சனி, ஆகஸ்ட் 30, 2014

ஊடல்




சின்னக் கதிரொளி
  சன்னல்வழி வந்து
  கன்னத்தைத் தொட்டதடி.
வண்ணக் கனவுகள்
  மெல்லக் கலைந்தது
  உள்ளமும் சுட்டதடி.

நேற்றுக் கனவினில்
  நீயிருந்தாய் - அந்த
  நிம்மதி போனதடி.
வேற்று உலகினில்
  நாமிருந்தோம் - இன்று
  வேதனை மிஞ்சுதடி.

தூக்கக் கனவுக்குள்
  நீயிருந்து - எனைத்
  தொட்டுத் தழுவுகிறாய்
ஏக்கம் பெருகிட
  கண்விழித்தால் - எனை
  விட்டு நழுவுகிறாய்

பக்கத்தில் நீமட்டும்
  வந்துவிட்டால்- சோகம்
  பாதி குறையுமடி
துக்கத்தை உன்னிடம்
  சொல்லிவிட்டால் -அந்த
  மீதியும் போகுமடி.

கொஞ்சல் மொழிதனை
  கேட்டுவிட்டால் -ஒரு
  துன்பமும் இல்லையடி
நெஞ்சில் தலைவைத்து
  நீபடுத்தால்- மனம்
  நிம்மதி கொள்ளுமடி.

ஊடுதல் காமத்திற்(கு)
  இன்பமென்று- நான்
  உள்ளம் மகிழ்ந்தேனடி
கூடி முயங்கிடும்
  காமமில்லை - எனக்
  கூறிப் பறந்தாயடி.

ஓயாது  உன்பெயர்
  சொல்லிச் சொல்லி- என்
  நெஞ்சு  துடிக்குதடி. 
நீயதை ஏனடி
  நம்பவில்லை - மனம்
  வெந்து துடிக்குதடி,


                       -சிவகுமாரன்