திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்
நரைதோன்றிய பின்னேதான் நமக்கு உறைக்கிறது
வெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை
களிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.
பணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்
மனக்கோட்டை கட்டும் மனிதன் நானில்லை
வாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ
தூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ
சொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்
பெத்தமகன் என்பெருமை பேசும்படி ஆவேனோ
ஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச் செல்லரிக்க
வேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்
பாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்
தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.
அன்பு மனைவியை அறிவான பிள்ளையை
வன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்
மெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்
வலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.
அருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து
பொருள்தேடிப் பறக்கின்றேன் பூவுலகில் வாழ்வதற்கு.
இல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ
பொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.
ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிடைத்திடுமாம்
ஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ இழக்கின்றேன்
இருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது
உருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.
சிவகுமாரன்
22.06.2015
//பாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்//
பதிலளிநீக்குகவலை வேண்டாம் நண்பரே
பாரங்கள் குறைந்து வாழ்வு சிறக்கும்
தம 1
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅண்ணா வணக்கம்.
பதிலளிநீக்குஎங்கோடிப் போனாலும் எத்திக்குச் சென்றாலும்
உங்கள் தமிழ்ப்பிள்ளை உமைவிட்டுப் போகாது!
வெங்கனலில் வேதனையில் விம்மும் பெருமூச்சில்
சங்கத் தமிழதிரும்! சாட்சிகளாய் யாமிருப்போம்!
வெம்மைக் கதிருறிஞ்சி வானத்துச் சென்றாலும்
அம்மை பூமிக்கே அத்துணை மழைநீரும்!
காடு மேடெல்லாம் கால்கடுக்க நடந்தோய்ந்து
பாடு படுகின்ற பக்குவத்தில் பா‘எழுக!
அருள்தேடிக் கொண்ட அண்ணாஉம் கால்வீழப்
பொருள்தேடி ஓடிவரும்! புன்னகைத்துப் போய்வருக!
நன்றி.
மனதின் அழகான வெளிப்பாட்டுப் பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்
பதிலளிநீக்குதூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்....
அருமை... அருமை நண்பரே...
தங்கள் பயணம் தங்கள் எதிர்பார்ப்பை
பதிலளிநீக்குநிறைவு செய்ய வேண்டுமாய் அன்னை
மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்
வாழ்துக்களுடன்....
பொல்லாத பொருள்தேடிப் போகின்ற பொன்மகனே
பதிலளிநீக்குஇல்லாமை தீர்க்க இனிதாகப் போய்வருக
சொல்லாமல் சொல்லிட்ட துயரமது நில்லாது
கொல்லும் நினைவுகள் நீ செல்லாது போனால்
இல்லாளை நல்மகவை என்றென்றும் காப்பதற்குப்
பொல்லா வினைமுடித்துப் புகழ்சேர்க்கப் போய்வருக
வல்லான் துணையிருப்பான் வளம்சேரும் வாழ்விலினி
எல்லாம் நன்றாகும் ஏங்காமற் போய்வருக
எல்லா நன்மைகளும் பெற்றுய்ய மனமார வாழ்த்துகிறேன்...! வருந்தாது சென்று வருக !
which part in Africa are you going to ?
பதிலளிநீக்குஅன்பின் சிவகுமாரா, போகும் போது எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதுதான் போதுமென்ற மனமேபொன் செய்யும்மருந்து என்று அறியாதவனா நீ.உல்லாசப் பயணமாக மனையாளோடும் மகனோடும் செல் பொருள் தேடும் அல்லல் வேண்டாம்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை. நிகழ்வது போல் எழுதி இருப்பதால் நிகழ்வினைத் தவிர்க்க வைப்பது போல் ஒரு பின்னூட்டம் வாழ்த்துக்கள்
வணக்கம்!
பதிலளிநீக்குஆலங் குடியென்ன ஆப்பிாிக்கா நாடென்ன
கோலத் தமிழ்உன்னுள் கூத்திசைக்கும்! - சாலப்
பொருள்தேடிச் சென்றாலும் போகுமிடம் எங்கும்
அருள்சூடி மின்னும் அகம்!
வாழ்த்துக்கள் அத்தான் என்.டி.ராஜா,மயிலாடுதுறை
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்,,,,
உண்மைதானே
நலமுடன் வளமுடன் திரும்ப வாழ்த்துக்கள்,
தங்கள் தளம் வலைத்தளத்தில் கண்டு வந்தேன்,
வாழ்த்துக்கள்,
நன்றி.
வேதனை எதற்கு காலம் காயங்களை மாற்றும்.
பதிலளிநீக்குஇன்று தான் இந்த கவிதையை படித்தேன், படித்ததும் கண்ணீர் வடித்தேன் அண்ணா, இதுவும் கடந்து போகும், நான் அறிவேன் அந்த வலியை, கவலை கொள்ளாதிர்கள்.எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும்.
பதிலளிநீக்குஇன்று தான் இந்த கவிதையை படித்தேன், படித்ததும் கண்ணீர் வடித்தேன் அண்ணா, இதுவும் கடந்து போகும், நான் அறிவேன் அந்த வலியை, கவலை கொள்ளாதிர்கள்.எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும்.
பதிலளிநீக்குmega arumai
பதிலளிநீக்குஅருமை...சரி நீங்கள் ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள்? நான் கேட்டது தவறு என்றால் மன்னித்துவிடுங்கள்...சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்..
பதிலளிநீக்குகீதா
அடடா. இதில் எதற்கு மன்னிப்பு ? உகாண்டாவில்., காடுகளை அழித்துவிட்டு கரும்பு பயிரிட்டு , சர்க்கரை ஆலை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
நீக்குதிரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே இருக்கிறேன் சிவகுமாரன். கருத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நீங்கள் நலமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநெகிழ்ந்து போகிறேன் , சகோதரி தங்களின் அன்பில்.
நீக்கு