கவிஞர்.சுந்தரபாரதி
காரு போட்டு ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு
அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா ஒறவு சொல்லி
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா - இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
சாதி நம்ம சாதியின்னா தாயே சரணமின்னா
ஒங்க வீட்டுப் புள்ளையின்னா ஓட்டுப்போட வேணுமின்னா
ஓட்டுப்போட்ட கையோட சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
வீதியெல்லாம் தோரணங்க வெதவெதமா கொடியைக்கட்டி
சாலையெல்லாம் தூள்பறக்க சரஞ்சரமா "பிளேசர்" விட்டு
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
மல்லுவட்டுத் துண்டு போட்டு மைக்குவச்சு விளம்பரங்க
வாழ்வு மலருமின்னா வறுமை தொலையுமின்னா
போடுங்கம்மா ஓட்டுயின்னா பொடலங்காயைப் பாத்துயின்னா
ஓட்டுக் கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
ஏழை எளியதுக எல்லார்க்கும் நன்மையின்னா
வேலை கெடைக்குமின்னா வெலைவாசி குறையுமின்னா
சாலை தெருவிளக்கு சர்க்காரு வசதியின்னா
போட்ட வெளக்கு கூட சின்னாத்தா -இப்போ
பொசுக்குன்னு நின்னுபோச்சே என்னாத்தா?
மல்லுவட்டுத் துண்டு போட்டு மைக்குவச்சு விளம்பரங்க
வாழ்வு மலருமின்னா வறுமை தொலையுமின்னா
போடுங்கம்மா ஓட்டுயின்னா பொடலங்காயைப் பாத்துயின்னா
ஓட்டுக் கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
ஏழை எளியதுக எல்லார்க்கும் நன்மையின்னா
வேலை கெடைக்குமின்னா வெலைவாசி குறையுமின்னா
சாலை தெருவிளக்கு சர்க்காரு வசதியின்னா
போட்ட வெளக்கு கூட சின்னாத்தா -இப்போ
பொசுக்குன்னு நின்னுபோச்சே என்னாத்தா?
தாலிக்குத் தங்கந்தாரேன், தாளிக்க வெங்காயந் தாரேன்
கூலிக்கு வேலை தாரேன் கூப்பிட்டாக்க ஓடிவாரேன்
ஆட்சிக்கே வந்துட்டாக்க அத்தனையும் செஞ்சு தாரேன்
ஓட்டுபோட வேணுமின்னா சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
வானம் மழை பெய்யவில்லை வயக்காடும் வெளயவில்லை
கையிலே காசுமில்லை கடங்கொடுக்க யாருமில்லை
குண்டி கழுவக் கூட சின்னாத்தா -இப்போ
குளத்திலயும் தண்ணியில்லே என்னாத்தா?
குடிக்க இப்போக் கூழுமில்லே குடிசையில வெளக்குமில்லே
கோதுமைக்கும் மண்ணெண்ணைக்கும் கூட்டம் குறையவில்லை
அங்காடிக் கார்டுக்கு அரிசி கெடைக்கவில்லை
எறகு மொளச்ச விலை இன்னும் இறங்கவில்லை
ஓட்டுக் கேக்க வந்தாங்களே சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங் காணலியே என்னாத்தா?
5 கருத்துகள்:
1975 to 80 ஆண்டுகளில் என் சித்தப்பா, மக்கள் கவிஞர் சுந்தர பாரதியால் எழுதப்பெற்று , பல கவியரங்கங்களில் பாடப்பட்டு, பின்னாளில் த.க.இ.பெ , த.மு.எ .ச போன்ற அமைப்புகளின் கலை இலக்கிய இரவுகளில் பாடப்பட்ட கவிதை இது. புதுவை பல்கலைக் கழக நாட்டுப்புற இயல் பேராசிரியர் திரு
K A.குணசேகரன் அவர்கள் தொகுத்த அக்கினிஸ்வரங்கள் என்னும் கவிதைத் தொகுப்பில்1982 இல் வெளியானது.பல நாட்டுப்புறக் கலைஞர்கள் இன்றளவும் பல மேடைகளில் பாடிவருவது. என் சித்தப்பாவுக்குத் தெரியாமல் அப்போதே சிலர் கேசட்டில் வெளியிட்டு காசாக்கியதும் நடந்தது.
சென்ற மாதம் ஒரு தொலைக் காட்சியில் ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர்,எங்கள் மாவட்டத்துக்காரர் என் சித்தப்பாவை நன்கு அறிந்தவர், ஏதோ தான் எழுதிய பாடல் போல இந்தப் பாடலை சிலாகித்துப் பாடியிருக்கிறார். பார்த்துக் கொண்டிருந்த என் சகோதரனுக்கு கண்ணீர் பெருகியது.
இது போல் எத்தனையோ பாடல்கள் கவியரங்கங்களில் இடையிடையே என் சித்தப்பா பாடுவார். கேட்கும் கூட்டம் மெய் சிலிர்த்துப் போகும். நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் விம்முகிறது, கண்ணீர் பெருக்கெடுக்கிறது. கவியரங்கத்தில் அவர் பாட கீழே அமர்ந்து கண்ணீர் மல்க கைதட்டிய காலம் நெஞ்சில் நிழலாடுகிறது. அவர் தலைமையில் கவியரங்கங்களில் பாடிய நாட்கள் என் கவிவேட்கையின் ஆரம்ப காலம். வாழ்வில் பெரிதாய் சாதித்து விட்டதாய், இன்னும் சாதிக்கப் போவதாய் நான் நம்பிய பொன்னான தருணங்கள் அவை.
" நாங்கள் பயணம் போவது நெடுந்தூரம் -அந்தப்
பாதையில் தெரியுது எதிர்காலம் "
அந்த மகா கலைஞனின் குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..
பயனம் தூரம் தான் ! ஆனாலும் எதிர்காலம் தெரியத்தானே செய்கிறது ! சிவகுமாரா ! பயணிப்போம் இணைந்து ! நிச்சயம் இலக்கை அடைவோம் ! பாதையிண் ஓரமாய் நான் வீழ்ழ்ந்தால் என்ன ?தோழனே !நீ யும் உன் சந்ததியும் ,என் பேரப்பிள்ளைகளும் வந்து அடையத்தான் செய்வார்கள் ! நம்பிக்கையொடு முன்னேறு ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
கவிதையும் உங்கள் பின்னூட்ட விளக்கமும் சிலிர்ப்பு .
நன்றி காஸ்யபன் அய்யா. நன்றி அப்பாஜி
சிவா! கவிதை அருமை! காணொளியாக பதிவு செய்ய வில்லையா
கருத்துரையிடுக