திங்கள், டிசம்பர் 13, 2010

எட்டி உதை


இனிமை இனிமை இந்த வதை 
  இன்னும் நன்றாய் எட்டி உதை
இனிமேல் இல்லை சித்ரவதை
  எப்படிச் சொல்வேன் துன்பமதை ?

கொஞ்சம் நீவர தாமதித்தாய்
  குத்திக் கிழித்தார் வார்த்தைகளால். 
நெஞ்சில் தாய்ப்பால் சுரக்கும்முன்
   நீதான் நெஞ்சில் பால்வார்த்தாய்.

உன்னைப் பெறாது நான்போனால்
  ஊரார் என்னை மலடென்பார் 
என்னை தாயாய் பெற்றதனால்
  எனக்கும் நீதான் தாயன்றோ ?

காய்த்த மரம்தான் கல்லடியால்
  காயம் படுமென சொல்வார்கள்.
காய்க்கவில்லை என்பதனால் 
  காயம் பட்டேன் பலமுறைநான்.


"தள்ளிப் போகா" காரணத்தால்
   தள்ளியே  வைத்தார் உறவெல்லாம்
எள்ளி நகைத்தார் மலடென்றார்
  எதிரே வந்தால் குருடானார்.


அழகாய் குழந்தைகள் கண்டாலே
  அள்ளி அணைக்கத் துடித்தேன்நான் 
குழந்தைக் காகா தெனச் சொல்லி 
  கொடுக்க மறுத்தார் என்னிடத்தில்.


இம்சை அரசி உன் பாட்டி
  இழைத்த கொடுமைக் களவில்லை
வம்சம் தழைக்க வேண்டுமென 
  வரன்கள் பார்த்தார் மறுபடியம்.


மருத்துவம் பார்க்கஉன் அப்பனிடம் 
  மண்டியிட் டழுதேன் பலமுறைநான்  
மறுத்தார் வெறுத்தார் மலடியென்றார் 
  மனமில் லாமலே இற(ர)ங்கி வந்தார்.  


உந்தன் தந்தை உயிரணுவில் 
  ஊட்டம் இல்லை எனச் சொன்னார்
எந்தன் கருப்பை வலுவாக
  இல்லை எனவும் இடி தந்தார்.


சோதனைக் குழாயில் உருவானாய்
  சோதித்து  என்னுள் கருவானாய்
வேதனைப் படிகள் பலதாண்டி 
  விஞ்ஞானத்தின் விளைவானாய்  


சிந்தை குளிர்ந்து  சிலிர்த்துவிட
  செல்லமே கண்ணே எட்டி உதை
எந்தன் அன்னை மலடில்லை
  என்றே சொல்லி எட்டி உதை. 


காளையோ பசுவோ கவலையில்லை 
  களங்கம் தொலைந்தது எட்டி உதை
ஏளனம் செய்தோர் இன்முகத்தில் 
  ஈயா டட்டும் எட்டி உதை.


பேர்சொல்ல பிள்ளை இல்லையெனில் 
  பெண்மட்டும் பொறுப்பிலை என்று உதை.
வாரிசு ஆணுக்கு இல்லையெனில் 
  வைத்தியம் பாரென எட்டி உதை. 


ஆணுக்கு சந்ததி இல்லையெனில் 
  அவனும் மலடென எட்டி உதை.
ஆணோ பெண்ணோ இருவருக்கும் 
  ஆகும் பொறுப்பென எட்டி உதை.


இனிமேல் எல்லாம் இன்ப வதை 
   எப்படி சொல்வேன் இன்பமதை
இனிமை இனிமை இந்த வதை
  இன்னும் நன்றாய் எட்டி உதை.

33 கருத்துகள்:

  1. அழகா இருக்கு சிவா.. படமும் கவிதையும்!

    பதிலளிநீக்கு
  2. அந்த படமும் இந்த கவிதையும் சொல்ல முடியாத பல உணர்வுகளை அளிக்கின்றன! அருமை சார்!

    பதிலளிநீக்கு
  3. கண்களில் நீர் வர செய்த கவிதை...ரெம்ப நாளாச்சு இப்படி உணர்ச்சி பெருகும் எழுத்தை படித்து...நன்றி பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  4. ஆஹா!! எவ்வளவு அருமையான கவிதை..

    நன்றாக இருக்குன்னு ஒரு வார்த்தை போதாது இக்கவிதையைப் பாராட்ட..

    பதிலளிநீக்கு
  5. "சிந்தை குளிர்ந்து சிலிர்த்துவிட
    செல்லமே கண்ணே எட்டி உதை
    எந்தன் அன்னை மலடில்லை
    என்றே சொல்லி எட்டி உதை.
    "

    எனக்கு பிடித்த வரிகள்... எல்லோருக்கும் பிடிக்கும்.. நன்றி! வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. சொல்வதற்கு வார்த்தைகளை தேடிப்ப்பார்த்து களைத்துப் போனவன் ....
    ஒரே வரியில் சொல்கிறேன் கருத்துரையை
    "உங்கள் முதல் கவிதையிலேயே என்னை ரசிகனாக்கி விட்டீர்கள் தோழரே "

    இந்த கத்துக்குட்டியின் கவிதைகளையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்

    http://www.maheskavithai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. //ஆணுக்கு சந்ததி இல்லையெனில்
    அவனும் மலடென எட்டி உதை.//
    இங்கு ஆணுக்கொரு நீதி, இந்தப் பெண்ணுக்கொரு நீதி.இந்த அணுகு முறை உதைக்கப் பட வேண்டியதுதான்.
    ’கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்’ என்ற பாரதியின் வரிகளுக்கு நிகரான வரிகள்.
    வாழ்த்துகள் சிவகுமாரன்

    பதிலளிநீக்கு
  8. பெண்ணின் வருத்தத்தை இதைவிட உணர்வுபூர்வமாக ஒரு பெண்ணால்கூட சொல்ல முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்த அம்புகளாய் பாய்ந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. என்னை தாயாய் பெற்றதனால்
    எனக்கும் நீதான் தாயன்றோ ?
    ;'#


    superb

    பதிலளிநீக்கு
  10. அருமை நண்பரே.. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
    நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்..... தாயைத் துன்புறுத்தும் வார்த்தைகள் கேட்டு , “
    ‘வாடா,என் அருகினில் வாடா, சற்றே உதைக்கிறேன் என் காலால்”..என்றோ உரைக்கிறான், மண் மீது விழுமுன் துடிக்கும் ,தாய்ப் ப்ழி துடைக்கும் பிஞ்சு.

    பதிலளிநீக்கு
  12. வார்த்தை இல்லை

    தலை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  13. ஒரு பெண்மையின் உணர்வுகள் கவிதையாய் தந்த விதம் அருமை. பாராட்டுக்கள.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள் தோழா ... நல்ல வரிகள் .. ஆனால் கொஞ்சம் சுருக்கி எழுதி இருந்தால் இன்னும் நலமாக இருக்கும் ...,

    பதிலளிநீக்கு
  15. சடங்கிலிருந்து விஞ்ஞானம் வரை எல்லாவற்றையும் தொட்டிருக்கிறீர்கள் - முக்கியமாக மனித நேயத்தில் முடித்திருப்பது நிறைவாக இருக்கிறது. துள்ளும் கவிதை நடை.

    பதிலளிநீக்கு
  16. எப்படி...சிவகுமாரன் !ஆணாய் இருந்து வார்த்தைகளை,உணர்வுகளை வலிந்து இழுக்காமல் ஒரு பெண்ணின் மனதை அப்படியே மெல்ல மெல்ல நகர்த்தி மனதை உடைத்து உள்ளக்கருவை படிப்பவர் மனதிலும் வளரவிட்டிருக்கிறீர்கள்.குழந்தையில்லாப் பெண்களை சாடும் யாராவது வாசித்தால் தொடர்ந்தும் வாசித்து முடிக்காத அளவுக்கு சாட்டையால் அடிக்கும் வரிகள்.ரசித்தேன் என்பதைவிட ஒரு பெண்ணாய் இளகிவிட்டேன் !

    பதிலளிநீக்கு
  17. ஒரு பெண்ணின் வலியையும் கோபத்தையும் எவ்வளவு அழகா வார்த்தைகளில் கொண்டுவந்திருக்கீங்க...

    பாராட்டுக்கள் சிவகுமாரன்!

    பதிலளிநீக்கு
  18. ஒரு பெண்ணின் மனதின் வலிகளை உணர்ச்சி பூர்வமாய் சொல்லி இருக்கிறீர்கள் சிவக்குமரன்

    பதிலளிநீக்கு
  19. வணக்கமுங்க தம்பி..நம்ம பக்கம் வருகை தந்தமைக்கு நன்றிங்க.ஏற்பட்டு விடுகிற வேலைகள்..கடமைகள்..அதனால் தொய்வு.கவிதை அருமைங்க.

    பதிலளிநீக்கு
  20. அற்புதம்...அற்புதம்...சிவா...ரொம்பவே உருக்கிருச்சு இந்த கவிதை என்னை...ஒரு பெண்ணின் குமுறல்கள் அப்படியே வடிச்சிருக்கிங்க...பகிர்வுக்கு நன்றி...!!

    பதிலளிநீக்கு
  21. //இனிமேல் எல்லாம் இன்ப வதை
    எப்படி சொல்வேன் இன்பமதை
    இனிமை இனிமை இந்த வதை
    இன்னும் நன்றாய் எட்டி உதை.//

    வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுகளையும் வலிகளையும் பதிவு செய்கிறது அருமை தொடருங்கள்..............

    பதிலளிநீக்கு
  22. பிறந்த அந்த குழந்தை சமுதாயத்தில்
    தன் தாயை மலடு என்று சொன்ன அத்தனை பேரையும் எட்டி உதைக்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  23. சோதனைக் குழாயில் உருவானாய்
    சோதித்து என்னுள் கருவானாய்
    வேதனைப் படிகள் பலதாண்டி
    விஞ்ஞானத்தின் விளைவானாய்


    .....வார்த்தைகள் அருவி போல அழகாய் - கருத்தாய் - அமைந்து இருக்கின்றன. அருமைங்க.

    பதிலளிநீக்கு
  24. பதிந்த தடத்தை எப்படி பார்க்காமல் விட்டேன்...

    //என்னை தாயாய் பெற்றதனால்
    எனக்கும் நீதான் தாயன்றோ ?//
    மறு ஜென்மம் என்பதை அழகாய் சொன்ன வரி..

    அத்தனை வரியையும் // // அடைப்பிட்டு எழுதலாம் .ஒவ்வோரு வரியிலும் கவிதையின் முத்திரை உதை உள்ளது..

    எட்டி உதையின் ஒரு குட்டி உதையை என் மூக்கில் வாங்கி துடைத்துக் கொள்கிறேன் --இவ்வருமையான கவிதையை தாமதமாக பார்த்தற்கு....

    பதிலளிநீக்கு
  25. கதைக்குள் கருவைப் புகுத்தி, கருவைக் கவிதையாக்கி பாடம் சொல்வது போல் உதைத்துத் தள்ளி விட்டீர்கள் . உணர்வு பூர்வமான கவிதை. பெண் உணர்வுகளை நுண்ணியமாய் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள சிவகுமரன்,
    நீண்ட நெடிய முயற்சிக்குப் பின்.. தங்கள் வலைப்பூவில் என் விரல் சுவடு பதிகிறது.

    இதைக் கூறியே ஆக வேண்டும். நான் அன்றே தங்கள் வலைப்பூவில் உள்ள ஒவ்வொரு பூவையும் படித்தேன். என்னுடைய வலைவேகம் சற்று குறைவாக இருந்தது. அதுவும் நல்லது. பொறுமையாக எல்லா பூவையும் பார்த்துக்கொண்டே வந்தேன். சிலம்பின் புலம்பல் வரை.

    அதன் பின்!!!! என் கண்களுக்கோ மனத்திற்கோ தொடர முடியாமல் போனது. வேறு வழியின்றி மிக நீண்ட கருத்துரையை மிகப் பொறுமையாகத் தட்டச்சு செய்து பதிந்தால் அஞ்சல் அனுப்பவே முடியவில்லை.

    இதே கதை நேற்றும்.. தட்டச்சு செய்து கமெண்ட பகுதியே திறக்க முடியவில்லை. சரி இன்று மூன்றாவது முயற்சி..

    சிலம்பின் புலம்பலில்,பூமிக்குள் புதைந்துள்ள ஒரு பெரிய விருட்சத்தின் விதை பூமிக்குள்ளிருந்து மெல்ல மெல்ல வெளி வந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

    இளமைக் குருதியின் ஓட்டம் ஒவ்வொரு எழுத்திலும் கொப்பளித்தது.
    புத்தம் புது சிந்தனை. இதே போல் கவிஞர் வைரமுத்து அவரது 17 வது வயதில் எழுதிய கவிதை ’கருப்பு நிலா’ அதைப்பற்றியும் நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முடிந்தால் பார்க்கவும்.
    http://tamilnimidangal.blogspot.com/2010/05/blog-post_15.html
    ஆனால் ’கருப்பு நிலா’ தந்த வைரமுத்துவின் சீற்றம் தங்கள் கவிதையில் இன்னும் அதிக ஆவேசமாக....

    அதிர்வலைகளில் இருந்து இன்னும் மீளாமலே..
    அன்புடன்,
    ஆதிரா.

    பதிலளிநீக்கு
  27. தலைப்பிலேயே பொருள் சொல்லிவிட்டீர்கள். வயிற்றில் அழுந்தியிருக்கும் கால் விசையுடன் எட்டி உதைப்பது தெரிகிறது.
    அற்புதம். நான் கவிஞன் இல்லை. ரசிகமணி(பத்துஜி) இல்லை. மோகன்ஜி அப்பாஜி போன்று தமிழைக் கரைத்துக் குடித்தவன் இல்லை. நாலு நாலு வார்த்தையை போட்டு கதை கட்டுரைன்னு சைட்ட ஃபில் அப் பண்றேன். தமிழ் எழுதிப் பழகுகிறேன். ரொம்ப நல்லா கவி வடித்திருக்கிறீர்கள். கவித்துவம் மிக்க வரிகள். நன்று. பாராட்டுக்கள்.
    ;-)

    பதிலளிநீக்கு
  28. மிக்க நன்றி ஆதிரா மேடம். தங்களை போன்ற தமிழாய்ந்தவர்கள் என் வலைப்பக்கம் வந்தது என் பேறு. உண்மையில் சிலம்பின் புலம்பல் எழுதும் போது எனக்கு வயது 18 (1988 இல் எழுதியது) கால வெள்ளத்தில் என் கவிதைகளோடு நானும் அடித்துச் செல்லப்பட்டேன். இப்போது தான் இணையத்தைப் பற்றிக் கொண்டு கரை ஒதுங்கி இருக்கிறேன் .வைகறை மேகங்களில் கருப்பு நிலா நானும் படித்திருக்கிறேன் என நினைக்கிறேன். சிலம்பின் புலமபல் அதன் பாதிப்பாக கூட இருக்கலாம், உண்மையில் எனக்கு நினைவில்லை. தாங்களின் கட்டுரையும் படித்தேன். கருப்பு நிலாவுக்கு கருத்துரை எழுதிய தாங்கள் என் சிலம்பின் புலம்பலையும் கேட்டது எனக்கு பெருமை. என்றும் தங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. கருப்பு நிலாவுக்குக் கட்டுரை எழுதி வைரமுத்து அவர்களால் பாராட்டும் பெற்றேன் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில்... என்ன எளிமையான மனிதர் என்று வியந்தேன்..

    அந்த இனிய நினைவுகளுடன்.. தங்கள் கவிதையைப் படித்தேன்..அதே உணர்வில்..இந்த விதையும் கால ஓட்டத்தில் அடித்துச் செல்ல முடியாத கல் விருட்சத்துக்கான வீரிய விதை என்று உணர்ந்தேன். அந்த வேருக்கு நீராக என்றும் என் விமரிசனம் இருக்கும் சிவகுமாரன். நன்றி..

    பதிலளிநீக்கு
  30. உன்னைப் பெறாது நான்போனால்
    ஊரார் என்னை மலடென்பார்
    என்னை தாயாய் பெற்றதனால்
    எனக்கும் நீதான் தாயன்றோ ?

    - கவியரசர் கண்ணதாசன் நினைவுக்கு வருகிறார்.கவிதையை தொடருங்கள்... வாழத்துகள்

    பதிலளிநீக்கு
  31. படம் மனதின் அடிவேரை உலுக்குகிறது. பிசைகிறது இறுக்கம். என்ன அற்புதமான படம். காணக் கிடைக்காத படம். ஆனால் என்னால் இவற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியுமா என்று சத்தியமாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு