ஓடிக்கொண்டிருக்கிறது நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை
அமுக்கி.
விண்முட்ட பறக்கிறது
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து
எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.
எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.
கூட்டைச்
சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக் குடியேற்ற.
கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!
ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர்
அறைகூவல்.
-சிவகுமாரன்