மரபின் வேர்களில்
கட்டப்பட்டிருக்கிறேன்
கால்களில் பிணைத்த
கவிதைச் சங்கிலிகளோடும்
காலங்களைக் கடந்து நிற்கும்
விடைகளே இல்லா
கேள்விகளோடும்.
இறங்கும் விழுதுகளை
எட்டிப் பிடிக்க
விரல்கள் விரும்பினாலும்
விடுவதில்லை வேர்கள்.
கிளைகளில் தங்கிச் செல்லும்
கிளிகள்
முட்டிச் செல்லும்
மேகங்கள்
அறிந்து கொள்வதில்லை
என் ரகசியங்களை.
உதிர்ந்த சருகுகள்
கிளியின் எச்சங்கள்
சலசலக்கச் செய்வதில்லை
என் சங்கிலிகளை.
வேர்களுக்கிடையே
ஊர்ந்து செல்லும்
சிற்றெரும்புகளால்
செல்லரித்துப் போவதில்லை
என் சங்கிலிப் பிணைப்புகள்.
விழுதுகள் ஓர்நாள்
வேர்களாகும்
புதிது புதிதாய்
விழுதுகள் புறப்படும்
இன்னும் பலமாய்
இறுகிப் போகும்
வேர்களோடு
சங்கிலிப் பிணைப்புகள்.
அறுத்துக் கொள்ளச் சொல்லி
வேர்களே சொன்னாலும்
விடுவாதயில்லை
நான்
விரும்பிக் கட்டிக் கொண்ட
சங்கிலிகளை.
-சிவகுமாரன்
Good One Friend. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்களுடைய கவிதைகள் தான் எங்களைக் கட்டிப் போடுகின்றன.கட்டுண்டு இருப்பவர்கள் நாங்கள்தாம்!
பதிலளிநீக்குஅழகான படைப்பு.
அன்பு சிவகுமாரா, விடைகள் இல்லா கேள்விகள் என்று ஏன் எண்ண வேண்டும்.?விடைகள் தேட முயலலாம்.வெற்றி தோல்வி சிந்தனை வேண்டாம்.தேடல் அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவம்பக்குவத்தைக் கொடுக்கும். பக்குவம் மன நிறைவைக் கொடுக்கும். விரும்பிக் கட்டிக்கொள்ளும் சங்கிலிகள் சுமையாக எண்ணப்படாதவரைகட்டும் பிணைப்பும் பிரியாது இருக்கும்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதைச்சங்கிலிகள் தளையென்று கொள்ளேன்.. தமிழன்னைப் பூட்டிய சிலம்புகள் அன்றோ அவை..
பதிலளிநீக்குகண்முன்னே விழுதிறங்கும் காட்சி விரிகின்றது..
வேராகும் விழுதுகள்
வேறாகும் வாழ்க்கை
பிணைக்கும் சங்கிலியோ
இணைக்கும் யாதும்
விடையில்லாக் கேள்விகள்
தடையில்லைத் தேட....
நன்று சிவா!
அழகிய வரிகளின் அணிவகுப்பு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
சொல்லாடல் சிறப்பு. பொருள் எல்லாம் ஒன்றே என்று தோன்றுகிறதே?
பதிலளிநீக்குதாங்கிகொண்டிருக்கும் வேர்கள் பிணைந்து கொள்ள வரும் பொழுது ஏற்படும் சிக்கலை கவிதை சங்கிலியால் எங்களை கட்டி விட்டீர்கள் ...
பதிலளிநீக்குஉங்கள் கவிதை சங்கிலி அருமை சிவகுமாரன்
பதிலளிநீக்குநண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்
உங்களின் கவிதைச் சங்கிலியில் மேலும் பல வளையங்கள் மாட்டிக்கொள்ளட்டும். எழிலன்
பதிலளிநீக்கு// விழுதுகள் ஓர்நாள்
பதிலளிநீக்குவேர்களாகும்
புதிது புதிதாய்
விழுதுகள் புறப்படும்//
அன்புக் குமர! அருமையான
வரிகள்.
மரபின் வழிவரும் கவிதை
எப்படி வரும் என்பதற்கு எடுத்துக்
காட்டே என்று கருதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
மிக அருமையான வரிகள்...
பதிலளிநீக்குபுரிந்துக்கொண்டு அவரவர் எண்ணப்படி சொல்லிவிடலாம் கருத்துகளை....
இஷ்டப்பட்டு பிணைத்துக்கொண்டபின் அங்கே அன்பு மட்டுமே நிலைத்து இருப்பதுண்டு...
எச்சங்களில் விதை கலந்து மரமாகி இருப்பதால் எதிர்ப்பார்ப்புகள் மரங்கள் வைப்பதில்லை எதனிடமும்.. ஆனால் தரமுடிந்தவை எல்லாம் இஷ்டத்துடனே தருகிறது... இறுதியில் வெட்டுப்பட்டாலும் மரணத்தை கூட மகிழ்வுடனே ஏற்றுக்கொள்கிறது....
இப்படிப்பட்ட வேர்களில் இணைந்து எப்போதும் பிணைத்துக்கொள்வதே சிறந்தது... யாரறிவார் காலத்தின் போக்கை? காலமாற்றம் மரங்களை மரணிக்கமட்டுமே வைக்கும்... ஆனால் வந்து தங்கும் கிளிகள் தன் தேவைகள் முடிந்ததும் பறந்துவிட்டாலும் மரத்துக்கோ அதன் மேல் பகையில்லை....
சிந்திக்கவைத்த சிறப்பான வரிகள் கொண்ட கவிதை சிவகுமார்.. அன்பு வாழ்த்துகள்....
''...கிளைகளில் தங்கிச் செல்லும்
பதிலளிநீக்குகிளிகள்
முட்டிச் செல்லும்
மேகங்கள்
அறிந்து கொள்வதில்லை
என் ரகசியங்களை..''
இது மட்டுமல்ல எல்லா வரிகளும் மிக சிறப்பாக உள்ளது என்பது எனது கருத்து. மேலும் தொடர இறை ஆசி கிட்டட்டும்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
இறங்கும் விழுதுகளை
பதிலளிநீக்குஎட்டிப் பிடிக்க
விரல்கள் விரும்பினாலும்
விடுவதில்லை வேர்கள்.//
முழுக்கவிதையுமே மனம் கவர்கிறது; சிந்தனை கிளர்த்துகிறது சிவா. வாழ்த்துகள்...
மரபின் பிணைப்பில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளால் உண்டாக்கும்
பதிலளிநீக்குரணங்களின் வலியும் போய்விடுகிறது... அது பழகியும் போய்விடுகிறது..
எதேதோ யோசிக்க வைக்கின்றது வரிகள்....
நட்பின் தின வாழ்த்துக்கள் நண்பரே
கால்களில் பிணைத்த
பதிலளிநீக்குகவிதைச் சங்கிலிகளோடும்
காலங்களைக் கடந்து நிற்கும்
விடைகளே இல்லா
கேள்விகளோடும். //மனம் கவர்கிறது
உயிர்ப்பான வரிகளை கொண்டு இனிமை ததும்பும் அழகிய கவிதை..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நம் மரபின் வேர்கள் சிற்றெறும்புகளால் செல்லரித்துப் போவது இல்லை..
பதிலளிநீக்குசத்திய வாக்கு...
நீண்ட நாட்கள் கழித்து வந்தால் மனம் நிறை விருந்து இக்கவிதை.. வாழ்த்துகள் சிவா..
சங்கிலிப் பிணைப்புகளிலும் சுகம் உண்டு; நாமாகப் பூட்டிக் கொண்ட எந்தப் பிணைப்பிலும் வெளிக்கு சில வேதனைகள் இருப்பினும், உள்ளார்ந்த உணர்வுகளில் அந்த வேதனைகளை மறக்கச் செய்யும், மருந்தாக மாறும் இரசவாத ஆற்றல் அவற்றிற்கு உண்டு.
பதிலளிநீக்குமரத்தின் வேர் கேள்விப் பட்டிருக்கிறோம். 'மரபின் வேர்' என்று புதுமையாகத் தொடக்கம் கொண்டிருக்கும் கவிதை உறவுகளு க்கும் இலக்கணம் சொல்கிற மாதிரி அற்புதமாக அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
\\மரத்தின் வேர் கேள்விப் பட்டிருக்கிறோம். 'மரபின் வேர்' என்று புதுமையாகத் தொடக்கம் கொண்டிருக்கும் கவிதை உறவுகளு க்கும் இலக்கணம் சொல்கிற மாதிரி அற்புதமாக அமைந்திருக்கிறது. //
பதிலளிநீக்கு-- இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. இந்தக் கவிதை தங்களுக்குள் இன்னொரு கவிதையைகிளரச் செய்திருக்கிறது.
மிக்க நன்றி ஜீவி சார்.
வாங்க ஆதிரா மேடம். எவ்வளவு நாளாச்சு. மிக்க நன்றி மேடம்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் , தென்றல், GMB சார், மோகன் அண்ணா, அப்பாஜி, ஆமினா, ரசிகமணி, சரவணன் , நாகா, எழிலன், புலவர் அய்யா, மஞ்சுபாஷினி, கவிதை, நிலாமகள் , ஷீ-நிஷி, மாலதி,& அரசன்,
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி
உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/