சனி, ஆகஸ்ட் 03, 2019

(அ)நீதி அரங்கம்


நிலை தடுமாறுகிறது
நீதி அரங்கம்.

சரியென்றும் தவறென்றும்
செயல்களைக் கொண்டல்ல
செய்பவர்களைக் கண்டே
தீர்மானிக்கிறது.

தண்டனைகளை கூட
தகுதி பார்த்தே வழங்குகிறது.

விதிகளை எல்லாம்
வினாக்களைப் போல்
எழுதி வைத்திருக்கிறது.
கோடிட்ட இடங்களை
நிரப்புவதைப் போல்.

அறையெங்கும் தொங்குகிறது
விதிகளோடு
விலைப்பட்டியலும்.

காதுகளையும்
வாயையும்
பொத்திக் கொள்கிறாள்
நீதி தேவதை.

கரன்சி நோட்டுகளால்
கட்டவிழ்க்கப்படுகிறது
கருப்புத்துணி.
               
                          - சிவகுமாரன்.

செவ்வாய், ஜூலை 23, 2019

காற்றோடு


மாறிக் கொண்டே இருக்கிறது
முகவரி.
அழிந்து கொண்டிருக்கின்றன
அடையாளங்கள்.
கால அலைகளில்
கரைந்து செல்கிறது
காலடிச்சுவடு.
இறுதியாய்.....
விட்டுச்செல்லும்
சாம்பலோடு
கைகுலுக்க
காத்திருக்கின்றன
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
கவிதைகள்.

சிவகுமாரன்