திங்கள், டிசம்பர் 19, 2011

காதல் வெண்பாக்கள் 26

 அடைமழைக் காலம்
  அடிக்கும் வெயிலாய்
கொடைக்கானல் காலைக்
  குளிராய் - மடைதிறந்த
வெள்ளத்தைக் கண்ட
  விளைநிலமாய் நீயென்னை 
தெள்ளத் திருடிய 
       தீ .




தீபுகுந்த முட்காடாய்                       
  தீய்ந்தெரியும் என்வாழ்வில்
நீபுகுந்தாய் வெள்ளமென
  நீர்சுமந்து ! - கோபுரத்தின்
உச்சியினில்   வீசும்
  ஒளியாய் நுழைந்திட்டாய்
குச்சுக் குடிலில்
   குனிந்து.


சிவகுமாரன் 

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ கவிதைகள் 50



பச்சை வயலின்  
பரிணாம வளர்ச்சி
மச்சு  வீடுகள்






விரட்டப்பட்டனர் பிச்சைக்காரர்கள்.
வெகு விமரிசையாய்
அன்னதானம்.




என் வீட்டில் திருட
எனக்கே லஞ்சம்.
ஓட்டுக்குப் பணம்.





முதுகில்  தொற்றியது  குழந்தை.
இறங்கிக் கொண்டது
அலுவல் அழுத்தம்.







காலை  கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது.




- சிவகுமாரன்


திங்கள், டிசம்பர் 05, 2011

ஊருக்கெல்லாம் வீடுகட்டி
















(ஆறுமுகம் கொத்தனார் - அஞ்சலை சித்தாள் தம்பதியினரின் உரையாடல் )

அஞ்சலை :
ஊருக்கெல்லாம் வீடுகட்டி 
  ஒழைச்சிக் களைக்கிறியே
பேருக்கொரு சின்ன வீடு
  நமக்கு உண்டா சொல்லு மச்சான் .


ஆறுமுகம்:
ஆண்டவன் கொடுத்ததெல்லாம் 
  அளவா இருக்குதடி
வேண்டாத ஆசைகளை 
  வீணாய் வளக்காதடி.

அஞ்சு:
நேத்தடிச்ச மழைத்தண்ணி 
  நெறஞ்சிருக்கு வீட்டுக்குள்ள 
காத்தடிச்ச வேகத்தில 
  கலைஞ்சிருச்சு கூரையெல்லாம் 


பொத்தல் குடிசையில
  பொட்டுத் திண்ணையில 
எத்தனை நாள் வாழுறது ?
  ஏதாச்சும் பண்ணு மச்சான் 

ஆறு :
மாடி வீட்டைக் கண்டு 
  மனசு மயங்காதேடி 
கோடிப்பணம் இருந்தாலும் 
  கெடைக்காதடி இந்தசுகம் 


ஓலைக் குடிசைக்குள்ள 
  ஒன்னோட இருக்கையில 
வேலை செஞ்ச களைப்போடு 
  வேதனையும் தீருமடி.

மாளிகை வீட்டுக்காரன்
  மனசார தூங்கலைடி
தூளி அசைஞ்சாலும் 
  துடிச்சு முழிக்கிறான்டி


ஆசை அதிகரிச்சா 
  அப்புறமா கஷ்டம் தான்டி 
மீசைக்கும் கூழுக்குமாய் 
  மீளாத் துயரந்தான்டி     

அஞ்சு:
அழகான ஓட்டு வீடு
  அருகே ஒரு பூந்தோட்டம் 
பழக ஒரு பசுமாடு
  பார்த்திருக்க ஒங்க முகம் 


ஆசை அதிகமில்லை 
  அளவாத்தான் கேட்கிறேன் நான் 
காசுபணம் இல்லாட்டி 
  கடன்வாங்கி கட்டு மச்சான் 


ஆறு:
என்னைநம்பி கடன்கொடுக்க 
  எவன் இருக்கான் ஊருக்குள்ள ?
உன்னைச்  சொல்லி குத்தமில்லை -உனக்கு 
  உலகம் புரியவில்லை .

அஞ்சு:
கட்டிவந்த தாலியில
  தங்கம் கொஞ்சம் இருக்கு மச்சான்
வட்டிக்கு வச்சுப்புட்டா 
  வழி கிடைக்கும் வீடுகட்ட .

ஆறு:
கழுத்து நகை பறிச்சு 
  கட்ட வேணாம் வீடு ஒண்ணும்
உழைச்சு சம்பாதிச்சு 
  உனக்காக கட்டுறேன்டி.


இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு 
  ஏதாச்சும் கையில் சேர்த்து 
நின்னு நிலைச்சுக்கிட்டு 
  நெனைக்கலான்டி வீடுகட்ட 


அஞ்சு:
இப்படியே சொல்லி சொல்லி 
  என்வாயை அடைச்சிடுறே.
எப்பத்தான் என்பேச்சு
  எடுபடுமோ தெரியவில்லை 


ஆறு:
வேலை நேரத்தில 
  வெட்டிப்பேச்சு பேசுறேன்னு 
மேலே விழுந்து நம்மை 
  மேஸ்திரிதான் கத்துவாரு 

ஓயாம சத்தம்போட்டா 
  ஒதைவிழும் சொல்லிப்புட்டேன்
வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு 
  வந்த வேலை பாரு புள்ள..


புதன், நவம்பர் 23, 2011

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 3

நதிநீர் வடிந்தபின்
  நாணலைக் கொல்லும்
விதியே உனது
  வினையின் - சதியால்நான்
தோற்றுத் துவண்டு
  தொலைவேனோ ? கட்டறுத்த
காற்றுக்கு உண்டோ
  கரை.


கரைதேடி வந்த
  கடலின் அலையாய்
இரைதேடிக் கொண்டே
  இருந்து - நரைகூடி
மாண்டு மடிவேனோ?
  மண்ணில் தடம்பதிக்க
மீண்டும் எழுவேன்நான்  
  மீண்டு,


2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - என் தந்தையின் மரணத்திற்கு பின்னொரு இருண்ட காலத்தின் நாட்குறிப்பு.)





ஞாயிறு, நவம்பர் 13, 2011

மேகங்கள்


வெண்ணிலா மீனவன் 
  விண்ணகக் கடலில்
விண்-மீன் பிடிக்க 
  வீசிய வலைகள்.

நிலவுத் தலைவி
  நந்த வனத்தில்
உலவச் செல்லும்
  வெள்ளித் தேர்கள்.

வான அடுப்பில்
  விறகு தீர்ந்து
போனதால் எழுந்த  
  புகைமண் டலங்கள்.


 நிலவுக் குழந்தை 
   நீண்ட நேரமாய்
அழுததி னாலே
  அன்னை வானம்,

வாங்கிக் கொடுத்த
  பஞ்சுமிட் டாய்கள்.
தூங்கும் நிலவின்
  தொட்டில் மெத்தைகள்.

விண்ணக  வீட்டின்
  விரிந்த கூரையில்
வெண்ணிலாச் சிலந்தி
  பின்னிய வலைகள்.

மண்ணின் மார்பாம்
  மலையை மூட
அன்னை வானம்
  அளித்த தாவணி.

கன்னி நிலாவை
  காவல் காக்கும் 
விண்ணக வீட்டின்
  சன்னல் திரைகள்.

நிலவது கடலில்
  நீந்திக் குளிக்க
விலக்கி எறிந்த
  வெண்ணிற ஆடைகள்.

காற்றுத் தூரிகை
  எடுத்த வானம்
போட்டுப் பார்த்த
  பொன்னிற ஓவியம்.

மிதக்கும் தோணிகள்
  மின்னல் தோழிகள்
விதவை  வானின்
  வெள்ளைச்  சேலைகள்.

புவியை வானை
  புதிராய்க் காணும்,
கவிஞன் எந்தன்
  கண்ணுக்கு அவையோ 

தாகம் தீர்க்கும் 
  தமிழே என்பேன் 
மேகம் என்றே 
  மொழிவர் மூடர்.
                              
                                                      -சிவகுமாரன் 

( என் பன்னிரண்டாம் வகுப்பு பருவத்தில் எழுதி " நீதான் எழுதியதா" என்று என் தமிழாசிரியரை ஆச்சரியப்பட வைத்த கவிதை ) 

புதன், நவம்பர் 09, 2011

காதல் வெண்பாக்கள் 24

        விருந்து  

உந்தன் விழியிரண்டும்
  ஒர்கோடி பண்சொல்ல  
சிந்தும் கவிதை
  சிறப்பாகும் - எந்தன்
புலமைப் பெரும்பசிக்கு
  பேய்த்தீனி போடும்
நிலவுக்கு நீயே
    நிகர்.  

         


           மருந்து

உன்நினைவை நெஞ்சுக்குள்
  ஒட்டவைத்துக் கொண்டதனால்
என்நினைவு கூட
  எனக்கில்லை - என்னஇவன்
பைத்தியமா என்றுதான்
  பார்த்தவர்கள் கேட்டார்கள்
வைத்தியமாய் நீயிங்கே
               வா.


சனி, அக்டோபர் 29, 2011

பரிபாலனம்











மாமன்னர் 
மாடு கொடுத்தார்.
மந்திரி கறந்து
தளபதி குடிச்சு
சேவகன் விரட்டி
கடைசியில்
குடிமகனுக்கு 
குறைவின்றி 
கிடைத்தது
........
கோமியம். 



புதன், அக்டோபர் 12, 2011

கவச குண்டலம்

உணர்வுகளின் போராட்டம்
  உள்மனதின் பேயாட்டம்.
மனத்தீயை அணைப்பதற்கு 
  மடைதிறக்கும் நீரோட்டம்.

கனவுலகின் வீதிகளில்
  கற்பனையின் தேரோட்டம்
நனவாகும் ஆசையினில்
  நம்பிக்கை வேரோட்டம்

நரம்புகளின் முறுக்கேற்றம்
  நடத்துகிற போராட்டம்
வரம்புடைத்து மீறுகிற 
  வார்த்தைகளின் அரங்கேற்றம்.

கருத்தரித்த சிறுகுழந்தை
  காலுதைக்கும் வேளையினில்
உருத்தெரியா வலிதன்னை
  உள்ளடக்கும் தாய்முனகல்.

வீறிட்டு வெளிக்கிளம்பி 
 வெடிக்கின்ற எரிமலையாய்
பீறிட்டுப் பொங்கிவரும்
  பெருங்கோபத் தீப்பிழம்பு.

ஓட்டுடைத்து வெளிக்கிளம்பி
  உலகளக்கும் சிறகோசை  .
கூட்டுக்குள் அடைத்துவைத்த
  குருவிகளின் சிறு கூச்சல் .


பொங்கிவரும் அலைநடுவே 
  புகுந்துவரும் நுரைக்குமிழி
கங்கைநீர் சுமந்துவரும்
  காசிநகர் சிறு கலயம் .

கடைவிரிக்க இயலாத 
  காலாவதி பழஞ்சரக்கு 
அடைகாக்க முடியாத 
  ஆனையிட்ட பெருமுட்டை.

வர்ணங்கள் வெளுத்திட்ட 
  வானவில்லின் சோகங்கள்
கர்ணனுக்கு மறந்துபோன 
  கடைசிநேர அஸ்திரங்கள்.

அவசரத்திற்க் கடகு வைக்க 
  ஆகாத அணிகலன்கள்.
கவசகுண் டலங்களிவை 
  கவிதையல்ல சத்தியமாய்.  

                                                                                   -சிவகுமாரன் 

  

சனி, செப்டம்பர் 03, 2011

மீண்டு(ம்) வருவேன்













பணிச்சுமை தாங்காது பாரம் ஒடிந்தது
கணினிக் கவியெனும் கட்டை வண்டி.
அழுத்தும்  சுமையால் அடிமாடாகி
இழுத்துச் செல்ல இயலாது தவித்து
நகருமென் வாழ்வின் நரக வலியை
பகரவென் னிடத்தில் வார்த்தைகள் இல்லை.

கவிதைஎன் மூச்சுதான்.ஆனால் உங்கள்
செவியில் விழாதென் மூச்சுக் காற்று.

ஆதர வளித்த அத்தனை பேர்க்கும்
காதலால் உருகி கரங்கள் குவித்து
நன்றிகள் சொன்னேன். இப்போ தைக்கு
சென்று வருகிறேன். சிறகுக ளோடு
மீண்டும் வருவேன் , மீண்டு வருவேன்.
ஆண்டவன் அருளால் அதுவும் நடக்கும்.

       

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ...?

வேரிலே
இரத்தம் ஊற்றினோம்
உடல்களை
உரமாய்ப் போட்டோம்
காய்க்கவே இல்லை
இன்னும்..
கொடிமரம்.


            -சிவகுமாரன்.



சனி, ஆகஸ்ட் 06, 2011

பிணைப்பு














மரபின் வேர்களில் 
கட்டப்பட்டிருக்கிறேன் 

கால்களில் பிணைத்த 
கவிதைச் சங்கிலிகளோடும்   
காலங்களைக் கடந்து நிற்கும் 
விடைகளே இல்லா 
கேள்விகளோடும். 


இறங்கும் விழுதுகளை 
எட்டிப் பிடிக்க
விரல்கள்  விரும்பினாலும் 
விடுவதில்லை வேர்கள்.

கிளைகளில் தங்கிச் செல்லும் 
கிளிகள்
முட்டிச் செல்லும் 
மேகங்கள்
அறிந்து கொள்வதில்லை
என் ரகசியங்களை.

உதிர்ந்த சருகுகள் 
கிளியின் எச்சங்கள் 
சலசலக்கச் செய்வதில்லை 
என் சங்கிலிகளை.

வேர்களுக்கிடையே 
ஊர்ந்து செல்லும்
சிற்றெரும்புகளால்
செல்லரித்துப் போவதில்லை 
என் சங்கிலிப்  பிணைப்புகள்.

விழுதுகள் ஓர்நாள் 
வேர்களாகும்
புதிது  புதிதாய்
விழுதுகள் புறப்படும்

இன்னும் பலமாய் 
இறுகிப் போகும் 
வேர்களோடு
சங்கிலிப் பிணைப்புகள்.

அறுத்துக் கொள்ளச் சொல்லி 
வேர்களே சொன்னாலும்
விடுவாதயில்லை 
நான் 
விரும்பிக் கட்டிக் கொண்ட 
சங்கிலிகளை. 

                                                 -சிவகுமாரன் 



ஞாயிறு, ஜூலை 31, 2011

ததும்காததும் 3


தலைப்பை பார்த்து  பயந்து விட்டீர்களா ?
வேறொன்றுமில்லை .
அன்புச்  சகோதரி மஞ்சுபாஷினியின்  வேண்டுகோளுக்கிணங்க முத்தான மூன்று பதிவு தான் இது. எனக்குப் பிடித்ததும் , பிடிக்காததும் .ததும்காததும்.

எல்லாவற்றையும்  மூன்றுக்குள் அடக்குவதும் , சிலவற்றில் இரண்டுக்கே திணறுவதுமாய்.... கவிதை  தான் எனக்கு சுலபமாய் இருக்கிறது.
இனி..

1. பிடித்த விஷயங்கள் 
 கடவுள் நம்பிக்கை 
 கவிதையோடு வாழ்க்கை 
 கம்யூனிசக் கொள்கை 

2. பிடித்த உறவுகள்
உலகைக்  காட்டிய அம்மா
உயிரில் கலந்த மனைவி 
உணர்வில் ஒன்றிய சகோதரர்கள்

3. பிடித்த உணர்வுகள் -1 (செய்வது)
விட்டுக் கொடுத்தல் 
தட்டிக் கொடுத்தல் .
கட்டுப் படுதல்

4. பிடித்த உணர்வுகள்-2 ( செய்ய நினைப்பது)
விட்டுப் பிடித்தல்
தட்டிக் கேட்டல் 
கட்டறுத்தல்  

5. பிடிக்காத உணர்வுகள் 
குற்றம் பார்த்தல்
பற்ற வைத்தல் 
வெ(ற்)றுப் பேத்தல் .

6. முணுமுணுக்கும் பாடல்கள் .
மோகம் என்னும் தீயில்

7. பிடித்த பாடல்கள்
காற்றில் எந்தன் கீதம்
ஏழிசை கீதமே
என்னுள்ளே எங்கோ


8. பிடித்த பாடகர்கள்
ஜேசுதாஸ்
என் தம்பி
என் அம்மா 


9 .பிடித்த திரைப் படங்கள்.
மறக்க முடியாத "கர்ணன்" - நெஞ்சை 
உருக்கிய  எங்கள் "பாரதி" - கண்ணீர் 
சுரக்க வைத்த "தவமாய் தவமிருந்து

10. ரசித்த திரைப்படங்கள் 
பாட்ஷா
எந்திரன்
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி  

11ரசித்துப் பார்ப்பவை 
கால்பந்து 
காமெடி 
கார்ட்டூன் (வேறு வழி?)



12. பிடித்த பொன்மொழிகள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 

எல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம் 
சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம் .

எங்கே விழுந்தாயென பார்க்காதே   
எங்கே வழுக்கினாயென பார் 

13. அன்புத் தேவைகள்
பலன் எதிர்பாரா உறவு
நலம் நாடும் நட்பு
வளம் தரும் இறையருள்.

14. வலிமையை அழிப்பவை
நையப் புடைக்கும் நோய்  
அய்யோ பாவம்....வாய் 
பொய்யாய் இரைக்கும் புகழ் 


15. வெற்றி பெற வேண்டியவை
நிறைய முயற்சி
திறமை
இறையருள்

16. கற்க விரும்புவது
புல்லாங் குழல் வாசிக்க
தில்லாய் கார் ஓட்ட
நல்லா கணிணி இயக்க

17. சோர்வு நீக்கத் தேவையானவை
"பா"க்கள்
ஊக்கம்
தூக்கம்

18. பயமுறுத்தும் பயங்கள்.
இறங்க மறுக்கும்  விலைவாசி   
இரவுநேரத் தொலைபேசி
இணையத்தில் பிள்ளைகள் பெறும் தேர்ச்சி

19. எரிச்சல்  ஊட்டுபவை .
நரம்பின்றி பேசும் நாக்கு
வரம்பின்றி நுழைக்கும் மூக்கு
அரசியல்வாதியின் வாக்கு.

20. புரிந்தும் புரியாது குழப்புவது 
ஜோதிடம்
மரணமிலாப் பெருவாழ்வு
அரசியல் கூட்டணி 


21. இனிமையானவை
தமிழ்
மழலை
இசை.

22. ஆசைப்படுவது
ஒரே பிள்ளையின் உயர்கல்வி - கர்வப்படுவதாய்
ஒரேயொரு காவியம் - கவிதையாய்
ஒரேயொரு முறை காசி - கால்நடையாய்

23. அடைய விரும்புவது
தடம் பதிக்கும் வாழ்க்கை
கடன் இல்லா மரணம்
பிறவா வரம்.
                                                                               -சிவகுமாரன் 


இந்தத் தொடருக்கு என்னை அழைத்த சகோதரி மஞ்சுபாஷினிக்கு என் நன்றிகள்.
சக பதிவர்கள் பலரும் பதிவிட்டு முடித்ததால் விடுபட்டவர்கள் யாவரும் தொடரலாம் 

சனி, ஜூலை 23, 2011

முட்கள் முளைத்ததடா


பாருக்குள்ளே நல்ல நாடெங்கள் நாடென்று 
   பாரதி சொன்னானடா - அந்தப்
   பாவலன் பாடிய லட்சியங்க ளின்று
   பழங்கதை ஆனதடா   
சேரனும் சோழனும் பாண்டிய வேந்தனும் 
   ஆண்டதோர் தேசமடா - இன்று
    சில்லறப் பேய்களின் சட்டைப்பைக் குள்ளது 
    சிக்கிக் கிடக்குதடா .


மண்டை உடையுது இரத்தம் பெருகுது 
   மானுடம் வேகுதடா - இந்த 
   மண்ணில் தினந்தினம் மக்களின் கூக்குரல் 
   விண்ணைப் பிளக்குதடா .
சண்டையில் மோதலில் சாதிக் கலவரம்
   சந்தி சிரிக்குதடா - சாதிச் 
   சங்கம் வளர்த்தவன் மூட்டிய தீயினில் 
    சந்ததி சாகுதடா .


*குண்டு வெடிக்குது குடல் சிதறுது 
   குலை நடுங்குதடா - வாயில் 
   கோரப் பற்கள் கொண்டு இரத்தம் குடிக்கிற 
   கூட்டம் சிரிக்குதடா .
அண்டைய தேசத்தின் அக்கிர மத்திற்கோர் 
    அளவின்றி போனதடா - அதன் 
    ஆட்டம் நிறுத்திட ஆளும் வர்க்கத்திற்கு
    அருகதை இல்லையடா .

கட்சிக் கொடிகட்டி காரினில் மந்திரி
   ஊர்வலம் போகுதடா - அவன்
   காரில் மிதிபட்டு வண்ண மலரெல்லாம் 
   கண்ணீர் வடிக்குதடா 
முட்சர மேடையில் ஏழையின் பாதங்கள் 
   நர்த்தனம் ஆடுதடா - அவன் 
   முக்கள் முனகலை வான்முட்டும் கோஷங்கள் 
   மூடி மறைக்குதடா.

விக்கித் தவிக்கிற வாய்க்குத் தண்ணீரில்லை 
    வேதனை மிஞ்சுதடா - தினம் 
    வீதிக் குழாயடி சண்டையில் மங்கையர்
    வீரம் தெரியுதடா 
தக்கத் திமிதிமி தக்கத் திமிதிமி 
    தாளங்கள் கேட்குதடா - இந்த 
    தேசத்தின் சந்தோசக் கூச்சலில்லை -அவை
    தண்ணீர் குடங்களடா 


தாலாட்டும் இல்லாமல் தாய்ப்பாலும் இல்லாமல் 
   தளிரொன்று வாடுதடா - அதன் 
   தாய்தந்தை பெண்ணென்ற காரணத்தா லதைத்
   தூக்கி எறிந்தாரடா.
பாலூட்டும் அன்னைக்கே பச்சிளம் பிள்ளைகள் 
   பாரமாய்ப் போனதடா - இந்தப் 
   பாரத நாட்டுக்கு வந்திட்ட கேடென்ன,
   பாரே சிரிக்குதடா 


*பள்ளிக் குழந்தைகள் செய்வதறி யாமல் 
   திக்கித் திணறுதுடா - அவர்  
   பாடத்தில் கைவைத்த பாவியர் செய்கையால் 
   பாதை குழம்புதடா 
துள்ளித் திரிகிற காலத்தில் பாரங்கள் 
   தூக்கிச் சுமக்குதடா - அவர்
   தோளில் சுமையேற்றி தோல்வி பயமூட்டி 
    தூக்கம் பறித்தோமடா .


*எங்கள் வரிப்பணம் எங்கோவோர் தேசத்தின் 
   வங்கியில் தூங்குதடா - இங்கே 
 ஏழையின் வாய்களில் இலவச பூட்டுகள் 
   இறுக்கமாய்த் தொங்குதடா 
தங்கமும் வைரமும் பூட்டி வைத்து எங்கள்
   சாமி சிரிக்குதடா - எங்கள் 
   தங்கையர் மூக்குத்தி துவாரத்தில் ஈர்க்குச்சி 
   மின்னி சிரிக்குதடா . 


*சிங்களத் தீவினில் எங்கள் தமிழினம் 
   செத்து மடியுதடா - எங்கள் 
   சிங்கத் தமிழினம் சென்ற விடமெல்லாம் 
   சிந்துது இரத்தமடா
பொங்கும் நுரையோடு எங்கள் கடலோரம் 
    பிணம் ஒதுங்குதடா - எங்கள்
    பொங்கு தமிழர்க்கு இன்ன லென்றோம் - அட 
    சங்காரம் எப்போதடா ?    


ரத்தச் சுவடுகள் தேச வளர்ச்சியின் 
   முத்திரை ஆனதடா - சில 
   ராட்சசப் பேய்களின் பற்களில் தேசத்தின்
   இரத்தம் வ்டியுதடா 
புத்தனும் காந்தியும் போதனை செய்தவை 
   பூமிக்குள் போனதடா - அன்று
   பூக்கள் மலர்ந்திட போட்ட விதையினில 
   முட்கள் முளைத்ததடா    


                                                    -சிவகுமாரன் 


 (1992 ஆம் ஆண்டு எழுதி, த மு.எ,ச கலை இரவில் பாடப்பட்டது. 
  *குறியிட்டவை பிற்சேர்க்கைகள் )