திங்கள், நவம்பர் 03, 2014

பிள்ளைக் குறள் 30


இறைவன் கொடுத்தவை எண்ணில் அடங்கா!
நிறைவாய் மனதில் நினை.

நினைத்திடு எப்போதும் நீயாய் பிறரை!
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.

அன்பால் நெருங்கி அறிவால் கவர்ந்திடு!
உன்புகழ் பேசும் உலகு.

உலகே வியக்க உயர்ந்தாலும் என்றும்
தலைக்கனம் வாரா திரு.

இருப்பாய் நிலவாய்! எதிர்ப்போர்க்குக் கொஞ்சம்
நெருப்பாய் முகங்காட்டி நில்.

நில்லாமல் ஓடிடும் நேரம்! தவறினால்
சொல்லாமல் ஓடும் சுகம்.

சுகத்தின் மகிழ்வும் துயரின் வலியும்
அகத்துள் உளதாம் அறி.

அறிவால் பொருளீட்டி அன்பால் பகிர்ந்து
செறிவாய்ச் செயல்களை செய்
.

செய்த தவறை திரும்பவும் செய்யாதே.
தெய்வமும் மூடும் திரு.

திருவருள் காட்டிடும் தெய்வம்! மனதை
ஒருமுகம் ஆக்கி உழை.  
                                                          30.

தொடரும் ....


சிவகுமாரன் 

38 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான குறள்..!

மோகன்ஜி சொன்னது…

பவழமல்லி உதிர்ந்துகொண்டே இருக்கிறது. பூசனைக்குரிய ஆக்கம். மேலும் எழுது சிவா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...!

// அகத்துள் உளதாம் அறி //

தொடர வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam சொன்னது…


எத்தனை ஆகா போட்டாலும் தகும். நான் பொறாமைப் படுகிறேன் சிவகுமாரா. வாழ்த்துக்கள். காணொளி காண முடிந்ததா.?

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

பெருகும் குறளமுது பெற்று மகிழ்ந்தேன்!
இருக்கிறேன் பிள்ளையாய் இங்கு!


அத்தனையும் அருமை!
குறள்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல...
எமக்கும் தான்!
வாழ்த்துக்கள்! தொடருங்கள்!..

ஸ்ரீராம். சொன்னது…

எதைச் சொல்ல? எதை விட?

எல்லாமே அருமை.

Iniya சொன்னது…

ஆஹா சுப்பர் குறள்

குறள் காட்டும் வழியே செல்
மறவாது உலகம் உனை!
அருமை வாழ்த்துக்கள்....!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!

பிள்ளைக் குறளனைத்தும் கொள்ளை யிடுமென்னை
வெள்ளைத் தமிழை விரித்து


கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை...

ஊமைக்கனவுகள் சொன்னது…

தந்தை மகட்குத் தருங்குற ளொவ்வொன்றும்
சிந்தனை வைத்தால் சிறப்பு.
அருமை அண்ணா!
மீண்டும் வருவேன்.
நன்றி

அப்பாதுரை சொன்னது…

தந்தையார் நம்பட்டும் தெய்வத்தை நீமட்டும்
உந்தன்மேல் நம்பிக்கை வை.

தெய்வம் இறையென்று சுற்றாமல் மானிடர்மேல்
மெய்யான பற்றினைக் கொள்.

புரியாத தெய்வம் இருந்தென்ன என்னும்
பெரியப்பன் பேச்சையுங் கேள்.

அப்பாதுரை சொன்னது…

பொய்க்கடவுள் தேவையில்லை பெற்றோர் இருவருமே
மெய்க்கடவுள் என்றறி வாய்.

ஊமைக்கனவுகள் சொன்னது…

“நிலவாய்க் கதிராகி நீமாறி நிற்றல்
பலகல்லாப் பாடம், படி!“
என்ன சொல்வதண்ணா ஒவ்வொரு குறளையும் தனிப்பதிவிட்டு விளக்க வேண்டி இருக்கிறது.
மீண்டும் வருவேன்.
நன்றி

அப்பாதுரை சொன்னது…

ஆரவன் ஆண்டவன் என்றா சிரிக்கிறான்
பாரதி சின்னப் பயல்?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

குறளமுதினை ரசித்தேன். ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி இராஜேஸ்வரி மேடம்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி மோகன் அண்ணா. பூசைக்குரியதாய் இருக்கிறதோ இல்லையோ நேசத்திற்குரியதாய் ----இந்தக் குறட்பாக்கள் என் மகனை மனம் சோரும் போதெல்லாம் உத்வேகமடையச் செய்கின்றன. வேறென்ன வேண்டும்?

சிவகுமாரன் சொன்னது…

நன்றி தனபாலன் சார்

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி GMB அய்யா. காணொளி காண முடிந்தது. தங்களின் பேரன்பில் மனம் நெகிழ்கிறேன்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி இளமதி.
இந்தக் குறட்பாக்கள் அவனது வாழ்க்கை முழுவதற்குமான வழிகாட்டியாய் இருக்க வேண்டுமென எண்ணி எழுதியிருக்கிறேன். எனவே பெரியவர்களுக்கும் பொருந்தும் இந்தக் குறட்பாக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஸ்ரீராம் சார் தங்களின் தொடர் வருகைக்கு.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி இனியா, தங்களின் இனிய வாழ்த்திற்கு.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி பாரதிதாசன் அய்யா. தங்களின் வாழ்த்து எனக்குப் பெருமை.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி குமார்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி விஜு தங்களின் தொடர் வருகைக்கு. .

சிவகுமாரன் சொன்னது…

ஆகா அப்பாஜி.
தங்களின் குறட்பாக்களை என் மகனிடம் படித்துக் காட்ட வேண்டும்.கூடவே இந்தக் குறளையும்.
பெரியப்பா சித்தப்பா பேச்சுக்கள் எல்லாம்
சரியென்றால் சிந்தித்துச் செய்.

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி ஜம்புலிங்கம் அய்யா.

அப்பாதுரை சொன்னது…

அதுவும் சரிதான் அவன்விருப்பம் போலே
புதுவழி போவான் புரிந்து.

Aathira mullai சொன்னது…

//சுகத்தின் மகிழ்வும் துயரின் வலியும்
அகத்துள் உளதாம் அறி.//

தத்துவத்தின் உச்சம். அருமை வள்ளுவரே

சிவகுமாரன் சொன்னது…

@அப்பாஜி

புதுவழி, போனவழி போகட்டும் எங்கும்
அதைச்சரியாய் ஆய்ந்து அவன்.

சிவகுமாரன் சொன்னது…

தமிழாய்ந்த தங்களின் வாழ்த்தில் பெருமை அடைகிறேன் ஆதிரா மேடம்.
மிக்க நன்றி மீண்ட வருகைக்கு

மகேந்திரன் சொன்னது…

அருமையான குறட்பாக்கள் நண்பரே...

சிவகுமாரன் சொன்னது…

blospot.in ஐ blogspot.com ஆக மாற்றிவிட்டேன் .
தமிழ்மணப் பட்டையும் இனி வேலை செய்யும்

ஊமைக்கனவுகள் சொன்னது…

அண்ணா,
த ம 2

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நண்பா.

சிவகுமாரன் சொன்னது…

எனக்கு இந்த ஓட்டு போடுவது வாங்குவது எதுவுமே தெரியாது . நண்பர் முரளிதரன் தான் அமைத்துக் கொடுத்தார். நன்றி விஜூ முரளிக்கும் சேர்த்து.

Rathnavel Natarajan சொன்னது…

பிள்ளைக் குறள் 30 = சிவகுமாரன் = அற்புதமான கவிதைகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
எல்லா தளங்களிலும் பகிர்வது போல் widget சேர்த்து விடுங்கள். எங்களுக்கு எளிதாக இருக்கும்.
வாழ்த்துகள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா.
எப்படி எதை இணைப்பது எனத் தெரியவில்லையே . எனக்குக் கணினி பயன்பாடு சரிவரப் பயிற்சி இல்லை. முயல்கிறேன்.