செவ்வாய், செப்டம்பர் 30, 2014

ஒரு தேவதையும் சில தெய்வங்களும்.




கொள்ளையர்களின் கூடாரங்கள் 
கோயிலாய் பரிமளிப்பதால்
குற்றவாளிகள் கும்பிடப்படும் 
காலமிது.

கர்ப்பக்கிரகம் கதவடைக்கப்பட்டதில்
பரிதவித்துப் போகிறார்கள்
பக்தர்கள்.
பாவம்....
பிரசாதம்  தின்றே 
பிழைப்பு நடத்தியவர்கள்.

உழைத்துப் பிழைக்க 
வழி தெரியாதவர்கள் 
வன்முறை  முகம்காட்டி
வழி மறிக்கிறார்கள்.
நீதி தேவதையை 
நிந்திக்கிறார்கள்.

ஆனாலும் 
நிந்தனைகளாலும் 
வந்தனைகளாலும் 
நிலை தடுமாறாமல்
நிமிர்ந்து நிற்கிறாள். 
அவள் 

அடுத்த வேட்டைக்கு 
ஆயத்தமாகிறாள்.
கண்ணில் கட்டிய 
கருந்துணியோடும்
கையில் ஏந்திய 
கொடுவாளோடும்.

பயந்துபோய் கிடக்கின்றன(ர்)
இன்னும் சில 
தினவெடுத்த தெய்வங்களும் 
தின்று கொழுத்த  பக்தர்களும்.
சிவகுமாரன் 


12 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே!

    நிகழ்வினைக் கூறி நிறைத்தீரே நெஞ்சில்!
    அகழ்வுகள் ஆகும் அறிந்து!

    இரசித்தேன் எழுத்துக்களை!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  2. ஹ்ம்ம்.. தீர்க்கதரிசியா நீங்கள்.
    இதற்கும் பெங்களூரு தீர்ப்புக்கும் தொடர்பில்லை :-0.

    நன்று நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. நடந்ததையும், இனி நடக்கப் போவதையும் குறிப்பால் உணர்த்திய கவிதை! அருமை!

    பதிலளிநீக்கு
  4. அரசியலை உள் வைத்துப் பேசும் கவிதை அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. நன்றி இளமதி.தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும்

    பதிலளிநீக்கு
  6. நன்றி அப்பாஜி. தங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி புலவர் அய்யா. அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி குமார். இனியாவது திருந்துவார்களா பார்ப்போம். .

    பதிலளிநீக்கு
  9. சிவகுமாரன் ! "பிரசாதம் தின்றே பிழைப்பு நடத்தியவர்கள் " அருமையான சொல்லாடல் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  10. மிக அழகாக எடுத்துரைத்துவிட்டீர்கள் சில நிகழ்வுகளின் உள்குத்துடன்!!!

    பதிலளிநீக்கு