ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது
அல்லல் போயிற்றா? - பல்
ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்
அவலம் போயிற்றா ?
மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும்
மேன்மை தெரிகிறதா ? - இல்லை
மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய்
மேலும் தொடர்கிறதா?
நேற்றைப் போலே இன்றும் இருந்தால்
நாளைக்கென்ன பயன்? - அட
நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம்
நிலத்திற் கென்ன பயன் ?
காற்றைப் போலே காலம் எல்லாம்
வீசிட வேண்டாமா? - நம்
காலம் முடிந்து போனதும் நம்மைப்
பேசிட வேண்டாமா ?
நாற்றமெடுத்த சமுதாயத்தில்
நமக்கு பங்கென்ன ? - அட
நன்றாய் மூக்கைப் பொத்திக் கொண்டு
நகர்வோம் வேறென்ன ?
மாற்றம் பிறக்க மகேசன் என்ன
மண்ணில் பிறப்பானா ? - நம்
மந்தையை மேய்க்க மாயக் கண்ணன்
மறுபடி வருவானா ?
ஆண்டு பிறந்ததை கொண்டா டிடவோர்
சபதம் எடுப்போமா ? - நமை
ஆண்டு கொழுத்திடும் அரக்கரின் மேலொரு
அம்பு தொடுப்போமா ?
கூண்டினில் ஏற்றி அவர்தம் முகத்திரை
குத்திக் கிழிப்போமா ? - நமை
கொள்ளை அடிப்போர் கூடாரத்தை
கூடி அழிப்போமா ?
ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த
ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?
உதறிட வேண்டாமா ?
நாட்டுப் பற்றுள யாரும் லஞ்சம்
வாங்கிடத் துணிவாரா ? -இந்த
நாட்டைப் பிடித்த நச்சாம் அதனை
நசுக்கிட வேண்டாமா ?
கோடிக் கணக்கில் கொள்ளை அடித்துக்
குவித்ததை மீட்போமா ?- அங்கே
குவிந்ததை எல்லாம் கொணர்ந்துநம் வறுமைக்
கோட்டை அழிப்போமா ?
கூடித் திருடும் கொள்ளையர் வீழ
குழிபறித் திடுவோமா - வெறுங்
கூச்சல் போட்டுப் பலனிலை ; அதற்கோர்
கொள்கை வகுப்போமா ?
காசுக் காக நீதியை விற்கும்
கயமை எதிர்ப்போமா ?-அவள்
கண்ணில் கட்டிய கறுப்புத் துணியை
கழற்றி எறிவோமா ?
கோசம் வேண்டாம் கோர்ட்டுகள் வேண்டாம்
குற்றம் தடுப்போமா -அந்தக்
கொள்ளையர் தம்மைக் கண்டால் கையில்
கோலை எடுப்போமா ?
மதுக்கடை தன்னில் மகசூல் பெருக்கும்
மடமை எதிர்ப்போமா - தன்
மக்களை அரசே மயக்கிக் கொல்வதா ?
மயக்கம் தெளிவோமா ?
எதுக்கெடுத் தாலும் இலவசம் வாங்கும்
இழிவைத் துறப்போமா ?- அந்த
ஈனத் தொழிலைச் செய்து நமக்கு
இலவசம் கேட்டோமா ?
கலைஞர் அம்மா களவா டியதின்
கணக்குகள் அறிவோமா ? - அவர்
காட்டும் நாடகக் காட்சிகள் மீது
காறி உமிழ்வோமா ?
தலைவா தலைவி தறுதலைக் கோசம்
தாண்டிப் போவோமா ? - இனித்
தலைமை யேற்க தன்னலம் இல்லாத்
தகுதிகள் கேட்போமா ?
உண்ணா விரதம் ஊர்வலம் தாண்டி ஓர்
உறுதி எடுப்போமா ? இனி
ஊழல் லஞ்சப் பேய்களை எல்லாம்
உலுக்கி எடுப்போமா?
மண்ணாள் வதுநம் மக்களின் முடிவெனும்
மகத்துவம் உணர்வோமா ? - இனி
மந்தை ஆடாய் வேண்டாம் , பாதையை
மாற்றத் துணிவோமா ?
புத்தாண்டு வாழ்த்துக்கள்
-சிவகுமாரன்
(2012ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு எடுத்த உறுதிமொழிகள் தான்.. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் எந்த மாற்றமும் நிகழ்ந்த பாடில்லை. அவலங்கள் தான் அதிகரித்திருக்கின்றன. அதனால் கவிதையும் நீண்டிருக்கிறது.)
அற்புதமான புத்தாண்டுச் சிறப்புக் கவிதை
பதிலளிநீக்குநிச்சயம் உறுதி எடுக்கவேண்டும்
உறுதி எடுக்கத் தூண்டும் உணர்வு பூர்வமான கவிதை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உறுதி எடுப்போம்.மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சாட்டை அடி ! கவிதை அருமை!
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா!
பதிலளிநீக்குமுன்பே படித்ததுதான்.
கவிஞர். “ தாராபாரதி ” அவர்களின் கவிதைகள் படித்ததுண்டா?
உங்கள் வரிகளில் என்ன ஒரு எழுச்சிநடை...!
நான் கற்க வெகுதூரம் வர வேண்டும்!!!!
தங்களின் வருகை காணவே மிகுந்த மகிழ்ச்சி!
நன்றி.
மறந்தேன்.
நீக்குதங்கட்கும் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள.
நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ 1 கவிதை அருமை ...!
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கவிதை போலும் அரசோச்சுவோர் நாம் தேர்ந்தெடுத்தவர்தானே மாற்று எங்காவது தெரிகிறதா. ஒரு விரல் சுட்டும்போது மூன்று விரல்கள் நம்மையேகாட்டுகின்றன. அது போகட்டும் சிவகுமாரா. நலமா. மதுரை வந்தாகிவிட்டதா. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசாட்டையடி கருத்துக்கள் ஆனாலும் நம் மக்களை திருத்துவது இயலாது
பதிலளிநீக்கு