ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது
அல்லல் போயிற்றா? - பல்
ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்
அவலம் போயிற்றா ?
மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும்
மேன்மை தெரிகிறதா ? - இல்லை
மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய்
மேலும் தொடர்கிறதா?
நேற்றைப் போலே இன்றும் இருந்தால்
நாளைக்கென்ன பயன்? - அட
நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம்
நிலத்திற் கென்ன பயன் ?
காற்றைப் போலே காலம் எல்லாம்
வீசிட வேண்டாமா? - நம்
காலம் முடிந்து போனதும் நம்மைப்
பேசிட வேண்டாமா ?
நாற்றமெடுத்த சமுதாயத்தில்
நமக்கு பங்கென்ன ? - அட
நன்றாய் மூக்கைப் பொத்திக் கொண்டு
நகர்வோம் வேறென்ன ?
மாற்றம் பிறக்க மகேசன் என்ன
மண்ணில் பிறப்பானா ? - நம்
மந்தையை மேய்க்க மாயக் கண்ணன்
மறுபடி வருவானா ?
ஆண்டு பிறந்ததை கொண்டா டிடவோர்
சபதம் எடுப்போமா ? - நமை
ஆண்டு கொழுத்திடும் அரக்கரின் மேலொரு
அம்பு தொடுப்போமா ?
கூண்டினில் ஏற்றி அவர்தம் முகத்திரை
குத்திக் கிழிப்போமா ? - நமை
கொள்ளை அடிப்போர் கூடாரத்தை
கூடி அழிப்போமா ?
ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த
ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?
உதறிட வேண்டாமா ?
நாட்டுப் பற்றுள யாரும் லஞ்சம்
வாங்கிடத் துணிவாரா ? -இந்த
நாட்டைப் பிடித்த நச்சாம் அதனை
நசுக்கிட வேண்டாமா ?
கோடிக் கணக்கில் கொள்ளை அடித்து
குவித்ததை மீட்போமா ?- அங்கே
குவிந்ததை எல்லாம் கொணர்ந்துநம் வறுமைக்
கோட்டை அழிப்போமா ?
கூடித் திருடும் கொள்ளையர் வீழ
குழிபறித் திடுவோமா - வெறுங்
கூச்சல் போட்டு பலனிலை ; அதற்கோர்
கொள்கை வகுப்போமா ?
உண்ணா விரதம் ஊர்வலம் தாண்டி ஓர்
உறுதி எடுப்போமா ? இனி
ஊழல் லஞ்சப் பேய்களை எல்லாம்
உலுக்கி எடுப்போமா?
அண்ணா காட்டிய வழியில் வந்தோர்
ஆட்டம் தடுப்போமா ? - இனி
அன்னா காட்டிய வழியில் ஒன்றாய்
அணிவகுத் திடுவோமா ?
புத்தாண்டு வாழ்த்துக்கள்
-சிவகுமாரன்