சனி, பிப்ரவரி 25, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 4


எழுதிக் குவித்துநான்
  என்னபயன் கண்டேன்?
தொழுதுன்னைக் கேட்கிறேன்
  தோழா - அழுதழுது
பாடையில்   போகையில்
  பாழுங் கவிதைகளை
கூடவே போட்டுக்
  கொளுத்து.


கொளுத்தியது போக
   குறையேதும் உண்டேல்
களைத்து விடாதே
   கலங்கி - முளைக்கும்
விதையாகும் முன்னரே
   வெட்டிக் குழிக்குள் 
புதைத்துவிட்டு நிம்மதியாய்ப்
    போ.

(புதுச்சேரி -1994  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் - என் கவிதைகளை கேலி பேசிய நண்பனிடம் மனம் வெறுத்துப் போய் சொன்னது. )

16 கருத்துகள்:

  1. ஹா! 1994 ஏப்ரலின் பாண்டிச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட குதூகலத்தில் நானும் நீங்களும் முகம் அறியாமல் ஒன்றாய்..

    விருந்து சமைக்கும் நளபாக சமையல்காரர் விருந்துக்குப் பின் சமையல்நெடி வயிற்றைப் பிரட்ட ஒரு மூலையில் மோர் சாதம் சாப்பிடும் காட்சிதான் உங்கள் கவிதை சிவா!

    பதிலளிநீக்கு
  2. என்ன விரக்தியான வரிகள். கவிதை நல்லாவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. இது அறிவு ஜீவிகளுக்கே உள்ள சாபக் கேடு என்று நினைக்கிறேன். எதையோ நினைத்து எதையோ பறி கொடுத்தது போல் எழுதுவதும் நடந்து கொள்வதும். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதும் பொருத்தமாய்த் தோன்றுகிறதாம்.! உன் எண்ணங்களைக் கடத்த நீ எழுதுகிறாய்.பிறருக்காக என்று ஏன் எண்ணுகிறாய்.தவறான நினைப்புகளுக்கு வித்திடாதேயாருடைய பேச்சும் உரமாக வேண்டாம். வாழ்க.!வளர்க.! வெல்க. !

    பதிலளிநீக்கு
  4. க‌விதையை
    வெறும் எழுத்தாய் அறியும் ந‌ண்ப‌னின்
    வார்த்தைக‌ளின் க‌ன‌ப‌ரிமாண‌ங்க‌ள்
    எழுத்தையே, க‌விதையாய் காணும்
    ர‌ச‌வாத‌ம் க‌ற்ற‌ நீங்க‌ள் உண‌ர்த‌‌ல் நன்று.
    (விர‌க்கியும் ஒரு க‌விதையையாய் வ‌டிந்தில்
    ஒரு மீட்சிதான்.)

    பதிலளிநீக்கு
  5. ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

    விரக்தி விட்டு ஆக்கபூர்வ சிந்தனை வளர்க்க வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. விரக்தி எதற்கு நண்பரே....

    உங்கள் கவிதைகள் உங்கள் பலம்.... தொடர்ந்து எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு
  7. என்ன மாதிரி வார்த்தைகள் சொல்லிவிட்டீர்கள்!இனி இப்படி ஒரு விரக்தி வேடிக்கையாகக் கூட வேண்டாம். உங்கள் கவிதைகளில் உள்ள உயிர்ப்பு என்னைப் போன்றோரை எவ்வளவு மகிழ்விக்கிறது தெரியுமா?!பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன்...எல்லோறும் சேர்ந்த கலவைதானே தாங்கள்....கவிதை பொங்கட்டும்; கருத்து பரிமாற்றம் நிகழட்டும்.
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. எந்த காலத்திலும் யார் என்ன சொன்னாலும் விரக்தி உங்களோடு போகட்டும்,உங்கள் கவித்திறன் தடைப்படுவதும்,கோவிலை தரைமட்டமாக்குவதும் ஒன்றாகவே பொருள்படும்.

    பதிலளிநீக்கு
  9. கடுகு வெடிப்பது போல் ஒரு கவிதை. நன்று.

    பதிலளிநீக்கு
  10. நம் எழுத்துக்கள் படிப்பவர்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமென்று நினைப்பது தவறு. உங்கள் நண்பர் கேலி ்செய்தால் அது அவருடைய தனிப்பட்ட விமர்சனம். உங்கள் எழுத்துக்களை பாராட்டிய பலருக்குத்தான் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமே அல்லாது விரக்தி கொள்வது கவிஞர்களுக்கு அழகல்ல....
    பாராட்டு மற்றும் இகழ்ச்சி இரண்டையும் சமநிலையுடன் ஏற்க்கும் மனம் வளர்க்கவேண்டும் நண்பரே.

    உங்கள் கவிகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து கலக்குங்கள் . வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு சிவகுமார்.அவங்க அவங்க ரசனை வேற.அவ்ளோதான் !

    பதிலளிநீக்கு
  12. சிவா..உங்கள் கவிதை ஆயுதம் கொண்டு உலகையே வெல்லலாம்..எதற்கு எதிர்மறை எண்ணங்கள்.. மீண்டும் காதல் வெண்பா தீட்டி உற்சாகத்தை பரப்புங்கள்...

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் நன்றி.

    உரிமையுடன் கோபித்துக் கொண்ட எல்லோருக்கும் நான் சொல்வது இது தான்.
    முதலில் இது பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. இப்போதும் பொருத்தமாய் இருப்பதாக சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
    இது என் டைரிக் குறிப்பு. உங்கள் டைரியில் மகிழ்ச்சியான தருணங்களைத் தான் எழுதுவீர்களா ? சோகம் கோபம் ஆதங்கம் விரக்தி எல்லாம் சேர்ந்தது தானே வாழ்க்கை.? கவிதை என் வாழ்க்கை. என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நான் கவிதைப் படுத்தியிருக்கிறேன் . அவை இலக்கியத் தரமானவையா என்பது முக்கியமல்ல.
    என் கவிதைகள் என் உணர்வுகள். அவ்வளவுதான். நான் தொழிற் முறைக் கவிஞனுமல்ல. நான் இப்போதெல்லாம் வலைப்பக்கம் அதிகம் வருவதில்லை. காரணம் நேரமும் வசதியும் இல்லை என்பது தானேயன்றி , நான் கவிதை எழுதுவதில்லை என்று பொருளில்லை.உண்ணுவதும் உடுப்பதும் போலத்தான் நான் கவிதை எழுதுவது. அவை எல்லாவற்றையும் என்னால் சந்தைப் படுத்துவதும் இயலாத செயல். வசதிப்படும் போதெலாம் வலைப்பக்கம் வருகிறேன்.(வலை என்று சரியாய்த் தான் பெயர் வைத்திருக்கிறார்கள். நன்றாக மாட்டிக் கொண்டேன். நானே நினைத்தாலும் மீண்டு வெளிவர முடியவில்லை. )

    பதிலளிநீக்கு
  14. இன்றைய காலத்தில் எழுத்தை சந்தை படுத்துவது உதவாத செயல்.(திரைஉலகம் தவிர்த்து)

    எண்ணத்தைப் பகிர்வது தான் எழுத்து என்றாலும் சும்மா முடிந்து விடுவதில்லை, இணையத்தில் கருத்துக்களைப் பகிர்வதும்.
    புரிகிறது.

    'காலமகள் கண் திறப்பாள்- சின்னையா" என்கிற கவியரசரின்
    பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்கிற கவியரசரின் முதல் பாட்டு வரிகளை சோர்வு தட்டும் பொழுதெல்லாம் நினைவில் கொண்டால் உற்சாக டானிக்காக இருக்கும்.

    யார் கண்ணில் பட்டாவது, எப்படியாவது தகுந்த வாய்ப்புகள் தங்களுக்கு கனிந்து வர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. நன்றி ஜீவி சார்.

    வாய்ப்புகள் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வலையில் பெரும்பாலும் என் பழைய கவிதைகளையே வெளியிடுகிறேன். அருட்கவியில் எழுதுபவை தான் இப்போது எழுதுபவை. என் கவிதைகளை எங்கள் ஊர் சிவாலயத்தில் பிரதோஷ வேளையில் பெண்கள் பாடுகிறார்கள். இதோ இப்போது,10 நாட்களுக்கு முன்னர் பழனி பாதயாத்திரையின் போது நான் எழுதிய பாடலை , எங்கள் ஊரிலிருந்து திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் நூற்றுக்கணக்கான அன்பர்கள் மனம் உருகி பாடிக் கொண்டு செல்கிறார்கள். இந்த வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தந்தானே. அது போதாதா ?.

    பதிலளிநீக்கு
  16. பதிலுக்கு நன்றி, சிவகுமாரன்!

    தங்கள் திருப்தி, அந்த இறைவனே உங்களுக்கு அளித்த பாக்கியம். சாதாரணமாக இந்த மாதிரி உயர்ந்த எண்ணங்கள் லேசில் கிட்டாது. தங்களுக்கு கிட்டியிருக்கிறது.

    தங்கள் பணி சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு