நான்
உச்சிமலை மீதிருந்து
ஓடிவரும் பேரருவி.
பச்சைவயல் தோப்புகளில்
பாடிவரும் பூங்குருவி.
காடுமலை மேடுகளைக்
கடந்துவரும் காட்டாறு.
ஓடுகின்ற நதிநீரை
உடைத்துவரும் பெருவெள்ளம்.
காரிருளைக் கதிர்வீசி
கிழிக்கின்ற செங்கதிரோன்
சூரியனை சந்திரனை
சுற்றிவரும் வான்மேகம்.
பாலைவனப் பெரும்புழுதி
கிளப்பிவரும் புயல்காற்று.
சோலைவனச் சுகந்தங்கள்
சுமந்துவரும் இளந்தென்றல்.
பார்த்தவற்றைக் கவிதைக்குள்
பதுக்கிவைக்கும் பகல்திருடன்.
வார்த்தைகளால் தவமியற்றி
வரங்கேட்கும் கவிச்சித்தன்.
என் கவிதைகள்
உணர்வுகளின் போராட்டம்
உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு
மடைதிறக்கும் நீரோட்டம்.
கனவுலகின் வீதிகளில்
கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
நம்பிக்கை வேரோட்டம்
நரம்புகளின் முறுக்கேற்றம்
நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற
வார்த்தைகளின் அரங்கேற்றம்.
கருத்தரித்த சிறுகுழந்தை
காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
உள்ளடக்கும் தாய்முனகல்.
வீறிட்டு வெளிக்கிளம்பி
வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
பெருங்கோபத் தீப்பிழம்பு.
ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
உலகளக்கும் சிறகோசை .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
குருவிகளின் சிறு கூச்சல் .
பொங்கிவரும் அலைநடுவே
புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
காசிநகர் சிறு கலயம் .
கடைவிரிக்க இயலாத
காலாவதி பழஞ்சரக்கு
அடைகாக்க முடியாத
ஆனையிட்ட பெருமுட்டை.
வர்ணங்கள் வெளுத்திட்ட
கர்ணனுக்கு மறந்துபோன
கடைசிநேர அஸ்திரங்கள்.
அவசரத்திற் கடகு வைக்க
ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை
கவிதையல்ல சத்தியமாய்
கவிதையல்ல சத்தியமாய்