செவ்வாய், ஜூலை 02, 2013

தாகம்

மண்ணின் தாகம் வானம் கொட்டும்
  மழையில் தணிகிறது.
விண்ணின் தாகம் வீணாய்ப் போகும்
  கடலைக் குடிக்கிறது
.
அலைகளின் தாகம் கடலை விட்டு
  கரைக்கு அலைகிறது.
தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும்
  குருதியில் தணிகிறது.

ஏழையின் தாகம் எதிர்ப்பவன் முன்னே
  எங்கோ போகிறது
கோழையின் தாகம் நீரைக் கண்டும்
  குடிக்க மறுக்கிறது

நீரின் தாகம் பள்ளம் தன்னை
  நோக்கிப் பாய்கிறது.
வேரின் தாகம் வேண்டிய மட்டும்
  பூமியைப் பிளக்கிறது.

சிப்பியின் தாகம் சிறுதுளி வாங்கி
  முத்தாய் ஆகிறது.
சிற்பியின் தாகம் சிதைந்த கல்லை
  சிலையாய்ச் செய்கிறது.

நடிப்பவன் தாகம் கைகள் தட்டும்
  ஓசையில் தணிகிறது.
குடிப்பவன் தாகம் குடலைக் கருக்கி
  குழியில் சாய்க்கிறது.

கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
  கவிதையில் தணிகிறது.
புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
  பிரளயம் நடக்கிறது  .


                                                                 
-சிவகுமாரன் 
1986 கவிதை எழுதிப் பழகிய காலம் .

9 கருத்துகள்:

  1. இந்த ரசிகனின் தாகம் தீரவில்லையே சிவகுமாரன். இன்னும் எழுதியிருக்கலாமென்று ஏங்க வைக்கிறதே!

    பதிலளிநீக்கு
  2. இன்னும் நிறைய இருக்கிறதே.. பெண்களின் தாகம், ஆண்களின் தாகம், கன்னியின் தாகம், காளையின் தாகம், தாயின் தாகம், சேயின் தாகம், காலத்தின் தாகம், வறுமையின் தாகம், செம்மையின் தாகம்... உங்கள் கற்பனை தானம் வேண்டி தாகங்கள் வரிசையின் வருகின்றனவே?

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன்...

    (1986 என்பதால் தாகங்கள் குறைவு...?)

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. //கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
    கவிதையில் தணிகிறது.
    புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
    பிரளயம் நடக்கிறது .//

    நல்லாருக்கு :)

    கவிதை எழுதிப் பழகிய காலத்திலேயே இவ்ளோ நல்லா எழுதியிருக்கீங்களே! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. படித்தபின் எங்களின் பாராட்டும் தாகம் பின்னூட்டத்தில் தணிகிறது! அருமை சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  6. தாகம் தீரும் வழிகள் எல்லாம்
    வேகம் தருகிறது எனக்கும்
    தீராத் தாகம் உள்ளது ஒன்றே
    தாய் மண்ணில் சாய்வதது!

    அருமை சகோ உங்கள் தாகக் கவிதை!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அன்பு சிவகுமரன்..

    கவிதை எழுதப் பழகிய காலத்தின் கவிதை போலவா இருக்கிறது?

    படும்போதே பண்பட்டிருக்கிறீர்கள். நன்றாய் விளைந்த விளைச்சல் கவிதையில் தெரிகிறது. ஒரு பொறுப்பும் சில நேர்மையும் பல நேர்த்திகளும் கொண்ட கவிதையிது.

    கவிஞன் உருவாக்கப்படுவதில்லை. அது பிறப்பு முதலே மரபில் உருவாகி வருகிறது என்பதுதான் உங்களுக்குப் பொருத்தம்.

    உங்கள் கவிதை எப்போதும் என்க்குக் கிடைத்த கரும்பின் சுவை.

    பதிலளிநீக்கு
  8. நீண்ட நாட்கள் கழித்து வருகிறேன்.. சிவா நலமா?

    அசத்தலாக கவிதைகள்

    //கவிஞன் உருவாக்கப்படுவதில்லை. அது பிறப்பு முதலே மரபில் உருவாகி வருகிறது என்பதுதான் உங்களுக்குப் பொருத்தம்.//

    ஹரணி ஐயா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. கவித்தாகம் தீர்க்கும் அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு