ஞாயிறு, ஜூன் 05, 2011

உள்ளம் குப்பையடி


(தோட்டி துரைச்சாமியும், அவன் மனைவி மாரியம்மாளும் )    

மாரியம்மாள்:
ஊரைப் பெருக்கி தினம் கூட்டி- உடல்
  வருத்திக் குப்பை வண்டி ஓட்டி-நாம் 
யாரை சுத்தம் செய்தோம் மாமா - இங்கு 
  எதிலும் சுத்தம் பார்த்தோமா ?

துரைச்சாமி:
வாழும் இடத்தில் சுத்தம் வேணும் - வாய்
  வார்த்தை தனிலும் சுத்தம் வேணும் 
பாழும் நாட்டில் இந்த சுத்தம் 
  பாழாய்ப் போனதடி பெண்ணே

மாரி:
சுத்தம் சோறு   போடும்   என்று 
  சூடாய்  வாய் கிழிய பேசி 
சத்தம் போடும் இந்த மனிதர் 
  சுத்தம் என்னவென்றே அறியார் 

துரை:
வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வார் 
  வீதி பெருக்க நம்மை சொல்வார் 
நாட்டில் அரசியலில் வீசும் - துர்
  நாற்றம் மறப்பாரடி பெண்ணே 

மாரி:
இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார் -தவறு 
  இருந்தால் நம்மைத் திட்டிச் செல்வார்
நடத்தை சுத்தம் கெட்ட மனிதர் - இந்த
  நாட்டில் இருப்பதை அவர் அறியார்

துரை:
லஞ்சப் பணத்தில் தினம் குளித்து - பல 
  லட்சம் திருடும் அதிகாரி 
நெஞ்சம் அசுத்தமடி பெண்ணே - அவன் 
  வேட்டி வெண்மையடி கண்ணே 

மாரி:
அழுக்குப் பணத்தில் அவன் பிழைத்து 
  அழகாய் திரிவதென்ன மச்சான் 
உழைத்துப் பிழைக்கும் நம் கூட்டம் - தம் 
  உடைகள் நாறுவதேன் மச்சான்? 

துரை:
வெள்ளை  வேட்டி தினம் கட்டி- பொய்
  வேடம் புரியும் அந்த மனிதன் 
உள்ளம் குப்பையடி மானே - அவன் 
  ஊரில் பெரிய புள்ளி தானே 

மாரி:
கூவம் நதிக் கரையில் கூட  
  குடலைப் புரட்டும் நாற்றமில்லை  
பாவம் பிறக்கும் சட்ட மன்றம் 
  பார்த்தால் நாறுவது ஏனோ? 

துரை:
அப்பா வேண்டாம் அந்த வம்பு - நமக்கு
  அரசியல் பேச ஏது தெம்பு?
குப்பை வண்டியோடு சேர்த்து - நம்மை
  கொளுத்தி எரித்திடுவார் பெண்ணே 

   

34 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அனைத்து வரிகளுமே அருமை.

மிகவும் பிடித்தது:
//வெள்ளை வேட்டி தினம் கட்டி- பொய்
வேடம் புரியும் அந்த மனிதன்
உள்ளம் குப்பையடி மானே - அவன்
ஊரில் பெரிய புள்ளி தானே //

பாராட்டுக்கள்.

thendralsaravanan சொன்னது…

அருமையான பாடல்!
உள்ளக் கருத்தை ரொம்ப அழகாகவே வெளிப்படுத்தியிருக்கீங்க!

Unknown சொன்னது…

நல்லா வந்திருக்கு...வாழ்த்துக்கள்.

rajamelaiyur சொன்னது…

Very very super kavithai

rajamelaiyur சொன்னது…

Kalakkal kavithai

சென்னை பித்தன் சொன்னது…

வண்ணக் கரை வேட்டி கட்டும்அவர் உள்ளக் கறை பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சிவகுமாரன்!

pichaikaaran சொன்னது…

மிக சிறப்பாக இருந்தது

G.M Balasubramaniam சொன்னது…

காணும் சிலரது செய்கைகள் உங்கள் உள்ளத்து உணர்ச்சிகளாகப் பிரவாகமெடுக்கிறது. மேலே இருப்பதனாலேயே அவர்கள் உள்ளம் அழுக்கானதா, அன்பு சிவ குமாரா,? அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்படும் போராட்டத்தில் அறிவு தோற்று, உணர்வு வெல்கிறது.

RVS சொன்னது…

குப்பையை யார் சுத்தம் செய்வது?
வழக்கம் போல கவிதை அருமை சிவா ;-))

RVS சொன்னது…

குப்பையை யார் சுத்தம் செய்வது?
வழக்கம் போல கவிதை அருமை சிவா ;-))

அப்பாதுரை சொன்னது…

நீண்ட நாள் விட்டு ஒரு அசல் கவிதை. :) நன்று, சிவகுமாரன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாவம் பிறக்கும் சட்ட மன்றம்
பார்த்தால் நாறுவது ஏனோ?
பாவம் தான் சட்டமன்றம்.

ஹேமா சொன்னது…

சுத்தப்படுத்துது கவிதை.சட்டமன்றம் நாற்றம்...!

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அப்பா வேண்டாம் அந்த வம்பு - நமக்கு
அரசியல் பேச ஏது தெம்பு?
குப்பை வண்டியோடு சேர்த்து - நம்மை
கொளுத்தி எரித்திடுவார் பெண்ணே

நலிந்தவர்களின்
இயலாமையை
இயல்பாய்
சொல்லுகிற கவிதை

கம்பீரம் சிவகுமாரன்

நிரூபன் சொன்னது…

சகோ, தாங்கள் நலமா?
அடிக்கடி காணமற் போகிறீர்களே...

நிரூபன் சொன்னது…

அரசியல் சாக்கடை பற்றி நச்சென்று ஒரு கவிதை...

குறையொன்றுமில்லை. சொன்னது…

அனைத்து வரிகளுமே நல்லா இருக்கு.

நிலாமகள் சொன்னது…

சாமானிய‌ர்க‌ளான‌ மாரியும் துரையும் ந‌ம் பிர‌திநிதிக‌ள் சிவா! எல்லாம் புரிந்திருந்தும்,செய‌ல‌ற்று, த‌ம் வ‌யிற்றுப்பாடு தீர‌ க‌ட‌மையை ம‌ட்டும் செய்ய‌ முடிந்த‌வ‌ர்க‌ள். தெருக்குப்பை தொலைந்திடுந்திடும் அவ‌ர்க‌ளால். பிற‌ குப்பைக‌ளுக்கு எல்லோருமாக‌ப் பொறுப்பெடுக்க‌ வேண்டும். ந‌ம‌து இட‌ர்க‌ளின் மைய‌ப் புள்ளி அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டிருக்கிற‌து... மாரி, துரை உட்ப‌ட‌...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உள்ளத்தின் குப்பைகளை அகற்றுவது எப்படி...

நல்ல கவிதை நண்பரே....

சிவக்குமார் சொன்னது…

மிகவும் சிறப்பான கவிதை எளிய மனிதர்களின் மொழியில்

kowsy சொன்னது…

துரையும் மாரியும் மாறிமாறிப் பேசிய வார்த்தைகளில் வாழ்வின் அவசியத்ஐதக் கவியாய்ப் பரிய வைத்திருக்கின்றீhகள். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

இக்காலத்துக்கல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்...

SOS சொன்னது…

நிகழ்நிலை சுட்டும் வித்தியாசமானதொரு கவிதை மிக நன்று. வாழ்த்துகள் நண்பரே...

arasan சொன்னது…

வாழ்வியலின் வரிகள் மிகவும் ரசித்தேன்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாவ்... வித்தியாசமான அழகான பதிவு... வரிகள் அருமை

பத்மநாபன் சொன்னது…

எசப்பாட்டாக கவிதை நன்றாக உங்களுக்கு வசப்பட்டுள்ளது சிவா...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
பட்டுக்கோட்டையாரின் பாடலைப்
படித்தது போல் ஒரு நிறைவு
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

kashyapan சொன்னது…

சிவகுமரன் அவர்களே! மாரியிடமும் துரைச்சாமியிடமும் சொல்லுங்கள் .அன்னா ஹஜாரே, பாபா ரம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ,ஜெயெந்திரர் என்று எராளமானவர்கள் நாட்டை சுத்தம் செய்ய வந்துவிட்டார்கள் என்று.அன்புடன் ---காஸ்யபன்

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

வணக்கம் சிவகுமாரன்,

//லஞ்சப் பணத்தில் தினம் குளித்து - பல
லட்சம் திருடும் அதிகாரி
நெஞ்சம் அசுத்தமடி பெண்ணே - அவன்
வேட்டி வெண்மையடி கண்ணே //

சாட்டையடி வரிகள்..

வாழ்த்துக்கள்...

மோகன்ஜி சொன்னது…

குப்பையைச் சுட்டி ஒரு கொமேதகக் கவிதை.. லேட்டா வந்தேனோ, காச்யபன் சார் கருத்தை படித்து வாய்விட்டு சிரிக்கமுடிந்தது.

KD சொன்னது…

இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார் -தவறு
இருந்தால் நாம்மைத் திட்டிச் செல்வார்
நடத்தை சுத்தம் கெட்ட மனிதர் - இந்த
நாட்டில் இருப்பதை அவர் அறியார்

I found an Spelling mistake in your poem.I don't know whether i cannot understand the actual meaning or is it really a spelling mistake.please check.

சிவகுமாரன் சொன்னது…

Thank you KD sir. Itis spelling mistake only. I've corrected it. Thank you very much.

ஊமைக்கனவுகள் சொன்னது…

ஏனோ ஞாபகம் வருகிறது இந்தப் பாரதி பாடல்,
“கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணன் அழகுமுழு தில்லை!
நண்ணும் முகவடிவைக் காணில் - அந்த
நல்ல மலர்சிரிப்பைக் காணோம்!
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்திருக்கும் பூவும்
வானை மறந்திருக்கும் பயிறும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி!
( நினைவினின் றெழுதுகிறேன் . வார்த்தைப் பிழை இருக்கலாம் )
ஓசையோ........?!
தெரியவில்லை.
நன்றி அண்ணா!!!

சிவகுமாரன் சொன்னது…

ஓசை ஒத்து வருகிறதோ . நன்றி விஜூ