செவ்வாய், மே 03, 2016

ஓசிமாண்டியாஸ்




 


பண்டை நாட்டுப் பயணியவன் 
   பழம்பெருங் கலைகளின் ரசிகனவன் 
கண்டேன்  நானொரு  காட்சியென 
   கண்கள் விரிய உரைத்திட்டான்.
"முண்டம் இல்லை, முகம்தனியே 
    முறிந்த கிளைபோல் முன்கிடக்க 
துண்டாய் இரண்டு கால்மட்டும் 
   தூண்போல் நிற்கும் துயர்கண்டேன்.

அருகில் மணலில் புதைந்திட்ட 
   அலட்சிய முகத்தில் என்னதிமிர் ?
சுருங்கிய இதழில் புன்சிரிப்பு 
   சுழலும் கண்களில் கம்பீரம் 
நெருங்க முடியா வெற்றிகளை 
   நிகழ்த்திக் காட்டிய போர்ச்செருக்கு.
கருங்கல் தன்னை உயிப்பித்த 
   கலைஞன் தன்னை வியக்கின்றேன்.

தூசி படிந்ததன் பீடத்தில்  
    துல்லிய எழுத்தில் இவைகண்டேன்.
'ஓசி மாண்டியாஸ் என்பெயராம் 
    உலகில் எனக்கு எவர்நிகராம்?
மாசில் வெற்றிகள் கண்டவன்நான் 
   மன்னர்க் கெல்லாம் மன்னன்நான்
பேசிடும் எந்தன் படைப்பைப் பார் 
   பெருமையை முடிந்தால் மிஞ்சப் பார்'

சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் 
   சுடுமணல் தன்னில் ஏதேனும் 
வெற்றிச் சுவடுகள் தெரிகிறதா 
   விழிகள் திறந்து தேடுகிறேன் 
வெற்றுப் பாலையும் சூனியமும் 
   வெட்டுப் பட்ட  முகக்கல்லும் 
முற்றுப் பெறாத தொடுவானும் 
   முன்னே கிடந்தன வேறில்லை"
-சிவகுமாரன் 



மூலக்கவிதை 

Ozymandias

I met a traveller from an antique land
Who said: “Two vast and trunkless legs of stone
Stand in the desert . . . Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them, and the heart that fed:
And on the pedestal these words appear:
‘My name is Ozymandias, king of kings:
Look on my works, ye Mighty, and despair!'
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.”
-Shelley 

நன்றி:
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கத் தூண்டிய அன்பர் நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு .


29 கருத்துகள்:

  1. எனது " இனி உனக்காக" (http://sivakumarankavithaikal.blogspot.com/2011/06/blog-post_20.html)என்ற முந்தைய மொழிபெயர்ப்புக் கவிதையைப் படித்த நவநீதகிருஷ்ணன் அவர்கள் ஷெல்லியின் இந்தக் கவிதையை மொழிபெயர்க்கக் கேட்டிருந்தார் . உடல்நலக் குறைவால் மூன்று நாட்களாய் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த எனக்கு இது ஒரு relaxation. ஆயிரம் பிரச்சினைகளுக்கிடையிலும் என்னுள் இருக்கும் கவிஞன் மரித்து விடவில்லை என என்னை உணரவைத்தத் தருணமிது. தயவுசெய்து யாரும் என்னில் ஷெல்லியைத் தேடாதீர்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லாஆகஸ்ட் 07, 2019 8:22 PM

      மிக்க நன்றி. மாடல் மில்லியனர் என்கிற ஆங்கிலக் கதையை தயவு செய்து மொழிபெயர்க்க வேண்டுகிறேன். நவநீ.

      நீக்கு
  2. அருமை! பாரதியே வியந்த ஷெல்லியின் கவிதை ஒன்றை இவ்வளவு அழகாக மொழி பெயர்க்க முடியுமா? உண்மையில் நீங்கள் அருட்கவிதான் சிவகுமாரன்.
    ஷெல்லியின் கடைசி மூன்று வரிகளுக்கு நீங்கள் தந்துள்ள வார்த்தைப் பிரயோகங்கள் நிலையாமையை மூலத்துக்கு இணையாக ஆஎன் அதையட சிறப்பாகவே உள்ளது.. பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடர்வீர்.

    பதிலளிநீக்கு
  3. ஷெல்லி ஒரு அற்புதக் கவிஞன். ஓசிமாண்டியாஸ் என்னைக் கவர்ந்த சானெட். அதன் தமிழக்கம் மிக அழகாக அருமையாக பிரமாதமாக இருக்கிறது. ஒரு காவியக் கவிதையை இத்தனை செழுமையாகத் தமிழ்ப்படுத்திய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கவிதை கண்டேன்! சுவைத்தேன்! அருமை குமர! நலமா!!!

    பதிலளிநீக்கு
  5. என் பதிவு ஒன்றில் ஆங்கிலத்தில் கைலாசம் அவர்கள் எழுதி இருந்த DRONA என்னும் கவிதையை தமிழாக்கம் செய்யவோ மொழி பெயர்க்கவோ கேட்டு எழுதி இருந்தேன் ஒரே ஒரு பதிவர் முயற்சிக்கிறேன் என்றார் இதுவரை முன்வரவில்லை. நானே தமிழாக்கம் செய்திருக்கிறேன் அதைவிட சிறந்தது கிடைக்குமா என்ன்னும் நப்பாசைதான் உங்களுக்கு சுட்டி அனுப்பட்டுமா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமை. //அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த// அறை எடுத்தா தங்கி இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  7. சிவா! ஒரு ஆச்சரியமாய், நானும் இரண்டு நாட்களாய் ஷெல்லியில் மூழ்கிக் கிடக்கின்றேன். முரளிதரன் சொன்னதுபோல் பாரதியின் மனம் கவர்ந்த கவிஞர். ஷெல்லிதாசன் என தன்னை அழைத்துக் கொண்டவர். இந்த சானட்டை இவ்வளவு அழகாய் மொழிபெயர்க்க சிவா ஒருவன் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமை பெயர்ப்பினுள்ளும் மூலத்தின் உணர்வுகள் அப்படியே ,,, தொடருங்கள் இது போல் பல ஆக்கங்களை,,, நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமை அண்ணா 👍

    பதிலளிநீக்கு
  10. காதல்யுகக் கவிஞன் அவன்.
    கல்லையும் மண்ணையும் கண்டான்.
    கலந்தான்.
    காவியம் சமைத்தான்.


    இவனோ சிவன். சிவ குமாரன்.
    இக்கரை இலக்கியத்துக்குச் சொந்தக்காரன்.
    இயல்பொன்றே இவன் நகை.
    சொல்லே அவன் சொத்து.
    பண்ணோ அவன் மூச்சு.

    பாலை மணல் துகள்களிலே
    பா வரைந்தான்.
    பாவலர் இவரன்றோ !! தமிழ்க்
    காவலரும் இவரன்றோ !

    "வெற்றுப்பாலை" இல்லை இது.
    வந்தவரை சொந்தமாக்கும்
    பூமாலை.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  11. அருமையான வரிகள்....
    ரசித்தேன் நண்பரே...!

    பதிலளிநீக்கு
  12. அருமை
    ரசித்தேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. மொழிபெயர்ப்பு என்று உணரமுடியா வகையில் அமைந்துள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வேற்றுமை அருமை

    பதிலளிநீக்கு
  15. சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் மொழியாக்கம். ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிகளை மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல.

    புதுக்கோட்டையில், கல்லூரிக்காலத்தில் அப்போதைய மதறாஸ் பல்கலைக்கழக ஆங்கிலப் பாடத்திட்டத்தினால் அறிந்திருந்தேன் ஓரளவு ஷெல்லியை. எங்களுக்கு உணர்வுப்பிரவாகமாக கவிதைப் பாடமெடுத்த - பேராசிரியர்கள் ராஜசேகர், நவனீத கிருஷ்ணன், ஹெர்பர்ட் மாரிஸ் ஆகியோரின் முகங்கள் மனதில் நிழலாடுகின்றன. நான் செய்த பெரும் பாக்கியம்.

    ஜான் கீட்ஸின் Ode to a Nightingale, Ode on a Grecian Urn, ஷெல்லியின் Ode to the West Wind ஆகிய கவிதைகள் Romantic Poetry Section-ல் பாடமாக இணைக்கப்பட்டிருந்தன. Grateful thanks to the wise men of the Madras University of yester years! எத்தனை மனப்பூர்வமாக இந்த கவிதை வகுப்புகளில் நான் கலந்திருந்தேன் என்பதை நினைக்கவே இனிக்கிறது இன்றும். கூடவே, இது தொடர்ந்திருக்கக்கூடாதா என்கிற ஏக்கமும்.

    பதிலளிநீக்கு
  16. மூலக்கவிதைக்கு பெருமையூட்டும் அற்புத மொழிபெயர்ப்பு. தமிழின் அழகான சொல்நயத்தோடும் கவிநயத்தோடும் ரசனையான வரிகள்.. பாராட்டுகள் சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  17. வாவ்! சிவா! எங்கேயோ போயிட்டீங்க! ஷெல்லி கீட்ஸ் கவிதைகள் அருமையானவை. ஆங்கில இலக்கியத்தில் எங்களுக்குப் பாடமாக அமைந்த போது வியந்திருக்கிறேன்...நீங்கள் மிக மிக அருமையாக மொழி பெயர்த்துவிட்டிருக்கின்றீர்கள்..தொடருங்கள் இது போல் சிவா...

    கீதா: சிவா...அருமையான மொழிபெயர்ப்பு புல்லரிக்க வைத்துவிட்டது. ரசித்தோம் மிகவும்...தமிழ் விளையாடுகிறது! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. அற்புதம், சிவா! அழகான மொழிபெயர்ப்பு.
    முத்திரை பதித்த முடிப்பு...

    மொழிபெயருப்புக்கான தேர்ந்த மூலக்கவிதையும் பிரமாதம். அது உங்கள் மன நேர்த்தியைச் சொல்கிறது.

    ஓசி மாண்டியாஸ் நிழலில் சாம்ராட் அசோகனும் என் நினைவில் நிழலாடினார்.

    எனக்கும் இப்படி ஒரு கவிதையை மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசை இப்போது வந்திருக்கு!..!

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அற்புதம். தங்களின் வலைப்பதிவு மிக அருமை. தொடர்ந்து வசிக்கிறேன்...
    உமா

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் அண்ணா!

    திரு. ஏகாந்தன் அவர்கள் சொல்லியது மிகச்சரி.
    இது மொழியாக்கம்.
    மொழிபெயர்ப்பிற்கும் இதற்கும் வேறுபாடுண்டு.
    பொதுவாக கவிதைகளை மொழிபெயர்த்தல் கடினம். அதனை மொழியாக்கம் செய்வது அதனினும் கடிதம்.
    பள்ளி நாட்களில் சிறுபிள்ளைத்தனமாக ஆசிரியர் தரும் குறிப்புகளைக் கொண்டு ஆங்கிலப்பாடல்களுக்கு இப்படி முயன்றிருக்கிறேன்.
    சரியாய் வந்ததில்லை.
    தங்களின் ஆக்கமும் ஆற்றலும் காணப் பெருவியப்பு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. நன்றி விஜூ
    தாங்கள் தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்.
    இந்தக் கவிதை எழுதிய கணத்திலிருந்து தங்களின் கருத்துக்காகக் காத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு



  23. To One Who Has Been Long in City Pent



    By: John Keats

    To one who has been long in city pent,
    ‘Tis very sweet to look into the fair
    And open face of heaven,—to breathe a prayer
    Full in the smile of the blue firmament.
    Who is more happy, when, with heart’s content,
    Fatigued he sinks into some pleasant lair
    Of wavy grass, and reads a debonair
    And gentle tale of love and languishment?
    Returning home at evening, with an ear
    Catching the notes of Philomel,—an eye
    Watching the sailing cloudlet’s bright career,
    He mourns that day so soon has glided by:
    E’en like the passage of an angel’s tear
    That falls through the clear ether silently.

    கீட்ஸின் இந்தக் கவிதையையும் மொழிபெயர்ப்பு செய்தால், நன்றிடையவனாய் இருப்பேன். தங்களால் முடியும். நவனீத க்ரிஸ்ணன்.

    பதிலளிநீக்கு