அவளெந்தன் காதல் மனையாள்
ஐம்பதைத் தாண்டும் இணையாள்
தவறேதும் செய்தி டாமல்
தண்டனை பெற்ற வினையாள்
கவலைகள் மறைத்துச் சிரிக்கும்
கலையினைக் கற்ற துணையாள் .
சிவனவன் அருளால் எதையும்
சிரிப்புடன் கடக்க முனைவாள்.
பிறந்தநாள் கேடா என்பாள்
பிறந்தென்ன கண்டேன் என்பாள்
பிறந்ததால் என்னைக் கண்டாய்
பேறென்ன வேண்டும் என்பேன்
இறந்திட வேண்டும் என்பாள்
இருக்கிறேன் உனக்காய் என்பேன்.
சிறந்ததோர் வாழ்க்கை தன்னை
சீக்கிரம் காண்பாய் என்பேன்.
பட்டமேற் படிப்பு கற்று
பலனென்ன கண்டேன் என்பாள்
பட்டறிவு தன்னைப் பிள்ளை
பெற்றதே உன்னால் என்பேன்
நட்டமே என்வாழ் வென்பாள்
நானுந்தன் இலாபம் என்பேன்
கட்டளை இட்டால் போதும்
கைகட்டிச் செய்வேன் என்பேன் .
நரம்பினில் சக்தி இல்லை
நடையினில் துள்ளல் இல்லை
கரம்பற்றி வந்த நாளாய்
கவலைக்குப் பஞ்சம் இல்லை.
வரம்புக்குள் விதித்த நாட்கள்
வாழ்ந்தென்ன ஆவதென்பாள்
வரம்வாங்கிப் பெற்ற பிள்ளை
வெல்வதைக் காண வென்பேன்.
நோயுடன் தினம்போ ராட்டம்.
நொடிக்குநொடி மனதில் மாற்றம்.
ஆயுள் இனி போதும் என்னும்
அலுப்புடன் பேச்சில் வாட்டம்
ஓயுமோ தேக்கி வைத்த
உள்ளத்தின் ஆசை ஓட்டம்
தாயுள்ளம் மட்டும் தானே
தாங்கிடும் விதியின் ஆட்டம் .
இன்னும் சில கடமை உண்டு
இறையருள் கொஞ்சம் உண்டு
முன்னே நாம் கண்ட தெல்லாம்
முடிந்தவை முடிந்து போக,
பின்வரும் நாட்களில் நாம்
பிடித்ததைச் செய்து வாழ்வோம்
அன்பிற்கு பஞ்சம் இல்லை.
அதுவரை ஆயுள் காப்போம்.
பிறந்த நாள்
வாழ்த்துகள்
அன்பே .
Have a Blessed Birthday