செவ்வாய், மே 01, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 6

              வாமனர்கள்
                வாமனர்கள்
             வாமனர்கள்
       வாமனர்கள்
 வாமனர்கள்






வீரியம் மிக்கதோர் வீரக் கவிதையால்
காரிருளை நாமே களைந்தெறிவோம் - சூரியனை
எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
தொட்டுவிடும் தூரத்தில் தான்.






நந்தமிழ் தன்னை நசுக்கும் கயவரை
நிந்தனை செய்வோம் நெருப்பாகி - செந்தமிழை
விற்போரின் கூட்டம் வெருண்டோடும் எங்களது
முற்போக்குக் கொள்கையின் முன்.

வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாடவந்த மாகவிகள் - சாணுடம்பு
வாமனர்கள் நாங்கள் வளரத் தொடங்கினால்
மாமலையும் எம்முன் மடு.

                                -சிவகுமாரன்



( 01.05.1998 புதுகை த,மு.எ.ச மாவட்ட மாநாட்டில் பாடப்பெற்ற கவிதை.)

23 கருத்துகள்:

  1. கவிஞனின் நாட்குறிப்பு அருமையிலும் அருமை!

    தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  2. சூரியனை
    எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
    தொட்டுவிடும் தூரத்தில் தான்.

    நம்பிக்கை விதைக்கும் அத்தனை வரிகளும் அருமை.. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. மானுடத்தைப் பாடவந்த மகாகவியா? ரசித்தேன்.
    ஓ.. 98ல் எழுதியதா?

    பதிலளிநீக்கு
  4. புதுகை என்றால் எந்த ஊர்?

    பதிலளிநீக்கு
  5. அருட்கவி சிவகுமாரனா? முரணாக உள்ளதே

    பதிலளிநீக்கு
  6. “மாமலையும் எம்முன் மடு“

    அழகான ஈற்றடி!!

    ஆமாம்... புதுகையா...? புதுவையா..? அல்லது பொதுகையா..?

    பதிலளிநீக்கு
  7. நன்றி கணேஷ்
    நன்றி ராஜேஸ்வரி மேடம்

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் அப்பாஜி.
    1998-பொதுவுடமைக் கட்சியில் என் கடைசிக் காலம் அது.
    புதுகை என்பது புதுக்கோட்டை. தற்போது இடைத்தேர்தல் நடக்கப் போகும் ஊர். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எல்லோர் கவனத்தையும் ஈர்க்கப் போகும் ஊர்.
    தற்போது அகால மரணமடைந்த முத்துக்குமரன் நான் பொதுவுடமைக் கட்சியில் இருந்த போது என்னோடு பழகியவர். என் சித்தப்பா சுந்தர பாரதியின் கவிதைகளுக்கு ரசிகர். இடைத்தேர்தலில் தனது கட்சிக்குரிய சீட்டைக் கேட்டுப் பெறக் கூட வாயற்று நின்ற எம் தலைவர்களின் பரிதாப நிலையைப் பார்த்திருப்பீர்கள். நான் விலகியதற்கு இதுவும் ஒரு காரணம்

    பதிலளிநீக்கு
  9. ராதேஷ் --1998 இல் நான் அருட்கவி அல்ல மருட்கவி

    பதிலளிநீக்கு
  10. நன்றி அருணா செல்வம்( பெயர் சரியா?)
    புதுக்கோட்டை தான் புதுகை. கட்டப்பொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து பின் காட்டிக் கொடுத்த தொண்டைமான் ஆண்ட ஊர். நான் பிறந்த மாவட்டம்.

    பதிலளிநீக்கு
  11. வெண்பா பாடுவதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லிக்கொடுங்கள் தோழரே...

    பதிலளிநீக்கு
  12. மலையை மடுவாக்கி வாமனரை வானோர்
    மலைக்கும் வியப்பே தமிழ்

    பதிலளிநீக்கு
  13. வாமனர்கள்....நாட்குறிப்பில் காதல் மீட்டும்போது இன்னும் சுகம் !

    பதிலளிநீக்கு
  14. மருட்கவியா? பொருட்கவி சொல்வோர் மருட்கவியா? போகட்டும், தெருட்கவியாக இருந்தவர் இருட்கவியானது ஏன்?

    பதிலளிநீக்கு
  15. இருட்கவியா ?
    எதனால் ?
    என்ன உள்ளர்த்தம் அப்பாஜி?

    பதிலளிநீக்கு
  16. நண்பர் விச்சு,
    நான் இலக்கணம் முறையாகக் கற்றவனல்லன். என் சித்தப்பா, புலவர் என்பதால் அந்த ஜீன் உபயத்தால் எனக்கு எழுத வருகிறது.
    அகரம் அமுதம் அவர்களின் இந்த வலை, வெண்பா கற்றுத் தருகிறது. சந்தேகங்களுக்கும் விளக்கம் தருகிறார்.
    http://venbaaeluthalaamvaanga.blogspot.in

    பதிலளிநீக்கு
  17. நன்றி மோ .சி.பாலன்
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  18. உள்ளர்த்தம் எதுவும் இல்லிங்க... ஒளியைப் புரிஞ்சுக்கிட்டவர் இப்ப இருளைப் பிடிச்சிட்டிருக்கீங்களோனு தோணிச்சு அதான். இருளும் ஒளியும் அவங்கவங்க பார்வை இல்லிங்களா? கண்ணைக் கூசும் ஒளியென்று நான் சொல்வதை அருகில் இருக்கும் பிறவிக்குருடன் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? பிறவிக் குருடனுக்கு இரண்டும் ஒன்று தான் என்பதை என்னால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

    பதிலளிநீக்கு
  19. புரிகிறது.பிறவிக்குருடனுக்கு எதற்கு கண்ணைக் கூசும் ஒளி?

    நாத்திகம்- ஆத்திகம் இரண்டில் எது ஒளி எது இருள் என்பதில் இருவேறு கருத்துக்கள் உலகம் உள்ள மட்டும் இருக்கும். கார்ல் மார்க்சும் பெரியாரும் சொன்ன ஒளி உங்கள் கண்ணைக் கூசுகிறதென்றால் மாணிக்கவாசகரும் வள்ளாலரும் கண்ட அருட்பெருஞ்சோதி என் கண்ணைத் திறக்கிறது.
    எனக்கு பெரியாரும், வள்ளலாரும் ஒரே மாதிரியாகவும், கருணாநிதியும் நித்தியானந்தவும் ஒரே மாதிரியாகவும் தான் தெரிகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  20. கொஞ்சம் யோசிச்சா கண்ணைக் கூசும் ஒளி உண்மையில் கண்ணை மூட வைக்கும்னு புரிஞ்சிடும். திகம்பர ரகசியம்.

    பதிலளிநீக்கு
  21. "ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா, குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அது தான் தொல்லையடா'' வரிகளைக் கேட்டிருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  22. இன்னொன்றும் கேட்டிருக்கிறேன்.
    அம்மணாண்டிகளின் மத்தியில் கோவணம் கட்டியவன் முட்டாள்- என்றும்.
    கோவணம் கட்டியவர் யார் என்பது தான் பிரச்சினையே.

    பதிலளிநீக்கு