செவ்வாய், ஜனவரி 24, 2017

கொம்பைத் தீட்டிடடா


எங்கள் தமிழினம் எங்கள் தமிழினம்
  என்றே முழங்கிடடா- இனி
  இதுதான் போரிடும் முறையென உலகம்
  எங்கும் வழங்கிடடா.
பொங்கு தமிழரின் போர்க்குணம் கண்டு
   புவியே மலைக்குதடா -மீண்டும்
   புறப்படு புறப்படு போரிட இன்னும்
   போர்க்களம் அழைக்குதடா.

வெற்றிகள் கண்டு மயங்கி விடாதே
   வேலை இருக்குதடா -நமை
   வீழ்த்திடு வோரை விரட்டி அடிக்கும்
   வேளை பிறக்குதடா.
சற்றும் தளர்ந்து நின்று விடாமல்
   சரித்திரம் படைத்திடடா -உன்
   சந்ததி காக்க செந்தமிழ் வாழ
   தடைகள் உடைத்திடடா.

இத்தனை காலம் பொறுத்தது போதும்
   எதிர்த்து நின்றிடடா - இனி
   எல்லாம் உன்னால் மாறும்! வீதியில்
   இறங்கி வென்றிடடா.
மொத்தமாய் மாறிட தாமதம் ஆகும்!
   முயன்றால் முடியுமடா. -கண்
   முன்னே நடப்பதை தட்டிக் கேட்க
   முடிந்தால் விடியுமடா.

உண்ணக் கொடுத்தவன் வறுமையில் உயிரை
   விடுதல் முறையாடா? -நாம்
   உண்டு களிக்க உழவர் தம்மின்
   உடல்கள் இரையாடா?
தண்ணீர் இன்றி தற்கொலை செய்யும்
   தரித்திரம் துடைத்திடடா -அதைத்
   தடுக்க இயலாத் தடைகள் எல்லாம்
   தகர்த்து உடைத்திடடா!

தலைவனும் வேண்டாம் தொண்டனும் வேண்டாம்
   தமிழே போதுமடா -நாம்
   தம்மைத் தாமே ஆண்டால் கட்சித்
   தலைகள் மோதுமடா.
கலைந்தபின் மறந்திட வேண்டாம்! நெஞ்சில்
   கனலை மூட்டிடடா -தமிழ்க்
   காளையே இன்னும் களம்பல காண
   கொம்பைத் தீட்டிடடா.
 

சிவகுமாரன்

12 கருத்துகள்:

  1. தமிழினம் தலை நிமிர்ந்து விட்டது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. சரித்திர போராட்டம்... பல பிரச்சனைகளை தீர்க்க நடந்த ஆரம்ப போராட்டம்...

    பதிலளிநீக்கு
  3. அருமை கவிஞரே உணர்வுகளை மீட்டிவிடும் வரிகள்

    பதிலளிநீக்கு
  4. மாற்றுக்கருத்துகள் கண்டால் பொங்கும் உங்கள் கோபம் பிடிச்சிருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன் அய்யா. கோபம் கருத்துக்கள் மீது தானேயொழிய நபரின் மீதல்ல.
      நன்றி

      நீக்கு
  5. அறவழியில் தமிழ் இளைஞர் ஒன்றாகப் போராடியதில் அரண்டு கிடக்கிறது இந்தியா; உலகின் ஏனைய பகுதிகளும் உற்றுநோக்க ஆரம்பித்திருக்கின்றன. சந்தேகமில்லை.

    அறவழியும், ஒன்றுபட்ட செயல்பாடுகளும், சற்றே தாமதித்தாலும் நல்லபலனை இறுதியில் நல்கும் என நிரூபித்திருக்கிறார்கள் தமிழர்கள். நீங்கள் சொன்னதுபோல் மீதமுள்ளது நிறைய. தொடரவேண்டும் நற்பணி, குள்ளநரிகளின் குறுக்கீடில்லாமல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாய்ச் சொன்னீர்கள்.எதிரிகள் நம்மிடையே தான் இருக்கிறார்கள். மகாபாரதப் போர் போல் உள்ளுக்குள்ளேயே போராட வேண்டியிருக்கிறது. தர்மம் வெல்லும்.

      நீக்கு
  6. தமிழினம் வெற்றி பெற்றது என்றல் உங்கள் தமிழ் மொழி அதனை மேலும் கூட்டுகிறது. தமிழ்நாட்டைப் பாருங்க எவ்வளவு ஒத்துமையா ஒரு போராட்டம் அப்படினு வட இந்தியாவில் எல்லாரும் கண்திருஷ்டி போட்டுட்டாங்க..

    வரிகள் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.
      கண்திருஸ்டி பட்டது போல் தான் நடக்கும் சம்பவங்கள் இருக்கின்றன.
      இதையும் வெல்லும் நம்மினம்.

      நீக்கு