நெடுநெடென மரங்களெல்லாம் விண்ணகத்தை நாடும்.
நெஞ்சுக்குள் ஊடுருவி குயிலொன்று பாடும்.
குடுகுடென மானினங்கள் குதித்தங்கே ஓடும்
குரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.
குரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.
திடுதிடென பேரருவி திமிராட்டம் போடும்
திமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.
திமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.
அடடடடா வேறென்ன சுகமிருக்கக் கூடும்?
அடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.
அடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.
சடசடென மழையொன்று உடல்நனைத்துப் போகும்.
சட்டென்று வெயில்வந்து தலைதுவட்டிப் போகும்.
சட்டென்று வெயில்வந்து தலைதுவட்டிப் போகும்.
தடதடென சிற்றோடை நீர்தளும்பிப் பாயும்
தலைதூக்கும் மீன்கொத்த கொக்கெல்லாம் காயும்.
தலைதூக்கும் மீன்கொத்த கொக்கெல்லாம் காயும்.
படபடென கிளிக்கூட்டம் படையெடுக்கும் வானை.
படையோடு பவனிவந்து பயமுறுத்தும் யானை
படையோடு பவனிவந்து பயமுறுத்தும் யானை
கடகடென புறப்பட்டு ஆப்பிரிக்கா
வாரீர்.
கண்கொள்ளா காட்சிகளைக் காட்டுக்குள் பாரீர்.
சிவகுமாரன்
.
12 கருத்துகள்:
ஆப்பிரிக்காவை ஈர்க்கும்
அருமையான வரிகள்
அருமை
கடகடவெனக் கொட்டும் கவிதையருவியாக
களிப்போடு இறங்கியிருக்கிறது புத்தாண்டுமக்கு
தொடரட்டும்..வாழ்த்துக்கள்.
கவிதை மழையில் நனைந்தேன் கவிஞரே
த.ம.1
அருமை சிவகுமாரன்!
ஆப்பிரிக்க காடுகளிலும் தமிழ்க் கவிதை மழை பொழியும்!
பாரதியாரைப் பற்றி பூவனத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில்
லய சுத்தமான உங்கள் கவிதை, அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகனின்
வரிகளின் தொடர்ச்சியாக எனக்குத் தோன்றிய வித்தையை என்ன்வென்று சொல்ல...
அருமை! தாளம் போட வைக்கும் கவிதை வாழ்துகள் சிவா
தங்கள் கவிதை வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
நன்றி
ஆப்பிரிக்கக் காடுகள் - கவிதை அருவி போல் ஓசை நயத்தோடு...
நன்றி சிவா....
ஆப்ரிக்கக் காட்டை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் . சந்தமும் வார்த்தைகளும் மயக்குகின்றன
கானகச் சந்தக்காரனா நீங்கள்?
என்ன சிவகுமாரன்,வேலை நெருக்கடியில் மூச்சுவிடக்கூட நேரம் கிடைப்பதில்லை போலிருக்கே.. கம்ப்யூட்டர்பக்கம் வரவே நேரம் இருப்பதில்லையா? மற்றபடி நலந்தானே?
நல்லா கண்டு பிடிச்சீங்க காட்டை.
கருத்துரையிடுக