நாதஸ்வரம்:
அடிவயிற்றின் உள்ளிருந்து கிளம்புகின்ற நாதம்
அதையழகாய் இசையாக்கி இதழிரண்டும் ஊதும்
படியாத மனங்களையும் படியவைக்கும் கீதம் - அது
பலபேரை மயங்க வைத்த இசையென்னும் வேதம்.
மேளதாளம்:
மேளமென்றும் தாளமென்றும் வழங்கும் மிரு தங்கம்
மெதுவாகத் தட்ட இசை மேகமேனப் பொங்கும்.
தாளமதை விரும்பாத உயிரில்லை எங்கும் - இத்
தாரணியில் இசை என்றும் அழியாமல் தங்கும்.
நாதம்:
மூச்சடக்கி வாசிக்க மூச்சிரைப்பு வாங்கும்
முன்னுதடு கன்னங்கள் முகமெல்லாம் வீங்கும்
பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு
பாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்
தாளம்:
பத்துவிரல் அத்தனையும் பலமாக நோகும்
பழகிவிட்ட பின்னாலும் வலியெடுக்கும் தேகம்
இத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்
இறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.
நாதம்:
காலை கையை அங்குமிங்கும் பலவிதமாய் ஆட்டி
கண்டபல கருவிகளை கணக்கின்றி மீட்டி - வரும்
மேலைநாட்டு சங்கீதமா எங்களுக்கு போட்டி?- நாம்
மேதினியில் வாழ்ந்திருப்போம் வெற்றிக் கொடி நாட்டி.
தாளம்:
நாதம் தாளம் இணைந்தது தான் இசையின் ஆதிமூலம்.
நாட்டில் இன்று ஒலிப்ப தெல்லாம் இசையின் மரண ஓலம்
வேதம் போன்ற எம் இசையை வணங்கும் வருங்காலம்- அன்று
வேறு இடம் தேடிக்கொண்டு ஓடும் அலங்கோலம்.
-சிவகுமாரன்
ஏப்ரல் 1993
வாசுகி இதழ் போட்டிக்காக எழுதியது.
இதே போட்டிக்காக எனது சித்தப்பா சுந்தர பாரதி எழுதிப் பரிசு பெற்ற கவிதை.
சிந்தையை மயக்குதடி
அவள்:
சித்திரைத் திருவிழாவாம் தென்மதுரைக் கோயிலிலே
சேர்ந்து நம்ம கச்சேரிக்கு மச்சானே - நானும்
மொத்தமாக ரேட்டு பேசி முழுத் தொகையும் வாங்கிப்புட்டேன்
முன்னதாகப் போயிடனும் மச்சானே
அவன்:
கரும்பு தின்னக் கூலி கேட்டு கச்சிபேசித் திரிவதுண்டோ
கண்டிப்பாக வந்திடுவேன் கண்ணம்மா - நீ
தருமிசைக்கு உளமயங்கித் தாளத்தோடு நானியங்கித்
தவிலெடுத்து முழக்கிடுவேன் கண்ணம்மா.
அவள்:
நாதசுரக் கானத்திலே நானிசைக்கும் கீதத்திலே
நயமளிக்கும் லயத்துடனே மச்சானே - உன்
நூதனத் திறமைமிக்க மேள இசை கேட்டு" நந்தி"
நூறுதரம் தலையசைப்பார் மச்சானே.
அவன்:
நாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள்
நர்த்தனங்கள் ஆடுமடி கண்ணம்மா - அதில்
சீதளம் நிறைந்த இசை "தோடி" முதல் "பைரவி"கள்
சிந்தையை மயக்குதடி கண்ணம்மா
அவள்:
எத்தனை மிகப்பெரிய வித்துவான்க ளானபோதும்
இடையினிலே துண்டெடுத்து மச்சானே - கட்டி
அத்தனை சபை நடுவே ஆலாபனை செய்து நின்ற
அடிமை ஒழிந்ததின்று மச்சானே
அவன்:
உண்மையாய்க் கலைவளர்க்கும் நம்மவரைப் போன்றவர்க்கு
உயர்வைக் கொடுத்த தெய்வம் கண்ணம்மா -பல
நன்மைகள் அளித்த மேதை "இராஜரெத்தினம் பிள்ளை"யை
நன்றியுடன் கும்பிடணும் கண்ணம்மா
-சுந்தரபாரதி
வித்தியாசமாக இருக்கு சார்... மிகவும் ரசிக்க வைத்தது... நாதம் : சூப்பர்...
பதிலளிநீக்குஇசையென்னும் வேதம்.
பதிலளிநீக்குநாதஸ்வர ஓசையிலே
தேவர் வந்து பாடுகிறார்
எடுக்கவோ, கோர்க்கவோ என வினவியதில் பிளிரும் கர்ணன் மீதான துரியனின் நட்பு.
பதிலளிநீக்குபடிக்கவோ, கற்கவோ, பழகவோ என குழப்புவதில் ஜெயிக்கிறது இக்கவிதைகள்.
"தில்லானா மோகனாம்பாள்" சிவாஜியின் 'தோற்றம்' கண்முன் வந்து போனது அதுவாய்.
அந்நிய இசைகள் "தாளம்" போடனும் எங்கள் மேளதாள்த்திற்கு முன் என இருபக்கமும் தாக்கி விட்டீர்கள். அருமை சிவகுமாரன் (கணங்களின் அதிபதியும் நீரே, தமிழின் சுவையும் நீரே)
வேலைப்பளு காரணமாக கவிதைகளைப் படிக்க முடியவில்லை. நிதானமாகப் படித்து கருத்துரை இடுகிறேன்.நன்றி
பதிலளிநீக்குஆண்டவனின் அருளாசி இல்லாமல் இப்படியான கலைகளோடு வாழமுடியாது.உண்மையில் யாகம்தான்.இதமான நாதஸ்வரக் கச்சேரி கேட்கும்போது எம்மை மறந்துவிடுகிறோமே !
பதிலளிநீக்குஇசையின்ப வெள்ளத்தில் முழ்கிடவே வந்தேன்
பதிலளிநீக்குஇக்கவியில் அதுகிடக்க வேறெங்கு செல்வேன்
அசைந்தாடும் அருந்தமிழை ஆசையோடு பார்த்தேன்
அகமெல்லாம் துள்ளுவதை என்னவென்று சொல்வேன்
வாசிக்கும் பொழுது
வாத்தியங்களே தங்களை
வார்ணனை செய்வதாக
வடிவம் கொண்டேன்
வாழ்த்துகள்
வாழ்த்தட்டும் தங்களை தமிழும்
தமிழுடன்
திகழ்
அருமையான கவிதை.
பதிலளிநீக்குநம் இசையை வேதம் என்பது சரி. ஆனால், மற்ற இசையை மரண ஓலம், அலங்கோலம் என்பது சரியல்ல. இவ்வுலகில் ஒருவருக்காவது பிடித்திருக்குமெனில்,அதுவும் நல்ல இசையே. எனவே பல கோடி மக்களை மயக்கும் மேல் நாட்டு இசையும் நல்ல இசையே,,!!
இத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்
பதிலளிநீக்குஇறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.
அருமை
தாளமும் நாதமும் நம்மை எங்கோ இட்டுச்சென்று விடுகிறதுதான்,தங்களது பதிவைப்படித்ததும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் நல்ந்தானாவும்,சிங்காரவேலனே தேவாவும் ஞாபகம் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
பதிலளிநீக்குவாழ்துக்கள்.நல்ல பதிவு.
நன்றி தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி மேடம்
நன்றி வாசன் சார்,
நன்றி சமுத்ரா,
நன்றி திகழ்,
நன்றி ஹேமா,
நன்றி ரிஷபன்,
நன்றி விமலன்
இளமுருகன், நீ சொல்வது மிகச் சரி.இசை என்பது ரசனைக்குட்பட்டது தான். இந்தக் கவிதை 20 வருடங்களுக்கு முன்னர் , வாசுகி மாதமிரு இதழ் நடத்திய போட்டிக்காக எழுதியது. நாதஸ்வர,மேள தம்பதியனரின் (கோவை சரளா, செந்தில்) படம் போட்டு, அவர்கள் பேசிக் கொள்வதாக கவி எழுதக் கேட்டுப் போட்டி. நான் கவிதை எழுதிய கையோடு சித்தப்பா சுந்தரபாரதியையும் கவிதை எழுதித் தரச் சொல்லி அனுப்பினேன். பரிசு சித்தப்பாவுக்குத் தான் கிடைத்தது. இந்தக் கவிதை தேர்ந்தெடுக்கப் படாததற்கு நீ சொன்னதும் காரணமாய் இருக்கலாம்.
பதிலளிநீக்குஅந்த இசைக் கலைஞர்கள் பேசிக் கொண்டால் இப்படித் தான் இருக்கும் என்ற என் கற்பனை தான் இது. நான் கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்த போது நலிவடைந்த கலைஞர்களிடம் பேசியிருக்கிறேன். தப்பாட்டக் கலைஞர்கள், நாதஸ்வர, நையாண்டி மேளக் கலைஞர்களிடம் பழகி இருக்கிறேன். அவர்களின் ஆதங்கம் இப்படித் தான் இருந்தது.
நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு"பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு
பதிலளிநீக்குபாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்"
எத்தனை உண்மையான வார்த்தைகள்...?
இப்படி ஒட்டி உறவாடுகிறாளே சந்தப்பெண் உம்முடன்?
பதிலளிநீக்குமேல்நாட்டு இசை போட்டி என்பது தாழ்வு மனப்பான்மை இல்லையோ? மாங்கனியும் ஆப்பிளும் போட்டி போடமுடியுமா?
இருபது வருடத்துக்கு முந்தைய கவிதையா?... இப்போது முதிர்ச்சி வந்துவிட்டதா? போட்டி போனதா?
பதிலளிநீக்குஇதையும் ரசிப்போம், அதையும் ரசிப்போமே?
இசைக்குக் கூட ஆண்டவனின் அருளாசி வேண்டுமா ஹேமா? ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?
பதிலளிநீக்குதமிழ் விளையாடும் திகழ்.
பதிலளிநீக்குசித்தப்பாவின் கவிதை கிடைத்தால் அதையும் சேருங்களேன்?
பதிலளிநீக்குஇருபது வருடத்துக்கு முந்தைய கவிதையா?... இப்போது முதிர்ச்சி வந்துவிட்டதா? போட்டி போனதா?
பதிலளிநீக்குஇதையும் ரசிப்போம், அதையும் ரசிப்போமே?//
கண்டிப்பாய் அப்பாஜி. அப்போது நான் ஓர் இயக்கத்தை சார்ந்து இருந்தேன். என் கருத்துக்களில் ஒரு விதமான திமிர்ப் போக்கு இருந்தது உண்மை தான்.
என் சித்தப்பாவின் கவிதையையும் இணைத்துள்ளேன் அப்பாஜி.
பதிலளிநீக்குநாதம் படிக்கும் மனதுக்கு கீதம்
பதிலளிநீக்குசித்தப்பாவின் கவிதை அற்புதம். கருத்தைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட கருவி - வியக்கிறேன்.
பதிலளிநீக்கு"இடையினிலே துண்டு கட்டி ஆலாபனை செய்யும் அடிமைத்தனம்" - பின்புலம் தெரிந்தால் சொல்லுங்க.
நன்றி அப்பாஜி.
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் நாதஸ்வரம் கோயில்களில் சுவாமி எழுந்தருளும் போதும் பெரிய மனிதர்களின் வீடு விஷேசங்களின் போதும் மட்டுமே வாசிக்கப்பட்டது. மேல் சட்டை அணியாமல் இடையில் துண்டை கச்சம் போல் கட்டிக் கொண்டு நின்றவாறே வாசிக்க வேண்டும். அதனை மாற்றி அமைத்தவர் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் என்று என் சித்தப்பா சொல்வார்கள்.
(பின்வருவது என் சித்தப்பாவின் குறிப்புக்களில் கிடைத்தது .)
நாயன வித்வான்கள் வெறும் உடம்போடு வாசிப்பதை மாற்றி சட்டை போட்டு வாசித்தது, அந்த காலத்தில் பெரிய புரட்சி!
காதில் கடுக்கன், கழுத்தில் தங்கமாலை, ஷெர்வாணியில் வைரம் பதித்த பட்டன்கள், பாகவதர் கூந்தல் ராஜரத்தினம் சபையில் வந்தாலே அட்டகாசமாக இருக்கும். ஸ்வாமி ஊர்வலத்தில் தனக்கும் ஊர்தி ஏற்பாடு செய்யச் சொல்லி அதில் அமர்ந்து பக்கவாத்தியங்களோடு வாசிப்பார். நாதஸ்வர வித்வான்களுக்கும் உரிய கௌரவம் அளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவரது தலையீட்டால் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் நாதஸ்வரமும் சேர்க்கப்பட்டது. பவுன் ரூபாய் 20 விற்ற காலத்திலேயே கச்சேரிக்கு ரூபாய் 1000 வாங்கியவர் இப்போதைய கணக்கில் சுமார் ரூபாய் 20 லட்சம் பெறும்! யாருக்கு அவ்வளவு சன்மானம் கிடைக்கிறது! தனது வித்வத்தில், திறமையில் அவ்வளவு நம்பிக்கை, சாதனையாளர்களுக்கே உரித்தான திமிர்!
திருவாவடுதுறை சமஸ்தானம் சார்பாக தில்லி சென்று சுதந்திரம் அடையப் போவதை முன்னிட்டு நேரு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த புனித தினத்தில் நாதஸ்வரம் தான் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 15 இரவு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கர்நாடக இசையில் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசித்தார் என்பது தமிழகத்துக்குப் பெருமை. ஜி.என்.பி., செம்மங்குடி போன்ற இசை மேதைகள் பிள்ளை அவர்களின் நாயன வாசிப்பைக் கேட்டு அதே போல் ராக ஆலாபனை செய்யப் பழகினார்கள்
புல்லரிக்கும் விவரங்கள். நன்றி சிவகுமாரன்.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குகவிதையின் வாயிலாய் இசையுலகம் சென்று சற்று இளைப்பாறி வந்தேன். மனம் வசீகரிக்கும் கவித்தோரணம். உடன்வந்த பல தகவல்கள் வியக்கவைத்தன. நன்றியும் பாராட்டும் சிவகுமாரன்.
பதிலளிநீக்குநாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள்
பதிலளிநீக்குநர்த்தனங்கள் ஆடுமடி கண்ணம்மா - அதில்
சீதளம் நிறைந்த இசை "தோடி" முதல் "பைரவி"கள்
சிந்தையை மயக்குதடி கண்ணம்மா// அத்தனையும் கரும்பின் அருமை.
எதேச்சையாக வந்த எனக்குக் கிடைத்த இசைப் பொக்கிஷத்துக்கு நன்றி.