ஞாயிறு, நவம்பர் 13, 2011

மேகங்கள்


வெண்ணிலா மீனவன் 
  விண்ணகக் கடலில்
விண்-மீன் பிடிக்க 
  வீசிய வலைகள்.

நிலவுத் தலைவி
  நந்த வனத்தில்
உலவச் செல்லும்
  வெள்ளித் தேர்கள்.

வான அடுப்பில்
  விறகு தீர்ந்து
போனதால் எழுந்த  
  புகைமண் டலங்கள்.


 நிலவுக் குழந்தை 
   நீண்ட நேரமாய்
அழுததி னாலே
  அன்னை வானம்,

வாங்கிக் கொடுத்த
  பஞ்சுமிட் டாய்கள்.
தூங்கும் நிலவின்
  தொட்டில் மெத்தைகள்.

விண்ணக  வீட்டின்
  விரிந்த கூரையில்
வெண்ணிலாச் சிலந்தி
  பின்னிய வலைகள்.

மண்ணின் மார்பாம்
  மலையை மூட
அன்னை வானம்
  அளித்த தாவணி.

கன்னி நிலாவை
  காவல் காக்கும் 
விண்ணக வீட்டின்
  சன்னல் திரைகள்.

நிலவது கடலில்
  நீந்திக் குளிக்க
விலக்கி எறிந்த
  வெண்ணிற ஆடைகள்.

காற்றுத் தூரிகை
  எடுத்த வானம்
போட்டுப் பார்த்த
  பொன்னிற ஓவியம்.

மிதக்கும் தோணிகள்
  மின்னல் தோழிகள்
விதவை  வானின்
  வெள்ளைச்  சேலைகள்.

புவியை வானை
  புதிராய்க் காணும்,
கவிஞன் எந்தன்
  கண்ணுக்கு அவையோ 

தாகம் தீர்க்கும் 
  தமிழே என்பேன் 
மேகம் என்றே 
  மொழிவர் மூடர்.
                              
                                                      -சிவகுமாரன் 

( என் பன்னிரண்டாம் வகுப்பு பருவத்தில் எழுதி " நீதான் எழுதியதா" என்று என் தமிழாசிரியரை ஆச்சரியப்பட வைத்த கவிதை ) 

29 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பத்தி முடியும்போது ”அட”,”அட”என்று சொல்லிய மனது தங்களின் பன்னிரெண்டாம் வகுப்பிலேயே இத்தகைய சிந்தனைகளா என்றதும் வாயடைத்து போனேன்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு முறை கிளிக்கியதால் நானே டெலிட் செய்தேன்.

    பதிலளிநீக்கு
  4. //வான அடுப்பில்
    விறகு தீர்ந்து
    போனதால் எழுந்த
    புகைமண் டலங்கள்.//


    எல்லாமே அருமை என்றாலும், இது எல்லாவற்றையும் விஞ்சிய அழகு கற்பனை!

    அந்த இளம் பருவத்திலேயே சொல்லாட்சி அற்புதமாய் வசப்பட்டிருக்கு உங்களுக்கு!

    அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. படிக்கப் படிக்கத் தோன்றிய பின்னூட்ட எண்ணங்களை கடைசி இரண்டு வரிகள் குறுக்குச் சுவராய் நிறுத்திவிட்டதே சிவகுமாரன்! என்ன சொல்வது என்றே தெரியவில்லை இப்போது! பாதை தெரிந்தும் பயணம் செய்யாததேன் என்று நினைக்க வைக்கிறதே? பல நேரம் பயணிகளால் பாதைக்குத்தான் பெருமை. உங்கள் பயணத்துக்கென சில பாதைகள் காத்திருப்பதாகவே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அற்புதம் சிவகுமாரன்.நிலா என்கிற ஒன்றை எத்தனை விதமாகப் பார்த்திருக்கிறீர்கள்.கவிஞனின் கண் கவிக்கண்கள்தான் !

    பதிலளிநீக்கு
  7. பன்னிரண்டாம் வகுப்பில் என்றால்
    உண்மையில் யாரும் விழி உயர்ததத்தான் செய்வார்கள்
    இப்போது என்றால் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கும்
    எத்தனை கூர்மையான பார்வை கற்பனை
    உங்களுக்கும் தமிழுக்கும் பூர்வ ஜென்ம
    பந்தமிருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. இன்னும் என்னென்னவற்றை பதுக்கி வைத்திருக்கிறாய் ,வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிசித்தா. ?முதலில் படிக்கும்பொது நான் ஒருகாலத்தில் எழுதிய “வெண்ணிறமேனியாள் தனக்கு மிளிரும் நீலவானம் சரிதுகில் ,மின்னும் தாரகை நல்லணிகலன்....”என்ற பாடல் நினைவுக்கு வந்தது. ஆனால் அது காதலால் கட்டுண்ட போது எழுதியது. உன் கவிதை பலமுறை அட..போடவைக்கிறது.பாராட்டுகிறேன் நீ உண்மையிலேயே கவிச்சித்தன் தானைய்யா. ! உனக்குப் பரிசு கொடுக்க உன்னை நேரில் காண வேண்டும். முடியுமா.?

    பதிலளிநீக்கு
  9. கடந்த ஆண்டு செப்டம்பரில் யாரும் செருக்கொழியற்க என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். நான் வலைக்குப் புதிதானதால் அநேகமாக யாரும் படித்திருக்க மாட்டார்கள். நீ படித்துப் பாரேன்.

    பதிலளிநீக்கு
  10. மிக நல்ல கவிதை....

    வாழ்த்துகள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  11. மிகமிக அழகான கவிதை சிவகுமாரன்.

    கொஞ்சம் சத்தமாய்ச் சொல்லிப்பாருங்கள், மேகம் குளிர்ந்து மழையே பெய்துவிடும் :)

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொன்றும் முத்தே -கற்பனை
    உலகத்தின் வித்தே
    இவ்வொன்று நன்றே -இயம்ப
    இயலாதே ஒன்றே
    மணிமாலை போன்றே -ஒளி
    மங்காது நின்றே
    அணிதன்னை தந்தீர்-தமிழ்
    அன்னமென வந்தீர்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. கற்பனைத் தேரில் கவியுலா சென்றிடும்
    நற்பயனைப் பெற்றேன்நா னும்.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. பன்னிரண்டாம் வகுப்பிலேயே நீங்கள் இப்படி எழுதியது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது வாழ்த்துக்கள் நண்பா கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  15. உங்கள் தமிழாசிரியர் மட்டும் அல்ல நாங்களும்தான் வியக்கின்றோம். அருமையான படைப்பு .நிறைந்த மதிநுட்பம் வாய்ந்த கவிதை .தமிழ்த்தாயின் ஆசி உங்களுக்கு நிறையக் கிட்டியுள்ளது .எங்கள்
    வாழ்த்துக்களும் உங்களுக்கு தொடர்ந்தும் சாதியுங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  16. மேகம் என்றே மொழியும் மூடரில் ஒருவராகிப் போனேன். தாகம் தீர்க்கும் தமிழென்றது எத்தனை உண்மை? இத்தனைக் கவித்துளிகள் ஊற்றெடுத்துள்ளதே? அருமை என்னும் சொல்லை அர்த்தமில்லாமலாக்கியது இக்கவிதை. வாழ்த்துக்கள் சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  17. எத்தனை விதமாய்க் கற்பனைகள். அசத்தல்.

    பதிலளிநீக்கு
  18. நிலவுக் குழந்தை
    நீண்ட நேரமாய்
    அழுததி னாலே
    அன்னை வானம்,

    வாங்கிக் கொடுத்த
    பஞ்சுமிட் டாய்கள்.
    தூங்கும் நிலவின்
    தொட்டில் மெத்தைகள்./

    அழ்காக மனம் கவர்கிறதே!!

    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  19. சிவகுமரா! அந்தத் தமிழ் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  20. சிவகுமாரரே!

    பால்யத்திலேயே கன்னித்தமிழோடு குடும்பம் நடத்தியிருக்கிறீர்கள்.

    அற்புதமான கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. வெண்ணிலா மீனவன்

    வான அடுப்பில்

    அன்னை வானம்,

    வெண்ணிலாச் சிலந்தி


    மின்னல் தோழிகள்
    விதவை வானின்
    வெள்ளைச் சேலைகள்.

    manathai eertha uvamaikal. I think you are treasure of poetic words. congrats.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. நல்ல கற்பனை !சில இடங்களில் ஏகதேச உருவக அணி வருகிறது.
    அது இல்லாமல் எழுத முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு
  24. தண்மதிக் காதல்
    தோற்றுப் போனதால்
    விண்மீனின் சிகரெட்
    வெளித்தள்ளும் புகைகள்

    நிலவுப் பெண்மணி
    நன்றாய்க் குளித்த
    அழகுச் சோப்பின்
    அதிசய நுரைகள்

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. விளையும் பயிர் முளையில் வெளிப்பட்டுள்ளது....

    பதிலளிநீக்கு
  27. நன்றி திருமதி ஸ்ரீதர்

    நன்றி ஜீவி உங்கள் ஆழ்ந்த ரசனைக்கு,

    அப்பாஜி .. பாதை, பயணம் என்று ஏதேதோ சொல்கிறீர்கள். எனக்கு விதிக்கப்பட்டது தான் கிடைக்கும்.

    கவிதாயினி ஹேமாவின் வாழ்த்துக்கு நன்றி.

    நன்றி ரமணி சார். ஆனாலும் தாங்கள் அதிகமாகவே புகழ்கிறீர்கள்

    நன்றி GMB சார், தங்களை நேரில் சந்திப்பது என் பாக்கியம். என் இ.மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் அய்யா.

    நன்றி வெங்கட் நாகராஜ்,

    நன்றி சுந்தரா மேகம் குளிர்ந்து மழை பொழிந்தது போல் உள்ளது தங்கள் வாழ்த்தும்.

    நன்றி புலவரே , தங்கள் கவிதை வாழ்த்துக்கு.

    நன்றி திகழ் தங்கள் குறள் வாழ்த்துக்கு.

    நன்றி R.V.Saravanan

    நன்றி தமிழ்த்தோட்டம்.

    நன்றி அம்பாளடியாள்.

    நன்றி கீதா. தங்கள் வாழ்த்துக்கு. மூடர் என்ற வார்த்தை கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகத் தான் தோன்றுகிறது இப்போதெனக்கு. .அது மரியாதை தெரியாத அடங்காப் பருவம்.

    நன்றி ஸ்ரீராம்.

    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

    நன்றி காஷ்யபன் அய்யா. ஒருவரல்ல .. என் தமிழாசிரியர்கள் பாத்திமா , அரங்கசாமி அய்யா, ராமச்சந்திரன் அய்யா, மாரிமுத்து அய்யா, அனைத்திற்கும் மேலாக என் சித்தப்பா கவிஞர் சுந்தரபாரதி எல்லோருக்கும் தங்கள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.

    நன்றி RVS தங்கள் குறும்பான வாழ்த்துக்கு.

    நன்றி ஹரணி சார் தங்க மனம் ஈர்க்கப்பட்டது எனக்கு பெருமை.

    நன்றி சமுத்ரா. தங்கள் கவிதை மிகவும் அருமை. தங்கள் பன்முகத் திறமை கண்டு வியந்து போகிறேன்.

    நன்றி தென்றல் சரவணன்.

    பதிலளிநீக்கு
  28. எண்ணிய கற்பனை எட்டா தூரத்தில் இருக்கும் வெண்ணிலவுக்ககும் வென் மேகத்திற்கும் மட்டுமல்ல இந்த மண்ணில் உலாவும் மனிதருக்கும் கற்பனை செய்ய தூண்டுதட உன் கவிதை

    பதிலளிநீக்கு