வெள்ளி, ஜனவரி 13, 2017

உழன்றும் உழவே தொலை

கடவுள் என்பவன் கால வயலில் 
நடவு செய்ய நினைத்து ஒருநாள்
இந்த நிலத்தில் எறிந்த விதைகளில்
நந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.
மேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.
ரோட்டோ ரத்தில்  வளர்ந்தவை பற்பல.
காற்றின் கைகளில் சிக்கித் தவித்து
சேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்
விழுந்தன அவையே உலகம் யாவையும்
எழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.
நந்த வனமும்  மேட்டுப் புறமும்
எந்த சூழலில் இருந்த போதும்
சோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்
சேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.
உழவர் நாங்கள் தின்ற மிச்சமே
உலகம் உண்ட காலமும் உண்டு.
புவியை ஏரால் புரட்டிப் போட்டு
கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.
ஏர்முனைப்  பேனா எடுத்த நாங்கள்
கூர்மணற் காகிதம் குத்திக்  கிழித்து
எழுதிய கவிதைக்  கீடாய் எவரும்
எழுதிய தில்லை இல்லவே இல்லை.
இன்றோ..
சுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்
கழன்று கொண்டார் காலப் போக்கில்.
எழுதிக்  கிழிக்க ஏர்முனை  இல்லை
உழுது விளைக்க காகிதம் இல்லை.
பச்சை வயல்கள் பட்டா வாகி
மச்சு வீடாய் மாறிப் போயின.
உழுது விளைத்த உழவு மாடுகள்
அழுது போயின அறுபட கேரளம்
பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்

பிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை
உழைக்க வேண்டிய அவசியம்  இல்லை.
தலையில் அடித்து தலைவர் சொன்னார்
ஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில் 
இலவசம் தொடரும் இலவசம் தொடரும்
செலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.
ரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி
வாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.
அடுத்த வருடம் இன்னும் வசதி 
அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
தூக்கிக் கொடுப்பார் தங்கத் தலைவி.
அன்ன பூரணி அல்லக் கையாள் 
சின்னம் மாவின் சேவடி பணிந்து 
கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
நல்லதாய் ஆப்பி(APP ) நாப்பதே எம்.பீ (MB)
ஜல்லிக் கட்டை டவுன்லோட் செய்வோம்.
வீடியோ கேமில் விரட்டிப் பிடித்து 
ஆடி மகிழ்ந்து அடங்கிப் போவோம் .
தைத் திருநாளா  தமிழர் திருநாள் ?
வைத்தான் ஆப்பு  வடக்குத் தலைவன் .
நாடு செழிக்க நல்லோர் வாழ 
வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் 
பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.   
சிவகுமாரன் 

10 கருத்துகள்:

  1. என்ன எழுதினாலும் அழகு தமிழ் என்னை ஈர்க்கிறது பொங்கல் வாழ்த்துகள் சிவகுமாரா

    பதிலளிநீக்கு
  2. நியாயமான கோபம் ஒவ்வொரு வரியிலும்...

    பதிலளிநீக்கு
  3. அருமை... உண்மை...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை! சிவகுமாரன்!!! இறுதி வரிகள் நச்!! தமிழ் அன்னை தங்களிடம் குடிகொண்டிருக்கிறாள் நிரந்தரமாகவே!!! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல்/தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. கோபப் பொங்கல்
    தாபப் பொங்கல்
    கொடுமையிலும் கொடுமை
    வீடியோ பொங்கல்

    பதிலளிநீக்கு
  8. வார்த்தைச் சவுக்கால் வசையடிகள்
    என்று இந்த சமுதாயம் விழிக்குமோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு