சனி, அக்டோபர் 23, 2010

தேர்தொலைக்காட்சிகள்

இந்திய தேர்தல் வரலாற்றில்
முதன்முறையாக - என்று
விளம்பரம் செய்ய வேண்டியதுதான்
பாக்கி.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
போலாகிவிட்டன
தேர்தல் காட்சிகள்.


சூப்பர் சிங்கர் மாதிரி
சீனியர்ஸ்-க்கான
சீசன் முடிந்து
ஜூனியர்ஸ்-க்கான யுத்தம்
தொடங்கிவிட்டது.
கிரீடம் யாருக்கு
என்பதில்.


டீலா  நோ டீலா 
போலாகிவிட்டது
கூட்டணி பேரங்கள்.
தனக்கான பெட்டியில்
என்ன இருக்கிறது
என்று தெரியாமலேயே.


அணு அளவும் பயமில்லை மாதிரி
ஆகிப்போனது
போராட்டங்கள்.
ஆபத்து ஏதுமில்லை என்று
அறிந்து கொண்டுதான்
போராடத் தொடங்குகிறார்கள்.
உணவு இடைவேளைக்கிடையில்
உண்ணாவிரதம் மாதிரி.


அசத்தப் போவது யாரு மாதிரி
நடக்கிறது
பிரச்சாரங்கள்.
கன்னாபின்னாவென்று
ஜோக்கடித்துவிட்டு
கடைசியில்
மெசேஜ் சொல்வது மாதிரி
இஷ்டத்துக்கு
எதிரணியை திட்டிவிட்டு
இறுதியாய்
ஓட்டு கேட்கிறார்கள்.


சோம்பேறிகளாகி விட்டார்கள்
மக்கள்.
வாக்குச்சாவடிக்குக் கூட 
வருவதில்லை பலர்.
தமிழகத்தின் செல்லக்குரலுக்கான
தேடல் மாதிரி
எஸ்.எம்.எஸ். மூலம்
முதல்வரைத்
தேர்ந்தெடுக்கச் சொன்னால்
வசதியாகிப்போகும்.
கூடவே
குலுக்கல் முறையில்
வீட்டுமனையும்
வில்லாவும் தரலாம்.


ஊழலில் பெரியவன்
நீயா நானா என்று
கேள்விகேட்கப் போகிறார்கள்
கோபிநாத் மாதிரி
அரசியல்வாதிகள்.
ஓட்டுக்கு
பணம் வாங்குவதும்
ஊழல் தானே.


ஜாக்பாட் மாதிரி
எல்லாமே இலவசமாய்க்
கிடைத்துவிடுவதால்
எதிர்பார்க்கிறார்கள் மக்கள்
இன்னமும்.
புரிவதில்லை பலருக்கு
குடிசையில் கொடுத்து
டாஸ்மாக்கில் 
பிடுங்கிக் கொள்வது.  


மானாட மயிலாட
ஜோடி நம்பர் ஒன்-
போலத்தான்
பொழுபோக்கு நிகழ்ச்சிகளில்
ஒன்றாக
புரிந்துகொள்ளப் படுகிறது
தேர்தல் பலருக்கு.
எப்போது
உறைக்கப் போகிறது,
இது கதையல்ல நிஜம்
என்று?


அது இது எது
இப்படித்தான் இருக்கிறது
தேர்தல் முடிவுகள்.
அதுவுமில்லாமல்
இதுவுமில்லாமல்
புது
அதுவும்
பொது
ஒன்று வேண்டும்.
அது
எது?

          -சிவகுமாரன்

11 கருத்துகள்:

  1. Nice.

    "Yaaru Manasula Yaaru"? This is the biggest "Saval" faced by all politician in "Makkal Arangam". No grandmaster could help them to find the answer. May be, they should check with Octopus :-).

    Jokes apart.....i expected "Eelam' issue would impact the last election result to large extend....but to all of our surprise, Congress & DMK alliance won many seats.

    It seems, Congress is getting stronger in Tamil Nadu and in Central. Is it a good sign? How do you see?

    பதிலளிநீக்கு
  2. எரிகிற கொள்ளியில்

    நல்ல கொள்ளி

    அதுதான்.

    வேறென்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  3. யாரு மனசில யாரு?

    மக்கள் அரங்கத்தில்

    அரசியல்வாதிகளுக்கான

    சவால் இதுதான்.

    எந்த கிரான்ட்மாஸ்டரும்

    பதில்சொல்ல முடியாது.

    வேண்டுமானால்

    அவர்கள்

    ஆக்டோபாசை

    அணுகிப் பார்க்கலாம்.



    - உனது பின்னூட்டத்தின் மொழிபெயர்ப்பு சரியா?

    பதிலளிநீக்கு
  4. தேர்- தொலைக் காட்சிகள்
    நல்ல தலைப்பு.
    தேர்ந்தெடுப்பதும் நாம்தான்.
    தொலைப்பதும் நாம்தான்.
    இப்படியும் சொல்லலாம்
    நாம் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்
    அவர்கள் ஜனநாயகத்தை
    தொலைக்கிறார்கள்.
    சிந்தனையைத் தூண்டும் கவிதை

    பதிலளிநீக்கு
  5. "உணவு இடைவேளைகிடையில்
    உண்ணாவிரதம் மாதிரி"

    -சந்தடி சாக்கில் தாக்கி விடுகிறீர்களே.
    விடுங்கப்பா பெரிசை
    கடைசி காலத்திலேயாவது
    நிம்மதியாய்

    பதிலளிநீக்கு
  6. விருத்தாசலத்தில் பெண் எம்.எல்.ஏ அடிவயிற்றில் மிதித்ததால் ரத்தப்போக்கு நிற்க ஒரு மாதம் ஆயிற்று. குடியாத்தம், வெல்லூர் போராட்டங்கள் ரத்தம் கொட்டியவை.ஃபாஸ்கான் போராட்டம் தடியடி கைவிலங்கு என்று சந்தித்தது.போராட்டங்களை பொதுமைப்படுத்துவதும்,கோச்சைப்படுத்துவதும் நியாயமா நண்பரே?---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் சொல்பவை எல்லாம் விதிவிலக்கானவை அய்யா.

    இன்று மக்களால் கவனிக்கப்படுவதும், மீடியாக்களும் பத்திரிக்கைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுமான போராட்டங்களைத் தான் நான் குறிப்பிடுகிறேன்.சென்ற வாரம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஒரு போராட்டம் நடந்தது. சாராய பாக்கேட்டுகளுக்காகவும் பிரியாணி பொட்டலுங்களுக்காகவும் அழைத்துவரப்பட்டவர்கள் மதுரையை குலுங்கச் செய்தார்கள். டாஸ்மாக் நிரம்பி வழிந்தது. பெண்கள் வெளியே வரப் பயந்தனர். சாதாரணமாக ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பும் நாங்கள் அன்று ஆறு மணி நேரம் ஆகியது. முன்பெல்லாம் போரடுபவர்கள் தான் தாக்கப்படுவார்கள். இன்று பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். (தருமபுரி பஸ் எரிப்பு மாதிரி. ) இந்த போராட்டத்தை அம்மையாரின் ஹாட்ரிக் வெற்றி என்று பத்திரிகைகள் புகழ்ந்தன.
    நீங்கள் சொல்லும் போராட்டங்களை நடத்தியவர்களின் தலைவர்கள் இன்று தோட்டத்தில் தவம் கிடக்கிறார்கள் கேவலம் நாலைந்து சீட்டுகளுக்காக.
    என் கவிதைகள் யாரையும் கொச்சைப்படுத்துவதில்லை. அதற்கு அரசியல் முகமூடியும் இல்லை. பொய்யான முகமூடிகளை கிழித்தெறியும் போது வலிக்கத்தான் செய்கிறது எனக்கும்.

    பதிலளிநீக்கு
  8. நண்பரே!நீங்கள் போராடும்போது நான் போதுமக்கள்.நான் போராடும்பொது நீங்கள் போதுமக்கள். நாம் இருவரும் செரவேண்டும். வெளிச்சத்தை அவர்களுக்குத்தேவையான போது தெவையான பகுதியில் பாய்ச்சுவார்கள்.பள்ளிக்கூட வாசலில் சவ்வுமிட்டாய் விற்பவர் கூட "முதலாளி" என்றால் மகிழ்ச்சியடைகிறார் சில்லரை வியாபாரத்தில் பெருமுதலாளிகளும்,அந்நியகம்பனிகளும் வரக்கூடாது என்று கூறும் இடதுசார்களை வெறுக்கிறார். உங்களைப் போன்றவர்களீன் தமிழும், கவி மனமும்.இப்படிப்பட்ட அப்பாவி மக்களை நல்ல பாதைக்கு கொண்டுவர உதவ வேண்டும் என்று விரும்புகிறென்.ஆழமான அரசியல் பேசுவோம். கட்சி அரசியல் வேண்டாமேஅன்புடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி.

    என் கவிதைகளுக்கு

    சிவப்போ காவியோ

    கருப்பு சிவப்போ

    எந்த சாயமும் பூசப்படுவதை

    நான் விரும்பவில்லை.

    மனசாட்சிக்கு ஏது நிறம்?




    கவிஞன் என்ற காரணத்தாலேயே

    எது சரியான பாதை என்று

    பிறருக்கு வழிகாட்டும் தகுதி

    வந்து விடுவதில்லை.




    சிலர் காதுகளுக்கு

    இனிமையாய் இருக்கிறது.

    சிலருக்கு

    கர்ண கொடுரமாய் இருக்கிறது.

    ஆனாலும்

    கவலைப்படுவதில்லை

    காட்டுக்குயில்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்.
    உங்கள் கவிதைகளை முழுமையாக படித்தேன்.
    மிகவும் அழகாகவும் உள்ளத்தை தொடுவதாகவும் உள்ளது.
    நூல் ஏதும் வெளியிட்டிருக்கிறீர்களா?
    எனது விமர்சனங்களை பின்னூட்டமாய் இட்டிருக்கிறேன்,
    காணவும்
    நன்றி.
    அன்புடம்
    செந்தில் செல்வா.

    பதிலளிநீக்கு