வியாழன், பிப்ரவரி 18, 2016

கடல் தாண்டும் காலம் (:



இறைவனடி விரையும் 
ஆன்மா அறியுமா
கடல் தாண்டி 
கண்டம் தாண்டி 
பிழைக்கப் போனவனின் 
சொல்லியழ முடியா 
சோகம்?

 காலம் மறக்கடித்துப் போன
சோகத்தைத்
தோண்டிஎடுத்துத்
துயர் கொள்ள வைக்கிறது
வெளிநாடு சென்று
திரும்பியவனின்
துக்க விசாரிப்பு.

கண்ணியம் தருகிறது
புண்ணியம் சேர்க்கிறது
கர்வம் தருகிறது
கடன் தீர்க்கிறது
.....................
பதிலாய்
ஈடு  செய்ய இயலா
காலத்தைக்
கபளீகரம் செய்கிறது
கடல்கடந்து தேடிய
காசு.

கடல்தாண்டி வரும் காசு
கணக்கில் வராது
என்னும் மாயையில்
மறைந்து போய் விடுகிறது
கடல் தாண்டியவனின்
கணக்கில் வாராத
காலம்.

அறுசுவை ஆயினும்
கடல் தாண்டியவனின்
விருந்தில்
சற்றே தூக்கலாய்
கரிப்பு.

சிவகுமாரன் 
16.02.2016


3 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

அறுசுவை ஆயினும்
கடல் தாண்டியவனின்
விருந்தில்
சற்றே தூக்கலாய்
கரிப்பு./ ரசித்தேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதையை ரசித்தேன்...
அருமை.

Yaathoramani.blogspot.com சொன்னது…

கடல் தாண்டியவனின் சோகம்
விழுங்கமும் முடியாது
துப்பவும் முடியாது ....
சொல்லைச் சென்றவிதம் மனம் சுட்டது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்