இல்லறக் கடமைகள் இனிதே முடித்து
நல்லற வாழ்வை நாடுவது எக்காலம்?
இரைதேடிப் பறந்து ஏமாறும் காலம்போய்
இறைதேடி என்னுள் இறங்குவது எக்காலம்?
மாய உலகின் மயக்கம் அறுத்திட்டு
காயக் கடலின் கரைசேர்வ தெக்காலம்?
அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் காலம் போய்
அஞ்செழுத்தை ஓதி அமர்ந்திருப்ப தெக்காலம்?
வட்டிக்கு கடன்வாங்கி வாழ்ந்திருக்கும் காலம்போய்
கொட்டிக் கிடப்பதை கொண்டாடுவ தெக்காலம்?
சோற்றைத் தின்று சோர்ந்திருக்கும் காலம் போய்
காற்றைப் புசிக்கும் கணக்கறிவ தெக்காலம்?
வாடிச் சுழன்று வதைபட்ட காலம் போய்
பாடித் திரிந்து பறந்திருப்ப தெக்காலம்?
போடா போவென்று பூவுலகை புறந்தள்ளி
வாடா மலராக வாழ்ந்திருப்ப தெக்காலம்?
கைதட்டல் சுகத்துக்காய் காத்திருக்கும் காலம்போய்
மெய்விட்டு மெய்தேடி மேய்ந்திருப்ப தெக்காலம்?
வருத்தத்தில் தோய்ந்து வாடிடும் காலம்போய்
இருத்தலில் இல்லாது இருப்பது எக்காலம்?
உள்ளம் திறக்கும் உபாயம் கண்டறிந்து
கள்ளத் தனங்கள் களைந்தெறிவ தெக்காலம்?
வெட்ட வெளியெங்கும் வியாபித்த சிவம்தன்னை
கொட்ட விழித்திருந்து கூத்தாடுவ தெக்காலம்?
தேனில் இனிப்பாகத் தித்தித் திருப்பானை
ஊனில் உள்ளுணர்வில் ருசித்திருப்ப தெக்காலம்?
மலருக்குள் மணமாக மறைந்திருப் பானோடு
கலந்திருந்து இன்பம் காணுவது எக்காலம்?
கோவில் குளமென்று கும்பிட்டு அலையாமல்
ஆவியில் அவனை அமர்த்துவது எக்காலம்?
அவனை அமர்த்தியபின் அங்கிங்கு அலையாமல்
சிவனே நானென்று சிலிர்த்திருப்ப தெக்காலம்?
உண்டு உறங்கி உடல் வளர்க்கும் காலம்போய்
கண்டு தெளிந்து கட்டறுப்ப தெக்காலம்?
எல்லாம் சுமையென்று ஏகாந்தம் தேடி
பொல்லா உலகை புறக்கணிப்ப தெக்காலம்?
கல்லுக்குள் இல்லா கடவுளைத் தேடாமல்
உள்ளுக்குள் தேடி உட்காருவ தெக்காலம்?
பேச்சை நிறுத்தி பேரின்பக் கடலுக்குள்
மூச்சை அடக்கி முக்குளிப்ப தெக்காலம்?
வானை நோக்கி வணங்கும் காலம்போய்
நானே இறையென்று நம்புவது எக்காலம்?
வருத்தத்தில் தோய்ந்து வாடிடும் காலம்போய்
இருத்தலில் இல்லாது இருப்பது எக்காலம்?
உள்ளம் திறக்கும் உபாயம் கண்டறிந்து
கள்ளத் தனங்கள் களைந்தெறிவ தெக்காலம்?
வெட்ட வெளியெங்கும் வியாபித்த சிவம்தன்னை
கொட்ட விழித்திருந்து கூத்தாடுவ தெக்காலம்?
தேனில் இனிப்பாகத் தித்தித் திருப்பானை
ஊனில் உள்ளுணர்வில் ருசித்திருப்ப தெக்காலம்?
மலருக்குள் மணமாக மறைந்திருப் பானோடு
கலந்திருந்து இன்பம் காணுவது எக்காலம்?
கோவில் குளமென்று கும்பிட்டு அலையாமல்
ஆவியில் அவனை அமர்த்துவது எக்காலம்?
அவனை அமர்த்தியபின் அங்கிங்கு அலையாமல்
சிவனே நானென்று சிலிர்த்திருப்ப தெக்காலம்?
உண்டு உறங்கி உடல் வளர்க்கும் காலம்போய்
கண்டு தெளிந்து கட்டறுப்ப தெக்காலம்?
எல்லாம் சுமையென்று ஏகாந்தம் தேடி
பொல்லா உலகை புறக்கணிப்ப தெக்காலம்?
கல்லுக்குள் இல்லா கடவுளைத் தேடாமல்
உள்ளுக்குள் தேடி உட்காருவ தெக்காலம்?
பேச்சை நிறுத்தி பேரின்பக் கடலுக்குள்
மூச்சை அடக்கி முக்குளிப்ப தெக்காலம்?
வானை நோக்கி வணங்கும் காலம்போய்
நானே இறையென்று நம்புவது எக்காலம்?
சிவகுமாரன்
எக்காலம் எக்காலம் என்றே எக்காளமிடும் மனதில் கடைந்தெடுத்தக் கவிதை வரிகளில் சொக்கினேன். வாசிக்க வாசிக்க, உள்ளுறைந்து உருக்கும் வாக்கியச் செறிவில் சிக்கினேன். மெய் சிலிர்க்கிறது. பாராட்டுகள் சிவகுமாரன்.
பதிலளிநீக்குஇறை என்று நம்பும் காலம் சீககிரம் வர வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குமனம் கவர்ந்த அருமையான கவிதை
பதிலளிநீக்குஅனைத்திலும் சராசரி நிலையைக் கடந்தவர்களால் மட்டுமே
இப்படி யோசிக்கவும் அழகான கவிதை படைக்கவும் முடியும்
தொடர வாழ்த்துக்கள்
அற்புதம். இன்னும் பலமுறை படிக்க வேண்டும் சிவகுமாரன். நிறைய எண்ணங்கள் நெஞ்சை முட்டிப் போகின்றன. வடிகட்டிப் பின்னூட்டமிட வேண்டும்.
பதிலளிநீக்குவாழுஙகாலை வாழும் வாழ்வை வளமாக்கி
பதிலளிநீக்குசெய்யும் செயலை செம்மையேற்றி
செழிப்பாய் செய்து
கழிக்கும் கணந்தோறும் கவனிப்பாய்
கணித்து கழித்து
எல்லாவற்றிலும் எல்லாமும் எனக்கண்டு
எல்லையற்ற வெளிணர்ந்து
சிந்தனை சிறப்பாய் கொண்டு சிவகுமரா
சிரிப்புடன் அனுபவிப்பாய்..
இளமை இருக்கு இனிமை இருக்கு
முதுமை வரும் முனைப்பெல்லாம்
வெண்பா வித்தகனுக்கு இப்போது
வேண்டாம்...
அனுபவிக்கலாம் என்று மனது நினைத்தால் அத்தனையும்
அனுபவிக்கலாம்.. அனுபவி ராஜா..
வாடிச்சுழலும் காலத்தின் நிறைவு பாடித்திரியும் காலத்தில் கிடைக்குமா தெரியவில்லை..
பதிலளிநீக்குபேச்சை நிறுத்தும் காலம் மட்டும் உடனடியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வபோது நினைப்பதுண்டு. இப்போது எண்ணம் குறையும் காலம் வரவேண்டும் என்று விரும்புகிறேன். எண்ணம் குறந்தால் பேச்சும் குறையும் என்று ஏதோ ஒரு மாலைப் பொழுதில் உறைத்தது. எண்ணங்களை எப்படிக் குறைப்பது?
பதிலளிநீக்குகவிதை அருமை சார் !
பதிலளிநீக்குசின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !
வரிகள் ஒவ்வொன்றும், முன்னதை வெல்கின்றதாய், இறுதியில் மறு'படியும்' முதலில் இருந்து. படிக்கப் படிக்க, படிக்கட்டாய் நம்மை மேலே, மேலே உயர்த்தும் வரிகள். பிரமுக்க வைக்கிறது. எப்படி எளிமையான இந்த வார்த்தைகள், கடினமான விஷயத்தை, மிகசுலபமாகச் சொல்லி விடு(டி)கிறது.
பதிலளிநீக்குவாழும் காலத்தில்
பதிலளிநீக்குவாழ்ந்து பார்க்க வேண்டும்
மாய உலகில்
மனது லயித்தால்
மாளாத கேள்விகள் தோன்றும்
நன்றி கீதமஞ்சரி மேடம்
பதிலளிநீக்குநன்றி விமலன் சார்
நன்றி ரமணி சார்
நன்றி அப்பாஜி
நன்றி ஹரணி சார்.
பதிலளிநீக்குநான் ஒன்றும் காவி கட்டிக் கொண்டு கிளம்பிவிடவில்லை.
முதல் வரியிலேயே சொல்லியிருக்கிறேன். " இல்லற கடமைகள் இனிதே முடித்து," கடமைகளை கடமைக்காக முடிக்காமல் , ஈடுபாட்டுடன் இனிதே முடிக்க வேண்டும் என்பதே என் அவா. முதுமையை அனுபவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அனுபவிப்பது என்பது மனதிற்கு மனம் வேறுபடும்.என் தயவு யாருக்கும் தேவைப்படாத நிலை வந்த பிறகு, கோயில் கோயிலாய் சுற்ற வேண்டும். பாடிக் களிக்க வேண்டும். அந்த நிலையும் தாண்டி, என்னுள் இறையைத் தேடி அமர்ந்து விட வேண்டும். சாதாரண காரியமா இது?.
என் இறுதிக் காலத்தில் தான் நான் வாழ்க்கையை அனுபவிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
அப்பாஜி
பதிலளிநீக்குபாடித் திரிவதில் தான் எனக்கு நிறைவு வரும். நான் ஆன்மீகக் கவிதைகள் எழுதுவதன் உண்மையான நோக்கம், வேறு யார் முன்னாலும் நான் கவிதை பாட முடியாது. போதும் நிறுத்து என்று கடவுள் சொல்லப் போவதில்லை. சந்தையில் விலைபோகாத மாலைகளை சாமிக்கு சாத்தி விடுவார்கள். அப்படித்தான் இதுவும். பாடித் திரிவதில் அதுவும் எழுதி எழுதிப் பாடுவதில் நிறைவு அதிகம்.வருடத்தில் 3 நாட்கள் பாதயாத்திரையில் நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன். ஒரு வருடம் செல்ல முடியாவிட்டால் அந்த வருடமே வீணாகி விட்டதாக உணர்கிறேன்.
என் சித்தப்பா இராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாதயாத்திரை சென்ற போது, சில வாழ்த்து வெண்பாக்கள் எழுதினேன். இறுதியாய் எழுதிய வெண்பா இது.
.....................................
"உம்மோடு சேர்ந்துவர உள்ளம் தவிக்கிறது
இம்மை கடமை இழுக்கிறது - பெம்மான்
மனதுவைக்கும் நாள்வரையில் மாறாமல் நெஞ்சில்
கனன்றிருக்கும் காசிக் கனல்."
பேச்சைக் குறைப்பது என்பது எல்லோரும் செய்யக் கூடியது தான் அப்பாஜி. ஆனால் நீங்கள் சொல்வது போல் எண்ணங்களைக் குறைப்பது சாதாரண விசயமல்ல . அது ஞானத்தின் வாசல். நீங்கள் சொல்வது சரி தான் எண்ணங்களை குறைத்தால் பேச்சு குறையும். ஆனால் பேச்சைக் குறைத்தால் எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் பெருகும். முட்டி மோதும்.
பதிலளிநீக்குநானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் - எண்ணங்களை எப்படிக் குறைப்பது?
சிலர் மௌன விரதம் இருப்பார்கள். பக்கத்தில் ஒரு சிலேட்டும் பல்பமும் வைத்துக் கண்டு எழுதி எழுதி காட்டிக் கொண்டு இருப்பார்கள். இதற்கு பெயர் மௌன விரதமா? தொண்டை கட்டிக் கொண்டவன் வாயில் புண் வந்தவன் கூட இரண்டு நாட்கள் பேசாமல் இருக்கிறான் என்று நான் சொல்லியிருக்கிறேன் - அப்படி மௌன விரதம் இருந்தவர்களிடம்.
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்.
பதிலளிநீக்குஎனக்கு இன்னும் கணினி பயன்பாடு சரிவரத் தெரியவில்லை. முயச்சி செய்கிறேன்
நன்றி வாசன் சார். கடினமான விசயங்களை எளிமையான வார்த்தைகளால் நம் சித்தர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நான் எதுவும் புதிதாய் சொல்லவில்லை
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படித்ததற்கு நன்றி - தங்களுக்கும் என் தமிழுக்கும்.
நன்றி வேல்முருகன் சார்.
பதிலளிநீக்குவாழும் காலத்தில் வாழ்ந்து பார்க்க வேண்டும். மிகச் சரி. நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்பது தானே முக்கியம்.
\\மாய உலகில்
மனது லயித்தால்
மாளாத கேள்விகள் தோன்றும்//
தோன்றட்டுமே.
கேள்விகள் தோன்றினால் தானே பதில்கள் பிறக்கும்.?
இன்று 20.06.2012 வலைச்சரத்தில் தங்களின் ஓர் படைப்பைப்பற்றி,
பதிலளிநீக்குசெல்வி நுண்மதி அவர்களால்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாழ்த்துகள்.
http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_20.html
பதிலளிநீக்குஇல்வாழ்வே இறைஎன்றும் இல்லறமே அறமென்றும்
பதிலளிநீக்குநல்வாழ்க்கை வாழ்ந்திருந்தால் நொடிநொடியும் நற்காலம்
சிவகுமரன் அவர்களே! மனிதன் சிந்திக்கிறான்.அதன் வெளிப்பாடு பேச்சு.சிந்திக்காமல் இருக்க முடியாது. சிந்திக்கிறாய் என்பதை வெளிப்படுத்துவது பேச்சு.பேசாமல் சிந்திக்க முடியும்..சிந்திக்காமல் பேச முடியுமா?இறக்கும் வரை சிந்தனயும் இருக்கும்.---கஸ்யபன
பதிலளிநீக்குஇருத்தலில் இல்லாது இருப்பது எக்காலம்?//
பதிலளிநீக்குதேடிக் கண்டடைவோம். வரிக்கு வரி ஏக்கம் துளிர்த்து எல்லாம் சிவமயமென்றும் சும்மா இருத்தலே சுகமென்றும் மனக்குதிரையின் லகானை பற்றியிழுக்கப் பரிதவிக்கிறது கையாலாகாத மனசு சிவா.
//தொண்டை கட்டிக் கொண்டவன் வாயில் புண் வந்தவன் கூட இரண்டு நாட்கள் பேசாமல் இருக்கிறான் என்று நான் சொல்லியிருக்கிறேன்
பதிலளிநீக்குசிலேட்டில் எழுதினாலும் அது பேச்சைக் குறைக்கும் முயற்சி தானே?
சிலேட்டையும் துறந்தால் ஒரு விதத்தில் எண்ணங்களைக் கட்டும் முயற்சியாகும்.
'காட்டில் மரம் விழுந்தால் ஓசை உண்டாகுமா?' பாணியில், வெளிப்படாத எண்ணங்கள் தோன்றாத எண்ணங்களாவதாக நினைக்கிறேன்.
காஸ்யபன் சொல்வது போல் மனிதனின் அடையாளம் முகமல்ல, எண்ணம். ஆனால் எண்ணங்களை வெளிப்பட்டதும் மனிதனின் அடையாளம் பலநேரம் தொலைந்து விடுகிறது.
எண்ணங்களைக் கட்டுவது சுலபமல்ல. அதே நேரம், கட்ட முடியும் என்றும் நினைக்கிறேன். நாம் சந்திக்கும் பொழுது சில பயிற்சிகளைச் சொல்கிறேன், பலிக்கிறதா பாருங்களேன்? (எனக்குப் பலிக்கவில்லை).
வை,கோ.சார்.
பதிலளிநீக்குதங்களுக்கும் சகோதரி நுண்மதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சமயத்தில் வந்து நன்றி தெரிவிக்க இயலாததற்கு வருந்துகிறேன்.
\\இல்வாழ்வே இறைஎன்றும் இல்லறமே அறமென்றும்
பதிலளிநீக்குநல்வாழ்க்கை வாழ்ந்திருந்தால் நொடிநொடியும் நற்காலம். //
சமுத்ரா மிக்க நன்றி.
நற்காலம் பொற்காலம் எல்லாம் ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. ஒருவேளை மட்டும் உண்பவனுக்கு மூன்று வேலை உண்ணும் காலம் நற்காலமாய் தெரியும். இலட்சங்களில் புரள்பவனுக்கு கோடிகளில் புரள்பது பொற்காலமாய் தெரியும்.
மனம் போல் வாழ்வு. நீங்கள் சொல்வதும் சரி. நான் சொல்வதும் சரி.
மனிதன் சிந்திக்கிறான்.அதன் வெளிப்பாடு பேச்சு.சிந்திக்காமல் இருக்க முடியாது. சிந்திக்கிறாய் என்பதை வெளிப்படுத்துவது பேச்சு.பேசாமல் சிந்திக்க முடியும்..சிந்திக்காமல் பேச முடியுமா?இறக்கும் வரை சிந்தனயும் இருக்கும்.-///
பதிலளிநீக்குகாஷ்யபன் அய்யா. சிந்திக்க வைக்குக் கருத்து. தங்களைப் போன்றோர்கள் பேச வேண்டும். என்னைப் போன்றோர்கள் குறைக்க வேண்டும்.
மனக்குதிரையின் லகானை பற்றியிழுக்கப் பரிதவிக்கிறது கையாலாகாத மனசு சிவா.
பதிலளிநீக்குஆகா நிலா மேடம்.
கையளவு மனசு தான். ஆனால் கடலளவு அல்லவோ எண்ணங்கள்.
நன்றி சகோதரி.
அப்பாஜி. வெளிப்படாதவை எல்லாம் தோன்றாதவைகளா? தோன்றிய எல்லாமே வெளிப்பட வேண்டிய அவசியமில்லையே. வெளிப்படுவதும் இல்லையே. பெரும்பாலும் மனதுக்குள் தோன்றுபவை வேறோர் வடிவெடுத்துத் தான் வெளிவருகின்றன. நிறைய சிந்திக்க வைக்கிறீர்கள். எண்ணங்களைக் கட்டும் பயிற்சிக்காக காத்திருக்கிறேன். ( தங்களுக்கே பலிக்கவில்லை என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்?)
பதிலளிநீக்குஅன்பு சிவகுமரன்..
பதிலளிநீக்குநான் சொல்ல வந்தது வேறு. உங்களின் கவிதையினைத் தாண்டி நான் யோசிக்கிறேன். உங்களுக்கு அந்தந்த கால வாழ்விற்கான பக்குவம் இருக்கிறது. அதனை சரியான தளத்தில் இயக்குகிறீர்கள். எனவே வருகிற காலத்தில் அதது அனுபவிக்க கைகட்டிக் காத்திருக்கும் உங்களைப் பொறுத்தவரையில். மனதின் தெளிவுதான் எல்லாவற்றையும் முடித்துவிட்டு முதுமையையும் இறையையும் அனுபவிக்கவேண்டும் என்று சொல்லும்போதே புரிந்துவிடவில்லையா எனக்கு. வாழ்க வளத்துடன்.
‘எக்காலம்‘ பாடல் இயம்பிய சொல்லெல்லாம்
பதிலளிநீக்குமுக்காலமும் ஏற்கு முலகு!
அருமைங்க கவிஞரே!
“நெஞ்சில் தீயிறங்க நிழலை எரித்துவிட்டு
பதிலளிநீக்குமிஞ்சும் நீறேமெய் என்றறிவ தக்காலம்!!!“
ஹரிணி அய்யா சொல்வதைப் போலத்தான் அண்ணா..!
எல்லார்க்கும் எல்லாவற்றையும் அடையவும் விடுபடவும் என இருவேறு எண்ணங்கள்!
அங்குமிங்கும் இழுபட்டு எங்கும் போக முடியாத ஓட்டைத் துருத்தி, ஆபாசக் கொட்டில்...........
முதிர்வது எதுவோ எப்பொழுதோ அதுவே வரம். மூன்றோ முப்பதோ......எழுபதோ....... அந்தக் கணம் தேடுகிறீர்கள் என்பது தெரிகிறது.
தமிழிருக்கிறது.
அருமையான கவிதைகள் அண்ணா!
நன்றி!
“நெஞ்சில் தீயிறங்க நிழலை எரித்துவிட்டு
நீக்குமிஞ்சும் நீறேமெய் என்றறிவ தக்காலம்!!!“//////
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாய் சொல்லிவிடுகறீர்கள் விஜு. நன்றி
பத்திரகிரியாரின் மெய் ஞானப் புலம்பல் என்னும் நூலை தழுவி எழுதப்பட்டது....
பதிலளிநீக்கு