ஞாயிறு, நவம்பர் 28, 2010

உயர....உயர....



நான்
ஊர்க்குருவி தான்.
நான்
உயரப் பறப்பதில் 
கொஞ்சம் 
உயரப் பார்ப்பதில்
என்ன தவறு ?

நான்
பறக்கும் போது மட்டும்
உங்கள் 
பார்வையில் ஏன் 
ஓர் இனம்புரியாத
இளக்காரம்?

நீங்கள் சொல்லலாம்
" உயர உயரப் பறந்தாலும்....."
என்று.
ஆனால் நண்பர்களே
எனக்கும் சிறகுகள் இருக்கிறதே,

பரந்து விரிந்த வானம்
பருந்துகளுக்குத் தானென்றால்
சின்னஞ்சிறு குருவி எனக்கு
சிறகுகள் எதற்கு ?

என் மேனியில் 
முளைத்த சிறகுகள் 
முடங்கிவிடக் கூடாதே 
என்பதற்காக நான்
பறந்து பார்க்கிறேன்
நீங்கள் ஏன்
பருந்து பார்க்கிறீர்கள் ?

தவறு 
நான் பறப்பதில் அல்ல.
நீங்கள்
பார்ப்பதில் தான்.

ஒன்றைப் 
புரிந்து கொள்ளுங்கள்.
நான் ஒருபோதும்
பருந்தாக வேண்டியதில்லை
ஆனால் நிச்சயம்
பறந்தாக வேண்டுமே.

                             --சிவகுமாரன் 


.


வியாழன், நவம்பர் 25, 2010

காதல் வெண்பாக்கள் 12

                    
                                             உருபு மயக்கம் 
                                      ஆரஞ்சுத் தேன்சுளையா !
   அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
  கோவையா- யார்தான் 
பவளத்தைக் கீறிவைத்தார்
   பார்ப்போம் ! அடடா
                                       அவளின் இதழா
                                              அவை.


       மாது மயக்கம் 
அதுவென்ன உன்விழிக்குள்
  ஆளை இழுக்கும்
மதுக்கிண்ணப் போதை
  மயக்கம் ? - எதுக்கும்
தனியாகச் செல்லாதே
   தேனில் திராட்சைக்
கனியாகத் தோன்றும்உன்
      கண்.



திங்கள், நவம்பர் 22, 2010

வளர்சிதை மாற்றங்கள்

வருடக் கடைசியில்
காலண்டரை
கழற்றும் போதுதான்
தெரிகிறது,
"இவ்வளவு
வெள்ளையாகவா இருந்தது
என் வீட்டுச் சுவர்?"


ஒவ்வொரு நாளும் நான்
உருமாறிக் கொண்டுதான்
இருக்கிறேன்.
அடிக்கடி
கண்ணாடி பார்ப்பதால்
என் தேகமாற்றம்
எனக்குத் தெரியாமலே
போய்விடுகிறது.

கண்கள் ஒன்று போலத்தான்,
பார்வைகள்தான் பலவிதம்.
எடை குறைக்க
நடைபயிலச் சொன்னார்
மருத்துவர்.
எத்தனை கிலோ ஏறினாலும்
இளைத்துப் போயிருப்பதாகத் தான்
சொல்வாள் அம்மா.

கிளைகளை பலரும்
கிள்ளி விடுவதால்
என்னில்
வேர்கள் மட்டுமே
வளர்ந்து கொண்டிருக்கின்றன.

வளர்ச்சி என்பது
இங்கு
கிளைகளைக் கொண்டே
கணக்கிடப் படுவதால்
நான் இன்னும்
அரைகுறையாகவே
காட்சி தருகிறேன்.

பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...?
                         
                           - சிவகுமாரன்



வெள்ளி, நவம்பர் 19, 2010

சிலம்பின் புலம்பல்


கண்ணகி பேசுகிறேன் கண்ணீரால் விழியிரண்டும்
புண்ணாகிப்    போனகதை புலம்பித் தீர்க்கின்றேன்  


ஆதிக்க ஆணுலகின் ஆங்காரப்  போக்குகளால்
பாதிக்கப் பட்டமகள் பாடிப் புலம்புகிறேன்


மாசறு பொன்னென்றும் வலம்புரி முத்தென்றும்  
ஆசை மொழிகேட்டு அறிவிழந்து நான்போனேன்


கட்டிய கணவன் கைவிட்டுப் போனபின்னும்
தட்டிக் கேட்கவில்லை தலைவிதியை நொந்திருந்தேன்


தாலிமட்டும் கட்டிவிட்டு தவிக்கவிட்டுச்  சென்றவனை
வாலிபத்தின் முறுக்கேறி வரம்பின்றி அலைந்தவனை 


ஏனென்று ஒருவார்த்தை எதிர்த்தன்று கேட்டிருந்தால் 
நானென்றோ சரித்திரத்தில் இடம்மாறி போயிருப்பேன்


ஆடிய மாதவியின் அழகில் மனம்மயங்கி
ஓடிய கோவலனை ஒருவார்த்தை கேட்கவில்லை


வேல்விழியை மறந்துவிட்டு வேறொருத்தி பின்னாலே
கால்கள் தடுமாறியென் கணவன் சென்றபோது


நில்லென்று ஒருவார்த்தை நிற்கவைத்து அவனிடமே
சொல்லொன்று தாலிக்குச்  சொல்லிவிட்டுப் போவென்று


கொஞ்சம் மனந்துணிந்து கோபமாய்க் கேட்டிருந்தால்
நெஞ்சின் நெருப்பலைகள் கொஞ்சம் குறைந்திருக்கும்


ஆனால்.....


கற்பரசி பட்டமிந்த கண்ணகிக்கு கிடைக்காது.
சொற்கோ இளங்கோவும்  சொல்லாமல் விட்டிருப்பான்.


எல்லாத் துயர்களையும்  ஏற்றுத்தன்   இதயத்தைக் 
கல்லாக்கிக் கொண்டதினால்  கற்பரசி எனச்சொன்னார்.


வாயில்லாப் பூச்சியென வாழ்ந்திருந்த காரணத்தால்
தாய்க்குலமும் எனையின்று தலைவணங்கிச் செல்கிறது.


வீசப் பட்டபோது வேதனையைத் தாங்கியதால்
பேசப் பட்டேன்நான் பெண்கள் திலகமென.


நாயாக வாலாட்டி நானிருந்த காரணத்தால்
வாயார எனக்கின்று  வாழ்த்துப்பா  பாடுகிறார் .


தன்மானம் இல்லாமல் தலைகுனிந்து வாழ்ந்தால் தான்
பெண்மானம் இவ்வுலகில் பேசப் படுமன்றோ !


பெண்ணடிமைக் கொடுமைக்கு பெரியதொரு சான்றாக
என்னைப்போல் இன்னொருத்தி இவ்வுலகம் கண்டதில்லை.


காவியத்தில் இடம்பெற்றேன், கட்டியவன் இதயத்தில்
ஓவியமாய் வாழ்ந்தேனா? ஓர்நாளும் மகிழ்ந்தேனா ?


மாதவிக்கு மேகலையை மகிழ்வோடு தந்தானே
ஆதரவாய் எந்தனுக்கு அணுவேனும் தந்தானா ? 


வசந்த காலத்தில் வாழ்க்கையைத் தொலைத்தவன்
கசந்த காலமிந்தக்  கண்ணகியைத் தேடி வந்தான்.


வேசியின் வலையிலே வீழ்ந்து கிடந்தவன்
காசின்றிப் போனதுமென் கால்களை நினைத்திட்டான்.


அன்பை அவளுக்கு அள்ளிக் கொடுத்தவன்
துன்பம் வந்ததுமென் துணைகேட்டு ஓடிவந்தான்.


மற்ற நகைவிற்று மானத்தைத் தொலைத்தவன்
ஒற்றைச் சிலம்புக்கு உயிரைப் பறிகொடுத்தான்,


காற்சிலம்பு மட்டுமெந்தன் கைவசத்தில் இல்லையெனில்
ஊர்ச்சந்தை தனிலென்னை விற்றிருப்பான் யார்கண்டார் ?


யார்மீது நான்கொண்ட அடங்காத கோபத்தால்
மார்பைத் திருகியந்த மதுரைக்குத் தீவைத்தேன் ?


கோவலன் மீதிருந்த கோபத்தை மாமதுரைக்
காவலன் மேல்தானே காட்டநான்  முடிந்தது.


எனக்குள்ளே பலகாலம் எரிந்துவந்த நெருப்பன்றோ
சினம்கொண்டு ஊரையே சுட்டெரித்துப் போட்டது !


மங்கையரில் எனைமட்டும் மாணிக்கம் எனச்சொல்லும்
தங்கையரே என்பேச்சை தட்டாமல் கேளுங்கள்.


மண்ணில் அதுவுமிந்த மாநிலத்தில் நாமெல்லாம்
பெண்ணாகப் பிறந்துவிட்ட பெரும்பாவக் குற்றத்தால்,


அழுகைத் தண்டனையை அனுபவிப்பது தானா 
எழுதப்  படாத  இ.பி.கோ.  நமக்கெல்லாம் ?


அச்சம் மடம் நாணம் அத்தனையும் நெஞ்சத்தின்
உச்சத்தில் இருக்கட்டும் ! உரிமையினை இழக்காதீர்!


பரத்தையரை நாடுகின்ற பாவியரின் செயல்கண்டு
சிறுத்தையென சீறுங்கள் : சீயென்று தள்ளுங்கள்.


கற்பென்னும் முள்வேலி கன்னியருக்(கு) உண்டென்றால்
அற்பமான ஆணென்ன அவிழ்த்துவிட்ட வெள்ளாடா ?


ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு உடலோய்ந்து வருபவனை
சீராட்ட நாமென்ன செஞ்சிலுவைத் தாதிகளா ?


வக்கில்லா ஆணுக்கு வாழ்க்கைப் பட்டுதினம்
செக்கிழுக்கும் மாடுகளாய் செத்துவிழப் பிறந்தோமா ?


ஓட்டுக்குள் உடல்சுருக்கி உயிர்வாழும் ஆமையென 
வீட்டுக்குள்  நாளெல்லாம் வெந்துவிழப் பிறந்தோமா ?


அடங்கிக் கிடப்பதற்கும் அடிமையென வாழ்வதற்கும்
முடங்களா நாமெல்லாம் ? முகங்கள் நமக்கிலையா ?


ஆடவனுக் கொருநீதி அளிக்கிக்ன்ற தேசத்தின்
கேடுகெட்ட சட்டங்கள் கிழிந்தொழிந்து  போகட்டும்.


பெண்ணினத்தை அடிமையென்னும் பேய்க்கூட்ட வாதங்கள்
மண்ணுக்குள் மண்ணாகி மட்கட்டும் ! மாளட்டும் !


அறைக்குள்ளே அடிமைகளாய் அடைபட்டுக் கிடப்போர்கள்
சிறைக்கதைவை உடைத்தெறிந்து சிறகுதனை விரிக்கட்டும்.


விரிக்கும் சிறகுதனை வெட்டத் துடிப்போர்கள்
எரிக்கும் நெருப்புக்கு இரையாகிப் போகட்டும்.


மதுரைக்கு நான்வைத்த மார்பகத்து நெருப்பின்னும்
கொதிப்போ டிருக்கிறது, கொளுத்துங்கள் பாவிகளை.

                                                                              ---- கண்ணகி  

திங்கள், நவம்பர் 15, 2010

காதல் வெண்பாக்கள் 10

                   மனசு 

கன்னல் மொழிபேசி காதலித்துக் கைவிட்டாய்.
உன்னைப் பிரிந்தாலும் உண்மையில் - என்னிடம்
கள்ளத் தனமில்லை, காதலும் பொய்யில்லை,
பிள்ளைக்கு வைப்பேன்உன் பேர்.

              திண்மை

தாலிகட்டிப் போனபின்பும் தாடி வளர்த்திட்டு
வேலிதாண்ட எண்ணும் வெறும்பயலே - கூலிக்கு
மாரடிக்க கட்டவில்லை மாங்கல்யம்-என்வாழ்வை
நாறடிக்க வேண்டாம் நகர்.

                                            -சிவகுமாரன்

சனி, நவம்பர் 13, 2010

ஹைகூ கவிதைகள் 30

பஞ்சம்தான் எங்கும்
ஆனாலும் மழை  வேண்டாம்
வீடு சேரும் வரை.


நிறைமாத கர்ப்பிணியாய்
வாசலிலேயே
தோரண வாழை.


ஊருக்குப் போன
மனைவியின் ஞாபகம்.
கடையடைப்பு.


எம்.எல்.ஏ. இறந்தார்
இதயம்  குளிர்ந்தது
இடைத்தேர்தல்.

குறுக்கே புகுந்த பூனை
அடிபட்டு இறந்தது.
சகுனம்.....?

                        -சிவகுமாரன்

வெள்ளி, நவம்பர் 12, 2010

ரசிகர்கள்

கொஞ்ச நாட்களாய்.....
வெண்ணிலவு வானம் விட்டு
வெளிவருவதே இல்லை

விண்மீன்கள்
தரையில் விழுந்து
தற்கொலை செய்து கொள்கின்றன.

இரவிலும் கூட
சூரியன் சுள்ளென்று
சுட்டெரிக்கிறது.

கருத்த  வானம் கூட
கண்ணீர் விட்டு
கதறி அழுகிறது.

என் கொல்லைப்புறத்து
குயில் குஞ்சு
கோபம்கொண்டு
கூவ மறுக்கிறது.

வழக்கமாய்
என்னைப் பார்த்ததும்
வாலாட்டும்
என் செல்ல நாய்
வாலைச் சுருட்டிக்கொண்டு
வள்ளென்று குரைக்கிறது

இப்போதெல்லாம்
எனக்குள் இருக்கும் நான்
என்னோடு
முகம் கொடுத்து
பேசுவதே  இல்லை.

அட ஆமாம்....
நான்
கவிதை எழுதி
 நாட்கள்
பலவாகிவிட்டது.

                             -சிவகுமாரன்.

திங்கள், நவம்பர் 08, 2010

இணையில்லாத் தமிழ்

முல்லை இதழ்விரிக்கும் அழகும் - வான்
  முகில்கள் நடைபயிலும் விதமும் -கடல்
எல்லை கடந்து நிற்கும் எழிலும் - மலை
  எங்கும் படர்ந்து நிற்கும் பனியும்- கருங்
கல்லை கனிய வைக்கும் இசையும் - மங்கை 
  கண்கள் வீசும் பேரொளியும் - என்றும்
இல்லை தமிழுக்கிணை இல்லை - இதை 
  எங்கும் பறையறைந்து சொல்வோம்.


புல்லை நிமிர வைக்கும் புறமும் - கொடும்
  புலியை நெகிழ வைக்கும் அகமும் -எதையும் 
வெல்லும் திறம் படைத்த குறளும் - பாண்டி 
  வேந்தன் உயிர் குடித்த சிலம்பும் - பெரும்
வில்லை உடைத்தெறிந்த  இராமன் - தன்
  வீரம் உணர்த்தும் கம்பன் கவியும் - என்றும்
நில்லும் உலகம் உள்ள மட்டும்  - இதை
  நினைக்கும் தமிழர் நெஞ்சம் நிமிரும்..


மண்ணின் கவிஞன் பா ரதியின் - சிந்தை 
  மயக்கும் பாடல்களின் சுவையும்-அந்த
விண்ணை கவிதை கொண்டு இடித்த- பா
  வேந்தன் படைத்த தமிழ் அமுதும்- எங்கள் 
கண்ண தாசன் என்னும் கவிஞன் - அன்று
  கலக்கிக் கொடுத்த தமிழ் மதுவும்-தினம்
உண்டு உடம்பு தனை வளர்த்தோம் - எங்கள்
  உயிரை  தமிழுக்கென நினைத்தோம், 

விண்ணில் மிதக்கும் மீனியலும் - அங்கு 
  வெடித்துச் சிதறும் கோளமைப்பும் - நாம்
பண்ணும் காரியங் களெல்லாம்  - நொடிப்
  பொழுதில் முடிக்கும் கணிப் பொறியும்- இன்னும்
என்ன புதுமையெல்லாம் உண்டோ - அவை
  எல்லாம் தமிழில் வரச் செய்து - இந்த
மண்ணின் மூலை முடுக்கெல்லாம் -தமிழ்
  முழக்கம் கேட்கும்வகை செய்வோம்.  

முன்னைப் பழம்பெருமை பேசி - வெறும்
  மேடைக்  கூட்டமிட்டு முழங்கி - முன்பு
சொன்ன கதைகளையே மீண்டும் - தினம்
  சொல்லிப் புலம்பித் திரியாமல் - இனி
இன்னும்   இலக்கியங்கள் கோடி- உயர்
  இன்பத் தமிழ்மொழியில் ஆக்கி - தமிழ்
அன்னைத்  திருவடியில் சாற்றி  - அதை
  அகிலம் தலை வணங்கச் செய்வோம்.

இந்தி தெலுங்கு மலை யாளம் - போன்ற
  எல்லா மொழிகளுக்கும் தாயாய் - என்றோ
முந்திப் பிறந்த எங்கள் தமிழை - யாரும்
  மூடிப் புதைத்துவிட நினைத்தால் - வரும்
எந்தத் தடைகளையும் தாண்டி - வெறி
  எழும்பி எதிர்த்துப்  போராடி- இரத்தம்
சிந்தி உயிர்கொடுத்தும் எங்கள் - உயர்
  செம்மைத் தமிழ் மொழியை காப்போம்.

                                                               -சிவகுமாரன்

( எட்டாவது  உலகத்தமிழ் மாநாட்டு மலரில் வெளியானது

புதன், நவம்பர் 03, 2010

தீக்குச்சி விரல்கள்

நாங்கள்
விளக்கைத் தேடிய
விட்டில்கள் அல்ல.
விளக்கின் மீதே
வீசப்பட்டவர்கள்.


படிப்புச் சூரியனை
பார்க்க முடியாமல்
வெடிப்புச் சிவகாசியில்
வெந்து போனவர்கள்.


நாங்கள்
யாருக்கோ வெளிச்சம் தர
எங்கள் எதிர்காலத்தையே
இருட்டாக்கிக் கொண்டவர்கள்.


உங்கள்
தீபாவளிக் கொண்டாட்டத்தில்
கருகிப் போனது
மத்தாப்புக்கள் மட்டுமல்ல
எங்கள் 
வருங்காலமும்  தான்


எங்கள் பிஞ்சுக்கரங்களில்
மருதாணிக்குப் பதிலாய்
கந்தகமும் பாஸ்பரசும்


எங்கள் வளர்ச்சியை
பறைசாற்றும்
வரலாற்றுச்  சின்னங்களாய்
விரல்களில் கொப்புளங்கள்.


நாங்கள்
உண்ணக் கைஎடுத்தால்
விரல்களுக்குப் பதிலாய்
தீக்குச்சிகள்.
களைத்துப் படுத்தால்
கருவிழிக்குப் பதிலாய்
கந்தகத் துகள்கள்.


நாங்கள் என்ன
நரகாசுரன்களா?
பிறகேன் 
எங்களை எரித்துவிட்டு
இனிப்பு தின்கிறீர்கள் ?

                      -சிவகுமாரன்.

(அண்மையில் நடந்த பட்டாசு விபத்தில் பலியான பிஞ்சு மலர்களுக்கு காணிக்கையாய்.)

.

செவ்வாய், நவம்பர் 02, 2010

பதவி அரிப்பு

மதுரைக்கு அழகிரி
சென்னைக்கு ஸ்டாலின்

தில்லிக்கு கனிமொழி
கொள்ளைக்கு தயாநிதி

வாக்களிக்க மக்கள்
தீக்குளிக்க தொண்டன்

தமிழா உனக்கு
டாஸ்மாக் இருக்கு.

தாய்க்குலமே உனக்கு
ஃப்ரீடீவி இருக்கு.

மழுங்கடிக்க இருக்கு
மானாட மயிலாட.

மறக்கடிக்க இருக்கு
மாநாட்டுக் கூத்து.

ஈழமா இனமா
இருகாதும் பொத்து.

வாசிக்க இருக்கு
முரசொலி கடிதம்

யோசிக்காதே மேலே
தப்பு! தப்பு!

மூளையை கழட்டி
மூலையில போடு.

நாளைய பாரதம்
நம்ம கையில.

பதவிகள் எங்கள்
பரம்பரை சொத்து.

தாங்கிப் பிடிக்க
தமிழன்னை இருக்கா.

வீல்சேரே கதின்னாலும்
விடுவோமா நாங்க.

                            -சிவகுமாரன்

திங்கள், நவம்பர் 01, 2010

ஹைகூ கவிதைகள் 25

வீணாய்ப்போகிறது மழை.
குறுக்கும் நெடுக்குமாய்
அம்மா.


கல்லெறிந்து நிலவை
காயப்படுத்தியது யார் ?
நீருக்குள் நிலவு.


கொட்டித்தீர்க்கும் மழை.
கும்மாளமிடலாம் குஷியாய்
அம்மா ஊருக்கு.


சாலையில் விபத்து
வேண்டிக்கொண்டது மனம்.
தெரிந்தவராய் இருக்கக்கூடாது.

தாடி வளர்த்த தாத்தா
பிடித்திழுக்கும் பேரன்.
ஆலவிழுதில் குரங்கு.

                      -சிவகுமாரன்