விடியும் பொழுதின் கீற்றும், புல்லில்
வடியும் பன்னீர்த் துளியும் முல்லைக்
கொடியும், முகில்கள் ஒன்றாய்க் கூடி
படியும் மலையும் பச்சை வயலும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனை போதைப் பொருட்கள்.
மாதர் விழியும் மயக்கும் அவரின்
காதல் மொழியும் மனதைச் சுண்டிப்
பார்க்கும் நடையும் புலமை இல்லா
யார்க்கும் கவிதை எழுதத் தோன்றும்.
கொஞ்சும் குரலில் கூவும் குயிலும்
பிஞ்சுக் குழந்தை பேசும் பேச்சும்
நெஞ்சக் குகையில் நுழைந்து சென்று
செஞ்சொற்க் கவியாய் சீறிப் பாயும்.
ஆற்றங் கரையில் ஆடும் படகும்
காற்றுக் கடங்கி ஓடும் நீரும்
வேற்று நினைவை விரட்டி அடித்து
ஊற்றாய்க் கவிதை ஓடச் செய்யும்.
கடலாம் மங்கை கரைக்கு எழுதும்
மடலாம் அலையின் மயக்கும் மொழியும்
வான வீதியை வளைத்துப் போட்டு
கானம் பாடிக் களிக்கும் பறவையும்
தூக்கணாங் குருவியின் திறமையும் ஏரியில்
தூக்கிய காலொடு தவம்செயும் கொக்கும்
பூவின் இதழின் புன்னகை முகமும்
ஆவின் கன்று அடிக்கும் லூட்டியும்
சுட்டிக் குரங்கின் "சுர்"ரெனும் முறைப்பும்
குட்டி அணிலின் கொய்யாக் கொறிப்பும்
இருட்டுப் பூனையின் மிரட்டும் விழியும்
குருட்டுப் பாடகன் குரலின் சுகமும்
உருக்கிய வெள்ளியை உரைத்துப் பூசி
நறுக்கிப் போட்ட நகமாய் நிலவும்
வெள்ளி நிலவு வீசும் ஒளியும்
அள்ளித் தெறித்த விண்மீன் காசும்
துள்ளும் மனதில் தூண்டில் போட்டு
அள்ளும் கவிதை ஆயிரம் கோடி.
தரையைப் பிளக்கும் தளிரின் துணிவும்
கரையில் நாணல் காட்டும் பணிவும்
காட்டு மூங்கில் காட்டும் திமிரும்
ஊட்டி ரோஜா உதிர்க்கும் சிரிப்பும்
தோட்டக் கட்டில் தூக்கக் கனவும்
வீட்டுத் திண்ணை வெட்டிப் பொழுதும்
தென்னந் தோப்பின் தென்றல் காற்றும்
சன்னல் ஓரம் கிடைத்த சீட்டும்
ஓடும் ரயிலோ டோடும் மரமும்
ஆடும் மயிலின் அழகும் மெல்ல
அசையும் மலையாம் ஆனை நடையும்
இசையும் கூத்தும் ஏழையின் சிரிப்பும்
கண்ணைப் பறிக்கும் மின்னல் கீற்றும்
விண்ணைக் கிழித்து வீழும் மழையும்
மண்ணும் விண்ணும் மானும் மீனும்
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
மனதின் கவலைகள் மறக்கச் செய்து
கனவின் உலகில் காலந் தோறும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்.
-சிவகுமாரன்
மனதின் கவலைகள் மறக்கச் செய்து
பதிலளிநீக்குகனவின் உலகில் காலந் தோறும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்.
......வாவ்! அழகை.... அழகாய் வர்ணித்து.... அழகாய் கவிதையில் சொல்லி இருப்பதே, அழகு. பாராட்டுக்கள்!
வித்தியாசமான சிந்தனை.போதையூட்டும் கவிதை
பதிலளிநீக்குநல்ல பதிவு.தொடர வாழ்த்தும்...
மனதை மயக்கும்
பதிலளிநீக்குகவிதை வரிகள்
மண்வாசனையின்
மயக்கம் சுகமே!
நாங்களும் ரௌடி தான் சார். ஆன நீங்க
நொருக்கீட்டிங்க போங்கோ, வேலையை தூக்கி எறிஞ்சிட்டு ஊரோட வயக்காட்டு பக்கமா வந்துடலாமான்னு ஒரு நிமிஷம் யோசிக்க வைத்து விட்டது. நன்றி.
//தரையைப் பிளக்கும் தளிரின் துணிவும்
பதிலளிநீக்குகரையில் நாணல் காட்டும் பணிவும்
காட்டு மூங்கில் காட்டும் திமிரும்
ஊட்டி ரோஜா உதிர்க்கும் சிரிப்பும்//
கவிதையை வாசிக்கவே கிக்கா இருக்கே!
அருமை! :-)
கவிதை அருமை சகோ..
பதிலளிநீக்குகவிதையும் ஒரு வித போதைதான்
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
நிறுத்தல்குறியற்ற கவிதை என்பதால் நாலு வரிக்கு
ஒரு முறையோ அல்லது ஐந்து வரிக்கு ஒரு முறையோ
பத்தி பிரித்திருக்கலாமோ என்பது எனது கருத்து
கவிஞனின் பார்வையில் படுவதெல்லாம் பாடல் 'பேறு' அடைவது அழகு
பதிலளிநீக்கு'சிவகுமாரன் கவிதையும்”--விட்டுப் போன போதைப் பொருள்.
பதிலளிநீக்குஅருமை சிவகுமாரன்!
மிகுந்த அழகு சிவா..
பதிலளிநீக்குபோதையூட்டிடும் அழகுக் கவிதை தரும் சிவக்குமாரனும் என்று சேர்த்துப் படித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குமொழி சிலரின் கையில் சிறைப்படுகிறது. சிலர் மொழியை சிறைப்படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குசிவகுமாரன் நீங்கள் முதலாம் ரகத்து ஆசாமி.முதல் தர ஆசாமி.
நமக்கு ரொம்பப் பிடித்ததைக் கடைசியில் சாப்பிடும் ஜாதி.அந்த வகையில் நஷ்டம் எனக்குத்தான்.
உங்கள் கவிதையே போதை போன்று இருக்கிறது எனக்கு! பகிர்வுக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குஉலகில் எல்லாம் இருக்கிறது.
பதிலளிநீக்குஅழகாக இருக்கிறது,இனிதாக இருக்கிறது,ரசிக்கும்படியாக இருக்கிறது.யார் ருசித்து முடித்தாலும் எச்சம் என்பது என்றும் இலலை,சிவகுமாரன் கவிதை ரசிப்பதற்கும் இல்லை எல்லை. நீடூழி வாழ்க நீ.
போதையாலேயே போதையைத் தெளிய வைக்கப் பார்க்க்கிறீர்கள் சிவகுமாரன் !
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குஇன்னா தலிவா... சரக்கடிச்சிட்டு கவுத எழுதிக்கினியா ? ஒரே கிக்கா...கீது.
பதிலளிநீக்குஇது என்ன பா வகை கவிஞரே. ?
பதிலளிநீக்குகூட்ஸ் வண்டி மாதிரி போய்க்கிட்டே இருக்குது?
உங்க கிட்ட தான் தமிழ்ப்பாடம் படிக்கணும் மறுபடியும்.
நீங்கள் என் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதிய வரிகள் அழகு. போர்ப்படையினரின் முழக்கமாகவே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.என்று எழுதியிருந்தேன். படிக்கவில்லையா.?
பதிலளிநீக்குபடித்தேன் GMB சார். கவிஞர்கள் சொல்வது போல் எழுதி இருந்தேன். நீங்கள் சொல்வது போல் போர்ப்படையினரின் முழக்கமாக எழுதிவிட்டால் போச்சு.
பதிலளிநீக்கு\\\இன்னா தலிவா... சரக்கடிச்சிட்டு கவுத எழுதிக்கினியா ? ஒரே கிக்கா...கீது.///
பதிலளிநீக்குசரிதான்...ராதேஷ். சரக்கு லிஸ்ட் தான் மேலே கொடுத்து இருக்கேனே.
\\இது என்ன பா வகை கவிஞரே. ?
கூட்ஸ் வண்டி மாதிரி போய்க்கிட்டே இருக்குது?
உங்க கிட்ட தான் தமிழ்ப்பாடம் படிக்கணும் மறுபடியும்.///
தமிழ்ப்பாடம் என்னிடமா ? சரியாப் போச்சு. நான் பள்ளியில் இலக்கணம் படித்ததோடு சரி. இது அகவல் எனப்படும் பாவகையைச் சேர்ந்தது.
"சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட "
என்னும் விநாயகர் அகவல் இப்படித்தான் இருக்கும்.
கந்தர் சஷ்டி கவசம் படிப்பது போல் படித்து பாருங்களேன்.
போதையூட்டும் கவிதை-ரமணி
பதிலளிநீக்குகவிதையை வாசிக்கவே கிக்கா இருக்கே!-ஜீ
கவிதையும் ஒரு வித போதைதான்-ராஜி
சிவகுமாரன் கவிதையும்”--விட்டுப் போன போதைப் பொருள்.-சென்னைப் பித்தன்
போதையூட்டிடும் அழகுக் கவிதை - வை.கோ
உங்கள் கவிதையே போதை போன்று இருக்கிறது எனக்கு!- வெங்கட் நாகராஜ்
போதையாலேயே போதையைத் தெளிய வைக்கப் பார்க்க்கிறீர்கள் - ஹேமா
ஒரே கிக்கா...கீது.-ராதேஷ்.
ஆகா... டாஸ்மாக்குக்கு போட்டியா கடை போட்டுரலாம் போலிருக்கே.
சரக்கடிச்சிட்டுப் போன எல்லோருக்கும் நன்றி.
வசந்தா நடேசன் சொன்னது....
பதிலளிநீக்கு\\\நாங்களும் ரௌடி தான் சார்//
.....நான் இல்லேங்க.
\\\வேலையை தூக்கி எறிஞ்சிட்டு ஊரோட வயக்காட்டு பக்கமா வந்துடலாமான்னு ஒரு நிமிஷம் யோசிக்க வைத்து விட்டது.////
நானும் அப்படி நெனைச்சிருக்கேன்
ஆனால் வ்யித்துப்பாடுன்னு ஒண்ணு இருக்கே.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//கடலாம் மங்கை கரைக்கு எழுதும்
பதிலளிநீக்குமடலாம் அலையின் மயக்கும் மொழியும்..//
//ஆவின் கன்று அடிக்கும் லூட்டியும்
உருக்கிய வெளியை உரைத்துப் பூசி
நறுக்கிப் போட்ட நகமாய் நிலவும்..//
//தரையைப் பிளக்கும் தளிரின் துணிவும்
கரையில் நாணல் காட்டும் பணிவும்
காட்டு மூங்கில் காட்டும் திமிரும்
ஊட்டி ரோஜா உதிர்க்கும் சிரிப்பும்..//
//இன்னும் இன்னும் இன்னும் இன்னும்//
எதைச் சொல்வது எதை விடுவது என்றுத் தெரியவில்லை, சிவக்குமாரன்! அத்தனைக்கும் நடுவே மனம் முயங்கி திருப்பிப் திருப்பிப் படித்த திகட்டாத சொற்றொடர்களை மட்டும் குறித்தேன்.
கடல் கன்னி கரைக்காதலனுக்கு காதல் மடலாய் அலையை அனுப்பியதாக இதுவரை யாரும் எழுதியதில்லை.
ஆவின் கன்று அடிக்கும் 'லூட்டி'யில் அந்த கன்றுக்குட்டி துள்ளித்துள்ளி அன்னை மடி தேடி ஓடுவது கண்ணில் காட்சியாய் படிகிறது.
நறுக்கிப் போட்ட நகமாய் நிலவை,
புதுமையாய் கற்பனையில் கண்ட அற்புதம் தான் என்னே!
நாணல் காட்டும் பணிவும்,
மூங்கிலின் திமிரும்,
ஊட்டி ரோஜாவின் சிரிப்பும்,
தோட்டக் கட்டில் கனவும்..
அடடா! அடடாவோ!
இத்தனை சொல்லியும் இன்னும் சொல்ல உங்கள் மனம், இன்னும்.. இன்னும்.. என்று தவித்து இங்கும் அங்கும் அலைபாய்கிறது!
என்னமாய் எழுதிவிட்டீர்கள்!
அன்பான வாழ்த்துக்கள்.
\\......வாவ்! அழகை.... அழகாய் வர்ணித்து.... அழகாய் கவிதையில் சொல்லி இருப்பதே, அழகு. பாராட்டுக்கள்!//
பதிலளிநீக்குஅழகா இருக்குதுங்க உங்கள் ரசனையும் சித்ரா. நன்றி
கண்ணேறு படப்போகிறது.உன் தாயையோ தாரத்தையோ கொண்டு அந்த விரல்களை முத்தி எடுக்கச்சொல் மகனே !---காஸ்யபன்.
பதிலளிநீக்குஒவ்வொரு வரியையும் ரசித்த உங்களை எனக்கு வணங்கத் தோன்றுகிறது ஜீவி.
பதிலளிநீக்குநீங்களெல்லாம் என் வலைக்கு வர மாட்டீர்களா என நான் ஏங்கியிருக்கிறேன்.
உங்கள் பின்னூட்டம் வெறும் பாராட்டாய் இல்லாமல் என் உள்ளம் தொட்ட உணர்வாய் இருக்கிறது.
நன்றி நன்றி ஜீவி.
உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் காஷ்யபன் அய்யா.
பதிலளிநீக்குஎன் தந்தையை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் உங்களை நன்றியுடன் வணங்குகிறேன் அய்யா.
//மாதர் விழியும் மயக்கும் அன்னார்க்
பதிலளிநீக்குகாதல் மொழியும் மனதைச் சுண்டிப்
பார்க்கும் நடையும் புலமை இல்லா
யார்க்கும் கவிதை எழுதத் தோன்றும்.//
எங்களுக்கு ஒரு நவீன கண்ணதாசன் கிடைத்துவிட்டார்
சுந்தர்ஜீ சொன்னது.
பதிலளிநீக்கு\\மொழி சிலரின் கையில் சிறைப்படுகிறது. சிலர் மொழியை சிறைப்படுத்துகிறார்கள்.
சிவகுமாரன் நீங்கள் முதலாம் ரகத்து ஆசாமி.முதல் தர ஆசாமி.///
நன்றி அண்ணா.
என் கவிதைகளில் மொழிவளம் இருக்கும் அளவுக்கு, தங்கள் படைப்புகளில் இருப்பது போல் கருத்து வளம் இல்லையோ என்ற ஏக்கம் எனக்குள் உண்டு .
உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது சுந்தர்ஜீ அண்ணா
அருமையான கவிதை. இயற்கை இத்தனை போதை தருவதாக இருக்க, கணிணியைப் பார்த்துக் கொண்டிருப்பானே என்று கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு ஜன்னல் வழியே வானத்தையும் மரங்களையும் ரசித்தேன்
பதிலளிநீக்குதிருநா..பழனிச்சாமி சொன்னது.
பதிலளிநீக்குகவிஞனின் பார்வையில் படுவதெல்லாம் பாடல் 'பேறு' அடைவது அழகு
உங்களைப் போன்றோரின் ஆதரவு என் பேறு.
நன்றி ஜெ.ஜெ
பதிலளிநீக்குநன்றி ஆயிஷா
உங்கள் தொடர் வருகைக்கு நன்றி ஆனந்தி.
GMB சொன்னது
பதிலளிநீக்கு\\சிவகுமாரன் கவிதை ரசிப்பதற்கும் இல்லை எல்லை. நீடூழி வாழ்க நீ.//
நன்றி GMB சார்.
ஒவ்வொரு முறை வரும்போதும் நீங்கள் வாழ்துக்குவியலோடுதான் வருகிறீர்கள்.
நான் பாட்டுக்கு 100 வயதுக்கு மேல் வாழ்ந்து விடப் போகிறேனோ என்று பயமாயிருக்கிறது.
Arumai nanba !
பதிலளிநீக்குகா. வீரா சொன்னது
பதிலளிநீக்கு\\எங்களுக்கு ஒரு நவீன கண்ணதாசன் கிடைத்துவிட்டார்//
இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்றது.
அவர் எழுதியதில் நூறில் ஒரு பங்கு நான் எழுதினாலே போதும்.
உங்கள் நம்பிக்கைக்கு நன்றிங்க
விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் ரசித்த அனைத்தையும் தங்களின் கவிதை வரிகளில் கண்டேன்!
பதிலளிநீக்குகண்களை மூடி... ஒரு நிமிடம்.... என் மனம் ஆனந்த கூத்தாடியது!
நன்றி!நன்றி!நன்றி!
எல்லாம் நல்லா இருக்கு சிவகுமாரன்..:)
பதிலளிநீக்குகீதா சந்தானம் சொன்னது.
பதிலளிநீக்கு\\இயற்கை இத்தனை போதை தருவதாக இருக்க, கணிணியைப் பார்த்துக் கொண்டிருப்பானே என்று கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு ஜன்னல் வழியே வானத்தையும் மரங்களையும் ரசித்தேன்///
ஆகா. என் கவிதைக்கு கிடைத்த வெற்றி இது.
இயற்கையை ரசிக்கும் எவரும், அதனை நேசிக்கத் தொடங்குவார்கள்.
நேசிக்கும் எவரும் அதனை அழிக்கத் துணிய மாட்டார்கள்.Global warming என்னும் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கான தீர்வு ஒரு சிறிய ரசிப்பில், நேசிப்பில் அடங்கி இருக்கிறது என்கிறேன் நான். என்ன சொல்கிறீர்கள் மேடம்.?
தென்றல் கூறியது
பதிலளிநீக்கு\\கண்களை மூடி... ஒரு நிமிடம்.... என் மனம் ஆனந்த கூத்தாடியது///
ரசனையின் உச்சக்கட்டம் இது.
மிக்க நன்றிங்க.
நன்றி கனாக்காதலன்
பதிலளிநீக்குநன்றி தேனம்மை மேடம்
அகவல் பாட்டில் ஆயிரம் தகவல்.
பதிலளிநீக்குகள்ளா போதை கவியே போதை.
'கரைக்கு மடல்' மிகவும் ரசித்தேன். உங்கள் கவிதை உண்ட மயக்கத்தின் குட்டி உறக்கம் போல் சுகமான் போதை என்றால், வசந்தா நடேசனின் பின்னூட்டமும் உங்கள் 'சரக்கடிச்சுட்டுப் போனவங்க' பின்னூட்டமும் நாகேஷ் காமெடியின் இதமான போதை.
பதிலளிநீக்குஉன்க்க கவித ரெம்ம்ப கிக்க்...
பதிலளிநீக்குபோதெ இனும் தெலியல :-)
பாரதிதாசன் கவிதை ஒன்று படித்தால்தான் இந்த போதை தீரும்.
//ஆவின் கன்று அடிக்கும் லூட்டியும்//
பதிலளிநீக்குலூட்டி-க்கு பதில் வேறு அழகான தமிழ்வார்த்தை இட்டிருக்கலாம்.
பாரதிதாசனின் அழகின்சிரிப்பினைத் தழுவிய இன்பம்!
நன்றி!
//சன்னல் ஓரம் கிடைத்த சீட்டும்
பதிலளிநீக்குஓடும் ரயிலோ டோடும் மரமும்//
அருமை. இவைகள் நானும் மிகவும் ரசிப்பது. ஒரு மொட்டை செடியின் தலையாட்டலை கூட ரசிப்பவள் நான்.
அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
போதைப் பொருள் கவிதையே தமிழ் போதையாக இருக்கிறது...
பதிலளிநீக்குதமிழுக்கும் பயிற்சியாய் ,மூச்சுக்கும் பயிற்சியாய் அடிக்கடி படிக்க வைக்கும் அழகு கவிதை...
இப்படியெல்லாம் கவிதை எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்துடன்
பதிலளிநீக்கு'நமது சிவகுமாரன்' எழுதியிருக்கிறார் என்ற பெருமையுடன் மகிழ்கிறேன் சிவா
இயற்கையின் அழகில் இதயம் தொலைத்த
பதிலளிநீக்குஉணர்வுகளின் அருமைப் பதிவு!
போதைப்பொருட்களுக்குப் புது அர்த்தம்
உங்கள் எழுதுகோலின் சிந்தனை
இதயத்தில் நிறைகிறது!
நண்பா தலைக்கு ஏறிடுச்சி இருங்க ஒரு லெமன் ஜூஸ் குடிச்சிட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குமனதின் கவலைகள் மறக்கச் செய்து
பதிலளிநீக்குகனவின் உலகில் காலந் தோறும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்.
kavitahikkup poy azku. ugkal kavithiyaa romba romba azaku!
ஆஹா அருமையான நடை தமிழ் துள்ளி விளையாடுகிறது உம்மிடத்தில் நண்பரே
பதிலளிநீக்குஆஹா அருமையான நடை தமிழ் துள்ளி விளையாடுகிறது உம்மிடத்தில் நண்பரே
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒரு மின்னஞ்சல் உங்கள் பெட்டியில்.பதிலுக்காக.
பதிலளிநீக்குவார்த்தை நடையும் வர்ணிக்கும் திறனும்
பதிலளிநீக்குஊற்றுக்கண்ணாய் பொங்கி வழியுது
பாடல் முழுதும் போதை கலந்து
படிப்போர் மனதை மயங்கச் செய்யுது!
வாழ்த்துக்கள்.
நன்றி சுந்தர்ஜி அண்ணா
பதிலளிநீக்குபதிலும் சம்மதமும் உங்கள் பெட்டியில்.
அற்புதம் நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தமிழுடன்
திகழ்
கவிஞ்சனின் கவிதை அழகாய் ..எழில் சொல்லி நிற்கிறது .போதை தரும் கவிதை ........கதை ..மனதுக்கு விதை ....பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஆஹா..அருமை! எப்படி இதை நான் படிக்காமல் விட்டேன்?
பதிலளிநீக்குவாவ்... என்ன ஒரு கவிதை...!!
பதிலளிநீக்குஎழுதிய கவியில்
எத்தனை போதை பொருள்கள்...
எல்லாம் இயற்றிய
உங்கள் எழிலான கவி நடை..
எப்போதும் தப்பாமல்
எனை ஆச்சர்யப்பட வைக்கிறது.
ஒரு ஒரு வரியிலும்..
ரசித்து நினைத்து பார்த்தேன்..
ரொம்ப நன்றிங்க.. நல்லதொரு கவி பகிர்வுக்கு..!!! :-)))
//மனதின் கவலைகள் மறக்கச் செய்து
பதிலளிநீக்குகனவின் உலகில் காலந் தோறும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்//
கவிதை வடிவம் அற்புதம் நண்பரே
வாழ்த்துக்கள்.....
தொடர்ந்து கலக்குங்க.....
Very nice...
பதிலளிநீக்குதாகம் தீர்க்கும் தமிழ்-கள் நிரப்பி
பதிலளிநீக்குமோகன் அண்ணா மொந்தை நீட்ட
உள்ளம் மயங்க உறிஞ்சிக் குடித்தேன்
கள்ளா போதை ? கவியே போதை.
எப்போது மெந்தன் எழுத்தை ரசிக்கும்
பதிலளிநீக்குஅப்பாத் துரையென் சரக்கை அடித்து
உண்டு மயங்கி உறங்கிக் கிடக்க
கண்டு மகிழ்ந்தேன் கைதட்டி ரசித்து.
இளமுரு காவுனக் கேறிய போதை
பதிலளிநீக்குதெளிந் ததா தம்பி தீந்தமிழ் படித்து?
கனியிடை சுளையும் கழையிடை சாறும்
பனிமலர் தேனும் பருகினாய் தானே ?
மூச்சுப் பயிற்சிக் கென்கவி என்ற-உம்
பதிலளிநீக்குபேச்சை ரசித்தேன் ரசிக மணியாரே.
அண்ணாமலையாருக்கு வணக்கம்.
பதிலளிநீக்குஎன் எண்ணம் நிறைந்தோனின் இனிய நாமம் உமக்கு. லூட்டிக்குப் பதிலாய்
"ஆவின் கன்றின் அழகுத் துள்ளலும்"
என்று எழ்தியிருக்கலாம் தான்.
ஆனாலும் பிறந்த சில வினாடிகளில் துள்ளிக் குதித்து ஓடும் அந்தக் காட்சிக்கு லூட்டி தான் சரியாகப் படுகிறது எனக்கு.
சன்னல் ஓரம் கிடைத்த சீட்டும் என்பதற்கு பதிலாய்
சன்னல் ஓரம் கிடைத்த இடமும்
என்றிருக்கலாம் தான்.
எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தி நான் என்ன வரிவிலக்கா கேட்கப் போகிறேன்?
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி மீனாட்சி மேடம். அடிக்கடி வாருங்கள். முன்பு ஒரு அருமையான ஒரு கவிதைக்கு நீங்களும் தூண்டுகோலா னீர்கள். மறவேன் நான் மீனாட்சியை.
பதிலளிநீக்குமகிழ்ச்சயாய் இருக்கிறது வேல்கண்ணன். உங்கள் கவிதையால் நானும் என் கவிதைகளால் நீங்களும் பெருமைப்பட்டுக் கொள்வது.
பதிலளிநீக்குஅகவல் நடையில் வாழ்த்து சொல்லி
பதிலளிநீக்குஅகத்தில் நிறைந்த சங்கர்ஜி! நன்றி
நன்றி பச்சை பாலன்
பதிலளிநீக்குநன்றி ராஜவம்சம்
நன்றி ஜி. வேலு
நன்றி ராஜேஸ்வரி
நன்றி திகழ்
நன்றி நிலாமதி
நன்றி RRR
நன்றி ஆனந்தி
நன்றி மாணவன்
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றோ இளம் தூயவன்.
வணக்கம் சகோதரா,
பதிலளிநீக்குமீண்டும் ஒரு மரபுத் தமிழை கண்டதாய் பெருமிதம்.
மரபுக் கவிதை என்னும் பழைய கிழவியின் மீது இன்னும் இன்னும் காதலுடன் இருக்கிறீர்கள் என்பதையிட்ட மகிழ்ச்சி.
மரபில் உதித்த கவிதை கண்டேன்
இரவல் சொத்து மரபு என்றே
அரவம் போல அலட்டும் மனிதர்
குரலை ஒடுக்க(ப்) பிறந்த கவிதை
இனிய மரபில் இதமாய் சொற்கள்
கனிவாய் அகவல் யாப்பில் கலந்து
பணிவாய் தமிழை செருகி எம்முள்
நினைவால் மரபை நினைக்க வைத்தீர்!
நல்ல தோர் முயற்சி, உங்களைப் போன்ற மரபுக் கவிதைக் காதலர்களால் இன்றும் தமிழிலக்கணம், யாப்பிலக்கணம் அழியாது வாழ்வது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
கவிதை போதையெனும் தலைப் போடு மரபின் பெருமையினை மறைமுகமாகச் சுட்டுகிறது.
நிரூபன் மரபின் காதலர் என்று
பதிலளிநீக்குநிருபணம் செய்தார். நன்றி நன்றி
வாழ்த்துக் கவிதை அகவலில் தந்து
ஆழ்த்தினீர் என்னை மகிழ்ச்சியில் அய்யா.
மன்னிக்கவும் சிவா, போதையை தவறவிட்டுவிட்டேன், மொழியின் சரளத்துக்கும் வளமைக்கும் ஒரு சல்யூட்
பதிலளிநீக்கு"மனதின் கவலைகள் மறக்கச் செய்து
பதிலளிநீக்குகனவின் உலகில் காலந் தோறும்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்."
அருமையான பதிவு...
ஆம் இயற்கையே பெரும் போதைதான் இரசிக்கத் தெரிந்தால்!
பதிலளிநீக்குசுற்றி உள்ள யாவற்றையும் போதையோடு ரசிப்பதற்கு ஒரு மனம் வேண்டும். அது கவிதையாக உங்களுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//அன்னார்க்
பதிலளிநீக்குகாதல் மொழியும் //
சரியான பதமா ??? சொக்க வைக்குதுங்க உங்க போதைக் கவிதை
/ஆற்றங் கரையில் ஆடும் படகும்
பதிலளிநீக்குகாற்றுக் கடங்கி ஓடும் நீரும்/
இங்கு 'காற்று'?
கவிதை, பலப்பல
பார்த்தும் ரசிக்காத
பார்த்தும் பார்க்காத
சிறு துளி தொட்டு
பெரு வெள்ளம் வரை
கவிதையை உளியால்
இழைத்து விட்டீர்கள்.
உங்கள் கண்கள்
திரட்சைகளையை மதுவாய்,
மலர்களை திரவியமாய்,
கடலலையை எழுத்தாய்
மாற்றிவிடுகிறது, சிவகுமாரன்.
முக்கியமாய், எல்லோருக்கும்
புரிகிற எழுத்தில் இருக்கிறது கவிதை.
உன் கவிதையை விட பின்னுட்டத்தில்
பதிலளிநீக்குஉள்ள பாராட்டுக்கள் எனக்கு கர்வத்தையும் போதையையும் தருகிறது.
இதய பூர்வமான வாழ்த்துகள்.
அன்பு சிவா! உன் கவிதைக்கு சற்றும் சளைத்ததல்ல வலையன்பர்களின் பின்னூட்டங்கள் .. யாரை வாழ்த்துவது? அவர்களையா?உன்னையா?தமிழையா?
பதிலளிநீக்குஆனந்தம்!ஆனந்தம்!
படிக்கும் ஒவ்வொரு வரியிலிருக்கும்
பதிலளிநீக்குபொருளின் தன்மையை விளக்கும்
தனித்தனியான வார்த்தையே
போதையூட்டுதே!
-கலையன்பன்
(இது பாடல் பற்றிய தேடல்)
அன்பரே, இந்தக் கவிதையை
பதிலளிநீக்குஒவ்வொரு நான்கு நான்கு
வரிகளாய் பத்தி பிரித்து
போட்டால், படிக்க இலகுவாய்
இருக்குமே!
-கலையன்பன்
(இது பாடல் பற்றிய தேடல்)
ஆனாலும் கொஞ்சம் அதிகம்தான்
பதிலளிநீக்குகோநா உங்களின் மன்னிப்பு.
போதை தவறினால் என்ன
பாதையை விட வில்லையே.
நன்றி
நன்றி தோழி பிரஷா
பதிலளிநீக்குநன்றி எஸ்.கே.
நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குஇந்த மனம் விசாலமடைவ்தற்கு உங்களைப் போன்றோரின் ரசனையும் காரணமன்றோ
நன்றி எல்.கே.
பதிலளிநீக்குஅன்னார் என்ற சொல் அவரின் என்ற பொருளில் நம் இலக்கியங்களில் பல இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் தற்காலத்தில் "அன்னாரின் இறுதி ஊர்வலம்" என்று விளம்பரம் செய்யும் போது மட்டுமே உபயோகப்படுகிறது. உங்களுக்கு நெருடலாகத் தோன்றுகிறதோ? மாற்றிவிடலாம் நண்பரே.
வருகைக்குக்ம் கருத்துக்கும் நன்றி.
ரசித்து மகிழ்ந்து ராமனை வாழ்த்திய
பதிலளிநீக்குவசிட்டரின் வாழ்த்தாய் வாசனின் வாழ்த்து.
\\காற்றுக் கடங்கி ஓடும் நீரும்//
ஏதேனும் பொருட் குற்றமா நண்பரே.
எப்படி மோகன் அண்ணா.? என் அண்ணன் (சிவமணி) வாழ்த்தியதும் வந்துவிட்டீர்கள் உடனே.?
பதிலளிநீக்குPossessiveness?
\\யாரை வாழ்த்துவது? அவர்களையா?உன்னையா?தமிழையா?//
தமிழைத்தான் அண்ணா,. அவர்களையும் உங்களையும் என்னையும் இணைத்தது தமிழ் தானே. .. .
நன்றி கலையன்பன்.
பதிலளிநீக்குபத்தி பிரிக்கச் சொல்லி ஏற்கெனவே ராஜி அவர்கள் கேட்டார்கள். இடையில் பிரித்தேன் . மறுபடியும் மாற்றினேன்
(அகவல் இப்படிதான் தொடர்ச்சியாய் இருக்கும் ). எனக்கு இந்த அமைப்புத் தான் பிடித்திருந்தது.
உங்களின் வசதிக்காக மாற்றி விட்டேன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ivolo nala pothi adami agathavan nu ninechen... thvidupodi akkivittirilkal....
பதிலளிநீக்குSuperb ..
நன்றி தங்க்லீஷ் பையா
பதிலளிநீக்குஅருமை அருமை அருமை .
பதிலளிநீக்குஅடேங்கப்பா.... எவ்வளவு மொழிவளமை உங்கள் கவிதையில்.
இப்படி ஒரு கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு?
சிவாவின் கவிதை தினமும் படிக்க
அவா மிகக் கொண்டேன். அய்யோ
மேலும்
சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
எல்லாம் உம்மிடம் இருக்கும் போது.
நன்றி புண்ணியா ( புண்ணிய மூர்த்தி..தானே நலமா?)
பதிலளிநீக்கு\\இப்படி ஒரு கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு?///
வேறெங்கிருந்து ?
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ?"
என்ற பாரதியின் வரியிலிருந்து தான்.
சித் அசித் என்றெல்லாம் பாரதி சொல்லியிருப்பார்.
அப்பாத்துரை தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
எனக்கு அந்த முதல் வரி பிடித்து இருந்தது.
இத்தனை போதைகள் .தலைய சுத்துது. எங்கேந்து இவள்ளவு collection ? சூப்பர், அருமை .
பதிலளிநீக்குஇத்தனை அழகை எப்படி விட்டேன் இத்தனை நாளாய் என்று சோகிக்க வைக்கிறது உங்கள் கவிதை. கூடவே உங்களையும் படிக்காமல் விட்ட வருத்தம். பாராக்களுக்கு நடுவே கொஞ்சமே மூச்சு விட்டு விட்டுப் படித்தேன். உங்கள் ஒரு போதை. பின்னூட்டாங்கள் மேலும் அருமை,.
பதிலளிநீக்குநிலாமகள் தோழி உங்கள் கவிதையை நினைவூட்டி எழுதிய வழி இந்த கவிதைக்கு வந்தேன். ஆச்சர்யம், ஒரே கருவை இருவரும் அவரவர் பாணியில் எழுதியிருக்கிறோம். உங்களின் கவிதையின் விரிவான அடுக்குகள் அவ்வளவும் அழகு.
பதிலளிநீக்குஅண்ணா,
பதிலளிநீக்கு“கவி கண்காட்டும்“ என்பார்கள்.
உங்கள் கண்களுக்கு நோக்குமிடமெல்லாம் அவளே தட்டுப்படுகிறாள்!
எத்தனை விதமான ரூபங்கள்?
பாவனைகள்?
அழகின் சிரிப்பிலே பாரதிதாசன் சொல்வானே அண்ணா..
“காலையிளம் பரிதியிலே
அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த 'அழகெ'ன்பாள் கவிதை தந்தாள்.
சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.“
எதுவோ அண்ணா,
நிச்சயமாய்த் தங்களின் நல்லழகுக் கவிதை வசப்பட்டவருக்குத் துன்பங்கள் இல்லை.
நன்றி!
மிக்க நன்றி விஜு. பல வருடங்களுக்குப் பிறகு பாவேந்தரின் இந்தக் கவிதையைப் படித்து இன்புற்றேன்.வாசித்துவிட்டு வெறுமனே சென்று விடாமல் ஒரு புத்துணர்ச்சி தரும் கவியையும் படிக்க வைத்ததற்கு மீண்டும் நன்றி விஜூ
பதிலளிநீக்கு