வேலை நிமித்தம்
வீடு மாற்றுகிறேன்
எப்படிச் சொல்லி அனுப்பவது ,
அமாவாசைக்கு வரும்
அப்பா காக்கைக்கு ?
வியந்த மகளின்
விரல் பட்டதும்
பயந்து சுருங்கிய
தொட்டாற்சுருங்கி
எப்போது விரிக்கும்
இலைகளை மீண்டும் ?
கண்ணாடிப் பெட்டிக்குள்
கடனேயென்று நீந்தும்
கலர் மீன்களின்
கனவிலேனும் வருமா
கடலும் ஆறும்?
கண்டம் தாண்டும் பறவை
களைப்பாற வசதியாய்
எப்போது வளரும்
ஆழக் கடலில்
ஆலமரங்கள்?
மனிதரைக் கண்டால்
விரைந்து மறைந்து
உடலைச் சுருக்கி
ஒளிந்து பயந்து
பயத்தால் கொன்று
பயத்தால் செத்து
படமாடும் பாம்பு
நடமாடுவது எப்போது
ஏனைய உயிர் போல்
இயல்பாய் நட்பாய்?
காயம் கொத்தும்
காகம் விரட்டாது
கண்ணீர் வடிக்கும்
காளையின் வாழ்வில்,
கால்கள் சுருங்கி
கைகளாய் மாறும்
பரிணாம வளர்ச்சிக்கு
எத்தனை யுகங்கள்
இன்னும் ஆகும் ?
கோயில் வாசலில்
பிச்சையெடுக்கும்
நாமம் போட்ட
யானைக்கு
எப்போது கிட்டும்
கனவிலிருக்கும்
காடு ?