நரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்
சனி, ஆகஸ்ட் 28, 2010
கனவுகள்
என்போல் உனக்கும் கனவினில் வருமா
அன்பால் சூழ்ந்த அந்தக் காலம்?
பொம்மைக் கடை கோலிக் குண்டு
கம்மாக் கரை ஆல மரம்
ஊதா ட்ரௌசர் வெள்ளைச்சட்டை
மாதா ஸ்கூலு ஆண்டுவிழா
அட்டைக் கத்தி ஒட்டு மீசை
கட்டப் பொம்மன் ஜாக்ஸன் துரை
சந்தோஷமான சரோஜினி டீச்சர்
"வந்துட்டார்றா" சந்தான வாத்தியார்
எரிச்சலான திங்கள் காலை
சிரிச்சுப் பறக்கிற வெள்ளி மாலை
தூக்குச் சட்டி தயிர் சாதம்
காக்கா கடி கல்கோனா மிட்டாய்
இலந்தப் பழம் ஜவ்வு மிட்டாய்
நலந்தானா ஆடிய நம்ம ஆளு
குரங்கு பெடல் வாடகை சைக்கிள்
அரங்க சாமி அய்யா தமிழு
கொட்ட கொட்ட முழிச்சுப் பாத்த
வட்டத் திடல் வள்ளி திருமணம்
கும்மாளமிட்ட குளத்துத் தண்ணீர்
அம்மா கையில் உருண்டை சோறு
அப்பாவோட சிகரெட் வாசம்
அப்பத்தாவின் வெத்தலை உரலு
ஒண்ணு ஒண்ணா இந்தக் காட்சிகள்
கண்ணை மூடினால் கனவுல வருது
மனசைப் பிரிச்சு மல்லாக்கப் போட்டு
அலசிப் பார்த்து ஆராய்ச்சி செய்யும்
மனோ தத்துவ நண்பருகிட்ட
கனவுக்கெல்லாம் காரணம் கேட்டேன்
இளமையை முழுசா அனுபவிக்காம
வளர்ந்து தொலைச்ச காரணத்தாலே
இங்கேயே உண்டாம் இன்னொரு பிறவி
அங்கே என்ன அதே கதை தானா ?
-சிவகுமாரன்
இதை எப்படித் தவற விட்டேன்?
பதிலளிநீக்குஎளிமை, இனிமை, நச். பட்டுக்கோட்டையார் பாடல்களை ரசிப்பீர்களா?
நன்றி துரை.
பதிலளிநீக்குபட்டுக் கோட்டையாரின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடித்தம், பாரதிக்கு அடுத்து.