கவிதை 1
(படத்துக்குக் கவிதை)
பூத்துக் குலுங்குதையா
(வெண்பா அந்தாதி)
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.
பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச் சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.
சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!
வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.
விழித்தால் கனவு விலகுமென எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?
-சிவகுமாரன்
கவிதை 2
(விருப்பக் கவிதை)
கேட்பாரில்லா கீதாஞ்சலி
நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை அமுக்கி.
விண்முட்ட பறக்கிறது.
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.
எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு
வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.
கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக் குடியேற்ற.
கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!
ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர் அறைகூவல்.
சிவகுமாரன்
காதல் வெண்பாக்கள் 45
48 கருத்துகள்:
இரண்டு கவிதைகளும் மிகச் சிறப்பாக உள்ளது வெற்றி பெற
வாழ்த்துக்கள் சகோதரா !
மனதைத் தொடும் கவிதை வரிகள் முற்றிலும் வேறான இரு கவிதை வடிவத்தில்.
அருமை!. அருமை !!
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
ஒரு சந்தேகம். வெண்பா அந்தாதியின் கடைசி வரி ...
எனைத்தேடி யார்தருவார் இங்கு? ...அல்லது ....எனைத்தேடி யார்வருவார் இங்கு?
முதலில் நன்றி
சந்தேகம் எதிர்பார்த்தேன். அவள் தன்னையே தொலைத்து விட்டாள். யார் தேடித் தருவார் எனக் கேட்கிறாள்.
நன்றி சகோதரி
விளக்கம் ஏற்புடையதாக உள்ளதா இளமுருகா
எனைத்தேடித் தருவார்யார் இங்கு? - இப்படி எழுதினால் எளிதில் புரியும். ஆனால் வெண்பா இலக்கணம் பிறழும். கேள்விக்கு நன்றி.
வணக்கம்
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வார்த்தைகள் அருவியாய் கொட்டுகிறது.
இளமுருகனுக்கு அளித்த விளக்கமும் அருமை.
பரிசு பெற வாழ்த்துக்கள்.
வணக்கம்!
பூத்துக் குலுங்கும் புதுமலரின் பேரழகைக்
கொத்துக் கொடுத்த குளிர்கவியைப் - பார்த்துநான்
ஏங்கித் தவித்தேன்! இறுதியடிச் செந்தேனை
வாங்கிக் குடித்தேன் வழித்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்கள் மின்னஞ்சல் முகவாியை அறியத் தரவும்
kambane2007@yahoo.fr
நன்றி ரூபன், நன்றி அண்ணா, நன்றி அய்யா
கோர்த்து என்பது கொத்து என வந்துள்ளது அய்யா
varatharajsiva@gmail.com
நன்றி அய்யா.
வணக்கம் சகோதரரே!
இட்டீரே நற்கவிதை எத்துணை அற்புதமாய்
எட்டிடுவீர் வெற்றியை ஈர்த்து!
அற்புதமான கவிதைகள் இரண்டும்!
வெற்றி உங்களுக்கேயாக என் வாழ்த்துக்கள் சகோதரரே!
நன்றி சகோதரி.
அழகான கவிதைகள்
வாழ்த்துகள்
நன்றி திகழ்
அருமையான இலக்கிய கவிதைப் பூக்கள் நண்பரே..
வாழ்த்துக்கள்...
வெற்றி உமதாகட்டும்....
போட்டிக்கான மரபுக் கவிதையும், விருப்பக் கவிதையான புதுக்கவிதையும் அருமை. பாராட்டுக்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கவிதை அருமை...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இலக்கணம் மீறாக் கவிதை!
எழுதவும் ஆள் உளர் அதை!
சொல்லிநா மகிழ்கிறது இதை!
பரிசு பெற வாழ்த்துகிறேன் சிவா!
நன்றி மகேந்திரன்.
நன்றி அய்யா
நன்றி குமார்
எழுத ஆள் இருக்கிறார்கள் நிலாமகள்., தங்களைப் போன்ற ரசிகர்கள் தான் அருகி விட்டனர். நன்றி சகோதரி.
I think.....You will get first prise
முதலாவது கவிதை மிக அம்சமாக இணைந்துள்ளது.
நானும் சிலரின் போட்டிக் கவிதைகள் வாசித்துள்ளேன்.
நானும் எழுதினேன் ( ஒரு முயற்சி தான்).
இது மிக அருமையாக உள்ளது.
இனிய வாழ்த்து நண்பரே.
வேதா. இலங்காதிலகம்...
மிக்க நன்றி கோவைக்கவி
கவிதைகள் இரண்டும் சிறப்பு. வெற்றி உங்களைத் தேடிவர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சந்திரகௌரி
அருமை அருமை. ஆகா. இன்பம். அந்தாதி படிக்கப் படிக்க இன்பம். எத்தனை இதமான கவிதை, கரு, கற்பனை! பாவை படத்தை மிஞ்சுமா கவிதை என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன். சொக்க வைத்த பா.
வாதைக்கு வைத்தியமாய் வா. பின்னிட்டீங்க.
அப்பாஜி. இந்தக் கவிதை எழுதும் போதே தங்களை நினைத்துக் கொண்டேன்.. நீங்கள் கட்டாயம் ரசிப்பீர்கள் என உணர்ந்தேன்.
இடுகை இட்ட நாளிலிருந்து தங்களின் கருத்துரைக்காக காத்திருந்தேன்.
நன்றி
அத்தான் ஜெயிச்சீங்க! ஆமா, எனக்குத்தான்
மொத்தப் பரிசும் மொதவரனும் - எத்தனைபேர்
ஏங்கிக் கிடந்தாங்க! எம்புட்டு நாள்கழிச்சு
நீங்கன்னு சொன்னாங்க ளே!
ரெண்டாவ தாமே? இருக்கட்டும்! நீங்கஇதக்
கொண்டாட வா‘இப்பப் போறிங்க ? - ஒண்ணாக
நானிருக்க என்ன ? நமக்குத்தான் நல்லதமிழ்
தேனிருக்க என்ன தட?
வாழ்த்துகள் அண்ணா!
வணக்கம் சகோதரரே!
அற்புதமாய்ப் பா..பாடி அள்ளினீர் வெற்றியினை!
பெற்றிடுவீர் பேர்,பெருமை, பீடு!
கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றீர்கள்!
உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே!
வாழ்த்துக்கள் சிவகுமாரன் . பொருத்தமான கவிஞர்களுக்கு கிடைத்த வெற்றி
முதலாவதாய் வந்ததற்கும், இரண்டாவதாய் வந்து வாழ்த்துச் சொன்னதற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் சகோதரி.
நீங்கள் எல்லாம் போட்டிக்கு வராததால் நான் ஜெயிச்சேன்.
நன்றி விஜூ.
( முதல் வரியைப் படிச்சதுமே ஒரு கணம் மிரண்டுட்டேன், யாருப்பா நம்மை அத்தான்னு கூப்பிடறதுன்னு :) )
நன்றி முரளி.
இப்படியெல்லாம் சும்மானாச்சுக்கும் சொல்லாதிங்கன்னா!
அத்தான்னு கூப்பிட்டதாருன்னு தெரியலையா?
எப்ப ( பரிசோட ) வருவீங்கன்னு ஏங்கித் தவிச்சு வெப்பப் பெருமூச்சில் வெந்தவள் தான் அண்ணா அவள்!
:)
தேடிவரும் வெற்றியுமை! தித்திக்கும் பா கண்டே
ஓடிவரும் ஒன்றலவா என்றென்றும்- நாடிவர,
நற்றமிழின் சொற்களவை நயம்படவே இக்கவிதை
பெற்றதைய ஒன்றாம் பரிசு
பரிசினை வென்றுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
முதலாம் இடத்திலே மூழ்கிடுவீர் என்றே
இதமாய் மனத்தினில் எண்ண.. கவிஞரே
இக்கால பாபுனைய இன்கவிதை போனதோ
நோக்கும் இரண்டாம் இடம்!
கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
நன்றி அய்யா. தங்களைப் போன்ற பெரும் புலவர்களின் வாழ்த்தினைப் பெறுவதே பெரிய பரிசு அய்யா.
நன்றி நண்பரே
நன்றி சகோதரி.
முதலாம் பரிசு நம் சகோதரிக்குத் தானே.
நன்றி அய்யா
கருத்துரையிடுக