சனி, மார்ச் 31, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 5

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான்  தொழுவதுண்டு 
   கோவில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு  
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

-சிவகுமாரன் 


( 06 .02 .2012 பழனி பாதயாத்திரையின் போது எழுதியது.)
  

திங்கள், மார்ச் 19, 2012

உன்னை எப்படி மன்னிப்போம் ?






அய்யா அரசியல் வாதிகளே -எமை
   ஆளும் காங்கிரஸ் கபோதிகளே
பொய்யாய் இராஜப் பிச்சையன்
  போடும் வேடம் பார்த்தீரா ?
அய்யோ ! எங்கள் இனந்தன்னை
   அழிக்கும் காணொளி பார்த்தீரா ?
மெய்யாய் உமக்கு கண்ணிலையா?-உன்
   மேனியில் சிறிதும் கொதிப்பிலையா ?


போய்ப் பார்த்தாயா இலங்கைக்கு -நடந்த
  போர் பார்த்தாயா இனவெறிக்கு ?
நாய்போல் தமிழர் சுடப்பட்டு
  நாறிக் கிடந்ததை அறியாயோ ?
வாய்பே சாமல் துயர்கண்டும்
   வாளா திருக்க நீயென்ன
தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயா - இல்லை
   தப்பிப் பிறந்த தெருநாயா ?


திட்டம் போட்டு நம்மினத்தை
   தீர்த்துக் கட்டிய தறியீரோ ?
கட்டிப் போட்டு சுடுகின்ற
  காட்சிகள் கண்டும் பதறீரோ ?
சட்டம் உங்கள் கையிருக்க
  சதியில் உமக்கும் பங்கிருக்க
வெட்டித் தனமாய் யாமிங்கே
   வெம்பிப் புலம்பி என் செய்ய ?

இனத்தை அழித்த இலங்கைக்கு
  எதிராய் சாட்சிகள் பலவிருக்க
பிணங்கள் தின்னும் "பக்க்ஷே"க்கு
  பேரா தரவு நீ தருகின்றாய் .
கனவிலும் நுழைந்து கருவறுத்த
  "கை"களில் இரத்தக் கறையோடு
மனதினில் எந்தத் துணிவோடு
  மறுபடி வாக்குக் கேட்பாய் நீ ?

நாட்டைப் பிடித்த சனியன் நீ -உனை
  நம்பிக் கேட்டது போதுமினி
ஓட்டுக் கேட்டு மறந்தும் நீ
  ஊருக்குள்ளே நுழையாதே
போட்டு மிதிப்போம் தறிகெட்டு -உனை
  புரட்டி எடுப்போம் வெறிகொண்டு
ஆட்டிக் கொண்டினி வாராதே - நாவை
   அறுத்து எறிவோம் மறவாதே .


ஓட்டுப் பொறுக்கி நீயென்பேன்- எங்கள்
  உதிரம் குடிக்கும் பேயென்பேன்
காட்டிக்  கொடுத்த குலமென்பேன்- நீ
   காட்டு நரியின் இனமென்பேன் .
ஊட்டி வளர்த்த தாய்தன்னை -எட்டி 
   உதைக்கும்  உதவாக் கரையென்பேன்  
கூட்டிக் கொடுத்த பிறப்பென்பேன்- அந்தக்
   குணமே உந்தன் சிறப்பென்பேன்.

கொள்ளை அடித்தாய் பொறுத்திருந்தோம் -எங்கோ
   கொண்டு குவித்தாய் பார்த்திருந்தோம்
வெள்ளம் வறட்சி நிதியெல்லாம்
   உருட்டித் தின்றாய் சகித்திருந்தோம்
பிள்ளைக் குட்டியின் உயிர்குடித்த
   பேயுடன் கைகள் குலுக்குகிறாய்.
உள்ளம் நெருப்பாய் கொதிக்கிறதே -இனி
   உன்னை எப்படி மன்னிப்போம் ?



-சிவகுமாரன் 

புதன், மார்ச் 07, 2012

காதல் வெண்பாக்கள் 28




உன்னுள் மறைவாய்
   ஒளிந்திருப்ப தென்னடி?
என்னுள் இருப்பதும்
   என்னவோ ?- இன்னும்
ரகசியங்கள் தேடவைத்து
   லட்சியங்கள் எல்லாம்
தகர்த்தாய் .நியாயமா
     சொல்








சொல்லாமல் கொள்ளாமல்
   சொந்தமாக்கிக் கொண்டாயே
எல்லாம் தனதென்று
   என்னைநீ !- வில்லாய்
வளைக்க நினைக்கின்றாய் .
   வாழ்க்கை உனக்கு
விளையாட்டுப் பொம்மையா
   சொல்.