நாட்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 06, 2017

வலி


வண்டு துளைக்கையில்
வலி பொறுத்த
கர்ணனும்,
அம்புப் படுக்கையில்
அரற்றாத பீஷ்மனும்,
தசையறுத்துத்
தராசில் வைத்த
சிபியும்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
சூட்சுமம் ஒன்றை.
வலி தாங்குதலே
வலிமை என்று.

சருகை உதிர்த்த
மரத்தின் வலியும்
சிறகை உதிர்த்த
பறவையின் வலியும்
கண்டுணர
நீ
கவிஞனாக வேண்டியதில்லை.
காயம் படு போதும்.

                                                                                                                                                      
சிவகுமாரன்
06.11.2017

ஞாயிறு, மார்ச் 13, 2016

மயிலைத் தேடிய மழை



நீயிருந்து பெய்தமழை 
   நேற்று வந்தது-இங்கு
   நீயில்லாமல் என்னைக்கண்டு 
   திகைத்து நின்றது.

வாயில்வரை வந்துபின்னே 
   வரமறுத்தது-என்
   வாசல்சன்னல் கதவுடைத்து 
   வேகங்கொண்டது

கோயிலுக்குள் சிலையைத் தேடி 
    கோபம் கொண்டது-தன்
    கோபம்காட்ட வீதியெங்கும் 
    கொட்டித் தீர்த்தது.

போயிருக்கும் மழைமீண்டும் 
    தேடிவந்திடில்- என்ன
    பொய்யுரைத்து நான்பிழைப்பேன் 
    பெண்மயிலே சொல்.
சிவகுமாரன்
13.03.16
                 

வியாழன், பிப்ரவரி 18, 2016

கடல் தாண்டும் காலம் (:



இறைவனடி விரையும் 
ஆன்மா அறியுமா
கடல் தாண்டி 
கண்டம் தாண்டி 
பிழைக்கப் போனவனின் 
சொல்லியழ முடியா 
சோகம்?

 காலம் மறக்கடித்துப் போன
சோகத்தைத்
தோண்டிஎடுத்துத்
துயர் கொள்ள வைக்கிறது
வெளிநாடு சென்று
திரும்பியவனின்
துக்க விசாரிப்பு.

கண்ணியம் தருகிறது
புண்ணியம் சேர்க்கிறது
கர்வம் தருகிறது
கடன் தீர்க்கிறது
.....................
பதிலாய்
ஈடு  செய்ய இயலா
காலத்தைக்
கபளீகரம் செய்கிறது
கடல்கடந்து தேடிய
காசு.

கடல்தாண்டி வரும் காசு
கணக்கில் வராது
என்னும் மாயையில்
மறைந்து போய் விடுகிறது
கடல் தாண்டியவனின்
கணக்கில் வாராத
காலம்.

அறுசுவை ஆயினும்
கடல் தாண்டியவனின்
விருந்தில்
சற்றே தூக்கலாய்
கரிப்பு.

சிவகுமாரன் 
16.02.2016


ஞாயிறு, ஜூன் 28, 2015

ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு.


திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்
நரைதோன்றிய  பின்னேதான் நமக்கு உறைக்கிறது

வெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை
களிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.

பணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்
மனக்கோட்டை  கட்டும் மனிதன்  நானில்லை

வாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ
தூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ

சொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்
பெத்தமகன் என்பெருமை  பேசும்படி ஆவேனோ

ஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச்  செல்லரிக்க
வேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்

பாரங்கள் இறக்கிவைக்கப்  பயணம் தொடங்குகிறேன்
தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.

அன்பு மனைவியை அறிவான பிள்ளையை
வன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்

மெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்
வலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.

 அருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து
பொருள்தேடிப் பறக்கின்றேன்  பூவுலகில் வாழ்வதற்கு.

இல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ
பொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.

ஒன்றை இழந்தால்தான்  இன்னொன்று கிடைத்திடுமாம்
ஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ  இழக்கின்றேன்

இருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது
உருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.

சிவகுமாரன் 
22.06.2015


  

வெள்ளி, டிசம்பர் 05, 2014

கொள்வோர் கொள்க


பண்டாரம் என்றே பரிகசித்துக் கைகொட்டி
கொண்டாடும் அன்பர் குரைக்கட்டும் - திண்டாடிப்
போவதில்லை எந்தன் புலமைப் பெரும்பயணம்
ஆவதில்லை ஒன்றும் அதற்கு.
சிவகுமாரன் 
04.12.2014

செவ்வாய், டிசம்பர் 02, 2014

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )

புதன், நவம்பர் 12, 2014

சேராதோ


வேதம் இதிகாசம் வேண்டுவது எல்லாமே
நாதன் ஒருவனென்ற நாமந்தான் - மோதல்கள்
தீரா மதங்கள் தெளிவுற்று ஒன்றாகச்
சேராதோ நெஞ்சமே சொல்.

சிவகுமாரன்
06.12.1992

செவ்வாய், ஜூலை 02, 2013

தாகம்

மண்ணின் தாகம் வானம் கொட்டும்
  மழையில் தணிகிறது.
விண்ணின் தாகம் வீணாய்ப் போகும்
  கடலைக் குடிக்கிறது
.
அலைகளின் தாகம் கடலை விட்டு
  கரைக்கு அலைகிறது.
தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும்
  குருதியில் தணிகிறது.

ஏழையின் தாகம் எதிர்ப்பவன் முன்னே
  எங்கோ போகிறது
கோழையின் தாகம் நீரைக் கண்டும்
  குடிக்க மறுக்கிறது

நீரின் தாகம் பள்ளம் தன்னை
  நோக்கிப் பாய்கிறது.
வேரின் தாகம் வேண்டிய மட்டும்
  பூமியைப் பிளக்கிறது.

சிப்பியின் தாகம் சிறுதுளி வாங்கி
  முத்தாய் ஆகிறது.
சிற்பியின் தாகம் சிதைந்த கல்லை
  சிலையாய்ச் செய்கிறது.

நடிப்பவன் தாகம் கைகள் தட்டும்
  ஓசையில் தணிகிறது.
குடிப்பவன் தாகம் குடலைக் கருக்கி
  குழியில் சாய்க்கிறது.

கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
  கவிதையில் தணிகிறது.
புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
  பிரளயம் நடக்கிறது  .


                                                                 
-சிவகுமாரன் 
1986 கவிதை எழுதிப் பழகிய காலம் .

செவ்வாய், ஏப்ரல் 23, 2013

நிழல் உறவுகள்


இத்தனை நேரம் 
என்னைத் தொடர்ந்த
நிழல் 
இருட்டில் மட்டும் 
எங்கே போனது?

காலையில் குறுகி
மாலையில்  நீண்டு 
மாயாஜால 
வித்தைகள் காட்டி 
மண்ணில் புழுதியில் 
படுத்துப் புரண்டு 
காலுக்குக் கீழே 
கடனே என்று 
போகும் இடமெல்லாம் 
பின்னே  தொடர்ந்த
எந்தன் நிழல் 
எங்கே போனது?

இருட்டில் எங்கோ 
ஒளிந்து கொண்டு 
வெளிச்சத்தில்  நிழலின் 
வேலை  என்ன ?

பட்டப் பகலில் 
பயணத் துணை 
யார் கேட்டது?

இருட்டு வழியில் 
பயணம் போகையில் 
குருட்டு விழியே 
வழித்துணை ஆகையில் 
எங்கே போனது 
எந்தன் நிழல் ?


இத்தனை நேரம் 
என்னைத் தொடர்ந்த நிழல் 
இருட்டில் மட்டும் 
எங்கே போனது?

சிவகுமாரன் 
1988 கல்லூரிக் காலம் 

வெள்ளி, மார்ச் 22, 2013

தேறாத் தேடல்


தூக்கத்தில் மட்டும் சுகங்கண்டு, நாட்களைப்
போக்கிக் கழித்து பொழுதெல்லாம் - ஏக்கத்தில்
வாடுதல் மட்டுமா வாழ்க்கை ? இனிவேண்டும்
தேடுதல் இல்லாத் தினம்.

தினமொரு போராட்டம், தேயும் இளமை
கனவினில் மட்டும் களிப்பு - மனதினில்
மாறா வடுக்கள் , மகேசா இனிநானும்
தேறாமல் போவேனோ தீர்ந்து?



-சிவகுமாரன் 
22.03.2013

திங்கள், செப்டம்பர் 24, 2012

சாட்டை



கவிதை எனது 
  கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த 
  போர்வாள் - செவியைக்
கிழிக்கும் கருத்துக் 
  கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
  அணு.
-சிவகுமாரன் 
கனல் பறந்த கல்லூரிப் பருவம்
 1990

புதன், ஜூன் 06, 2012

கேள்விக்கென்ன பதில்?














வான்எனும் வீதியில் வலம்வரும் மேகம்
  வான்மழை நீராய் வருவது எப்படி?
தேன்மழை நீர்த்துளி தெறித்துப் பறந்து
  திரைகடல் சிப்பியில் வீழ்வது எப்படி?
மீன்வகைச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி
  மின்னிடும் முத்தாய் மாறுவ தெப்படி?
நானிதன் ரகசியம் அறிந்திட முனைந்து
  நாட்களை மட்டும் நாயெனக் கழித்தேன்.

ஒருதுளி விந்து உள்ளே விழுந்து
  உயிர்தனைப் பெற்று வளர்வது எப்படி?
சிறு உடல் கைகால் முளைத்து வளர்ந்து
  சின்னக் குழந்தை ஆவது எப்படி?
ஒருதாய் வயிற்றில் வளர்ந்த போதும்
  உதிரம் வேறாய் ஆவது எப்படி?
ஒருவரும் பதிலை உரைக்க மறுத்தால்
  அறியாச் சிறுவன் அறிவது எப்படி?

உடலுக் குள்ளே உள்ளது காற்றெனில்
  உயிரெனும் காற்று உறைவது எங்கே?
சடலம் விட்டுச் செல்லும் காற்று
  சாவுக் கடுத்து செல்வது எங்கே?
"நடப்பது என்றும் நம்கையில் இல்லை
  நாடக மேடையில் நாம்வெறும் பொம்மை.
கடவுள் தானிதன் காரணம் என்றால்
  கடவுள் என்பவன் யாரவன் எங்கே?

-சிவகுமாரன்

(1988 ஆம் ஆண்டு கேள்விகளால் வேள்விகள் செய்த விளங்காப் பருவத்தில் விளைந்த கவிதை)

செவ்வாய், மே 01, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 6

              வாமனர்கள்
                வாமனர்கள்
             வாமனர்கள்
       வாமனர்கள்
 வாமனர்கள்






வீரியம் மிக்கதோர் வீரக் கவிதையால்
காரிருளை நாமே களைந்தெறிவோம் - சூரியனை
எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
தொட்டுவிடும் தூரத்தில் தான்.






நந்தமிழ் தன்னை நசுக்கும் கயவரை
நிந்தனை செய்வோம் நெருப்பாகி - செந்தமிழை
விற்போரின் கூட்டம் வெருண்டோடும் எங்களது
முற்போக்குக் கொள்கையின் முன்.

வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாடவந்த மாகவிகள் - சாணுடம்பு
வாமனர்கள் நாங்கள் வளரத் தொடங்கினால்
மாமலையும் எம்முன் மடு.

                                -சிவகுமாரன்



( 01.05.1998 புதுகை த,மு.எ.ச மாவட்ட மாநாட்டில் பாடப்பெற்ற கவிதை.)

சனி, மார்ச் 31, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 5

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான்  தொழுவதுண்டு 
   கோவில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு  
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

-சிவகுமாரன் 


( 06 .02 .2012 பழனி பாதயாத்திரையின் போது எழுதியது.)
  

சனி, பிப்ரவரி 25, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 4


எழுதிக் குவித்துநான்
  என்னபயன் கண்டேன்?
தொழுதுன்னைக் கேட்கிறேன்
  தோழா - அழுதழுது
பாடையில்   போகையில்
  பாழுங் கவிதைகளை
கூடவே போட்டுக்
  கொளுத்து.


கொளுத்தியது போக
   குறையேதும் உண்டேல்
களைத்து விடாதே
   கலங்கி - முளைக்கும்
விதையாகும் முன்னரே
   வெட்டிக் குழிக்குள் 
புதைத்துவிட்டு நிம்மதியாய்ப்
    போ.

(புதுச்சேரி -1994  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் - என் கவிதைகளை கேலி பேசிய நண்பனிடம் மனம் வெறுத்துப் போய் சொன்னது. )

புதன், நவம்பர் 23, 2011

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 3

நதிநீர் வடிந்தபின்
  நாணலைக் கொல்லும்
விதியே உனது
  வினையின் - சதியால்நான்
தோற்றுத் துவண்டு
  தொலைவேனோ ? கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
  கரை.


கரைதேடி வந்த
  கடலின் அலையாய்
இரைதேடிக் கொண்டே
  இருந்து - நரைகூடி
மாண்டு மடிவேனோ?
  மண்ணில் தடம்பதிக்க
மீண்டும் எழுவேன்நான்  
  மீண்டு,


2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - என் தந்தையின் மரணத்திற்கு பின்னொரு இருண்ட காலத்தின் நாட்குறிப்பு.)





சனி, ஏப்ரல் 23, 2011

நீ வரும்வரை

எப்படி மனம் வந்தது 
உன் 
முதல் பிள்ளையைத் 
தவிக்கவிட்டு 
தலைப்பிரசவம் செல்ல ?


என்னிலிருந்து 
எல்லாவற்றையும் 
எடுத்துக் கொண்டு
ஏதோ கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போனாய் 
நீ வரும்வரை 
நிலைத்திருப்பதற்கு.

இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
விரல்களை ஏன்
விடுவித்துக் கொண்டாய் ?


வாய்பிளந்து 
சோறூட்டச் சொன்னவனுக்கு
சமைக்கக் கற்றுத் தந்தாய்
கூலியாய்
பசியைப் பறித்துக் கொண்டு.


உனக்குத் தெரியுமா
இப்போதெல்லாம்-நம்
கொல்லைப்புறத்துச்
செடிகளுக்கு
குழம்பு ஊற்றித்தான்
வளர்க்கிறேன்.


இமைகளை எடுத்துக்கொண்டு
விழிகளை மட்டும்
விட்டுவிட்டுப் போனாய்
கூடவே
உறக்கத்தைய்ம் 
உடன் அழைத்துக் கொண்டு .


நினைத்த போது எழுந்து
அலுத்தபோது குளித்து
இரண்டுவேளை உண்டு
நான்கு வேளை தூங்கி
நன்றாக இருந்தாலும்
நரகமாய் இருக்கிறது
நீ இல்லாத பொழுதுகள்.


உன்
நினைவுச் சிலந்தியின்
எச்சில் வலைகளால்
பின்னப்பட்டிருக்கிறேன்
நீ
திரும்பி வருவதற்குள்
பாதியாய்
தின்னப்பட்டிருப்பேன்.

                        -சிவகுமாரன்
                         21.07.1998

செவ்வாய், மார்ச் 22, 2011

வரம் வேண்டும்


ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
   அறுத்தே வாழும் வரம் வேண்டும்
காசும் பணமும் பொன்னும் பொருளும் 
   கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்

பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும் 
   பொடிப் பொடியாகும் நிலை வேண்டும்
மண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும் 
   மறந்தே போகும் மனம் வேண்டும் 

வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும் 
   வாடிப் போகும் உடல் வேண்டும் 
போலிச் சுகங்கள் தேடும் உள்ளம்
   பொசுங்கிப் போகும் நிலை வேண்டும் 

உண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும் 
   உதறித் தள்ளும் உரம் வேண்டும்
இன்னும் இன்னும் என்னும் ஆசை
   இல்லா தொழியும் வரம் வேண்டும் 

பாழும் உலகின் பாவம் யாவும் 
   பார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும் 
வாழும் போதே மரணம் வந்தால் 
   வா-வென்றழைக்கும் மனம் வேண்டும் 

வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும் 
   வேண்டா தாகும் நிலை வேண்டும்
ஆண்டவன் எந்தன் அருகே வந்தால் 
   அலட்சியம் செய்யும் மனம் வேண்டும். 

                                                   -சிவகுமாரன்
                                                     01-01-1993     
   

திங்கள், செப்டம்பர் 06, 2010

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )