன்று....

    பதிலளிநீக்கு
  19. அரங்கன் துயில்வதும் அவன் எழுவதும் அழகான கவிதையை ஒத்த ஓர் நம்பிக்கை. கவிதை பிறக்கும் இடத்தில் மூளை உறங்க கவிஞனின் மனமும் உணர்வும் விழிக்கிறது.

    அருமை சிவா. வள்ளுவனின் சாக்காட்டையும் நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சிவகுமாரன்,

    //இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ?
    நன்றாக உறங்கியபின் "நான்" இருப்பேனா ?//

    இந்த ஆழமான ஒரு வரி போதாதா ?
    தாங்கள் எழுதுவது..

    கவித்துவமான தத்துவம் என்பதற்கு..

    வாழ்த்துக்கள்..

    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    பதிலளிநீக்கு
  21. உறக்கத்தைப் பற்றிய கவிதையும் உறங்கும் குழந்தையின் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  22. நன்றி ராஜபாட்டை ராஜா, வை.கோ.சார், ரசிகமணி, , & ARR
    நன்றி

    பதிலளிநீக்கு
  23. நன்றி மோகன் அண்ணா. பாரதியின் சுயசரிதையில் வரும் இந்த வரிகள்,........

    "உலகெலாமோர் பெறுங்கன வ ஃதுளே
    உண்டு றங்கியி டர்செய்து செத்திடும்
    கலகமானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
    கனவிலும் கனவாகும் இதற்கு நான்
    பலநினைந்து வருந்தியிங் கென்பயன்?
    பண்டுபோனதை எண்ணி என்னாவது?
    சிலதினங்கள் இருந்து மறைவதில்
    சிந்தை செய்தவன் செத்திடுவானடா?"

    ..........என் நினைவிலும் வந்து போயின.
    ஒத்த சிந்தனை. மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. காஷ்யபன் சொன்னது.

    \\சிவகுமரனவர்களே ! அரங்கன் விழித்தால் அவலங்கள் போய்விடுமா?//

    வணக்கம் அய்யா
    தங்களுக்கு சுந்தர்ஜியின் பின்னூட்டத்தை பதிலாய் சொல்கிறேன்.
    \\அரங்கன் துயில்வதும் அவன் எழுவதும் அழகான கவிதையை ஒத்த ஓர் நம்பிக்கை. கவிதை பிறக்கும் இடத்தில் மூளை உறங்க கவிஞனின் மனமும் உணர்வும் விழிக்கிறது//

    நான் இங்கு, கடவுளே இந்த அவலங்களைப் பார்த்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறான். நாம் என்ன செய்ய முடியும் .. என்கிற தொனியில் கேட்டிருக்கிறேன் . அவ்வளவு தான்.

    --- என் கடவுள் நமிபிக்கையை இங்கு வெளிப்படுத்தவில்லை. அதற்கு வேறு ஒரு தளம் வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சுப்புரத்தினம் அய்யா.
    தங்கள் குரல்பதிவை இந்த இடுகையில் இணைத்துவிட்டேன்.
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  26. RVS சொன்னது
    \\உறக்கமெனும் உன்னத நிலை! சரியா கவியே? ////

    மெத்த சரி. ( மெத்தை சரி என்று உங்களுக்கு கேட்குமே )

    பதிலளிநீக்கு
  27. நன்றி நிரூபன்
    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  28. நன்றி அப்பாஜி.
    நானும் கண்ணதாசனின் அந்த கவிதையை படித்திருக்கிறேன் என் சிறு வயதில்.
    " அவனை எழுப்பாதீர்
    அப்படியே தூங்கட்டும் "
    என்று எழுதியிருப்பார். என் தந்தை இதைப் படித்துக் காட்டி விட்டு கவிதை என்றால் இப்படி இருக்க வேண்டும். நீயும் தான் எழுதுகிறாயே , என்றார்.( நான் அப்போது கம்யூனிசக் கவிதைகளை எழுதி கவியரங்கங்களில் கலந்து கொண்ட சமயம் ). ரோஷம் வந்தவனாக , உடனே அந்த கண்ணதாசனின் கவிதை போலவே குழந்தையின் அழுகை பற்றி ஒரு கவிதை எழுதி என் தந்தையிடம் காட்டினேன். பூரித்துப் போனார் என் அப்பா.
    நன்றி.அப்பாஜி. நினைவுப் படுத்தியதற்கு. அந்த பழைய கவிதையை தேடி பிடித்து அடுத்த பதிவாய் இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி கவிதை (வேதா) , மதி.சுதா. & வெங்கட் நாகராஜ் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. நன்றி சுந்தர் ஜி.
    "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு "

    ஒண்ணே முக்கால் அடியில் அய்யன் சொன்னதை நான் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறேன்.

    காஷ்ய்பன் அய்யாவுக்கு என்ன பதில் சொல்வது என்று விழித்துக் கொண்டிருந்தேன்.நீங்கள் வந்தீர்களோ ..நான் பிழைத்தேனோ ...

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஜானகிராமன்,
    தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என் எழுத்துக்களுக்கு உரம்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி கீதா மேடம்.
    நன்றி குணசேகரன்

    பதிலளிநீக்கு
  33. பாடலின் குரல், வரிகள், ஆழமான சிந்தனை, உறக்கம் நன்றே, உறக்கம் நன்றே. ஆயினும் எப்போதும் உறங்கிக் கிடப்பவன் நாட்டுக்குத் தேவையில்லை அல்லவா. ஆனால், உறக்கத்தின் ஆழமான சிந்தனை வரிகள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  34. எழச்சொல்லி கவிஎழுதி என்ன கண்டேன் நான் ?
    அழச்செய்யும் அவலங்கள் நாட்டில் இருக்க ?
    வாவ்.. நல்லா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  35. சிவகுமரன்...

    இந்தக் கவிதை தனித்துவமிக்கது. சித்தர்களின் மனப்போக்கினைக் காண்கிறேன். நாளை விழிக்கமாட்டோம் என்றால் யாரும் உறங்கமாட்டோம். உறங்குதலும் விழித்தலும் என்பது மேலோட்டமான உணர்வுகள் இல்லை அது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வாழும் ஒவ்வொரு தருணத்திலும் குறியீடாகவே இயங்குகிறது. விழித்திருக்கும்போதெல்லாம் வாழ்கிறான். உறங்கும்போதெல்லாம் வாழ்வதற்கான நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்கிறான் அருமை சிவகுமரன். கோடைவிடுப்பு முடிந்து பல்கலை திறந்தாகிவிட்டது. இனி ஓட்டம்தான். போவதற்கு முன் உங்கள் பதிவைப் பார்க்கவேண்டும் என்று நாலைந்து நாட்களாக முயன்று இன்றுதான் தருணம் வாய்த்தது.

    பதிலளிநீக்கு
  36. ஒயிலய் துயிலும் கனவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி திகழ், சந்திர கௌரி, ரிஷபன், ஹரணி சார், & இராஜேஸ்வரி மேடம்,

    பதிலளிநீக்கு