வியாழன், நவம்பர் 01, 2012

சீட்டுக்கவி


ஈரேழு உலகிலும் இணையேதும் இல்லாத 
  இன்மொழித் தமிழ்க் காதலன். 
  எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது 
  இயங்கிடும் கொள்கை வெறியன் 
தீராத தமிழ்மோகத் தீயினை நெஞ்சுக்குள் 
  தேக்கிவைத் தலையும் கிறுக்கன் 
  தீந்தமிழ் கவியன்றி செல்வங்கள் ஏதையும் 
  சேர்த்துவைக் காத மூடன்
சீராக கவிசொல்லி சிந்தையை மயக்கிடும் 
   சிவகுமாரன் விடுக்கும் ஓலை.
   செந்தமிழ் கவிதைக்கு செவிசாய்த்து மகிழ்ந்திடும்
   செல்வந்த நண்ப காண்க.
பாராட்டுப் பெற்றபல கவிதைகள் பழசாகி 
   பரண் தூங்கும் நிலைமாறவே 
   பலநூறு படிகொண்ட நூலாக்கி பல்லோரும்
   படித்திட வழி செய்கவே. 


                                                                            சிவகுமாரன் 


12 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான சீட்டுக்கவி , புலவர்கள் உதவி கேட்டு, நேரில் சென்று கேட்கத் தயங்கி ( பயந்து ?!) மன்னர்கள், செல்வந்தர்களுக்கு, எழுதும் கடிதக் கவிதை.
எட்டயபுர மன்னனுக்கு பாரதி சீட்டுக்கவி எழுதியிருக்கிறார் . எனக்கும் சீட்டுக்கவி எழுத ஆசை வந்தது. என்ன எழுதுவது , யாருக்கு எழுதுவது ?
நான் பாரதியில்லை. எட்டயபுரத்து மன்னனும் இன்றில்லை.
ஆனாலும் எழுதினேன் தமிழ் மேல் உள்ள காதலால்.
ஓலையைப் படிக்கும் நண்பர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை இங்கு நண்ப எனக் குறிப்பிடுவது எனையாளும் ஈசனைத் தான்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள் சார்... வாழ்த்துக்கள்...

கண்ணொளியில் எதுவுமே வரவில்லை... கவனிக்கவும்...

நன்றி...

vasan சொன்னது…

எழுத்து வ‌ண்ண‌ம் ம‌ட்டுமே க‌ண்டு ம‌கிழ்ந்த‌
எங்க‌ளுக்கு உங்க‌ளின் 'குர‌ல்' வ‌ன்மை கேட்கவும்‌
வந்த‌ ப‌திவு இது.
பார‌தியை த‌வ‌ற‌விட்ட‌து இந்தியனின் குற்ற‌ம்.
இந்தியாவின் சாப‌ம்.

kashyapan சொன்னது…

படித்திட வழி செய்வோம்

பலநூறு படிகொண்ட நூலாக்கும்!------காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

சீட்டுக் கவி ஒரு மரபாய் நடந்து இன்று ஓய்ந்து விட்டது. எனக்கு பிடித்த சீட்டுக்கவி எது தெரியுமா?

Guaranteed by the Central Govt.

I promise to pay the bearer
the sum of ... rupees

(signed)
Governer
Reserve Bank of India

நலம் தானே சிவா?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான வரிகள்

அப்பாதுரை சொன்னது…

சிலிர்க்க வைக்கும் சந்தமிது
சிவகுமாரன் சொந்த மது.

Aathira mullai சொன்னது…

புதிய முயற்சி சிவா. பழைய அமைப்பு புதிய ஒலிப்பு. அழகு. மேலும்..மேலும் சிறக்க வாழ்த்துகள்!

Aathira mullai சொன்னது…

உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் சிவா!

kowsy சொன்னது…

சீட்டுக் கவி வரிகளில் மட்டுமன்று குரலிலும் கேட்டேன் இரட்டிப்பு மகிழ்வு கொண்டேன்.அருமை

இமா க்றிஸ் சொன்னது…

சீட்டுக்கவி அருமையாகவே வந்திருக்கிறது. :-) வாழ்த்துக்கள் சிவகுமாரன்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி, சகோதரி.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. தேடித் கண்டடைந்து படித்ததற்கு மிக்க நன்றி.