கண்ணுக்கெட்டும் தூரம் வரை
கடலு தானுங்க - அது
ஒண்ணு மட்டும் எங்களுக்கு
உசுரைப் போலங்க.
ஆழமான கடலுக்குள்ள
வலையை வீசுறோம்.
புயலடிக்கும் நேரத்திலும்
பொழைக்கப் போகிறோம்
வயத்துக்காக வாழ்க்கையையே
வண்டி ஏறுது - இங்கே
குடிசைக்குள்ள எங்க புள்ள
பசிச்சு அழுவுது.
தண்ணீரிலே எங்க வாழ்க்கை
தத்தளிக்குது.- எங்க
கண்ணீராலே கடலு கூட
உப்புக் கரிக்குது.
மீன்கள் நமக்கு உணவு ஆகும்
தெரிஞ்ச சேதிங்க - நாங்க
மீன்களுக்கே உணவு ஆன
எதுவும் கிடைக்கல - கொஞ்சம் .
எல்லை தாண்டி மீன் பிடிச்சா .
உசிரு மிஞ்சல .
அரக்கன் போல சுனாமி வந்து
அள்ளித் தின்றது - நெஞ்சில்
சுட்டுத் தள்ளுது.
சிங்களரின் துப்பாக்கிகள்
சுட்டுப் பார்த்திட - அட
எங்களோட உடம்பு தானா
இலக்கு ஆனது ?
நாங்க என்ன நாட்டையேவா
ஏங்க இப்படி இலங்கை எங்களை
காவு வாங்குது ?
புலிகளைத்தான் புடிச்சு எரிச்சு
புதச்சுட்டாங்களே-வெறும்
எலிகள் நாங்க எங்களை ஏன்
வதைக்கிறாங்களோ
வங்கக் கடல் மீனுக்கெல்லாம்
வெலை உசருது - இங்கே
எங்களோட உசுரு மட்டும்
சல்லி சாச்சுது.
தாக்குதலை தாண்டி தாங்க
வலையை வீசுறோம்
கேக்க ஒரு நாதியில்லை
கச்சத் தீவை அப்படியே
தாரை வார்த்தீங்க
மிச்சத்தையும் வார்த்திடுங்க
தீர்ந்து போகுங்க.
ஓட்டுக் கேட்டு ஓடி வார
உத்தமரெல்லாம் - கொஞ்சம்
வந்து பாருங்க.
தாக்குதலை நிறுத்தச் சொல்லி
பேசிப் பாருங்க - எங்க
வாக்குகளை அள்ளித் தாரோம்
வாங்கிக் கொள்ளுங்க.
தெறக்க மாட்டீங்க - நீங்க
எரியுறதில் புடுங்குவீங்க - வேற
என்ன செய்வீங்க ?
அப்பன் தாத்தா சாவு எல்லாம்
இந்தக் கடலிலே - ஆனா
அப்புறமும் மீன் புடிப்போம்
இன்னுமொரு சுனாமி அலை
எப்ப வருமுங்க ? - வேற
ஒண்ணுமில்ல , ஒரேயடியா
போயிரலாங்க.
64 கருத்துகள்:
இந்தக் கவிதையை எழுதச் சொல்லி என்னை கலங்க வைத்த நண்பர் சமுத்ராவுக்கு......
நன்றி சொல்வதா தெரியவில்லை.
தண்ணீர் கேட்டுச்சாவதும், தண்ணீரில் போய் சாவதும் தமிழனின் தலையெழுத்து
வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகள் கலந்த வலிகள்....
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
மிகவும் அருமை நண்பா !
சிலரது வாழ்க்கை முறையின் சில விளைவுகளுக்கு விரக்தியால் உந்தப்பட்டு
எல்லோரையும் சாடுதல் சரியா..சொல் சிவகுமாரா.
புயலாலும், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தாலும் சாவது என்பது வாழ்க்கை முறையின் விளைவுகள். அன்றாடம் மீன்பிடித்து வாழும் அப்பாவி மீனவர்களை சுட்டுக் கொள்வது எப்படி GMB சார் வாழ்க்கை முறையாகும் ? இந்த அரசின் அலட்சியப்போக்கை , உயிர்களின் மதிபபறியாத கையாலாகாத்தனத்தை , வாழ்க்கை முறையின் விளைவுகள் என்று சொல்லி வேடிக்கை பார்க்க சொல்கிறீர்களா ? என் கையில் இருப்பது தமிழ் தான் அய்யா . AK47 அல்ல
ஒவ்வொரு வரியிலும் தமிழனின் கண்ணீர்.மனதின் ஆதங்கம்.என்ன சொல்ல.யார் கவனிப்பார் !
மீனவ நண்பர்களின் சோகத்தை படம் பிடித்த கவிதை. சுனாமி விளையாண்ட குடும்பங்களை எழுதுவதில் வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள். சோகம்தான்.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. ;-( ;-(
//இன்னுமொரு சுனாமி அலை
எப்ப வருமுங்க ? - வேற
ஒண்ணுமில்ல , ஒரேயடியா
போயிரலாங்க.//
தமிழக மீனவர்களின் வேதனையை,தினம் தினம் செத்துப் பிழைக்கும் அவலத்தை,மனக் குமுறலை வெளிப்படுத்தும் அருமையான வரிகள்!கடிதம் எழுதியே அவர்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணுவோரின் முதலைக் கண்ணீரால் என்னபயன்?
மனம் வலிக்கச் செய்துவிட்டீர்கள் சிவகுமாரன்!
தங்கள் வரிகள் ஒவ்வொன்றும்
எங்கள் விழிகளை நனைக்கின்றன!
வாழ்த்துக்கள் வரிகளுக்கு
விடியட்டும் மனித மீன்களுக்கு!
கலங்க வைக்கும் விவரங்கள்; சாப்பாட்டுக்காக (அதுவும் அடுத்தவர் சாப்பாட்டுக்காக) உயிரை இழக்கும் நிலை மிகப் பரிதாபமானது. உங்கள் கவிதையில் நானும் ஏதாவது குறை சொல்லவேண்டுமென்று பார்க்கிறேன் :) - முடியவில்லை. ஒவ்வொரு பதிவும் அவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள். இங்கே ஒரு சமூகப் பிரச்சினையை அழகாக நெஞ்சைத் தொடும்படி எழுதியிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், நியாயப்படுத்தியிருப்பதை அவ்வாறு ஏற்க முடியவில்லை.
எல்லையைத் தாண்டி ஏன் போக வேண்டும் என்றும் கேட்கத் தோன்றுகிறது.
இலங்கை மீனவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் மீன் பிடித்துப் பிழைக்க வேண்டிய அவசியம் உண்டு தானே? ஒருவேளை நம் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடிக்க வந்து நாம் அவர்களைச் சுட்டால்?
இரண்டு பக்கமும் அறியாமையும் ஆத்திரமும் விளைவிக்கும் இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எளிதல்ல.
வயிற்றுப் பிழைப்புக்காக என்றாலும் இன்னொருவர் உரிமையில் கை வைப்பது திருட்டு. 'திருட்டுக்குத் தண்டனை சாவா?' என்ற கேள்வி உறுத்துகிறது என்றாலும், 'சாப்பாட்டுக்குத் தானே திருடுகிறோம்?' என்ற நியாயப்பாடு ஏற்கமுடியவில்லை. GMB அதைத்தான் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.
பிரச்சினையின் தீர்வை உள்பக்கமாகத் திருப்பினால், நம் அரசாங்கம் நம் எல்லைக்குள் மீன் உற்பத்தி/வளர்ப்புத் திட்டங்களை ஏன் செயல்படுத்தவில்லை என்று கேட்கலாம். ஓட்டு கேட்பவர்களுக்கு வேட்டு வைக்கலாம் (அசல் வேட்டு அல்ல :).
ஒரு சிறப்பான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான விதை இங்கே புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. யோசிக்க வேண்டும்.
மிகச் சரியாக அணுகியிருக்கிறீர்கள் பிரச்சினையைஅப்பாத்துரை. எல்லை தாண்டுவதை நான் நியாயப் படுத்தவில்லை. அவர்கள் மீன் பிடித்து சுவிஸ் வங்கியிலா போட்டு வைக்கிறார்கள்.? கொலைக் குற்றத்துக் கூட மரணதண்டனை கூடாது என்று பேசி வரும் காலத்தில் இருக்கிறோம் நாம். அவர்களை மிரட்டி அனுப்பலாம். வலையை பிடுங்கி வைத்துக் கொள்ளலாம். பிடித்து வைத்துக்கொண்டு நம் அரசுக்கு தெரிவிக்கலாம். நமது அரசும் நம் எல்லையில் ரோந்து செய்து அந்தப் பக்கம் போகவிடாமல் தடுக்கலாம். சுட்டுத் தள்ளுவது எந்த வகையில் நியாயம் ? அவர்கள் சுடுவதைக் கூட தாங்கிக் கொள்ளும் என்னால் நம் அரசாங்கம் வாளாதிருப்பதை சகிக்க முடியவில்லை. நம் மீனவர்கள் அறியாமையால் செய்கிறார்கள். நம் தலைவர்கள் காயடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிங்களப்படை வெறியூட்டப்பட்டிருக்கிறார்கள்- ஒத்துக் கொள்கிறீர்களா ?
வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை!
அருமை நண்பா! ஆனால் கவனிக்க வேண்டிய யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லையே?
மூன்றில் ஒன்றை ஏற்கமுடிகிறது சிவகுமாரன்:)
சுட்டுத்தள்ளுகிறார்கள் என்று தெரிந்தே தான் மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள் - காவலர் வருவதற்குள் கிடைத்ததைப் பிடிக்கலாம் என்ற வேகம். இது அறியாமையல்ல.
சிங்களப்படை கடமையைச் செய்கிறார்கள். கடமையை அழிவில்லாமல் செய்யமுடியுமா? முடியும். அவ்வாறு செய்யாதது அவர்கள் அறியாமை. வெறியல்ல. அறியாமைத் தீயில் எண்ணையிடுவது நம் உரிமை மீறலே.
தலைவர்களைச் சொன்னீங்களே; முற்றுஞ்சரி. குளிர்காய எத்தனையோ சிக்கல்கள் இருக்கையில், இது பத்தோடு பதினொன்று. நாங்கள் எல்லை மீறினால் சுடாதீர்கள் என்று தலைவர்கள் சொல்ல முடியாது; திருடாதீர்கள் என்று மக்களிடம் சொல்லவும் முடியாது. அரசியல் சங்கடம். மேலாக, இந்தச் சிக்கலைத் தீர்ப்பதால் கோடிக்கணக்கில் காசு பார்க்க முடியாது, குமரன்.
'திருடினால் சுடாதே' என்று பாட்டெழுதிக் குரல் கொடுக்கும் நீங்கள், 'சுடுவார்கள் திருடாதே' என்றும் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
மனதை பதற வைக்கிறது!
உங்கள் கவிதை மீனவர்களின் மன உளைச்சலை அழகாக எடுத்துரைக்கிறது.
அப்பாதுரையின் கருத்தும் நியாயமானதே. ஆனால் கடலில் எப்படி எல்லையை வரையறிந்து சொல்லமுடியும் ? ரோந்துப் படை இருந்தால் நல்லது. இந்த பிரச்சினையை யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை என்பதே வேதனை. உயிரின் விலை ஏழை என்றால் சீப்பானதா?
shiva, kaneer thanneeraai...
அன்பு சிவகுமாரா,கருத்து சுதந்திரத்தில் பூரண நம்பிக்கை உள்ளவன் நான்.கடலில் மீன் பிடிப்பதும்,அதற்கு ஆழமான பகுதிக்குப் போவதும்,புயல் எச்சரிக்கையையும் மீறி வலை வீசுவதும்,மீனவர்களின் வாழ்க்கை நடைமுறை.மீன்கள் வண்டியேறி விற்கப்படத்தான் பிடிக்கப்படுகின்றன.லாப நஷ்டம் உள்ளதுதான் தொழில். சிங்களத்துப்பாக்கிகள் எலிகளை புலிகள் ஆக்குகின்றன என்பதுதான் முக்கியமான பதிவு.கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் எல்லை மீறுகிறோம் என்பதும், வோட்டு கேட்பவர் பேசுவதில்லை என்பது குறைகளாக தோன்றும் முறையீடுகள் நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும், எல்லோர் சாவும் கடலில் என்பது ஏற்க முடியாத புலம்பல்.விரக்தியில் எல்லாமே தவறாகத் தோன்றுகிறது என்பதே நான் கூற வந்தது. யாரையும் காயப்படுத்தும் நோக்கமோ, உள்ள தவறுகளை இல்லை என்று வாதாடுதலோ இல்லை.
மீனவர்களின் நிலைமையை கவிதையாய்
கண் முன் தந்தது பதிவு
அப்பட்டமான வார்த்தைகள்
ஆமாம் !
அங்க நாட்டின் உயிரை பாதுகாக்க,
இங்க உயிரின் உயிரை பாதுகாக்க
மறுபடி ஒரு சூடான கவிதை. பின்னூட்டத்தில் வாதங்களும் சூடாக இருக்கின்றன. இதை ஏதாவது ஒரு வெகுஜனப் பத்திரிக்கைக்கு அனுப்புங்களேன் சிவகுமார்...
மீனவ நண்பர்களின் வலியை கவிதையாய் வடித்து இருக்கீங்க சிவகுமாரன். :(
மீனவர் வாழ்க்கையைப் பற்றி அதிகமாக ஏதும் அறிய சந்தர்ப்பமே இல்லாத எனக்கு, தங்கள் கவிதையைப் படித்ததும், ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு செய்தியும் மனக் கண் முன் விரிந்து வந்து, கண் கலங்கச் செய்து விட்டன.
ஒவ்வொரு வரிகளிலும், ஒவ்வொரு வார்த்தைகளிலும், ஒவ்வொரு எழுத்துக்களிலும், ”நித்ய கண்டம், பூரண ஆயுஷு” என்று காலம் தள்ளிவரும் மீனவர்களின் இன்றைய நிலைமையை, தெள்ளத் தெளிவாக, என் போன்ற சாமான்யனுக்கும் புரியும்படி, எழுதியுள்ள உங்கள் கை விரல்களுக்கு, என் அன்பான முத்தங்கள்.
:((( no more words to convey!
சொல்ல வார்த்தை இல்லை சிவா
//எல்லைக்குள்ள எங்களுக்கு
எதுவும் கிடைக்கல - கொஞ்சம் .
எல்லை தாண்டி மீன் பிடிச்சா .
உசிரு மிஞ்சல .//
superb lines
கண்முன் காட்சிகளாய்
கவி வரிகள் வலிகளோடு..
வரிகள் ஒவ்வொன்றும் அருமை!
திரு. அப்பாதுரை அவர்களின் கருத்து ....."கடல்"
பிரச்சினை நடுநிலையாக அலசப்படவில்லை என்பதே என் கருத்தும்.
உணர்ச்சிவசப்படுவது கவிஞருக்கு பலம். சில சமயங்களில் அதுவே பலவீனமாகிவிடுகிறது. இந்த கவிதையில் "யானை" சற்றே அடி சறுக்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.
மிக அற்புதமான கவிதை சிவா.சிகரங்களைத் தொடுகிறீர்கள்.
ஒரு கவிஞனின் வார்த்தைகள் மூளையிலிருந்து வருவதல்ல.மனதிலிருந்து.அந்த அளவில் மீனவர்களின் மனதுக்குள் புகுந்து வாழ்ந்து வெதும்பி வெளிவந்திருக்கின்றன வார்த்தைகள்.
ஒரு கவிஞன் அவனளவில் அவன் பங்கைச் சரியாகச் செய்தால் போதும்.எல்லோருக்கும் பிடித்தமான ஒரு தீர்வு ஒருபோதும் அமைவதில்லை எந்தப் பிரச்ச்னையிலும்.
சபாஷ் சிவா.
சிவா.ஒரு தகவல்.
என்னுடைய விளம்பர போதை இடுகையில் விடுபட்ட மேலும் இரு விளம்பரங்களை இணைத்திருக்கிறேன்.
நேரம் அமையும்போது பாருங்கள்.
தொந்தரவென்று கருத மாட்டீர்கள்தானே?
இந்தப் பிரச்சனையில் யார் தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதெல்லாம் அப்புறம்..
வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கவி தந்ததற்கு நன்றிகள் சிவகுமாரன்....
தொந்தரவா ?
அவைஎல்லாம் பொக்கிசங்கள் சுந்தர்ஜி.
நன்றி
GMB , அப்பாத்துரை & இளமுருகன்.
உங்கள் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதிலாய் சுந்தர்ஜி பதில் சொல்லிவிட்டார்.
ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
நான் கவிஞன் .
நாட்டாமை அல்ல தீர்ப்பை மாத்திச் சொல்ல.
ஒரு மீனவனின் நிலையிலிருந்து இந்தக் கவிதையை எழுதி இருக்கிறேன். அவ்வளவுதான்.
அன்புள்ள சிவகுமரன்..
சில நிமிடங்கள் சலனமற்று உறைந்துபோயிருக்கிறேன். நீண்டிருக்கும் ஒரு சோக வரலாற்றின் நீர்த்துப்போகாத உணர்வு வெப்பத்தில் உருகி வேகிறேன். ஒரு சொல்கூட வீணின்றி மனதைத் தைத்து நிற்கின்றன. ரொம்பச் சங்கடமாக இருக்கிறது. பசியை அடகுவைத்து படகேறினால் பசியோடு பஞ்சாய் உயிரும் போகும் அவலத்தைக் கண்கொண்டு பார்ப்பாரில்லை. இன்னுமொரு சுனாமி அலை எப்ப வருமுங்க? வேற ஒண்ணுமில் ஒரேயடியா போயிரலாங்க... மனசு நொந்துவிட்டது இந்த வரிகளில். அனலாய் வேதனை கொப்பளிக்கிறது. வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகு என்பதுபோல நிச்சயிக்கப்பட்ட வாழ்வில் அவர்கள் பந்தாடப்படுபவது அந்த ஆண்டவனையே சந்தேகம் கொள்ள வைக்கிறது. அவர்கள் எதற்காகவும் போராடவில்லை. ஒருவேளை ஒரேவேளை திருப்தியாக சாப்பிட ஒருவேளை நிம்மதியாக உறங்க..ஒருவேளை தன் குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க என்றுதான் ஆயிரம் வேளைகளில் அலைகளில் அலைகிறார்கள் வாழ்க்கையை ஈடுவைத்து. விடிந்தும் மடிந்தும் அவர்களின் மூதாதையர் அழுதகண்ணீர்தான் இன்றைய கடலோ. வேதனை மண்டும் விடிவு கண்டிட மனமில்லாத சமுகத்தின் மெத்தனத்தோடு இந்தப் பதிவில் மனம் கசிகிறேன். அற்புதமாய் எளிமையாய் மனத்தில் குழைந்த வேதனையின் சேற்றிலிருந்து எழுந்து உயிர்க்கின்றன ஒவ்வாரு சொல்லும்.
அன்புள்ள சிவகுமரன்..
சில நிமிடங்கள் சலனமற்று உறைந்துபோயிருக்கிறேன். நீண்டிருக்கும் ஒரு சோக வரலாற்றின் நீர்த்துப்போகாத உணர்வு வெப்பத்தில் உருகி வேகிறேன். ஒரு சொல்கூட வீணின்றி மனதைத் தைத்து நிற்கின்றன. ரொம்பச் சங்கடமாக இருக்கிறது. பசியை அடகுவைத்து படகேறினால் பசியோடு பஞ்சாய் உயிரும் போகும் அவலத்தைக் கண்கொண்டு பார்ப்பாரில்லை. இன்னுமொரு சுனாமி அலை எப்ப வருமுங்க? வேற ஒண்ணுமில் ஒரேயடியா போயிரலாங்க... மனசு நொந்துவிட்டது இந்த வரிகளில். அனலாய் வேதனை கொப்பளிக்கிறது. வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகு என்பதுபோல நிச்சயிக்கப்பட்ட வாழ்வில் அவர்கள் பந்தாடப்படுபவது அந்த ஆண்டவனையே சந்தேகம் கொள்ள வைக்கிறது. அவர்கள் எதற்காகவும் போராடவில்லை. ஒருவேளை ஒரேவேளை திருப்தியாக சாப்பிட ஒருவேளை நிம்மதியாக உறங்க..ஒருவேளை தன் குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க என்றுதான் ஆயிரம் வேளைகளில் அலைகளில் அலைகிறார்கள் வாழ்க்கையை ஈடுவைத்து. விடிந்தும் மடிந்தும் அவர்களின் மூதாதையர் அழுதகண்ணீர்தான் இன்றைய கடலோ. வேதனை மண்டும் விடிவு கண்டிட மனமில்லாத சமுகத்தின் மெத்தனத்தோடு இந்தப் பதிவில் மனம் கசிகிறேன். அற்புதமாய் எளிமையாய் மனத்தில் குழைந்த வேதனையின் சேற்றிலிருந்து எழுந்து உயிர்க்கின்றன ஒவ்வாரு சொல்லும்.
தேவையான உணர்ச்சி தேவையாக வந்திருக்கிறது ... ஆக மொத்தத்தில் அரசியலில் அடிபடுவது பொதுமக்களும் பொழப்புக்கான உழைப்பாளிகளும் தான்... சுனாமி தேடுவது சோகத்தின் உச்சம்..
உங்கள் கவிதை பிரமாதம் சிவகுமாரன்.
இந்த சோகம் சொல்லி முடியாதது.
மீன் பிடிக்கும் தொழிலை அரசாங்கம் மேற்கொண்டால்,
மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியமும்
கிடைக்கும், அதே சமயம் அரசாங்கப் படகுகளில் செல்வதால்,
பாதுகாப்பும் கிடைக்கும்.
இருப்பினும் இது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று
தெரியவில்லை.
சுப்பு ரத்தினம்.
மீனவர்களின் நிஜவாழ்க்கை
இயல்பான வார்த்தைகளில்
படித்ததும் உண்டான பாதிப்புத்தான்
இன்னும் நீங்க மறுக்கிறது
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
அன்பின் சிவகுமாரா, உன் எழுத்துகளிலும் உன் தமிழிலும் அதில் உன் ஆளுமை கண்டும் பல முறை வியந்திருக்கிறேன். பின்னூடங்களில் பகிர்ந்தும் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படல் எழுத்தாளன் குணம். எண்ணிலும் சொல்லிலும் பொருளிலும் பிழை தவிர்க்கலாம் எனவே நான் எழுதியதன் நோக்கம். புரிதலில் எங்கோ தவறு. அது என் பிழையாயும் இருக்கலாம். நீ நீடூழி வாழ்க, வளர்க.
பேராசிரியர் ஹரிணி அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பின்னூட்டம் என் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.
நன்றி.
திரு அப்பாத்துரை அவர்களே,
மறுபடியும் வந்து ஒரே வரியில் பிரமாதம் என்று சொன்னதன் பின்னணி என்ன? ஏற்கெனவே சொல்லிவிட்டீர்களே? நான் பாராட்டைத்தான் விரும்புகிறேன் விமர்சனத்தை அல்ல என்று பொருளா ?
அப்படி அல்ல அப்பாஜி. உங்களைப் போல் எனக்கு ஒரு விஷயத்தை எல்லா பக்கங்களில் இருந்தும் அலசத் தெரியாது. இளமுருகன் சொன்னது போல நான் நடுநிலையுடன் அலசவில்லை தான். ஆனாலும் விளக்கம் சொல்ல தெரியாமல் குழம்பி இருந்த நிலையில் சுந்தர்ஜியின் பின்னூட்டத்தை உங்களுக்கான் பதிலாக சொல்லிவிட்டேன்.
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மதிப்பிற்குரிய GMB சார்,
தங்களின் பின்னூட்டத்தில் தவறேதும் இல்லை. தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் அனுபவத்திற்கு முன்னர் என் அறிவு உங்கள் கால் தூசிக்குச் சமம். என் தவறுகளைத் திருத்திக் கொள்கிறேன். தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களும் பேராதரவும் இல்லையென்றால் நான் என்றோ பிளாக்கை மூடிவிட்டு வழக்கம் போல் சிவாலயங்களுக்கு சென்று கொண்டிருப்பேன்.
தங்களின் வாழ்த்தையும் வருகையையும் தொடர்ந்து வேண்டுகிறேன்.
நன்றி. திரு VAI.GO .அவர்களே. நான் ஒன்றும் அதிகம் விஷயம் தெரிந்தவனல்லன். ஊடகங்களின் மூலம் அறியும் சிறு விசயங்களும் என் மனதை வெகுவாய்ப் பாதித்து விடுகின்றன. இந்த கவிதையை எழுதும் முன்னர் தொண்டியைச் சேர்ந்த மீனவத் தொழிலை விட்டுவிட்டு இப்போது பெங்களூரில் textile பிசினஸ் செய்து வரும் என் கல்லூரி நண்பனிடம் பேசினேன். அவன் அளித்த தகவல்கள் மனதை இன்னும் கனக்கச் செய்பவை.
மீனவத் தொழில் செய்துவந்த கடலூர் வண்ணாரப் பாளையத்தைச் சேர்ந்த என் இன்னொரு கல்லூரி நண்பனை சுனாமிக்குப் பிறகு இன்று வரை தொடர்பு கொள்ள இயலவில்லை. கல்லூரி விடுதியில் என் அறைத்தோழன் அவன். ஒருமுறை பாண்டியில் பணிபுரிந்த காலத்தில் அவன் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மீன் படகில் தன்னோடு வருகிறாயா எனக் கேட்டான். அவன் அண்ணன் மற்றும் வேறு சிலரோடு படகில் சென்றோம். அவன் தாயார் தின்பண்டங்களும் சாப்பாடும் கொடுத்தனுப்பினார். முதலில் ஜாலியாக இருந்தது. மாலையாகியும் வீடு திரும்பவில்லை. ஒரு மீனும் பிடிக்கவில்லை. விசாரித்தபோது திரும்பிவர 3 நாட்களாகும் என்றார்கள்.எனக்கு பயத்தில் ஜுரம் வந்து விட்டது. மீன்பிடித்து திரும்பி வந்த வேறொரு படகில் என்னைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். மறக்க முடியாத அனுபவம்.
திரு சூரி சொல்வதை கவனித்தீர்களா நண்பர்களே ?
ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இல்லையா ?
நன்றி சமுத்ரா , திருநா, மாணவன், நந்தலாலா, கனாக்காதலன், GMB , ஹேமா, RVS , சென்னைப்பித்தன், தென்றல் சரவணன், அப்பாத்துரை, ப்ரியா, ஜீ, சித்ரா, கீதா சந்தானம், கோநா, ராஜி, திருமதி ஸ்ரீதர் , ஸ்ரீராம், வெங்கட் நாகராஜ், வை.கோ, தக்குடு, எல்.கே, நாகா, மலிக்கா, ஆயிஷா, இளமுருகா, சுந்தர்ஜி, ஹரணி, பத்மநாபன், சூரி , & ரமணி .
அனைவருக்கும் நன்றி
புறமொன்றும் இல்லை புலவரே.
கருத்து ஒப்பாவிட்டாலும் கவிதை அருமை என்று வலியுறுத்தாமல் விட்டேனோ என்று தோன்றியது, அதனால் தான். திட்டுவதைத் தான் ஒரு முறையோடு நிறுத்திக் கொள்ளச் சொல்வார்கள்; பாராட்டுவதை பலமுறை செய்தால் குறையில்லை. :)
எல்லோரையும் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலயும் எல்லா விதத்திலயும் திருப்திபடுத்த முடியாது என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
நீங்கள் பாட்டெழுதிய வேளையோ - பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே?
நன்றி அப்பாத்துரை அவர்களே.திட்டுக்களும் குட்டுக்களும் தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகின்றன.
நானும் செய்திகள் பார்த்தேன். விடிவு கிடைக்கும் என நம்புவோம்.
எல்லாம் தேர்தலுக்காகத்தான் என்று நான் சொல்லவில்லை. Times of Indiaவில் வந்த செய்தியை பாருங்கள்.
NEW DELHI: With an eye on upcoming elections in Tamil Nadu, the government has decided to rush foreign secretary Nirupama Rao to Sri Lanka to take up the issue of Indian fishermen. Government officials on Friday described the situation emanating out of the death of two Indian fishermen, who were killed allegedly by the Sri Lankan navy, as a complicated matter which needed further investigations.
மீனவர் கடலுக்கு செல்வதும் சில நேரங்களில் இப்படி நேர்வதும் செய்திகளாகி பின் மறக்கப்படுகின்றன. நிரந்தரத்தீர்வு நிச்சயமாய் ஒன்று இருக்கிறது. அதை ஆட்சியாளர்கள் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். அதைச் செய்ய வைக்கிற பிரகடனமாய் இந்தக் கவிதை!
நன்றி ரிஷபன் சார்.
//
தண்ணீரிலே எங்க வாழ்க்கை
தத்தளிக்குது.- எங்க
கண்ணீராலே கடலு கூட
உப்புக் கரிக்குது.
மீன்கள் நமக்கு உணவு ஆகும்
தெரிஞ்ச சேதிங்க - நாங்க
மீன்களுக்கே உணவு ஆன
கதையும் உண்டுங்க
//
கருகிவிட்ட கதையைக்கண்டு உருகிவிட்டது உள்ளம...
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
இதை படிக்கும் போது மனசு வலிக்குது நண்பா ...
இந்நிலை மாறனும்... அதுக்கு நாம் ஒன்று சேரனும்
//தண்ணீரிலே எங்க வாழ்க்கை
தத்தளிக்குது.- எங்க
கண்ணீராலே கடலு கூட
உப்புக் கரிக்குது.//
கலங்கவைக்கிறது கவிதை.
ஒன்னும் சொல்ல முடியல நண்பா
நேராகப்பார்த்திருந்தால் கட்டியனைத்திருப்பேன்.
வலியோடுவாழும் மக்களின் வாழ்க்கையை அழகாக.
நன்றி சூசைப்பாண்டி அரசன், ராஜவம்சம், & சுந்தரா
தாமதமாக வந்து விட்டேன். இந்தக் கவிதையில் மீன்களுக்கே உணவாகும் மனிதர்களின் பரிதாபம். அடுத்த கவிதையில் இரையோ என சந்தேகிக்கும் கழுகுப் பார்வை? வர வர உங்கள் வலைப்பக்கம் பாலா படம் போல் இருக்கிறது.
மிகவும் அருமை
சூப்பர். மீனவர்களை இரை ஆக்கி கொள்ளும் அவர்களை என்ன செய்வது?
என்னிடம் எடுத்து கொடுங்கள் அணு ஆயுதங்களை , அடுத்த நிமிடம் நீங்கள் பார்ப்பீர்கள் அவர்களின் பாகங்களை .
கண்ணில் தண்ணீர் வரவைத்து விடீர்கள் அப்பா (அவர்கள் - இலங்கை கடற்ப் படை ).
மீனவ சமூகத்தை பற்றி இதுவரை நான் படித்ததில் மிகச்சிறந்த கவிதை (புலம்பல்)
EN Inayhin Kathai Arputham. Oru siriya vendugol. En inam ippothu Satru Padipil uyarthulathu ithan adipadiyil inum munnera motivationlavum eluthunga. Nandri
கருத்துரையிடுக