செவ்வாய், டிசம்பர் 02, 2014

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )

27 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
சமீபத்தில், திரு தம்பையா என்னும் சித்த மருத்துவரைக் காணச் சென்றிருந்தேன்
தாங்கள் கூட படித்திருக்கலாம், அகத்தில் இல்லம் என்று ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன். அங்கு நான் கண்ட வாசகம் இதுதான்
மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் - திருமூலர்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
பக்தியின் தேவையே இல்லையடா... ///

இது ஒன்றே போதும்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவை தமிழ்மணத்தில் சேர்த்து விட்டேன்... +1

வருண் சொன்னது…

மன்னிக்கவும், உங்க கவிதை ஒரே உளறலாயிருக்கு!!!

ஹிரோஷிமா நாகஷாக்கில வெடித்த அணுகுண்டுலயும் உங்க பகவான் இருந்தாரோ??

அதென்ன எல்லாரையும் "டா" போட்டு ஏக வசனம்?? பகவானுக்கு ஆயில் அடிச்சா யாரை வேணா எப்படி வேணா விளிக்கலாம்னு திமிரு?? வந்து சேருதுக பாரு புதுசு புதுசா!!!

நாத்திகத்தில் தொடர்ந்துஇருந்து இருந்தால் நாங்களே கழுத்தைப் பிடிச்சு தள்லி இருப்போம். நல்லவேளை நீயா போயி தொலைஞ்சடா!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி D .D. சார்

G.M Balasubramaniam சொன்னது…

பதிவு எழுதிய காலத்தில் நிறையவே குழம்பி இருந்தீர்கள் என்று தெரிகிறது. அதுவா இதுவா எதுவோ என்ற கஃப்யூஷன் தெரிகிற்து,இப்போது காவடி எல்லாம் ஏந்துவது தேவை என்று தோன்றுகிறதா.?

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அன்பரே. இந்தக் கவிதை மட்டுமல்ல என் எல்லாக் கவிதைகளும் உளறல்கள் தான். அது மட்டுமல்ல , இந்தக் கவிதை எனது பரிணாம வளர்ச்சியின் ஒரு காலகட்டம். . நாட்குறிப்பின் ஒரு பக்கம். A transition state. அவ்வளவே. நீங்கள் என்ன நாத்திகத்தை ஏக போக குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா ? என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதும் கையைப் பிடித்து இழுப்பதும் யாராலும் இயலாத காரியம். என் மனம் போகும் போக்கில் தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன். விவேகானந்தர், வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகள் சென்ற பாதை தான் என் பாதை. யாருக்கும் தொல்லை தராத உள்ளுக்குள் இறை தேடும் அனுபவம் அது. எந்த உண்மையான ஆன்மீகவாதியும் மசூதியை இடிப்பதும் இல்லை, கோயிலுக்கு குண்டு வைப்பதும் இல்லை. ஆன்மிகம் என்னும் போர்வைக்குள் தீவிரவாதிகளும் , சமூக விரோதிகளும் ஒளிந்திருப்பதால் மொத்த ஆன்மீகவாதிகளையும் சந்தேகிப்பதும் கேலி செய்வதும் முட்டாள்தனமானது.
அது இருக்கட்டும், ஏக வசனத்தில் எழுதுவது என்பது கவிதையின் ஒரு வகை .மரியாதைக் குறைவான செயல் அல்ல."ஜெயபேரிகை கொட்டடா" என்று பாரதியும், "அச்சம் என்பது மடமையடா " என்று கண்ணதாசனும், " தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா" என்று நாமக்கல் கவிஞரும் பாடியது மரியாதையற்ற செயல் என்றால் அந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம் அய்யா. குழப்பமான காலகட்டம் அது. யாரையும் மதிக்காத, எல்லாம் தெரியும் என்ற கர்வத்தில், இளமைக்கேயுரிய அடங்காப் பருவக் கவிதை அது. இப்போதைய என் நிலை வேறு. என் பழைய கவிதைகள் செல்லரித்துப் போகாமல் இருக்க அவற்றை இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். அவ்வளவே.
காவடி தூக்குவது , பால் குடம் எடுப்பது இவையெல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயங்கள். அவற்றைத் தவறு என சொல்ல யாருக்கும் உரிமையில்லை. பிறருக்கு தொல்லை தராத எந்த ஒரு வழிபாட்டு முறையும் ஏற்கத் தக்கதே.

ஸ்ரீராம். சொன்னது…

"நான் உன்னைத் தேடி மூன்று முறை வந்தேன். நீ என்னைக் கவனிக்கவில்லை" என்று தேவன் சொல்வதாக சிறுவயது நல்லொழுக்க வகுப்பில் சொல்வார்கள். அது நினைவுக்கு வருகிறது!

:)))

அருணா செல்வம் சொன்னது…

கடவுள் எங்கே.....?

உங்கள் கவிதையில் ஒளிந்திருக்கிறார் கவிஞரே.

தேடுதலுக்கான சிந்தனையே தெளிவான பதிலைக் கொடுக்கும்.

வருண் சொன்னது…

***இறை தேடும் அனுபவம் அது.***

அதேன் கண்டு பிடிச்சிட்டீரு இல்ல? வச்சு வணங்க வேண்டியதுதானே? எதுக்கு இங்கே வந்து கவிதை வடிவில் ஊருக்கெல்லாம் கேக்கிறப்பில கத்திக்கிட்டு?

****ஏக வசனத்தில் எழுதுவது என்பது கவிதையின் ஒரு வகை .மரியாதைக் குறைவான செயல் அல்ல."ஜெயபேரிகை கொட்டடா" என்று பாரதியும், "அச்சம் என்பது மடமையடா " என்று கண்ணதாசனும், " தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா"****

அதெல்லாம் தமிழன் தமிழனை விளிப்பது..

திராவிடன் திராவிடனை விளிப்பது..

இது அப்படி அல்ல! இது ஆன்மீகப் பண்டாரம் பகுத்தறிவாளனை ஏக வசனத்தில் விளிப்பது, பகவான் அணுகுண்டுல இருக்கார் வந்து பாருடா னு கத்துறது..இது ரெண்டுக்கும் வேறுபாடு உண்டு.

பண்டாரம் பண்டாரத்தைமட்டும் ஏக வசனத்தில் விளித்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை! ரெண்டும் ஒரே இனம்! பண்டாரம் எல்லோரையும் பண்டாரம்னு நினைப்பது தவறு! அது பண்டாரத்துக்கு தெரியணும்!

தனிமரம் சொன்னது…

கடவுள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி தோன்றும் சிந்தனையில் உங்களின் பார்வை குணத்தில் என்று கூறும் கவிதையும் அழகே.

சிவகுமாரன் சொன்னது…

பட்டப் பெயருக்கு மிக்க நன்றி பகுத்தறிவுப் பகலவரே. தற்போது நேரமில்லை. மீண்டும் வந்து பதில் சொல்வேன்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஷ்ரீராம் சார்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அருணா

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நண்பரே

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

தேடும் கடவுள் தெரியும் மனமே!..நீ
நாடும் எதிலுமே நம்பு!

ஆழமான கருத்தும் அற்புத வரிகளும்!..
மிக அருமை!
வாழ்த்துக்கள் சகோதரரே!

ஊமைக்கனவுகள் சொன்னது…

அண்ணா வணக்கம் !
தாமத வருகையை மன்னிக்க!
வெகுநேரம் இக்கவிதையை மரபின் எந்தச் சாத்தியத்தில் அடைக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
நீங்கள் கூறியுள்ளது போல் பலர்க்கும் இந்த நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கும் ஆத்திகத்திலிருந்து நாத்திகத்திற்கும் நகர்வு நடக்கும் என்று தோன்றுகிறது.
ஏனென்றால்,
மதமும் சாதியும் நம் பிறப்பால் நம்மேல் பூசப்படுபவை! அறிவும் அனுபவமும் பெறும் நாட்களில் அதைக்குறித்த நியாய அநியாயங்களை அலசி மாறுவதையும் தொடர்வதையும் தீர்மானிக்கும் பக்குவம் அவரவர்க்கு நிகழும்.
கண்ணதாசனின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது,

“தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை“

உங்கள் கவிதையில் வரும் ,
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
வேதம் படிப்பது விந்தை தான்.“

எனும் வரிகளை மிக ரசித்தேன்.

நன்றி

ஊமைக்கனவுகள் சொன்னது…

த ம 5

ராவணன் சொன்னது…

கவிதை சூப்பர்.....

சிவகுமாரன் சொன்னது…

நன்றி விஜூ. ஒரு சிலரின் பின்னூட்டம் வராமல் அடுத்த பதிவு எழுத மனம் வருவதில்லை எனக்கு. அதில் தங்களதும் ஒன்று.
அது சரி . இந்தக் கவிதை மரபின் எந்த வகை என்று சொல்லவே இல்லையே.

சிவகுமாரன் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே.( பெயரைக் கண்டு ஒருகணம் பயந்து விட்டேன். தாங்கள் என்ன பட்டப் பெயர் தருவீர்களோ என்று :) )

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி இளமதி.

விசு அய்யர் சொன்னது…

கனியிலே சுவையென
கலந்திட்ட இறைவனை

கவிதையில் கண்டேன்..
கனிவுடனே... களிப்புடனே..

சிவகுமாரன் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கு நன்றி சகோ

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இனிமையான கவிதை . சந்தம் மனத்தைக் கவர்கிறது