ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

கவியென்னும் தேரேறி




நினைவென்னும் முட்புதரின்
  நீண்டமுள் குத்திவிட 
  நெஞ்சுக்குள் இரத்தமழை  
  பொழிகிறது. - அதை
கனவென்னும் அணையொன்று
  கட்டுக்குள் வைத்திருந்தும்
  கரையுடைத்துச் சிலநேரம்
  வழிகிறது.

மனதிற்குள் விழியொன்று
  மறைவாக  உட்கார்ந்து
  மனிதர்களின் நாடகத்தைப்
  பார்க்கிறது - அது
தனதுஇமைத் தாழ்கொண்டு
  தளும்பிவரும் கண்ணீரைத்
  தடுத்தழகுக் கவிதையாகக்
  கோர்க்கிறது.

ஆசைகளை நெஞ்சுக்குள்
  அடக்கிவைக்க ஆலைக்குள்
  அகப்பட்ட கரும்பாகத்
  துடிக்கிறது. - அது
ஊசிமுனை  வார்த்தைகளை
  உள்ளடக்கி ஓர்நாளில் 
  உணர்ச்சியெனும் எரிமலையாய்
  வெடிக்கிறது.

பூட்டிவைத்த பெருங்கோபம்
  பகையென்னும் நெருப்புக்குள்
  போட்டுவைத்த இரும்பாகக்
  காய்கிறது. - அது
ஈட்டிமுனைச் சொல்லெடுத்து
  என்றேனும் ஓர்நாளில்
  எதிர்ப்போரின் முகம்கிழித்துப்
  பாய்கிறது.

நிறைவேறா எண்ணங்கள்
  நெஞ்சமெனும் கொடுஞ்சிறையில்
  நெடுங்காலத் தண்டனையைப்
  பெறுகிறது. - அது
கரையேறா அலையாகக்
  காத்திருந்து பின்னாளில்
  கவியென்னும் தேரேறி
  வருகிறது.

                         -சிவகுமாரன்

27 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நிறைவேறா எண்ணங்கள்
கவியென்னும் தேரேறி வருவது அழகோ அழகாக இருக்கிறது.

தேர்வடத்தைப்பிடித்தபடி கவிதா தாகத்துடன் நாங்களும் வருகிறோம்.

பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதை அருமை..
பாராட்டுக்கள் சிவகுமாரன்.

Unknown சொன்னது…

"நிறைவேறா எண்ணங்கள்
நெஞ்சமெனும் கொடுஞ்சிறையில்
நெடுங்காலத் தண்டனையைப்
பெறுகிறது"

அருமையான கவிதை.
அருமையான சந்தம்.

மோகன்ஜி சொன்னது…

அற்புதம் சிவா! எனக்கு பழைய கவிதை வரிகளெல்லாம் நிழலாடுகிறது நெஞ்சில். பலநேரம் கவிதை எழுதிமுடித்த பின்னே, மனம் லேசாவதற்கு பதிலாய், இன்னமும் கனத்துப் போகும் அவஸ்தை.
நல்ல கவிதை இது சிவா. தீ வரிகள்!

kashyapan சொன்னது…

தினம் கோவிலுக்குப் போவதில்லை.சிவகுமரா! ஆனால் சிவா,காமராஜ்,மாதவ் ஜி,மொகன் ஜி, சுந்தர்ஜி.அப்பாதுரை என்று ஒரு ரவுண்டு வருவேன். வாரம் ஒரு இடுகை தானே வருகிறது! ஏன்?---காஸ்யபன்

ஸ்ரீராம். சொன்னது…

கவிஎன்னும் தேரேறி வரட்டும். எங்களை எல்லாம் கொள்ளை கொள்ளட்டும்.

நிரூபன் சொன்னது…

கவியென்னும் தேரேறி//

கவியென்னும் தேரெறி
இங்கே கவிஞன் வருகிறான்
இனி பல காவியங்களை
தன் கண்களினால்
சொல்லி கவி பாடப் போகிறான்..///

என்பது போல உங்கள் கவிதையின் தலைப்பு கட்டியம் கூறி நிற்கிறது சகோ.

நிரூபன் சொன்னது…

நினைவென்னும் முட்புதரின்
நீண்டமுள் குத்திவிட
நெஞ்சுக்குள் இரத்தமழை
பொழிகிறது. - அதை
கனவென்னும் அணையொன்று
கட்டுக்குள் வைத்திருந்தும்
கரையுடைத்துச் சிலநேரம்
வழிகிறது.//

இவ் வரிகள் கவிதைகளின் பிறப்பினை அழகாகச் சொல்லுகின்றன. ஒவ்வோர் செயலுக்கும் ஓர் மூல காரணம் இருப்பதனைப் போல, இங்கே கவிஞனின் கவித் தேர்ப் பயணத்தில் நெஞ்சத்தில் உள்ள வலி நிறைந்த வார்த்தைகளை மடை திறந்து, கரை புரண்டு கவிதையெனப் பாய்கிறது...

சந்தம் அருமை.. இவ் இடத்தில் கவிதைக்கும் சந்தம் பக்க பலமாக உள்ளது.

நிரூபன் சொன்னது…

மனதிற்குள் விழியொன்று
மறைவாக உட்கார்ந்து
மனிதர்களின் நாடகத்தைப்
பார்க்கிறது - அது
தனதுஇமைத் தாழ்கொண்டு
தளும்பிவரும் கண்ணீரைத்
தடுத்தழகுக் கவிதையாகக்
கோர்க்கிறது.//

பிறப்பிலே எவரும் கவிஞராய் உருவாகுவதில்லை, இயற்கையின் இலயிப்பில், நடை முறை வாழ்க்கையின் படப் பிட்ப்பில், அன்றாட அனுபவங்களில் தான் கவிஞன் பிறப்பெடுக்கிறான், கவிதை கருக் கொள்கிறது என்பதனை இவ் வரிகள் விளக்கி, விளம்பி நிற்கின்றன.

நிரூபன் சொன்னது…

ஆசைகளை நெஞ்சுக்குள்
அடக்கிவைக்க ஆலைக்குள்
அகப்பட்ட கரும்பாகத்
துடிக்கிறது. - அது
ஊசிமுனை வார்த்தைகளை
உள்ளடக்கி ஓர்நாளில்
உணர்ச்சியெனும் எரிமலையாய்
வெடிக்கிறது//

ஆலைக்குள் அகப்பட்ட கரும்பாக...

கரும்பினை விட கருபுச் சாற்றின் சுவை எப்படியிருக்கும்.. அதன் வெளிப்பாடு போன்று தான் கவிதையும் வருகிறது எனும் உவமையினை உட் புகுத்தி அழகாக உணர்வுள்ள கவிதைகளின் பிறப்பினை வெளிப்படுத்துகிறீர்கள்.

நிரூபன் சொன்னது…

ஈட்டிமுனைச் சொல்லெடுத்து
என்றேனும் ஓர்நாளில்
எதிர்ப்போரின் முகம்கிழித்துப்
பாய்கிறது.//

வாய்மையின் வீரியத்தினை அழகாகச் சொல்லுகிறது இவ் வரிகள்.

நிரூபன் சொன்னது…

கரையேறா அலையாகக்
காத்திருந்து பின்னாளில்
கவியென்னும் தேரேறி
வருகிறது...//

வலையுலகில் நான் ரசிக்கும், என்னைக் கவர்ந்த;
மரபின் கட்டுக்களை இன்றும் உடைக்காது எழுதி வரும் உங்கள் கவிதைத் தேரினை நாங்களும் இழுத்துவரக் காத்திருப்போம் சகோ.

நிரூபன் சொன்னது…

கவியென்னும் தேரேறி//

கவிதை கவியென்னும் தேரிற முன்பதாக, கவிதை பிறப்பெடுக்கும் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் அழகாகச் சொல்லி, கவியென்னும் தேரேறி, வாசக நெஞ்சங்கள் எனும் வீதியினை வலம் வருவதற்காய் காத்திருக்கும் கவிஞனின் உள்ளத்து உணர்வினையும் அழகாகச் சொல்லுகிறது.

பத்மநாபன் சொன்னது…

நினைவு கள் முள்ளாக ,அசை நெஞ்சு ஆலைக்குள் அகப்பட்ட கரும்பாக .... இப்படி பல பொறுத்த உவமைகளோடு ,மன ஓட்டங்களும் .. எண்ண அலைகளும் வார்த்தைகளாக மாறி எழுத்து வரிகளாக வடிவமெடுத்து அழகாகவும் ஆக்ரோசமாகவும் கவிதைத் தேர் .. வாழ்த்துக்கள் சிவா ....

meenakshi சொன்னது…

சோகமெனும் தேரேறி வந்த இந்த கவிதை அருமையாய் இருக்கிறது.

மாலதி சொன்னது…

கரையேறா அலையாகக்
காத்திருந்து பின்னாளில்
கவியென்னும் தேரேறி
வருகிறது...//கவிதை அருமையாய் இருக்கிறது.

மனோ சாமிநாதன் சொன்னது…

"நிறைவேறா எண்ணங்கள்
நெஞ்சமெனும் கொடுஞ்சிறையில்
நெடுங்காலத் தண்டனையைப்
பெறுகிறது. - அது
கரையேறா அலையாகக்
காத்திருந்து பின்னாளில்
கவியென்னும் தேரேறி
வருகிறது."

மிக அருமையான வரிகள்! நிறைவேறா எண்ணங்கள் மட்டுமல்ல, நெஞ்சக் கனலும் நீருபூத்த நெருப்பாய் இதயத்தில் அடங்கிக்கிடக்கும் சோகங்களும்கூட இப்படித்தான் கவிதைகளாய் பிரசவங்களாகின்றன!!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி வை.கோ.சார்.
நன்றி பிரஷா
நன்றி இளமுருகா

சிவகுமாரன் சொன்னது…

மோகன்ஜி சொன்னது\\அற்புதம் சிவா! எனக்கு பழைய கவிதை வரிகளெல்லாம் நிழலாடுகிறது நெஞ்சில். பலநேரம் கவிதை எழுதிமுடித்த பின்னே, மனம் லேசாவதற்கு பதிலாய், இன்னமும் கனத்துப் போகும் அவஸ்தை.
நல்ல கவிதை இது சிவா. தீ வரிகள்!//

ஆமாம் மோகன் அண்ணா .நீங்கள் சொல்வது போல் பலமுறை கவிதை எழுதி முடித்தபின்னர் இலேசாவதற்கு பதிலாய் கனத்து விடுகிறது மனசு.
வாழ்த்திற்கு நன்றி

சிவகுமாரன் சொன்னது…

காஷ்யபன் சொன்னது

\\வாரம் ஒரு இடுகை தானே வருகிறது! ஏன்?--///

வலைப்பக்கம் வருவதற்கும் , டைப் செய்வதற்கும் நேரம் கிடைப்பதில்லை அய்யா. வாரக்கடைசியில் தான் முடிகிறது. மற்ற வீட்டு வேலைகள் செய்வதில்லை என்று புகார் வேறு சமாளிக்க வேண்டி உள்ளது. எந்நேரமும் கவிதையின் முற்றுப் பெறாத ஒரு வரி உள்ளுக்குள் ஓடிக் கொண்டு தான் உள்ளது. உட்கார்ந்து எழுதவும் இடுகையிடவும் தான் நேரம் கிடைப்பதில்லை.

சிவகுமாரன் சொன்னது…

என் கவிதை விடவும் உங்களின் பின்னூட்டங்கள் அருமையாய் இருக்கின்றன நிரூபன் சார். நிரூபனின் பின்னூட்டம் என்றாலே மனம் துள்ளிக் குதிக்கிறது. மிக்க நன்றி நிரூபன்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஸ்ரீராம், ரசிகமணி, ஆனந்தி & மனோ சாமிநாதன் மேடம்.
தங்களின் முதல் வருகைக்கு நன்றி மாலதி

தமிழ் சொன்னது…

அழகு நண்பரே

உங்கள் கவியென்னும் தேரில் ஏறும்பொழுது
உள்ளமெல்லாம் உற்காசத்தில் மிதக்கிறது.

வார்த்தைகளால் கட்டி விட்டீர்கள்

வாழ்த்துகள்

Matangi Mawley சொன்னது…

"நிறைவேறா எண்ணங்கள்
நெஞ்சமெனும் கொடுஞ்சிறையில்
நெடுங்காலத் தண்டனையைப்
பெறுகிறது. -".... WOW!!! Brilliant thought.... amazing!

அப்பாதுரை சொன்னது…

பலமுறை படித்தாலும் அலுக்காத சந்தம்.. உங்கள் டாப்10.

நிலாமகள் சொன்னது…

மகிழ்ச்சி சிவா! நம் வலைப்பூ நட்புகளை மறுபடி காண ஒரு வாய்ப்பும் தந்தமைக்கு! இலக்கிய விருப்பினால் வாழ்வை வெறுக்காமலிருக்க வாய்த்திருகக்கிறது நமக்கு!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நிலா. பலமுறை என்னை மீட்டெடுத்திருக்கிறது என் கவிதைகள்.