நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
திங்கள், செப்டம்பர் 24, 2012
வெள்ளி, செப்டம்பர் 21, 2012
இதுவும் ஒரு யாகம்
நாதஸ்வரம்:
அடிவயிற்றின் உள்ளிருந்து கிளம்புகின்ற நாதம்
அதையழகாய் இசையாக்கி இதழிரண்டும் ஊதும்
படியாத மனங்களையும் படியவைக்கும் கீதம் - அது
பலபேரை மயங்க வைத்த இசையென்னும் வேதம்.
மேளதாளம்:
மேளமென்றும் தாளமென்றும் வழங்கும் மிரு தங்கம்
மெதுவாகத் தட்ட இசை மேகமேனப் பொங்கும்.
தாளமதை விரும்பாத உயிரில்லை எங்கும் - இத்
தாரணியில் இசை என்றும் அழியாமல் தங்கும்.
நாதம்:
மூச்சடக்கி வாசிக்க மூச்சிரைப்பு வாங்கும்
முன்னுதடு கன்னங்கள் முகமெல்லாம் வீங்கும்
பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு
பாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்
தாளம்:
பத்துவிரல் அத்தனையும் பலமாக நோகும்
பழகிவிட்ட பின்னாலும் வலியெடுக்கும் தேகம்
இத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்
இறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.
நாதம்:
காலை கையை அங்குமிங்கும் பலவிதமாய் ஆட்டி
கண்டபல கருவிகளை கணக்கின்றி மீட்டி - வரும்
மேலைநாட்டு சங்கீதமா எங்களுக்கு போட்டி?- நாம்
மேதினியில் வாழ்ந்திருப்போம் வெற்றிக் கொடி நாட்டி.
தாளம்:
நாதம் தாளம் இணைந்தது தான் இசையின் ஆதிமூலம்.
நாட்டில் இன்று ஒலிப்ப தெல்லாம் இசையின் மரண ஓலம்
வேதம் போன்ற எம் இசையை வணங்கும் வருங்காலம்- அன்று
வேறு இடம் தேடிக்கொண்டு ஓடும் அலங்கோலம்.
-சிவகுமாரன்
ஏப்ரல் 1993
வாசுகி இதழ் போட்டிக்காக எழுதியது.
இதே போட்டிக்காக எனது சித்தப்பா சுந்தர பாரதி எழுதிப் பரிசு பெற்ற கவிதை.
சிந்தையை மயக்குதடி
அவள்:
சித்திரைத் திருவிழாவாம் தென்மதுரைக் கோயிலிலே
சேர்ந்து நம்ம கச்சேரிக்கு மச்சானே - நானும்
மொத்தமாக ரேட்டு பேசி முழுத் தொகையும் வாங்கிப்புட்டேன்
முன்னதாகப் போயிடனும் மச்சானே
அவன்:
கரும்பு தின்னக் கூலி கேட்டு கச்சிபேசித் திரிவதுண்டோ
கண்டிப்பாக வந்திடுவேன் கண்ணம்மா - நீ
தருமிசைக்கு உளமயங்கித் தாளத்தோடு நானியங்கித்
தவிலெடுத்து முழக்கிடுவேன் கண்ணம்மா.
அவள்:
நாதசுரக் கானத்திலே நானிசைக்கும் கீதத்திலே
நயமளிக்கும் லயத்துடனே மச்சானே - உன்
நூதனத் திறமைமிக்க மேள இசை கேட்டு" நந்தி"
நூறுதரம் தலையசைப்பார் மச்சானே.
அவன்:
நாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள்
நர்த்தனங்கள் ஆடுமடி கண்ணம்மா - அதில்
சீதளம் நிறைந்த இசை "தோடி" முதல் "பைரவி"கள்
சிந்தையை மயக்குதடி கண்ணம்மா
அவள்:
எத்தனை மிகப்பெரிய வித்துவான்க ளானபோதும்
இடையினிலே துண்டெடுத்து மச்சானே - கட்டி
அத்தனை சபை நடுவே ஆலாபனை செய்து நின்ற
அடிமை ஒழிந்ததின்று மச்சானே
அவன்:
உண்மையாய்க் கலைவளர்க்கும் நம்மவரைப் போன்றவர்க்கு
உயர்வைக் கொடுத்த தெய்வம் கண்ணம்மா -பல
நன்மைகள் அளித்த மேதை "இராஜரெத்தினம் பிள்ளை"யை
நன்றியுடன் கும்பிடணும் கண்ணம்மா
-சுந்தரபாரதி