மதுரையில் மீனாட்சி- சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில் ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு. ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா
தன்னானே தானே தன தானா
மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.
செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .
வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.
பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.
பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .
பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?
உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?
வேடிக்கையா கேட்டுப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.
சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா
குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.
ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.
உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
-சிவகுமாரன்
இதய பலகீனமுள்ளவர்கள் கீழே உள்ள குரல் பதிவை கேட்க வேண்டாம்.
பின்குறிப்பு:
இந்தக் கவிதை காஷ்யபன் அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
-சிவகுமாரன்
இதய பலகீனமுள்ளவர்கள் கீழே உள்ள குரல் பதிவை கேட்க வேண்டாம்.
பின்குறிப்பு:
இந்தக் கவிதை காஷ்யபன் அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.