வெள்ளி, மே 18, 2012

காதல் வெண்பாக்கள் 32



அபாயம்

என்னைக் குருடாக்கி ஈர்க்கும் இருவிழிகள்!
மின்னல் தெறித்தாற்போல் முத்துப்பல்!-கன்னத்தில்
தப்பிப் பிழைக்கத் தகையின்றிச் செய்தென்னைக்
குப்புறத் தள்ளும் குழி.








அபயம்

காற்றில் பறக்கும் கருங்கூந்தல்! செங்கரும்புச்
சாற்றாய் இனிக்கும் செவ்விதழ்"கள்" - மாற்றுக்
குறையாத பொன்மேனி கொண்டென்னைத் தாக்கி
சிறையிட்டாள் மெல்லச் சிரித்து.




-சிவகுமாரன்

வெள்ளி, மே 11, 2012

அகம்-புறம் விளம்பரம்

காந்திஜி நேருஜி
நேதாஜி ராஜாஜி
படிச்சாச்சு மறந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு
2G 3G.

காமாராஜர் ஈ.வெ.ரா,
கக்கன் ஜீவா
எல்லோரும் சும்மா
நேர்மைன்னா " ஹமாம்"

கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே
ஆசை அறுமின்
எழுமின் விழிமின்
அன்பே சிவம்
அச்சம் தவிர்
கேட்டது போதும்
கெட்டது போதும்
கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
சூரியன் FM 93.5

பஸ் கட்டணம் உயர்வு
பால்விலை ஏற்றம்
கல்விக் குளறுபடி
கரண்டுக்கு அடிதடி
எல்லாம் "கூல்"
ரேடியோ மிர்ச்சி
செம "ஹாட்" மச்சி.


தன்னம்பிக்கை உழைப்பு
நேர்மை திறமை
எல்லாம் தூக்கி
குப்பையில போடு
ஃபேர் & லவ்லி அள்ளிப் பூசு.
ஆறே வாரத்தில்
சிவப்பாகிக் காட்டு
அத்தனை பேரையும்
ஜெயித்துக் காட்டு.


குடல் கருகுது
குண்டி காயுது
உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்.
உரிமைப் போராட்டம்
உரக்க அழைக்குது
கல்யாண் ஜூவல்லர்ஸ்.


சத்யம் சிவம் சுந்தரம்.
சர்வம் -மீடியா -விளம்பரம்.

-சிவகுமாரன்

சனி, மே 05, 2012

ஹைக்கூ முத்தங்கள் 55



சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
இயற்கையின் முத்தம்.









காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.












தெளிவின் கதவை
திறக்கும் சாவி
அறிவின் முத்தம்.










இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.









இருப்பின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவின் முத்தம்.






-சிவகுமாரன்

நன்றி:
ஈற்றடி கொடுத்து எழுதத் தூண்டிய அப்பாத்துரைக்கு

இன்னும் முத்தங்கள் பெற இங்கே செல்லவும்.

செவ்வாய், மே 01, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 6

              வாமனர்கள்
                வாமனர்கள்
             வாமனர்கள்
       வாமனர்கள்
 வாமனர்கள்






வீரியம் மிக்கதோர் வீரக் கவிதையால்
காரிருளை நாமே களைந்தெறிவோம் - சூரியனை
எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
தொட்டுவிடும் தூரத்தில் தான்.






நந்தமிழ் தன்னை நசுக்கும் கயவரை
நிந்தனை செய்வோம் நெருப்பாகி - செந்தமிழை
விற்போரின் கூட்டம் வெருண்டோடும் எங்களது
முற்போக்குக் கொள்கையின் முன்.

வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாடவந்த மாகவிகள் - சாணுடம்பு
வாமனர்கள் நாங்கள் வளரத் தொடங்கினால்
மாமலையும் எம்முன் மடு.

                                -சிவகுமாரன்



( 01.05.1998 புதுகை த,மு.எ.ச மாவட்ட மாநாட்டில் பாடப்பெற்ற கவிதை.)