வெள்ளி, ஏப்ரல் 20, 2012

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

தலைவன் என்றதும்
துரோகமும் செல்வமும்
தொண்டன் என்றதும்
தியாகமும் ஏழ்மையும்

உணர்வு என்றதும்
மரத்தலும் மறத்தலும்
உரிமை என்றதும்
மறுத்தலும் மீறலும்

தோழி என்றதும்
துரத்தலும் சேர்தலும்
தோழர் என்றதும்
சேர்தலும் துரத்தலும்

ஈழம் என்றதும்
இனமும் பிணமும்
ஈரம் என்றதும்
மனமும் பணமும்

குழப்பம் என்றதும்
போயஸ்கார்டனும்
குடும்பம் என்றதும்
கோபாலபுரமும்.

தேர்தல் என்றதும்
வாக்கும் நாக்கும்
ஆட்சி என்றதும்
கொள்கையும், கொள்-கையும்.

அரசியல் என்றதும்
தஞ்சமும் லஞ்சமும்
அனுபவம் என்றதும்
ஆடலும் அடங்கலும்.

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

திங்கள், ஏப்ரல் 09, 2012

காதல் வெண்பாக்கள் 30

    இரண்டிலொன்று


மொட்டமாடி மீது
முழித்துக் கிடக்கின்றேன்.
விட்டத்தை நோக்கி
வெறிக்கின்றேன் -கட்டழகில்
கட்டுண்டு நான்கிடந்து
காலம் கழிக்கின்றேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சொல்.


    இரண்டுமொன்று


ஏதேனும் ஒன்றெனக்கு
இப்போதே சொல்லிவிட்டால்
பாதையினை மாற்றி
பயணிப்பேன் - வேதனையில்
எத்தனைநாள் நானிருப்பேன்
இப்படியே ? பேசாமல்
செத்துத் தொலைக்கலாம்
சே.




( மற்ற காதல் வெண்பாக்களையும் காணஇங்கே சொடுக்கவும் )

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

மறதி நல்லது .





முல்லைப் பெரியாற்றில்
மூழ்கிப் போயின
பாவப்பட்ட பயணிகளை
பாதி வழியில் இறக்கிய
கட்டணம் உயர்ந்த
பேருந்துகள்


கூடங்குளத்தில்
வெடித்துச் சிதறின
இரு வேளை தேநீரை
ஒருவேளை ஆக்கிய
பால் பாக்கெட்டுகள்.


தானே புயலில் தரை மட்டமாகின
கோடிகளை விழுங்கிய
தலைமைச் செயலகமும்.
கோர்ட்டுக்குப் போன
நூலகமும்.


முப்பதாண்டு கால
தோழியின் பிரிவில்
மறந்தே போயின
அடித்த கொள்ளையும்
அனுபவித்த சிறையும்.


ஏற்றிய விலையையும்
இம்சை அரசையும்
இடைத் தேர்தல் தீர்ப்பளித்து
ஏற்றுக் கொண்டார்கள்
இனிய தமிழ் மக்கள்.


அசைக்க முடியாதினி
அம்மாவை யாரும்.


இன்னும் கூட
ஏற்றலாம் விலையை
கல்லா கட்டலாம்
கஜானா(!?) நிரப்பலாம்


மக்கள் கிளர்ந்தால்
மறக்கடிக்க
மவிவாய் கிடைக்குது
மருந்துகள் ஆயிரம்.


மாதமிருமுறை
மந்திரிசபை மாற்றலாம்.
தீய சக்தியைத்
திட்டித் தீர்க்கலாம்.
துரத்தியடித்த
தோழியோடு கூடலாம்.
இலங்கை நெருப்பில்
எண்ணெய் ஊற்றலாம்
இன்னும் கொஞ்சம்
இலவசம் தரலாம்.
குடிசையில் கொடுத்து
குடிக்கவைத்து பிடுங்கலாம்.


கொள்கைகள், கூட்டணிகள்
அமைச்சர்கள், அடிமைகள்
தொண்டர்கள் , தோழர்கள்,
அறிக்கைகள், பேச்சுகள்,
பூஜைகள், பரிகாரங்கள்,
கோடிகள் மோடிகள்,
கணிப்புகள் ,பணிக்கர்கள்,
"சோ"க்கள் , ஜோக்கர்கள்

ஆயிரம் இருந்தாலும்
அடுத்த தேர்தலுக்கு
அம்மா நம்புவது
"அம்னீசியா"வைத் தான்.


                                                  -சிவகுமாரன்