ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
அறுத்தே வாழும் வரம் வேண்டும்
காசும் பணமும் பொன்னும் பொருளும்
கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்
பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும்
பொடிப் பொடியாகும் நிலை வேண்டும்
மண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும்
மறந்தே போகும் மனம் வேண்டும்
வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும்
வாடிப் போகும் உடல் வேண்டும்
போலிச் சுகங்கள் தேடும் உள்ளம்
பொசுங்கிப் போகும் நிலை வேண்டும்
உண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும்
உதறித் தள்ளும் உரம் வேண்டும்
இன்னும் இன்னும் என்னும் ஆசை
இல்லா தொழியும் வரம் வேண்டும்
பாழும் உலகின் பாவம் யாவும்
பார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும்
வாழும் போதே மரணம் வந்தால்
வா-வென்றழைக்கும் மனம் வேண்டும்
வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும்
வேண்டா தாகும் நிலை வேண்டும்
ஆண்டவன் எந்தன் அருகே வந்தால்
அலட்சியம் செய்யும் மனம் வேண்டும்.
-சிவகுமாரன்
01-01-1993
46 கருத்துகள்:
//ஆண்டவன் அருகே வந்தால்
அலட்சியம் செய்யும் மனம்//
வரம் வேண்டுவது கடவுளிடமா?
நல்கவிதை
18 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு ஒரு பக்குவத்துடன் கவிதை எழுத உங்களுக்கு வரம் கிடைத்துள்ளதே என வியப்பாக உள்ளது எனக்கு.
இதே காலக்கட்டத்தில், நான் ஒரு அரங்கில், ஒரு கவிதைப்போட்டியில், கலந்து கொண்டேன். On the spot தலைப்பு கொடுப்பார்கள். உடனே ஒரு கவிதை எழுதி மேடையில் வாசிக்க வேண்டும். நடைபெற்ற இடம், கலைவாணி ஹால், BHEL மனமகிழ் மன்றம், திருச்சி-14. தலைமை ஏற்ற்வர் கவிக்கோ திரு. அப்துல் ரஹ்மான் அவர்கள். சுமார் 1000 பேர்கள் வரை கூடியிருந்தனர்.
[அப்போதைய முதல்வரை சக அமைச்சர்களே சந்தித்துப் பார்ப்பதோ, பேசுவதோ கஷ்டமான காரியம்.]
எனக்குக்கொடுக்கப்பட்ட தலைப்பு: ”இறைவன் கேட்கின்றான்”
நான் எழுதி மேடையில் ஏறி வாசித்த கவிதை:
==============
இறைவன் கேட்கின்றான்”
”வரம் ஒன்று வேண்டுமென்று”!
வரம் அளிக்கும் இறைவனுக்கே வரமா?
”என்ன வரம் ஸ்வாமி!”; பக்தியுடன் வினவினேன்.
”அரசியலில் புகுந்து அமைச்சர் ஆக வேண்டுமென்றார்”!
”அம்மையாரைப்போய் பாரும் என்றேன்”!
”அதற்குத்தான் வரம் வேண்டுமென்றார்”.
===================
கவிதையை நான் மைக்கில் படித்து முடித்ததும், கைத்தட்டுகள் அடங்க
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியது.
மேடையை விட்டு இறங்கிய என்னை கழகக்கண்மணிகள் பலரும் கட்டித்தழுவிக்கொண்டனர்.
நல்லபடியாக வீடு போய்ச்சேர வேண்டுமே என்ற கவலையும் எனக்கு இருந்தது.
இந்த வரம் பற்றிய தங்கள் கவிதையைப்படித்ததும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வந்து விட்டது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
வேண்டும் வரம் கிடைக்கும்
முன்னிரவின் அமைதியில் தமிழிசை கேட்டு அமைதியுறும் நிறைவு. நன்று.
ரொம்ப கஷ்டமான வரங்களாதான் இருக்கு.
இருந்தாலும் நிறைவேறட்டும்
சிவகுமரன் அவர்களே! பற்றுக பற்றற்றான் பற்றினை-அப்பற்றினை
பற்றுக பற்றூவிடர்க்கு! என்றான் வள்ளுவன்.
ஆண்டவனே அருகில் வந்டாலும் அலட்சியம் செய்யும் மனம் வேண்டும் என்கிறீர்கள் நீங்கள். நன்று---காஸ்யபன்
நீங்கள் 'வேண்டும்' அத்தனை வரங்களும் நிறைவேறினால் நல்லது.
வேண்டும் எனக் கேட்பது மட்டும்தான்
வேண்டுதலாக இருக்கவேண்டுமா?
வேண்டியதைத் தருதல் மட்டும்தான்
வரமாக இருக்க வேண்டுமா?
வேண்டாம் என வேண்டுதலும் வேண்டுதல்தான்
அதை தருதலும் வரம்தான்
மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிகிற என்னால், கவிதை வேண்டுகிற விஷயங்களோடு ஒத்துப் போக முடியவில்லை.நீங்கள் கேட்கும் வரங்கள் அருளப்பட்டால், அது வாழ்க்கையாக இருக்காது. இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை.அப்படி வாழவே படைக்கப்பட்டிருக்கிறோம்.சோதனைகளை தாங்க சக்தி வேண்டுங்கள்.பேராசைப் படாமல் வாழ வழி கேளுங்கள். பிறருடைய துக்கங்களை உணர உள்ளம் வேண்டுங்கள்.நீங்கள் வேண்டும் வரம் கிடைத்த வாழ்க்கை வெறும் ஜட வாழ்க்கையாகி விடும். நலமான வாழ்வை நாடுங்கள்.என் மனதில் பட்டதைக் கூறினேன். இனி உன் பாடு. நீ வேண்டும் வரம் தருவதா வேண்டாமா என்று நீ வேண்டுபவரின் பாடு.
Are you married?:)
கவிதை நல்லா இருக்கு பாஸ்! ஆனா ஏன் இப்பிடியெல்லாம்? :-)
ஆண்டவன் எந்தன் அருகே வந்தால்
அலட்சியம் செய்யும் மனம் வேண்டும். //
வரம் தரும் ஆண்டவனுக்கே வரம்.
வளையும் இளம் வயதில் துறவு வேண்டிய உங்கள் கவிதை
விளைந்து மடியும் வயதிலும் உறவுகள் கேட்கும் கலைஞரை
எதிர்மறையாய் நினைவூட்டுகிறது, திரு சிவகுமாரன்.
'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்பது போலவா...
எக்காலத்தும் பொருந்தும் பிரார்த்தனைகளை வாசன் ஐயா நுட்பமாக சமகால அரசியலில் (தேர்தல் நேரம் வேறு) பிணைத்து விட்டாரே...!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறந்த நாளையொட்டி கேட்கின்ற வரங்களா இவை?
"ஆண்டவன் எந்தன் அருகே வந்தால்
அலட்சியம் செய்யும் மனம் வேண்டும்".
நீங்கள் அருட்கவி'யில் இடுகிற கவிதைகளிடமிருந்து, முரணாக உள்ளதே? 18 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கவி நயத்துக்காக எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.
அந்த வகையில், கவிதை மிக அருமையாக உள்ளது
நன்றி கலாநேசன் , எல்.கே. அப்பாத்துரை, ராஜி, காஷ்யபன் அய்யா , ஸ்ரீ அகிலா . ரமணி, ஜீ , இராஜராஜேஸ்வரி, & நிலாமகள்
நின்னை சில வரங்கள் கேட்பேன் என்றார் பாரதியார்...
மனம் சீரானால் வரம் சீராகும் என வடிவமைத்த கவிதை அழகு....
நான் திரு.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் கருத்தை அப்படியே அமோதிக்கிறேன். வாழ்கை வாழ்வதற்கே. உலகம் ரசிப்பதற்கே. மனம் நிறைந்த வாழ்கையை ரசனையோடு வாழவேண்டும். நம்மால் இயன்றவரை யாரையும் புண்படுத்தாமல், பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்.
வை.கோ. சார் அவர்கள் சொன்னது
\\18 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு ஒரு பக்குவத்துடன் கவிதை எழுத உங்களுக்கு வரம் கிடைத்துள்ளதே என வியப்பாக உள்ளது எனக்கு.//
பக்குவம் எல்லாம் இல்லை சார். 23 வயது, கல்லூரிப் பருவம், எது பாதை என்று தெரியாமல், நாத்திகமும் , கம்யூனிசமும் பேசிக்கொண்டு, மேடையேறும் போதெல்லாம் பிரச்சினை கிளப்பிக் கொண்டு இருந்த நேரம்.
ஒரு புத்தாண்டு தினத்தில் எழுதிய கவிதை இது. எழுதும் போது என்ன மன நிலையில் இருந்தேன் என்று தெரியவில்லை.
வரம் தரும் இறைவன் ஒழிந்து கொண்டிருப்பான்!
ஒளிந்து கொண்டா இல்லை ஒழிந்து கொண்டா தென்றல் ? நான் நாத்திகம் பக்கம் சாய ஆரம்பித்த காலத்தில் எழுதியது இது.
GMB சொன்னது
\\\ சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிகிற என்னால், கவிதை வேண்டுகிற விஷயங்களோடு ஒத்துப் போக முடியவில்லை///
-- எனக்கும் தான்ஒத்துப் போக முடியவில்லை. இது எப்போதோ தெளிவில்லாத போது எழுதியது.அருட்கவி தளத்தில் வெளியிடுபவை தான் நான் கடந்த பத்து வருடங்களாக் வேண்டியது, வேண்டுவது.
GMB சொன்னது
\\\ சிவகுமாரா,கவிதையைப் பாராட்ட முடிகிற என்னால், கவிதை வேண்டுகிற விஷயங்களோடு ஒத்துப் போக முடியவில்லை///
-- எனக்கும் தான்ஒத்துப் போக முடியவில்லை. இது எப்போதோ தெளிவில்லாத போது எழுதியது.அருட்கவி தளத்தில் வெளியிடுபவை தான் நான் கடந்த பத்து வருடங்களாக் வேண்டியது, வேண்டுவது.
இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கவிதை படைத்தது அருமை.
ஆனால்,இதில் சொல்லப்பட்டிருக்கும் வரங்கள் கிடைத்தால் நிச்சயமாக அது மனித உயிராக இருக்க வாய்ப்பு குறைவு.என் கனிப்பு தவறெனில் மன்னிக்கவும்.
Samuthra said
\\Are you married?//
-- Unmarried when I wrote this poem.
(This poem became meaningless after marriage.????!!!)
வாசன் கூறியது.
\\ வளையும் இளம் வயதில் துறவு வேண்டிய உங்கள் கவிதை
விளைந்து மடியும் வயதிலும் உறவுகள் கேட்கும் கலைஞரை
எதிர்மறையாய் நினைவூட்டுகிறது,///
உண்மை தான் . அந்த வயதில் எனக்கு துறவில் நாட்டம் இருந்தது. ஆனால் இறை நம்பிக்கை அவ்வளவாய் இல்லை.
இந்தக் கவிதை கலைஞரை நினைவூட்டியதா ? ஆச்சரியம்.... இதை எழுதும் காலத்தில் நான் அவரின் ஆதரவாளன் ( அவரது தமிழால் ஈர்க்கப்பட்டு )
inbangal/thunbangal/aasaikal/viruppu-veruppukal/venduthal-vendaamai--- ivai anaiththum, annai poruththa varai avasiyam thaan. iraivanidam varam kettu aasaa paasangalai veruththalil enna payan? meen pidikka katrukkondu vittom allavaa? piraku yen iraivanidam meenukkaaka yaasagam ketka vendum? aakkaththilum azhiththalilum akappattuk kondu muzhikkum iraivanai thontharavu seiyya vendaame... iruppathai vaiththuk kondu inithe vaazhvom...
ennangal palavatrinai thoondi vidukirathu...
நிலாமகள் சொன்னது
\\ 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்பது போலவா... ///
-- ஈசனோடு ஆவதே என் இப்போதைய ஆசை.
இளமுருகன் சொன்னது
\\\நீங்கள் அருட்கவி'யில் இடுகிற கவிதைகளிடமிருந்து, முரணாக உள்ளதே? 18 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கவி நயத்துக்காக எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.//
நிச்சயமாக் கவிநயத்துக்காக எழுதியது இல்லை. காதல் கவிதைகள் தவிர வேறெதையும் தவிர நான் கற்பனையாக எழுதியதில்லை. தேதியை கவனித்தால் தெரியும் . என் அப்போதைய வேண்டுதல் அது. அவ்வளவுதான் . என்ன மனநிலையில் இருந்தேன் என்று நினைவில்லை. ஆனாலும் அந்த நொடியில் நான் ஆசைப்பட்டதை கவிதையாக்கியிருக்கிறேன் என்பதே உண்மை.
ஒரு நிகழ்ச்சியை உனக்கு சொல்ல விரும்புகிறேன். சுந்தரபாரதி சித்தப்பாவுடன் சேர்ந்து கவியரங்கங்களில் கம்யூனிசம் பாடிக் கொண்டிருந்த காலமது. அப்பா, தான் பூஜையில் பாட ஒரே ஒரு முருகன் பாட்டு எழுதி தரச் சொன்னார்கள். நான் மறுத்தேன். அடுத்த கவியரங்கில் அப்பாவுக்கு நான் சூசகமாய் இப்படி பதில் சொன்னேன்.
"வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாட வந்த மாக்கவிஞன் பரம்பரை நான்"
- அப்பா அம்மாவிடம் சொன்னார்கள் " அவன் என் பரம்பரை இல்லையாம் ...என்னவோ மகா கவிஞர் பரம்பரையாம்...."
இப்போது எழுதிக் குவிக்கிறேன் . பாட அப்பா இல்லை. நான் புகழடையாமல் போனதற்கு என் அன்றைய தலைக்கனம் தான் காரணம் .
முரணாகத் தானிருக்கும். காரணம் நான் அப்போது அருட்கவி அல்ல . வெறுங்கவி .
பதமாநாபன் சொன்னது
\\ நின்னை சில வரங்கள் கேட்பேன் என்றார் பாரதியார்...
மனம் சீரானால் வரம் சீராகும் என வடிவமைத்த கவிதை அழகு... ///
நன்றிரசிகமணி சார் புரிந்து கொண்டதற்கு
நன்றி மீனாட்சி மேடம் . தேதி குறிப்பிட்டிருக்கிறேன் பாருங்கள். நான் எப்படிஎல்லாம் கவிதை எழுதி இருக்கிறேன் அப்போது- என்று ஒரு பின்னோக்கிய பார்வை .. அவ்வளவே
திருமதி ஸ்ரீதர் சொன்னது.
\\இதில் சொல்லப்பட்டிருக்கும் வரங்கள் கிடைத்தால் நிச்சயமாக அது மனித உயிராக இருக்க வாய்ப்பு குறைவு.என் கனிப்பு தவறெனில் மன்னிக்கவும்.//
நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் எப்போதோ தறிகெட்டுத் திரிந்த காலத்தில் மனம் வெறுத்துப் போய் எழுதிய கவிதையை இப்போது வெளியிட்டு எலோரையும் வெறுப்பேற்றியதற்கு
Matangi Mawley சொன்னது.
\\\ஆக்கத்திலும் அழித்தலிலும் அகப்பட்டுக் கொண்டு முழிக்கும் இறைவன i தொந்தரவு செய்ய வேண்டாமே ///
-- நன்றி மேடம் அதெப்படி , அவனை சும்மா விடுவது தொந்தரவு செய்யாமல் ?
உன்னை விடுவேனோ என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் - அருடகவியில் விரைவில் வரும் .
ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
அறுத்தே வாழும் வரம் வேண்டும்
காசும் பணமும் பொன்னும் பொருளும்
கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்//
இன்றைய உலகில் இப்படியொரு வரங்களை நாடும் மனிதனின் உள்ளத்து உணர்வுகள் வியப்பாகத் தான் இருக்கிறது. ஒவ்வோர் கவிஞருக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகள் இருக்கும். அந்த வகையில் தான் பற்றற நிலையில் வாழ வேண்டும் எனுன் உணர்வுடன் கவிதையினைப் படைத்துள்ளீர்கள்.
ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
அறுத்தே வாழும் வரம் வேண்டும்
காசும் பணமும் பொன்னும் பொருளும்
கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்//
இன்றைய உலகில் இப்படியொரு வரங்களை நாடும் மனிதனின் உள்ளத்து உணர்வுகள் வியப்பாகத் தான் இருக்கிறது. ஒவ்வோர் கவிஞருக்கும் வெவ்வேறு விதமான உணர்வுகள் இருக்கும். அந்த வகையில் தான் பற்றற நிலையில் வாழ வேண்டும் எனுன் உணர்வுடன் கவிதையினைப் படைத்துள்ளீர்கள்.
பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும்
பொடிப் பொடியாகும் நிலை வேண்டும்
மண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும்
மறந்தே போகும் மனம் வேண்டும்//
காலத்திற்கேற்ற வரி. இந்த ஆசைகள் எங்கள் எல்லோர் மனங்களிலும் என்றைக்கோ வந்திருக்குமாக இருந்தால் எம் நாடு இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறியிருக்கும்.
வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும்
வாடிப் போகும் உடல் வேண்டும்
போலிச் சுகங்கள் தேடும் உள்ளம்
பொசுங்கிப் போகும் நிலை வேண்டும்//
இந்த வரம் கிடைத்திருந்தால் உலகில் பல வன்புணர்வுகளும், கொலைகளும் நிகழாமல் போயிருக்கும்.
உண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும்
உதறித் தள்ளும் உரம் வேண்டும்
இன்னும் இன்னும் என்னும் ஆசை
இல்லா தொழியும் வரம் வேண்டும்//
தற்காலத்திற்கேற்ற கவிதையினை, இற்றைக்குப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறீர்கள். கவிதை இலகு நடையில், அனைவருக்கும் புரியும் மொழியில், மரபில் தவழ்ந்து மனதைக் கவர்கிறது.
வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும்
வேண்டா தாகும் நிலை வேண்டும்
ஆண்டவன் எந்தன் அருகே வந்தால்
அலட்சியம் செய்யும் மனம் வேண்டும்.//
மக்களே இறைவனாகத் தங்களைப் பிரகடனம் செய்யும் உலகில் இறைவனைக் கண்டாலே விலகிப் போகும் உள்ளம் கேட்கிறீர்கள். வித்தியாசமான கறபனை. பற்றற்ற நிலையினை விளக்கும் இலகு நடைக் கவிதை.
நாத்திகத்திலிருந்து ஆத்திகம் போனது ஆச்சரியமாக இருக்கிறது.
காலமே உண்மையான எஜமான் !!
காதல் கவிதைகளை வெறும் கற்பனையாக மட்டும்'தான் எழுதுகிறீர்களா? கல்யாணத்துக்குப்பிறகுமா? அண்ணிக்கு தெரியுமா இது? ஹா ஹா !!
தம்பி
நான் 93 இல் எழுதிய கவிதைகளை பற்றி சொன்னேன்.
அப்பொழுது உங்க அண்ணியை எனக்கு தெரியாது.
//Are you married?:)//
@சமுத்ரா : அருமையான கேள்வி, நியாயம் ஆனதும் கூட ...
:) :) :)
ஒவ்வொரு வரியையும் அணு அணுவாய் ரசித்து , சமகால அரசியலோடு ஒப்பிட்டு, ....உங்கள் பின்னூட்டங்கள் என் கவிதைக்கு இன்னும் வலுவையும் அங்கீகாரத்தையும் தருகின்றன தோழர் நிரூபன் அவர்களே
மிக்க நன்றி
மீண்டும் ஒரு நல்ல கவிதையை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ..
மிக்க நன்றி அரசன்
"காசும் பணமும் பொன்னும் பொருளும்
கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும் "
சூப்பர் . அமைதியை நினைப்பவர் பட்டியலில் நீங்களும் ஒருவர்.
கருத்துரையிடுக