வியாழன், ஆகஸ்ட் 30, 2012

கவிலைகள்



வேலை நிமித்தம்
வீடு மாற்றுகிறேன் 
எப்படிச் சொல்லி அனுப்பவது ,
அமாவாசைக்கு வரும்
அப்பா காக்கைக்கு ?

வியந்த மகளின்
விரல் பட்டதும்
பயந்து சுருங்கிய
தொட்டாற்சுருங்கி
எப்போது விரிக்கும்
இலைகளை மீண்டும் ?

கண்ணாடிப் பெட்டிக்குள்
கடனேயென்று நீந்தும்
கலர் மீன்களின்
கனவிலேனும் வருமா
கடலும் ஆறும்?

கண்டம் தாண்டும் பறவை
களைப்பாற வசதியாய் 
எப்போது வளரும்
ஆழக் கடலில் 
ஆலமரங்கள்?

மனிதரைக் கண்டால்
விரைந்து மறைந்து 
உடலைச் சுருக்கி 
ஒளிந்து பயந்து
பயத்தால் கொன்று 
பயத்தால் செத்து 
படமாடும் பாம்பு 
நடமாடுவது எப்போது 
ஏனைய உயிர் போல் 
இயல்பாய் நட்பாய்?


காயம் கொத்தும் 
காகம் விரட்டாது 
கண்ணீர் வடிக்கும் 
காளையின்  வாழ்வில்,
கால்கள் சுருங்கி 
கைகளாய்  மாறும் 
பரிணாம வளர்ச்சிக்கு 
எத்தனை யுகங்கள் 
இன்னும் ஆகும் ?

கோயில் வாசலில்
பிச்சையெடுக்கும்
நாமம் போட்ட
யானைக்கு
எப்போது கிட்டும்
கனவிலிருக்கும்
காடு ?

"கவலைப்படுதற்கு 
காரணம் ஆயிரம் இருக்க 
வெட்டிப் பயலுக்கு 
வேதனையைப் பாரேன்"


விமர்சனம் செய்யும் 
விவரமற்றோர்க்கு
எப்படிப் புரியும் 
புல்லாகிப் பூடாய் 
புழுவாய் மரமாகி 
பல்விருகமாகி  
பறவையாய் பாம்பாய் 
எல்லாப் பிறப்பும்
பிறந்திளைக்கும்
என் கவலை ?




-சிவகுமாரன் 

38 கருத்துகள்:

  1. அப்பப்பா... எத்தனை கேள்விகள்...

    சிந்திக்க வைக்கும் வரிகள் சார்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. எத்தனை கவலைகள்தான் மனதில்.அதுவும் பரிணாமம் பற்றிய கவலை ..... அதுக்கு இன்னும் 100 - 1000 வருஷங்கள் தாண்டுமோ !

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கவிதைகளைப்
    படித்துப் படித்து வியக்கிறேன்

    இப்படி ஆழமாய் யோசித்து
    அழகாய் அருமையாய்
    எப்போதுதான் ஒரு கவிதையாவ்து
    எழுதப்போகிறேன் ?

    பதிலளிநீக்கு
  4. அப்பா காகத்திற்காகக் கவலை-சுவை.

    பதிலளிநீக்கு
  5. "எல்லாப்பிறப்பும் பிறந்திளைக்கும் கவலை இல்லாதவன் நான் தோழா! ஆனலும் உன் சிந்தனத் தெரிப்பு அருமையாகவும் தெளிவாகவும் விழுந்துள்ளது! வாழ்த்துக்கள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  6. அருமையாய் உள்ளது. சிந்திக்க நிறைய உண்டு என்றும் சொல்லும் வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் எழுதிய சிறந்த கவிதைகளுள் ஒன்று.

    பதிலளிநீக்கு
  8. எல்லோருக்கும் கவலை வரும். ஆனால் இத்தனைக் கவித்துவமாய் வருமா என்றால் வராது. கவிலைகளாய் உருமாறியிருக்கும் கவலைக் கவிதை அருமை. நினைத்துப் பார்க்கிறேன்... எந்தக் கவலைக்கு எப்படித்தான் தீர்வு சொல்வது? அட, சற்று நேரத்தில் தானே விரிந்துவிடும் தொட்டாற்சிணுங்கி போல் எல்லாம் மாறிவிடாதா என்ன?

    பதிலளிநீக்கு
  9. ஆழக்கடலில் ஆலமரம் வளர ஆசை.... ஆஹா! ஆனால் எதைச் சொல்ல எதை விட?....மீண்டும் படிக்க இதை நான் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

    எல்லா வரிகளுமே அற்புதம். இதுபோன்ற உங்கள் சிறந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிக்க ஆசை. தொகுத்துப் புத்தகமாக்குங்களேன் சிவகுமார்....

    பதிலளிநீக்கு
  10. வாழ்வே கேள்விகளின் பிறப்பிடமாய்/

    பதிலளிநீக்கு
  11. உங்களின் கவலை நியாய மனதே மனித இதயம் உள்ள அனைவரும் இதைத்தான் செய்வார்கள் சிறந்த ஆக்கம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. எல்லோரும் படித்து இன்புற்றிருக்க எப்போது வரும்...
    உன் கவிதைப் புத்தகம்?

    பதிலளிநீக்கு
  13. அப்பப்ப எத்தனை கேள்விகள்

    ஆனால் முதல் கவிதை
    நெஞ்சை துட்டுவிட்டதுங்க கவிஞரே

    பதிலளிநீக்கு
  14. அடடா! இதை எப்படி பார்க்காது விட்டேன்? கவிதையின் கருத்தும் வீச்சும் சிலிர்ப்பூட்டுகிறது.

    ஒன்றோடொன்று போட்டிபோடும் வரிகள்..

    இன்னைக்கு ராத்திரி நான் தூங்கினாப் போலதான் சிவா! மெல்ல கவிலைகளை அசைபோட்டு, மனவெளியில் மிதக்க தயாராகி விட்டேன்..

    எழுதின என் தம்பியின் கைக்கு என் அன்பு முத்தம்!

    பதிலளிநீக்கு
  15. புல்லாகிப் பூடாய்
    புழுவாய் மரமாகி
    பல்விருகமாகி
    பறவையாய் பாம்பாய்
    எல்லாப் பிறப்பும்
    பிறந்திளைக்கும்
    என் கவலை ?

    கவலைகள் சிறகடித்துப் பறக்கும் கவிதை ..

    பதிலளிநீக்கு
  16. பிற உயிர்களுக்கு இயற்கையாக வரும் இன்னல்களை யோசித்து அதை அழகிய கவிலை கவிதைகளாகக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி கவிஞர் அவர்களே.

    பதிலளிநீக்கு
  17. தாய் தந்தை உயிரோடு இருக்கும்போதே அவர்களை ஒரு சுமையாக கருதி முதியோர் இல்லமும், திருவிழா கூட்டத்தில் முதிய தாய் தந்தையை பரிதவிக்க விட்டு ஓடிவந்துவிடும் தன்மையும் நிறைந்தவர் உலகில் மரணத்திற்கு பின்னரும் தந்தை இன்னமும் காக்கையின் ரூபத்தில் தினமும் வருகிறார் என்னை பார்க்க என்று நம்பிக்கைக்கொள்ளும் ஒரு நேசமிக்க மகனின் வரிகளாக இந்த கவிதை மிக மிக அற்புதம் சிவகுமாரன்...



    அப்பாவுக்கும் பொண்ணுக்கும் வேற வேலையே இல்லையாக்கும் இப்படி அடிக்கடி தோட்டத்தில் போய் உட்கார்ந்துக்கிட்டு என்ன தான் செய்துக்கிட்டு இருக்கீங்களோ இயந்திரத்தனமாக கேட்கும் மனைவியின் ரசனையின்மையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மகளின் குறும்பை, மகளின் செய்கைகளை ரசிக்கும் தந்தையாக தொட்டாற்சிணுங்கி ஒன்ஸ் சுருங்கிவிட்டால் விரிவதில்லை எனக்கு தெரிந்து.... ஆனாலும் அப்பாவாச்சே... குழந்தையின் ரசனையும் வியப்பும் உங்களுக்குள் இத்தனை சிந்திக்கவைத்துவிட்டதே....



    ஆஹா என்ன ஒரு சிந்தனை.... மீன்களின் சந்தோஷம் பரந்து விரிந்த கடலும் ஆறும் தான்.. அதை பிடித்து அடைத்து கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து நம் சுயநலத்துக்காகவும் நம் சந்தோஷத்துக்காகவும் ரசித்துக்கொண்டிருக்க கலர் மீன்களின் நிறைவேறாத ஆசை கனவாகவே மிஞ்சியதை அற்புதமாக மீன்களின் மனதை படம் பிடித்தது போல வரிகளை பதித்துவிட்டீர்களே....



    எத்தனை மனிதர் இப்படி அடுத்தவர் கவலைகளை தன் கவலைகளாக நினைத்து உருகி இருக்கின்றனர்??? மனிதனுக்காக மனிதனே இரக்கப்படாத இந்த கலிகாலத்தில் இது போன்ற சின்னஞ்சிறு உயிர்களுக்காக நினைத்து விசனப்படும் ஒரு அற்புத மனிதனின் அன்பு உள்ளத்தை மட்டுமே என்னால் காண முடிகிறது..... கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகளுக்கு தங்கவும் பசி எடுத்தால் உண்ணவும் உறக்கம் வந்தால் சாய்ந்துக்கொள்ளவும் அடர்ந்த ஆலமரம் ஆழக்கடலில் வளருமா?? அற்புத சிந்தனைகள் ஒன்றோடொன்று போட்டி போடுகிறதேப்பா.... கண்களுக்கு உறக்கம் வரும் வரை இமைகள் கண்ணை மூடும் வரை சிந்தனைகள் விழிப்பிலேயே இருக்கும் என்று உணரமுடிகிறது வரிகளை படிக்கும்போது. என்ன ஒரு அசாத்திய சிந்தனை.... ஆழக்கடலில் ஆலமரங்கள்.. க்ளாசிக் சிவகுமாரன்....சிந்தனை சிற்பியின் உளியோசையில் அழகிய சிற்பங்களாக இதோ கவிதை முத்துகள் ஒன்றை ஒன்று விஞ்சுகிறதுப்பா....

    பதிலளிநீக்கு
  18. பாம்பை பார்த்தால் அலறி ஓடும் மக்களும், அடித்துக்கொல்ல துடிக்கும் ஆட்களுக்கிடையில் பாம்பையும் ஒரு உயிராக மதித்து அதன் உணர்வுகளை புரிந்து அதற்கு நடக்க சக்தியும் கொடுத்துடுவீங்க போலிருக்கே.. கவிதைகளை படைக்கும் ப்ரம்மாவாக மட்டும் நீங்கள் இருந்துவிட்டதால் தான் இந்த உயிர்களுக்கெல்லாம் இந்த அவஸ்தைகள்..... கவிதைகளை படைப்பதற்கு பதில் உயிர்களை படைக்கும் ப்ரம்மனாக இருந்துவிட்டால் கண்டிப்பாக இதன் அவஸ்தைகளை எல்லாம் உள்வாங்கி அருள் புரிந்திருப்பீர்கள்....



    பகவானே.... மனிதனுக்குப்பின்னரும் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியா?? அதுவும் எருதின் புண்களை கொத்தும் காக்கையை விரட்டமுடியாது கண்கள் கலங்கி அந்த வலியை அனுபவித்து துடிக்கும் எருதின் வேதனையை ரணத்தை தான் அனுபவித்தது போல் உணர்ந்தீர்களாப்பா?? அபார சிந்தனை வளர்ச்சி உங்களுக்கு..... ஆறறிவு படைத்த மனிதன் தன்னை தாக்க வரும் மனிதனிடம் இருந்து தப்பிக்க வழி அறிந்தவன்.... ஆனால் மிருகங்களின் நிலையோ :( சிந்தனையின் உச்சக்கட்டம் இது தானோ?? என்ன செய்யமுடியும் என்னால் என்று இருந்துவிடாமல் இப்படி இருந்திருக்கலாமே இப்படி செய்திருக்கலாமே என்று தொடர் ஓட்டமாக சிந்திக்கும் அளவுக்கு பாதித்த ஒரு நிகழ்வு உங்களை இத்தனை தத்ரூபமாக எழுத வைத்திருப்பதே பெரிய விஷயமாக கருதுகிறேன் சிவகுமாரன்...



    ஹுஹும்..அவரவருக்கு அவரவர் பற்றிய கவலைகள், அவரவர் குடும்பத்தைப்பற்றிய கவலைகள்.... ஆனால் யார் இப்படி அடுத்தவர் பற்றி கவலைப்படுகின்றனர்?? யார் பறவை, மிருகம், பூச்சி என்று பாகுபாடு பார்க்காமல் உயிர் என்றால் எல்லாத்துக்குமே உயிர் பொது தானே.. அந்த உயிர் மனிதனுக்கு மட்டும் தான் துடிக்குமா? மிருகமோ பறவைக்கோ துடிக்காதா? மனிதனுக்கு மட்டும் தான் வலிகளும் வேதனைகளுமா? ஏன் மிருகம், பறவை, மீன் இனங்களுக்கு இருக்காதா? நச் நச் நச்னு சாட்டையை சுழட்டி சுழட்டி சுழட்டி தன் முதுகில் அடித்து ரத்தம் வரவழைத்து காட்டும் மனிதரின் கண்களை உற்றுப்பார்த்தால் தெரியும்... அன்றைய நாள் தட்டில் விழும் காசு தான் தன் குடும்பத்திற்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு வருமா அல்லது வராதா என்ற கவலை... அடுத்திருந்து அந்த கொடுமையை ரசித்து தட்டில் காசு போடும் மனிதர்களுக்கு தெரிவதில்லை... சிந்திப்பவரை.. அடுத்தவர் கவலைகளை தன் கவலைகளாக நினைத்து வேதனைப்படுவோரை உலகம் இப்படி தான் சொல்லும் வெட்டிப்பயலுக்கு வேதனையைப்பாரேன் என்று.... சரியான பதில் அதற்கும்... விமர்சனம் செய்வோர் விவரம் உள்ளோராக இருந்தால் ஐயோ இந்த பிள்ளை இத்தனை அருமையாக யோசிக்குதே என்று பாராட்டும்... விவரம் போதாதவர் விமர்சனம் செய்தால் இப்படி தான் விமர்சனம் செய்வார்.... ஆனால் அவருக்கும் நச் பதில்.... புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி, பல் விருக்‌ஷமாகி பறவையாய், பாம்பாய் எல்லா பிறப்பும் நானே பிறந்து நானே அவஸ்தை படுவதாக நினைத்துப்பார்ப்பதால் தான் இத்தனை அருமையாக யோசிக்கவும், யோசித்ததை செயலாற்றவும் கவிதையாக படைக்கவும் முடிந்தது உங்களால் சிவகுமாரன்... தொடரட்டும் உங்கள் சிந்தனைகள்... நான் சொல்லவே மாட்டேன் வெட்டிப்பையல் என்று... ஏனெனில் இந்த வெட்டிப்பயலுக்கு தான் எத்தனை எத்தனை சிந்தனைகள் ஊறும் கேணி போல் பிரவாகம் எடுக்கிறது கவிதைகளாக கேள்விகளாக, யாராலும் பதில் தர இயலா கேள்விகளாக..... தொடரட்டும் தொடரட்டும்... அன்பு வாழ்த்துகள் சிவகுமாரன்.. கேள்வி மழையில் திக்குமுக்காடவைத்தமைக்கு..... நல் இதயம் பெற்ற உங்களுக்கு இறைவன் என்றும் அருள் புரிவாராக...

    பதிலளிநீக்கு
  19. வாடிய‌ ப‌யிரைக் க‌ண்ட‌போதெல்லாம் வாடிய‌ வ‌ள்ள‌லார் உங்க‌ளுள் புகுந்திருக்கிறார் சிவா! கூட‌வே த‌ன்னைப் போல் பிறரையும் நேசி என்ற‌ யேசுநாத‌ரும். ஆசையை அறுக்க‌ச் சொன்ன‌ ம‌கான்க‌ளும் க‌ருணையை இழ‌க்க‌ச் சொல்ல‌வில்லை. இன்றைய‌ ச‌ம‌ய‌வாதிக‌ளெல்லாம் கிள‌ற‌க் கிள‌ற‌ நாற்ற‌மெடுக்கும் ப‌டியாக‌ இல்ல‌ற‌த்தாராகிய‌ நீங்க‌ள் ஏணிப்ப‌டியில் ஏறி உத்த‌ம‌ சிந்த‌னைக‌ளோடு... வாழ்க‌ வ‌ள‌ம‌ன‌தோடு!

    பதிலளிநீக்கு

  20. வணக்கம்

    நற்காதல் வெண்பா நறுமணச் சோலையெனப்
    பொற்காதல் வாழ்வைப் புனைந்ததுவே! - சொற்காதல்
    நல்கும் சுடா்தமிழை நாடும் சிவகுமரன்
    பல்கும் படா்தமிழைப் பார்!

    ஈற்றடி யாவும் இனிமையை ஈந்தனவே!
    போற்றடி பொங்கும் புகழ்புலமை! - சாற்றுகிறேன்
    ஊற்றடி நீா்குளிரும்! உண்மைச் சிவகுமரன்
    ஏற்றடி சீா்குளிரும் ஏத்து!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  21. எல்லாப் பிறப்பும்
    பிறந்திளைக்கும்
    என் கவலை ?

    இந்த வரிகளில் துவங்குகிறது எல்லாக் கவிலைகளும்.

    முதலும் மூன்றும் தேன் போல.

    இனி ஒரு பிறப்பும் இல்லாது போகவும்
    வாழ்த்துக்கள் சிவா.

    பதிலளிநீக்கு
  22. என் முதற்கண் நன்றி சகோதரி மஞ்சுபாசினி அவர்களுக்கு. இந்தக் கவிதையை எழுத நான் எடுத்துக் கொண்ட காலத்தைக் காட்டிலும், பின்னூட்டம் எழுத சகோதரி எடுத்துக் கொண்ட காலம் அதிகம். மனம் நெகிழ்ந்து போகிறேன்.
    சகோதரி -- எல்லோருக்கும் தோன்றும் உணர்வு தான் இந்தக் கவிதை. இயந்திர கதியாய் ஓடும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி மனிதர்கள் மட்டும் இல்லை என்பதை உணரவே நமக்கு நேரம் இருப்பது இல்லை. மனிதன் தான் வாழ பிற உயிர்களை அழித்த காலம் போய் , தன் இனத்தையே அழிக்கத் தொடங்கி விட்டான்.
    தன்னைப் போல பிறரையும் நேசி என்று இயேசுபிரான் சொன்னதும்,வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் சொன்னதும் தான் கவிலைகளாய் உருவெடுத்திருக்கின்றன.
    சிறு வயதில் கொல்லையில் விறகுப் பத்தைக்குள் புகுந்த பாம்பைக் கொல்ல மொத்த விறகையும் எரித்த சம்பவம் இன்னும் மனதில் நிழலாடுகிறது. நமக்குப் பயந்து ஒளிந்த பாம்பை நாம் பயந்து கொல்கிறோம்.
    கவிதையை முழுமையாக உள்வாங்கி, எழுதும் போது என் மனதிற்குள் எழுந்த எண்ணங்களையும் அறிந்து, தாங்கள் இட்ட இந்தப் பின்னூட்டம் தான் என் கவிதைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக மதிக்கிறேன் சகோதரி.
    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  23. நன்றி திண்டுக்கல் தனபாலன்.
    நன்றி ஹேமா.
    நன்றி கீதா சந்தானம் மேடம்
    நன்றி காஷ்யபன் அய்யா
    நன்றி ராசன்
    நன்றி அப்பாஜி
    நன்றி கீதமஞ்சரி மேடம்

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஸ்ரீராம்.
    தங்களைப் போன்றோரின் ஆதரவு, நூல் வெளியிடும் ஆவலைத் தூண்டுகிறது.
    இறைவன் துணையுடன் விரைவில் வரும் என நம்புங்கள்

    பதிலளிநீக்கு
  25. நன்றி ரமணி சார், நன்றி விமலன் நன்றி மாலதி

    பதிலளிநீக்கு
  26. இளமுருகன், வலை(Blog) என்று ஒரு உலகம் இருப்பதே உன்னால் தான் அறிந்தேன். கவிதைப் புத்தகமும் 'முருகன்" துணையால் வெளிவரட்டும்

    பதிலளிநீக்கு
  27. நன்றி செய்தாலி நன்றி முரளிதரன்

    பதிலளிநீக்கு
  28. நன்றி மோகன் அண்ணா. தங்கள் அன்பில் நெகிழ்ந்து போகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி இராஜராஜேஸ்வரி நன்றி அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
  30. நிலாமகள் மேடம், மிகச் சரியாய் சொன்னீர்கள். நான் வேற்று மதத்தினராயினும் இயேசுவின் போதனைகளை விரும்பிப் படித்தவன் படிப்பவன். வழி தவறிய ஆட்டை தோளில் சுமக்கும் இயேசுவின் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  31. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. பாரதிதாசன் அய்யா. தங்கள் வெண்பா வாழ்த்து என் கவிதைகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.
    மிக்க நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  32. அப்பாடா ஒரு வழியாய் வந்து விட்டீர்கள் சுந்தர்ஜி. தங்களுக்காகத் தான் அடுத்த கவிதையை வெளியிடாமல் காத்திருந்தேன்.
    ||இனி ஒரு பிறப்பும் இல்லாது போகவும்
    வாழ்த்துக்கள் சிவா.//
    என் உள்ளம் அறிந்து வாழ்த்தி இருக்கிறீர்கள் . மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  33. க‌ல்லுக்கும் உயிருண்டு என்பார் ம‌னித‌ ச‌க்தி உத‌ய‌குமார் அவ‌ர்க‌ள்.
    படையே ந‌டுங்கும் பாம்பும் ந‌டுங்கும் என‌ பார்க்கும் பார்வை, காளையின் கால் என்று கையாய் மாறும் என்ற‌ ப‌ரிணாம‌ க‌வ‌லை, வீடு மாறும் போது ஏமாறுமோ அப்பா காக‌ம் என்ற‌ பாச‌ம், குழ‌ந்தை தொட்ட‌ சிணுங்கி மீண்டு எப்போது விரியும் என்ற‌ ஏக்க‌ம், நாடு க‌ட‌க்கும் ப‌ற்வைக‌ளின் சிர‌குக‌ளின் சிர‌ம‌ம் குறைய‌ ஆழியில் ஆல‌ம‌ர‌ம் தோன்ற‌ எடுக்கும் பி(சி)ர‌ம்மாஸ்திரம், உயிர்க‌ளிட‌த்து அன்பு வேண்டும்மென்ற‌வ‌ன். காக்கை குருவி எங்க‌ள் சாதியென்ற‌வ‌னின் சாதிதான் நீங‌க‌ளு, எனக் க‌விதை சாட்சிய‌ம் சொல்கிற‌து அன்பு சிவகுமாரன். எண்ண‌ங்க‌ளும் செய‌லும் சீராய்.............

    பதிலளிநீக்கு
  34. கேள்விக்கணைகளால் தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள் சிவா!

    ஒவ்வொன்றும் அற்புதமான சிந்தனை.

    கவிலைகள் தலைப்பு தூள்!!!!!!!!!!!! :-)

    பதிலளிநீக்கு
  35. சிந்திக்கவைக்கும் கவிதைகள் மிக நன்று.

    பதிலளிநீக்கு