செவ்வாய், ஜனவரி 31, 2017

கிளிஞ்சல் பொறுக்கிய நாட்கள்


என்னதான் நடந்தது
டைரியின்
எழுதப்படாத பக்கங்களில்?

நீக்கிவிடலாம்
நினைவில் நிற்காத
நாட்களை
ஆயுட்கணக்கிலிருந்து
அடியோடு.

தினசரிக் காலண்டரின்
நேற்றாய்
கிழித்தெறிந்து விடலாம்
முத்தெடுக்கும் ஆசையில்
கிளிஞ்சல் பொறுக்கிய
நாட்களை.

கனவிலும் சாதிக்காமல்
கடந்துசென்ற காலத்தை
எப்படிச்  சேர்ப்பது
கணக்கில்?

வாழ்ந்து முடிப்பதும்
முடிந்தவரை வாழ்வதுமே
வாழ்வெனில்,
இன்னொரு பிறப்பு
இருப்பது நிஜமெனில்
இறைவா படைத்துவிடு
ஈசலாய் .

சிவகுமாரன் 

செவ்வாய், ஜனவரி 24, 2017

கொம்பைத் தீட்டிடடா


எங்கள் தமிழினம் எங்கள் தமிழினம்
  என்றே முழங்கிடடா- இனி
  இதுதான் போரிடும் முறையென உலகம்
  எங்கும் வழங்கிடடா.
பொங்கு தமிழரின் போர்க்குணம் கண்டு
   புவியே மலைக்குதடா -மீண்டும்
   புறப்படு புறப்படு போரிட இன்னும்
   போர்க்களம் அழைக்குதடா.

வெற்றிகள் கண்டு மயங்கி விடாதே
   வேலை இருக்குதடா -நமை
   வீழ்த்திடு வோரை விரட்டி அடிக்கும்
   வேளை பிறக்குதடா.
சற்றும் தளர்ந்து நின்று விடாமல்
   சரித்திரம் படைத்திடடா -உன்
   சந்ததி காக்க செந்தமிழ் வாழ
   தடைகள் உடைத்திடடா.

இத்தனை காலம் பொறுத்தது போதும்
   எதிர்த்து நின்றிடடா - இனி
   எல்லாம் உன்னால் மாறும்! வீதியில்
   இறங்கி வென்றிடடா.
மொத்தமாய் மாறிட தாமதம் ஆகும்!
   முயன்றால் முடியுமடா. -கண்
   முன்னே நடப்பதை தட்டிக் கேட்க
   முடிந்தால் விடியுமடா.

உண்ணக் கொடுத்தவன் வறுமையில் உயிரை
   விடுதல் முறையாடா? -நாம்
   உண்டு களிக்க உழவர் தம்மின்
   உடல்கள் இரையாடா?
தண்ணீர் இன்றி தற்கொலை செய்யும்
   தரித்திரம் துடைத்திடடா -அதைத்
   தடுக்க இயலாத் தடைகள் எல்லாம்
   தகர்த்து உடைத்திடடா!

தலைவனும் வேண்டாம் தொண்டனும் வேண்டாம்
   தமிழே போதுமடா -நாம்
   தம்மைத் தாமே ஆண்டால் கட்சித்
   தலைகள் மோதுமடா.
கலைந்தபின் மறந்திட வேண்டாம்! நெஞ்சில்
   கனலை மூட்டிடடா -தமிழ்க்
   காளையே இன்னும் களம்பல காண
   கொம்பைத் தீட்டிடடா.
 

சிவகுமாரன்

வெள்ளி, ஜனவரி 13, 2017

உழன்றும் உழவே தொலை

கடவுள் என்பவன் கால வயலில் 
நடவு செய்ய நினைத்து ஒருநாள்
இந்த நிலத்தில் எறிந்த விதைகளில்
நந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.
மேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.
ரோட்டோ ரத்தில்  வளர்ந்தவை பற்பல.
காற்றின் கைகளில் சிக்கித் தவித்து
சேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்
விழுந்தன அவையே உலகம் யாவையும்
எழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.
நந்த வனமும்  மேட்டுப் புறமும்
எந்த சூழலில் இருந்த போதும்
சோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்
சேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.
உழவர் நாங்கள் தின்ற மிச்சமே
உலகம் உண்ட காலமும் உண்டு.
புவியை ஏரால் புரட்டிப் போட்டு
கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.
ஏர்முனைப்  பேனா எடுத்த நாங்கள்
கூர்மணற் காகிதம் குத்திக்  கிழித்து
எழுதிய கவிதைக்  கீடாய் எவரும்
எழுதிய தில்லை இல்லவே இல்லை.
இன்றோ..
சுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்
கழன்று கொண்டார் காலப் போக்கில்.
எழுதிக்  கிழிக்க ஏர்முனை  இல்லை
உழுது விளைக்க காகிதம் இல்லை.
பச்சை வயல்கள் பட்டா வாகி
மச்சு வீடாய் மாறிப் போயின.
உழுது விளைத்த உழவு மாடுகள்
அழுது போயின அறுபட கேரளம்
பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்

பிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை
உழைக்க வேண்டிய அவசியம்  இல்லை.
தலையில் அடித்து தலைவர் சொன்னார்
ஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில் 
இலவசம் தொடரும் இலவசம் தொடரும்
செலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.
ரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி
வாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.
அடுத்த வருடம் இன்னும் வசதி 
அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
தூக்கிக் கொடுப்பார் தங்கத் தலைவி.
அன்ன பூரணி அல்லக் கையாள் 
சின்னம் மாவின் சேவடி பணிந்து 
கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
நல்லதாய் ஆப்பி(APP ) நாப்பதே எம்.பீ (MB)
ஜல்லிக் கட்டை டவுன்லோட் செய்வோம்.
வீடியோ கேமில் விரட்டிப் பிடித்து 
ஆடி மகிழ்ந்து அடங்கிப் போவோம் .
தைத் திருநாளா  தமிழர் திருநாள் ?
வைத்தான் ஆப்பு  வடக்குத் தலைவன் .
நாடு செழிக்க நல்லோர் வாழ 
வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் 
பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.   
சிவகுமாரன் 

ஞாயிறு, ஜனவரி 08, 2017

முரண்-டு -காளை




அடித்துக் கொல்லலாம்
அங்கம் அறுக்கலாம்.
தோலை உரித்து
தொழிலை வளர்க்கலாம்.
வெட்டிக் கூறிட்டு
வியாபாரம் செய்யலாம்.
வாங்கித் தின்று
வயிறு வளர்க்கலாம்.
கொம்பு சீவி 
குளிப்பாட்டி
மாலையிட்டு 
மணிகள்கட்டி
மந்தையில் விரட்டி
மகிழ்ந்து துரத்தி
தினவு ஏறிய
திமிலைப் பற்றி
ஆரத்தழுவி
ஆண்மைச் செருக்கில்
அடக்கி ஆளுதல்
.......……………………………
அய்யகோ அய்யகோ
அக்கிரமம் கொடுமை.
காட்டுமிராண்டிகள்
காட்டுமிராண்டிகள்.

சிவகுமாரன்